ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The inauguration of Donald Trump: An event that will live in infamy

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு: இழிபுகழில் என்றும் நிலைக்கவிருக்கும் ஒரு நிகழ்வு

By The Socialist Equality Party
20 January 2017

45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவிருக்கும் நிகழ்வு அமெரிக்க வரலாற்றின் மிகவும் வெட்கக்கேடான நிகழ்வுகளில் ஒன்றாகும். புதிய ஜனாதிபதியின் பதவியேற்புக் கொண்டாட்டங்களுக்காக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் செலவிடப்படுகிறது. அத்தனையும் வீண்! எத்தனை பணம் செலவழித்தாலும் இந்த பதவியேற்பின் ஒவ்வொரு அம்சத்திலும் விரவியிருக்கும் குமட்டலான நாற்றத்தை அது அகற்றி விட முடியாது. அதைப் போலவே, பொதுக் கொண்டாட்டங்களுக்கு மோசடியான விதத்தின் மூலமாக ஏற்பாடு செய்வதன் மூலமாக, நாடு புதிய நிர்வாகம் அமர்த்தப்பட்ட நொடி தொடங்கி கற்பனை செய்யமுடியாத பரிமாணங்கள் கொண்ட ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு பாதையில் நடக்கத் தொடங்கியிருக்கிறது என்ற ஒரு பரவலான உணர்வை மறைத்து விடவும் முடியாது.

அமெரிக்க முதலாளித்துவத்தை வரலாறு சிறை செய்திருக்கிறது. பொருளாதார மற்றும் சமூகச் சிதைவின் நீண்ட நிகழ்வுப்போக்கானது உத்தியோகபூர்வ அரசியல் கட்டுக்கதைகளுக்கும் கீழமைந்த யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை மறைப்பதற்கு சேவை செய்த ஜனநாயக வார்த்தைஜாலங்களை கொண்டு பல தசாப்தங்களாக மூடிமறைக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் இப்போது அந்த முகமூடி கழன்று விட்டது. அமெரிக்காவை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கக் கூடிய முதலாளித்துவ வெகுசிலரணியின் ஊழல், மனச்சாட்சியின்மை, ஒட்டுண்ணித்தனம், மற்றும் அத்தியாவசியமாய் பாசிச மனப்போக்கு ஆகியவற்றுக்கு டொனால்ட் ட்ரம்ப் உருவடிவம் கொடுத்திருக்கிறார்.

செல்வந்தர்களுக்காக செல்வந்தர்களைக் கொண்டு நடத்தப்படுகின்ற ஒரு செல்வந்தர்களின் அரசாங்கத்திற்கு ட்ரம்ப் தலைமை கொடுக்கவிருக்கிறார். அமைச்சரவை மற்றும் வெள்ளை மாளிகைப் பணியாளர்களாக அமர்த்தப்பட்டிருக்கும் பில்லியனர்களுடன், முக்கியமான தேசிய பாதுகாப்பு பதவிகளுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளும், எந்த வேலைத்திட்டங்களையும் சமூக உதவிகளையும் அழிப்பதற்கு தங்கள் அரசியல் முயற்சிகளை அர்ப்பணித்திருந்தனரோ அவற்றை மேற்பார்வை செய்வதற்காய் அதி-வலது சித்தாந்தவாதிகளும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். பெரும்-செல்வந்தர்களுக்கு மிகப்பெரும் வரிவெட்டுகளுக்காகவும் ஒரு பாரிய இராணுவப் பெருக்கத்திற்காகவும் பொதுக் கல்வி, மருத்துவ உதவி, மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் போன்ற சமூக வேலைத்திட்டங்கள் வெட்டப்படுவதன் மூலமும், வேலைகளின் மீதான மிருகத்தனமான சுரண்டலின் மூலமும், அடிப்படை ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருக்கும் எதுவும் அரிக்கப்படுவதன் மூலமும் தொழிலாள வர்க்கம் விலைசெலுத்த இருக்கிறது.

