ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US think tank urges Trump to confront China in South China Sea

அமெரிக்க சிந்தனைக்குழாம் தென் சீனக் கடலில் சீனாவை எதிர்க்குமாறு ட்ரம்பை வலியுறுத்துகிறது

By Peter Symonds
3 January 2017

வாஷிங்டனை மையமாக கொண்ட மூலோபாய வரவு-செலவு திட்ட மதிப்பீட்டிற்கான மையம் (CSBA) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடனான அமெரிக்க மோதலில் மிகப்பெரும் தீவிரப்பாட்டைத் தொடங்குமாறு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழைப்புவிடுக்கிறது. அவ்வறிக்கையை ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் ஓர் உயர்மட்ட முன்னாள் அதிகாரியான ரோஸ் பாப்பேஜ் (Ross Babbage) எழுதியுள்ளார்.

“தென் சீனக் கடலில் சீன சாகசவாதத்தை எதிர்கொள்ளல்" என்று தலைப்பிட்ட அந்த அறிக்கை, ஒபாமா நிர்வாகம் “தென் சீனக் கடலில் சீனாவின் கடல்எல்லை விரிவாக்கத்தை எதிர்கொள்ள" “தவறியதன்" மீது பெரிதும் விமர்சனபூர்வமாக உள்ளது. அது, ஏற்கனவே சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கு அழுத்தமளித்து வரும் அமெரிக்க பாதுகாப்பு ஸ்தாபகத்தின் இராணுவவாத அடுக்குகளின் சார்பாக பேசுகிறது.

தென் சீனக் கடலில் சீன நிலசீரமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் மீது ஒருமுகப்பட்டிருந்த பாப்பேஜ், “ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது, பெய்ஜிங் உலகின் மிக முக்கிய மூலோபாய கடல்பாதைகளில் ஒன்றை இராணுவமயப்படுத்தி, முழுமையாக கட்டுப்பாட்டை ஸ்தாபித்திருப்பதாக" அறிவிக்கிறார். இது "அமெரிக்காவின் பலத்திற்கும், அதன் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் பலத்திற்கும், மற்றும் மிகவும் அடிப்படையாக, விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட உலகளாவிய ஒழுங்கமைப்பிற்கும் ஒரு ஆழ்ந்த சவாலை முன்னிறுத்துவதாக" அவர் குறிப்பிடுகிறார்.

அந்த அறிக்கை யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்துகிறது. அவரது இரண்டு பதவி காலங்களில், ஒபாமா தென் சீனக் கடலின் நீண்டகால பிராந்திய கடல்எல்லை பிரச்சினைகளை —அமெரிக்க நலன்களுக்கு சீனாவை அடிபணிய வைக்கும் அவரது பரந்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக— ஓர் அபாயகரமான சர்வதேச வெடிப்புப்புள்ளியாக மாற்றியுள்ளார். 2010 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கையில் தென் சீனக் கடலின் "சுதந்திர கடல் போக்குவரத்தில்" அமெரிக்காவின் "தேசிய நலன்" இருப்பதாகவும், சீனா மற்றும் அதன் அண்டைநாடுகளுக்கு இடையிலான பிளவை அதிகரிக்க அது இந்த கடல்எல்லை பிரச்சினைகளை கையிலெடுக்க முனையும் என்றும் அறிவித்திருந்தார்.

பாப்பேஜ் சீனாவை ஒரு ஆக்ரோஷமாக வளர்ந்து வரும் சக்தியாக சித்தரிக்கும் அளவிற்கும் மற்றும் கடந்த மூன்றாண்டுகளாக சீன நிலச்சீரமைப்பு மற்றும் கட்டமைப்பை ஓர் அச்சுறுத்தலாக முன்வைக்கும் அளவிற்கும் செல்கிறார். பெய்ஜிங்கின் இராணுவ கட்டமைப்புக்கு வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளது விடையிறுப்பானது "கவனஞ்சிதறிய தலைமைகள், ஒருமுகமின்மை, பிற்போக்கான நடத்தை, மட்டுப்படுத்தப்பட்ட தந்திரோபாய முன்னெடுப்புகள், மெதுவாக நகரும் நிர்வாகம், அனைத்திற்கும் மேலாக, அரசியல் விருப்பத்தின் பலவீனமான வெளிப்பாடுகள்" ஆகியவற்றால் குணாம்சப்பட்டிருப்பதாக அவர் எதிர்முரணாக குறிப்பிடுகிறார்.

சீன இராணுவம் எவ்வாறிருப்பினும் தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசிபிக்கில் மேலோங்கிய சக்தி என்பதிலிருந்து வெகுதூரம் உள்ளது. “முன்னெடுப்பின்" பாகமாக, பென்டகன் அதன் அதிநவீன விமான மற்றும் கடற்படை படைத்தளவாடங்கள் உட்பட 60 சதவீதத்தைப் அப்பிராந்தியத்தில் நிறுத்த திட்டமிட்டு வருகிறது. தென் கொரியா, ஜப்பான் மற்றும் குவாம் இல் உள்ள அதன் பிரதான இராணுவ தளங்களை மறுசீரமைத்து வரும் அது, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உடன் புதிய இராணுவத்தள உடன்படிக்கைகளை ஸ்தாபித்துள்ளது, இந்தியா மற்றும் வியட்நாம் உட்பட ஆசியா எங்கிலும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்தி உள்ளது.

