ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In latest victory for the far right, neo-fascists gain in Austrian election

அதிவலதின் சமீபத்திய வெற்றியாக, ஆஸ்திரிய தேர்தலில் நவ-பாசிசவாதிகள் ஆதாயமடைகின்றனர்

Peter Schwarz
17 October 2017

சென்ற கடந்த வாரயிறுதி ஆஸ்திரிய தேர்தல் முடிவு ஒரு சர்வதேச வடிவத்தைப் பின்தொடர்கிறது. 1930 களின் பெருமந்தநிலைக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் புதிய போர் அபாயம் ஆகியவற்றிற்கு இடையே, அதிவலது கட்சிகள் செல்வாக்கு பெற்று வருகின்றன, அதேவேளையில் உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளோ தோல்விக்கு மேல் தோல்வியை தழுவி வருகின்றன.

போலாந்தில் Jarosław Kaczyński மற்றும் ஹங்கேரியில் விக்டொர் ஓர்பனின் வளர்ச்சி; பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் சர்வஜன வாக்கெடுப்பில் புலம்பெயர்வோர்-விரோத UKIP வகித்த முக்கிய பாத்திரம்; அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி; பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் தேசிய முன்னணி இரண்டாம் இடத்தைப் பிடித்தமை; மற்றும் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD) நுழைந்திருப்பது ஆகிய அனைத்தும் இந்த நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக உள்ளன.

2016 இன் இறுதியில், ஆஸ்திரிய தேர்தலில் வலதுசாரி தீவிரவாத கட்சியான ஆஸ்திரிய சுதந்திர கட்சியின் (FPÖ) வேட்பாளர் நோபெர்ட் ஹோஃபரை அலெக்சாண்டர் வொன் டெர் பெல்லென் மிகச் சிறிய வித்தியாசத்தில் வென்றதை, ஐரோப்பாவின் மரபார்ந்த ஆளும் கட்சிகளும் ஊடக பண்டிதர்களும் அதிவலதின் வளர்ச்சி குறைய வருவதற்கான ஒரு சான்றாக புகழ்ந்தனர்.

ஆனால் அதற்கு பதிலாக, ஞாயிறன்று பொது தேர்தலில் FPÖ கணிசமான அளவுக்கு வெற்றிகளைப் பதிவு செய்து, பழமைவாத மக்கள் கட்சிக்கு (ÖVP) அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நவ-பாசிசவாதிகள் இப்போது பழமைவாதிகளுடனான கூட்டணியில் அரசாங்கத்தினுள் நுழைய கூடியவர்களாக உள்ளனர். இதற்கிடையே, ஸ்தாபக வலது கட்சிகளும் பெயரளவிலான இடதும் அனைத்தும் FPÖ இன் புலம்பெயர்வோர்-விரோத, பேரினவாத வேலைத்திட்டத்தை ஏற்றுள்ளன.

இதை Berlin Tagesspiegel இவ்வாறு எழுதியது, “கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் பாரம்பரிய பாதையிலிருந்து வலதுசாரி பாதைக்கு மாறுவதை" ÖVP இன் செபஸ்தியன் குர்ஜ் தான் வழிநடத்தி உள்ளார். “குர்ஜ் இன் நிலைப்பாடுகளும் வலதுசாரி வெகுஜனவாத FPÖ இன் நிலைப்பாடுகளும் பிரதானமாக மிகச் சிறிய அம்சங்களிலே வேறுபடுகின்றன,” என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது.

மூன்றாவது இடத்திற்கு வந்த ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சியினர், நவ-பாசிசவாதிகளை வெல்ல பழமைவாதிகளுடன் போட்டியிட்டு வருகின்றனர். ஞாயிறன்று வாக்குப்பதிவுக்குப் பின்னர், சமூக ஜனநாயக கட்சியின் (SPÖ) பெடரல் சான்சிலர் கிறிஸ்டியான் கெர்ன், FPÖ உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கும் அவர் கட்சியின் முன்மொழிவைப் புதுப்பித்தார்.

ஐரோப்பா முழுவதிலும் அதிவலது கட்சிகளின் வளர்ச்சிக்கு என்ன காரணம்? இதற்கான பதிலை அவர்களின் அரசியலில் காண்பதைக் காட்டிலும், "இடது" என்று கூறிக்கொள்பவைகளின் அரசியலில் கண்டுகொள்ளலாம்.

சமூக ஜனநாயக கட்சி (SPÖ) நீண்டகாலமாகவே சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கட்சியாக காட்டி வந்தது. அது ஒரு முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கட்சியாகும், ஆஸ்திரிய மூலதனத்தின் சர்வதேச போட்டியாளர்கள் மற்றும் அதன் சொந்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆஸ்திரிய மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதே அது வகித்த பாத்திரமாக இருந்தது. சமூக ஜனநாயக கட்சியின் தலைவராகி கடந்த கோடையில் சான்சிலர் அலுவலகத்தில் பதவியேற்பதற்கு முன்னர், ஆஸ்திரிய இரயில்வே அமைப்புமுறையின் தலைமை செயலதிகாரியாக இருந்த கெர்ன், 700,000 யூரோ சம்பளத்துடன், ஓர் உயர்மட்ட வணிக நிர்வாகியாக செயற்பட்டிருந்தார்.