சர்வதேச அளவில், ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” என்ற பேரினவாதமானது பொருளாதார மற்றும் புவியரசியல் மோதல்களின் அதிகரிப்புக்கு மேடையமைக்கிறது. போர்கள் நிறைந்த கடந்த கால் நூற்றாண்டு காலமானது —1991 இல் ஈராக் படையெடுப்பு தொடங்கி முடிவில்லாத “பயங்கரவாதத்தின் மீதான போராக” தொடர்ந்து நடைபெற்றுச் செல்வது— அதனினும் குருதிகொட்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு முகவுரை மட்டுமே என்பதாக நிரூபணமாகவிருக்கிறது. அமெரிக்கா தனது நீண்டகால ஐரோப்பிய கூட்டாளிகளைக் கூட போட்டியாளர்களாகவே கருதுகிறது, அமெரிக்க நலன்களுக்கு குறுக்கே வருகின்ற மட்டத்திற்கு அவை எதிரிகளாகவே கருதப்படும் என்பதை பதவிக்கு வரும் முன்னதாகவே ட்ரம்ப் தெளிவாக்கி விட்டிருக்கிறார்.

ஆளும் உயரடுக்கிற்குள்ளாக, தந்திரோபாயம் தொடர்பாக கூர்மையான பிளவுகள் இருக்கின்றன என்பது, தேர்தலுக்குப் பின்னர் வெடித்த முன்கண்டிராத அரசியல் மோதல்களில் வெளிப்பட்டது. ஆயினும், தலைமை ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து ட்ரம்ப் மீது வருகின்ற தாக்குதல்கள் அவர் அதி-வலது கொள்கையை முன்னெடுக்க உறுதி பூண்டதை மையமாகக் கொண்டவையாக இல்லை, மாறாக அமெரிக்க போர் திட்டமிடலின் திசை குறித்ததாகவே இருக்கின்றன. கிளிண்டனை ஆதரித்த பெருநிறுவன உயரடுக்கு மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் கன்னைகள் ரஷ்யாவை நோக்கிய மூர்க்கமான நிலைப்பாட்டில் இருந்து எந்த பின்வாங்கலும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்பின என்றால், ட்ரம்ப், இப்போதைக்கு, தனது வாய்வீச்சுத் தாக்குதல்களை சீனாவுக்கு எதிராகவும், மிக சமீபத்தில், ஜேர்மனிக்கு எதிராகவும், செலுத்தியிருக்கிறார்.

இந்த மோதல்கள் எத்தனை கடுமையாக இருந்தபோதும் கூட, ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளுமே பின்வரும் உறுதிப்பாடுகளில் ஒன்றுபட்டு நிற்கின்றன: 1) அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் அபாயம் ஏற்படினும் கூட தனது உலகளாவிய நலன்களைப் பின்தொடர வேண்டும்;  2) தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ட்ரம்ப் பேசுவதும் ட்வீட் செய்வதும் தனக்காக மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சார்பாகத்தான் என்பது பில்லியனர்களையும் இராணுவத் தளபதிகளையும் கொண்ட அவரது அமைச்சரவை தேர்வுகள் சொற்பமான எதிர்ப்புடன் செனட் ஊர்ஜிதப்படுத்தல் நடைமுறைகளைக் கடந்து செல்கின்றன என்ற உண்மையின் மூலமாக நிரூபணமாகிறது. ஒபாமாவை பொறுத்தவரை, உள்வரும் நிர்வாகத்தின் அரசியல் அங்கீகாரத்தை திட்டவட்டம் செய்வதற்கென்றே புதனன்று நடந்த தனது இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை அர்ப்பணித்திருந்தார், வெற்றி பெற்றிருக்கும் நிலையில், “அவரது சிந்தனைகளையும் அவரது விழுமியங்களையும் கொண்டு முன்செல்வதே [ட்ரம்புக்கு] முறையானதாயிருக்கும்” என்று அறிவித்தார்.