பாப்பேஜை பொறுத்த வரையில், ஒபாமா "செய்ய தவறியமையானது" “உலகளாவிய விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கமைப்பிற்கு" —அதாவது அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தி, அதன் விதிமுறைகளை அமைக்கும் ஓர் உலகளாவிய ஒழுங்கமைப்புக்கு— சீனா அடிபணிய மறுப்பதால் முன்வருகிறது. சீனப் பெருநிலம் மற்றும் முக்கிய கடற்படை தளங்களுக்கு பக்கவாட்டில் தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவத்தின் அதிகரித்துவரும் பிரசன்னத்திற்கு, சீனா, துல்லியமாக உணர்வுபூர்வமாக, அதன் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளை பாதுகாக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாத்தியமான பொருளாதார பதிலடி மற்றும் இராணுவ மோதல்கள் மற்றும் சண்டைகள் மீது "ஆழ்ந்த அபாயகரமான தட்டிக்கழிப்பு" தான், சீனாவை நோக்கிய அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளது தற்போதைய "தயங்கிய மற்றும் பயனற்ற" விடையிறுப்புக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று CBSA அறிக்கை வாதிடுகிறது. அந்த அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போர் அபாயம் இருந்தாலும் சீனாவை பின்வாங்க நிர்பந்திக்க அமெரிக்கா இன்னும் அதிக ஆக்ரோஷமான அணுகுமுறையை எடுக்க வேண்டுமென அது அறிவுறுத்துகிறது.

முழு அளவிலான போரின் அபாயங்களை நன்கறிந்துள்ள பாப்பேஜ், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தாமதிக்காமல் விரைவாக சீனாவை எதிர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறார். அவ்வாறு செய்ய தவறுவது, பெய்ஜிங்கை பலப்படுத்தி, “நெருக்கமான மேற்கு கூட்டாளிகள் இன்னும் அபாயகரமான சவால் ஓட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு தீவிர அபாயத்தை" உருவாக்குகிறது என்றவர் குறிப்பிடுகிறார்.

“அதுபோன்றவொரு நெருக்கடியானது தாய்வான் விவகாரத்தில், தென் ஜப்பானில் சென்காயு மற்றும் ரியுக்யூ (Ryukyu) தீவு தொடரிலும், வட இந்தியா விவகாரங்களிலும், தென் சீனக் கடலிலேயே கூட, அல்லது சாத்தியமான அளவிற்கு வேறு இடங்களிலும் எழக்கூடும். தவிர்க்கவியலாத இந்த மிகப்பெரும் நெருக்கடி இன்னும் அதிக கடினமான சூழலில் ஏற்படலாம், மற்றும் இன்னும் அதிக மனிதர்கள், இராணுவம் மற்றும் பொருளாதாரத்தை விலையாக கொடுக்க நேரிடலாம்,” என்கிறார்.

CBSA அறிக்கையின் முன்மொழிவானது சீனாவுடனான போர் தயாரிப்புகளில் ஒரு கூர்மையான தீவிரப்பாட்டுக்குரியது என்பதுடன், இன்னும் அதிக ஆக்ரோஷமான பல கோரிக்கைகளுடன் தொடங்கும் அது, பெய்ஜிங் மீது பழிசுமத்த மற்றும் அதன் செல்வாக்கை பலவீனப்படுத்த மற்றும் ஒரு மேலாதிக்க மூலோபாய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அப்பிராந்தியம் எங்கிலும் இராணுவத்தை விரிவாக்க ஒரு விரிவார்ந்த பிரச்சார நடவடிக்கையை உள்ளடக்கி உள்ளது.

அமெரிக்கா "சுதந்திர கடல் போக்குவரத்தில்" மட்டுமே ஆர்வமுள்ளது மற்றும், தென் சீனக் கடலின் கடல்எல்லை பிரச்சினைகளில் அதற்கு எந்த நிலைப்பாடும் கிடையாது என்ற கட்டுக்கதையைக் கைவிடுமாறு பாப்பேஜ் அமெரிக்காவிற்கு அழைப்புவிடுக்கிறார். ஒபாமாவின் கீழ், சீனாவின் கடல் போக்குவரத்து உரிமைகோரல்களுக்கு சவால்விடுக்க ஹேக்கில் உள்ள மத்தியஸ்த்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்திடம் பிலிப்பைன்ஸ் கொண்டு சென்ற சட்ட வழக்கை வாஷிங்டன் ஆதரித்தது மற்றும் உதவியது.