ட்ரம்ப் பதவிக்கு அமர்த்தப்பட்டதன் மூலம், ஆளும் வர்க்கமானது ஒரு கட்டுக்கதைமயமான அமெரிக்க கடந்த காலத்தின் —அந்நிலத்தில் முதலாளித்துவ வெகுசிலராட்சி மக்களைச் சுரண்டும் சுதந்திரம் கொண்டிருக்கும் அத்துடன் மனம் விரும்பும் மட்டத்திற்கு சூழலை அசுத்தப்படுத்த முடியும்; அங்கு தொழிலாள வர்க்கம் அரசுக் கல்வி, மருத்துவப் பராமரிப்பு மற்றும்  ஓய்வுக்கால பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உரிமை உள்ளிட எந்த முக்கியமான சமூக உரிமைகளும் அற்றதாய் இருக்கும்; அங்கு போலிஸ் கேள்வி கேட்பாரின்றி மனிதர்களை முடமாக்கலாம் கொல்லலாம்; அங்கே பெருநிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிமாட்டுஊதியம் வழங்கலாம், விருப்பம்போல் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம், குழந்தைத் தொழிலாளர்களையும் கூட பயன்படுத்தலாம்; அங்கே அடிமட்ட தப்பெண்ணங்கள் சிடுமூஞ்சித்தனத்துடன் ஊக்குவிக்கப்படும் அத்துடன் அத்தியாவசியமான ஜனநாயக உரிமைகள் கழுத்து நெரிக்கப்படும்— புத்துயிர்ப்பை எதிர்பார்க்கிறது.

ஆனால், 1930களின் மாபெரும் தொழிற்துறைப் போராட்டங்களை சிறிதாக்கும் அளவுக்கான ஒரு வீச்சில் சமூக மோதல் கட்டவிழ்த்து விடப்படாமல் ஒரு முதலாளித்துவ நரகம் பற்றிய இந்த கொடுங்கனவான மற்றும் திகிலூட்டும் சிந்தனையானது அடையப்பட முடியாது. வரவிருக்கும்  அரசியல் மற்றும் சமூக அதிர்ச்சிகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை நடவடிக்கைக்குள் தள்ளும். ஐயுறவுவாதிகள் —பல்கலைக்கழக கல்வியறிஞர்கள் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் மார்க்சிச-விரோத போலி-இடது அரசியல் அமைப்புகளின் மத்தியில் இவர்களை ஏராளமாகக் காணலாம்— பரந்த தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சாத்தியத்தையே நிராகரிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டும் அத்தனை முயற்சிகளையும் நிராகரிப்பவர்கள் வெகுஜன புரட்சிகர நனவு இன்மையை சுட்டிக்காட்டுகின்றனர். ஆயினும் அவர்களது ஐயுறவுவாதம் புரட்சிகர வெடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துத் தருகின்ற வரலாற்று நிகழ்முறைகள் குறித்த அவர்களது சொந்த அறியாமையையும் அலட்சியத்தையுமே வெளிப்படுத்துகிறது. சென்ற நூற்றாண்டில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் மகத்தான மூலோபாய மேதையாக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியவாறாக:

இவ்வாறாய், ஒரு புரட்சிகர சகாப்தத்தில் வெகுஜனக் கண்ணோட்டங்களிலும் மனோநிலைகளிலும் ஏற்படக் கூடிய அதிவிரைவான மாற்றங்கள், மனித மனத்தின் நெகிழ்வுநிலை மற்றும் இயங்குநிலையிலிருந்து பெறப்படுவதில்லை, மாறாக அதற்கு நேரெதிராய், அதன் ஆழமான பழமைவாதத்ததிலிருந்து பெறப்படுகின்றது. புதிய புறநிலைமைகளுக்கு பின்னே மக்களின் மீது ஒரு பிரளயத்தின் வடிவத்தில் வந்து மோதுகின்ற அந்த தருணம் வரையிலும் அந்த நிலைமைகளுக்கு காலத்தால் மிகவும் பின்தங்கியதாக சிந்தனைகளும் உறவுகளும் இருப்பதுதான், ஒரு புரட்சியின் காலகட்டத்தில் போலிஸ் மூளைக்கு வெறும் ”வாய்வீச்சாளர்களின்” நடவடிக்கைகளின் விளைவாக தென்படக் கூடிய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிப்பெருக்குகளின் அந்தப் பாய்ச்சல் இயக்கத்தை உருவாக்குவதாய் தெரிகிறது.