சீனா, தென் சீனக் கடலில் மட்டுமல்ல மாறாக அமெரிக்காவின் கூட்டாளி ஜப்பானுடனான கடல்எல்லை பிரச்சினையால் பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கு சீனக் கடலிலும் அதன் பிரசன்னத்தை விரிவாக்குவதை மற்றும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருவதில் அமெரிக்கா இன்னும் அதிகமாக வெளிப்படையாக இருக்க வேண்டும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பிலிப்பைன்ஸ் க்கு ஆதரவான ஒருதலைபட்சமான ஹேக் தீர்ப்பை, மணிலா பின்வாங்கி விட்ட போதினும் கூட, சீனா மதிக்க வேண்டுமென்று அது வலியுறுத்த வேண்டுமென்றும் அது கோருகிறது.

தென் சீனக் கடலில் சீனா முன்னிறுத்தும் "அச்சுறுத்தலை" ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவதற்கான அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது ஒரு ஒருங்கிணைந்த பொது "தகவல்" முயற்சியை நியாயப்படுத்துவதற்காக, சீன முகவர்கள் குறித்தும் மற்றும் அதன் செல்வாக்கு குறித்தும் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வரும் சமீபத்திய பீதியூட்டும் பிரச்சாரத்தை பாப்பேஜ் மேலுயர்த்துகிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போருக்கான தயாரிப்பில் இருந்ததைப் போலவே, அவர், ஒரு புதிய மற்றும் இன்னும் அதிக பேரழிவுகரமான மோதலுக்கு பொது சூழலை உருவாக்கும் ஒரு முயற்சியில், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் சிந்தனைக்குழாம்களிடம் இருந்து அரைகுறை உண்மைகள் மற்றும் பொய்களின் ஒரு புதிய பிரளயத்திற்கு அழைப்புவிடுக்கிறார்.

ஓர் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஒத்த ஒன்றையும் அந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியின் ஊழலை அம்பலப்படுத்துவது, அதன் சட்டபூர்வத்தன்மையை பலவீனப்படுத்துவது, சீனாவின் பொருளாதார எதிர்காலம் மீதான நம்பிகையைக் கெடுக்க "சிறிது சிறிதாக கொல்லும்" பொருளாதார தடையாணைகளை ஏற்படுத்துவது மற்றும் "குறிப்பாக மூத்த சீன வணிகர்கள், இராணுவம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள், மற்றும் அடுத்து வரவிருக்கின்ற இளம் உயரடுக்குகளிடையே உள்ளார்ந்த அதிருப்தியை" பேணுவது ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்கும்.

அமெரிக்காவுக்கும் மற்றும் அதன் கூட்டாளிகள், பிரதானமாக ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புடன், ஆசியாவில் ஒரு பிரதான இராணுவ கட்டமைப்பும் மற்றும் சீனாவை ஆத்திரமூட்ட, பலவீனப்படுத்த மற்றும் அவசியமானால் அதற்கு எதிராக போர் தொடுக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான வாஷிங்டனின் விருப்பமுமே இந்த மூலோபாயத்தில் மையத்தில் உள்ளது. ஆசியா எங்கிலும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்தும் அத்துடன் "அமெரிக்கா மற்றும் அதன் நெருக்கமான கூட்டாளிகளை பொறுத்த வரையில் மேற்கு பசிபிக்கில் இன்னும் பலமான இராணுவ படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்தும் மற்றும் செயல்படுத்தும்,” ஒரு பிராந்திய பாதுகாப்பு பங்காண்மை திட்டத்தை ஸ்தாபிப்பதற்கு பாப்பேஜ் அழைப்புவிடுக்கிறார்.

ட்ரம்ப் சீனாவை எதிர்க்க அவர் தீர்மானகரமாக இருப்பதை ஏற்கனவே சமிக்ஞை காட்டியுள்ள நிலைமைகளின் கீழ், "ட்ரம்ப் நிர்வாகத்திற்கான மூலோபாய வாய்ப்புகளாக அந்த அறிக்கை நிலைநிறுத்தப்படுகிறது. ட்ரம்ப் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது சீனாவிற்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டும் சூளுரைக்கவில்லை, மாறாக நான்கு தசாப்தங்களாக அமெரிக்க-சீன உறவுகளின் அச்சாணியாக இருந்துள்ள ஒரே சீனா கொள்கையை கைவிடுவதற்கும் அச்சுறுத்தி உள்ளார்.

பெய்ஜிங் உடன் ஓர் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஒரே சீனா கொள்கையில் அவர் பிணைந்திருக்க போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், “தென் சீனக் கடலின் மத்தியில் ஒரு பாரிய படையரணைக் கட்டமைப்பது" உட்பட கவனத்தில் கொள்ள வேண்டிய குறைகளின் ஒரு பட்டியலை ட்ரம்ப் மேற்கோளிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த உள்ளடக்கத்தில், ட்ரம்ப் நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடும் என்பதற்கு இந்த அறிக்கை ஓர் உறைய வைக்கும் அறிகுறியாக உள்ளது. அதுபோன்ற கொள்கைகள் தென் சீனக் கடலில் மிகப் பெரியளவில் மோதல் அபாயத்தை உயர்த்தி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே முழுமையான போரை விரைவுபடுத்தக்கூடும்.