டொனால்ட் ட்ரம்ப்பின் வீர சூர நடிப்புகள் அத்தனையும் இருந்தாலும், இறுதி ஆய்வில், அவரது நிர்வாகமானது, அமெரிக்க முதலாளித்துவத்தை பீடித்திருக்கும் ஆற்றொணா நெருக்கடியின் விளைபொருளே ஆகும். அதன் பொறுப்பற்ற கொள்கைகள் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் அதனால் கட்டுப்படுத்த முடியாத சக்திகளை இயக்கத்தில் நிறுத்தும்.

இந்த புதிய சூழ்நிலையில், ஜனநாயகக் கட்சி மற்றும் அதே அளவுக்கு குடியரசுக் கட்சி ஆகிய பெரு வணிகத்தின் இரண்டு கட்சிகளிடம் இருந்தும் சுயாதீனமாயும் அவற்றுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதே மிகவும் அவசரஅவசியமான அரசியல் பணியாகும். இந்தப் பணிக்கே அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சக-சிந்தனையாளர்களும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத பதிலிறுப்புக்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சமூகத்தின் செல்வம் ஒருசிலவரது கட்டுப்பாட்டில் இருப்பதற்கு எதிராய், பிரம்மாண்டமான பெரு-நிறுவனங்களும் வங்கிகளும் தனியார் இலாபத்திற்கல்லாது சமூகத் தேவைகளுக்காய் சேவை செய்கின்ற விதத்தில் ஜனநாயகக் கட்டுப்பாட்டிலான பொது வசதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. சமூக சமத்துவம் என்ற இலட்சியத்தை முன்னெடுக்கவும், ஒரு கண்ணியமான ஊதியமளிக்கும் வேலை, தரமான ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் கல்வி, ஒரு பாதுகாப்பான மற்றும் சவுகரியமான வேலைஓய்வு, மற்றும் ஒரு ஆரோக்கியமான சுற்றுசூழல் ஆகியவற்றுக்கு தொழிலாள வர்க்கம் கொண்டுள்ள அடிப்படையான உரிமைகளை உறுதிசெய்வதற்காகவும் பாரிய செல்வ மறுவிநியோகம் ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

ஆளும் வர்க்கத்தின் தேசியவாத நஞ்சு மற்றும் போர் முனைப்பு ஆகியவற்றுக்கு எதிராக, அனைத்துத் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. புலம்பெயர்ந்த மக்களையோ அல்லது பிற நாடுகளின் தொழிலாளர்களையோ பலியாடுகளாக்குவதற்கு செய்யப்படுகின்ற ஒவ்வொரு முயற்சியையும் தொழிலாளர்கள் எதிர்த்தாக வேண்டும் என்பதுடன் இனரீதியாக அல்லது பால்ரீதியாக பிளவுகளை விதைப்பதற்கு செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியையும் நிராகரிக்க வேண்டும்.

“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ட்ரம்ப் விடுக்கும் அழைப்பானது உண்மையில் வர்க்கப் போர், இராணுவ வன்முறை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கான ஒரு அழைப்பாகும். இதற்கு பதிலிறுப்பாய், தொழிலாளர்கள் சர்வதேச ஐக்கியம், சமத்துவம் மற்றும் சோசலிசம் என்ற பெருமிதமிக்க பதாகையை கட்டாயம் விரும்பி ஏந்திக் கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்களையும் அத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான ஒரு முன்னோக்கிய பாதையை எதிர்நோக்கியிருக்கும் அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.