வேலைகள் மற்றும் சம்பளங்கள் மீதான தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க ஐக்கியத்தைத் தடுக்க பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவிக்கவும் பணிக்கப்பட்ட, பெருநிறுவன உயரடுக்கின் கரமாக செயல்படும், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் சமூக ஜனநாயகவாதிகள் நெருக்கமாக செயல்படுகின்றனர். சமூக ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவு நவ-பாசிசவாதிகளுடனான கூட்டுறவுக்காக கட்சிக்குள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

சமூக ஜனநாயகவாதிகளை (மற்றும் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியையும்) சுற்றி போலி-இடது துணை அமைப்புகளின் ஒரு கூட்டம் சுற்றியுள்ளன, இவை, பசுமை கட்சியினரைப் போலவே, 1960 களின் மாணவர் போராட்ட இயக்கத்தில் அவற்றின் தோற்றுவாயைக் கொண்டுள்ளதுடன், செல்வ வளம் மிக்க நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

பெருந்திரளான தொழிலாளர்கள் இனவாத மற்றும் பாசிசவாத கொள்கைகளை ஆதரிக்கிறார்கள் என்று கிடையாது. அதற்கு முரண்பட்ட வகையில், இடதை நோக்கிய அரசியல் தீவிரப்படல், முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சி, வர்க்க போராட்டம் புத்துயிர் பெற்றிருப்பது என பல அறிகுறிகள் அங்கே உள்ளன. அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில், 13 மில்லியன் பேர், முக்கியமாக இளைஞர்களும் தொழிலாளர்களும், அவரை ஒரு சோசலிஸ்ட் என்று நம்பி பேர்ணி சாண்டர்ஸ் க்கு வாக்களித்தனர், ஜனநாயகக் கட்சியினருக்கான நீண்டகால பணியாளராக சேவையாற்றிய அவரோ வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏ இன் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அவர் ஆதரவை வழங்கினார்.

மே மாதம், 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பான்மையினர், நடப்பில் இருப்பதற்கு எதிராக "மிகப்பெரியளவிலான எழுச்சியில்" பங்கெடுப்போமென தெரிவித்திருந்தனர். அந்த ஆய்வில் 10 இல் ஒன்பது பேர், “வங்கிகளும் பணமுமே உலகை ஆள்வதாக" தெரிவித்திருந்தனர், மேலும் அதே அளவிலான மக்கள் "பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி" விரிந்து வருவதாக தெரிவித்திருந்தனர்.

வலதுசாரியின் தேர்தல் வெற்றிகளானது, பெரிதும் "தொழிலாளர்" கட்சிகளும் சமூக ஜனநாயக கட்சிகளும் தொழிலாளர்களை பாரியளவில் கைவிட்டதன் விளைவாகும், அவை பல பத்தாண்டுகளாக முதலாளித்துவத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பிலிருந்தும் தங்களை விலக்கிக் கொண்டதுடன், தொழிலாள வர்க்கத்தை நோக்கி அல்லது உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மீதான எந்தவொரு நிலைநோக்கையும் கைவிட்டுள்ளன. அதற்கு பதிலாக அவை இன அடையாள, வம்சாவழி சார்ந்த அடையாள அரசியலை ஊக்குவித்து, அவற்றை இன சிறுபான்மையினர் மற்றும் பெண்களில் தனிச்சலுகை கொண்ட ஒரு சிறிய அடுக்கைச் செல்வ செழிப்பாக்க பயன்படுத்தி உள்ளன, அதேவேளையில் எல்லா இனத்தைச் சேர்ந்த பெருந்திரளான தொழிலாளர்களோ அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது இடையறாத தாக்குதல்களை முகங்கொடுக்கின்றனர்.

அனைத்திற்கும் மேலாக, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் கோரும் சிக்கன கொள்கைகளைத் திணிக்க இந்த கட்சிகள் முற்றிலும் உடந்தையாய் உள்ளன என்பது தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும்.

புலம்பெயர்வோர்-விரோத மற்றும் இனவாத கொள்கைகளை அதிவலது கட்சிகளால் பரந்தளவில் செவியுற செய்ய முடிந்திருக்கிறது என்றால், அது சமூக அதிருப்திக்கு அரசியல் ஸ்தாபகத்தினுள் எந்தவொரு முற்போக்கான வடிகாலும் இல்லாதிருப்பதன் விளைவாகும். செய்ய வேண்டியதை செய்யாமல் போனதிலிருந்து அதிவலது பலமடைந்து வருகிறது, அதேவேளையில் போலி-இடது அமைப்புகள் உட்பட ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் தொகுப்பும் சீற்றத்தோடு வலதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கு சமூக ஜனநாயகக் கட்சியும் (SPÖ), தொழிற்சங்கங்களும், போலி-இடதும் காட்டும் அலட்சியமும் விரோதமும் ஓர் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது, இதை அதிவலது அதன் வீராவேச கோஷங்களைக் கொண்டு நிரப்பி வருகின்றது. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் அகதிகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான ஆக்ரோஷம் நிறைந்திருந்தது. வேலைவாய்ப்பின்மை, கூலி-வெட்டுக்கள், மருத்துவக் காப்பீடு குறைப்பு என பாவிக்கத்தக்க ஒவ்வொரு சமூக பிரச்சினைக்கும் அவர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டு வருகிறார்கள்-இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் ஸ்தாபக கட்சிகளிடமே எந்தவொரு முற்போக்கான பதிலும் இல்லை.

1980 கள் வரையில் ஆஸ்திரியா ஒரு முன்மாதிரி சமூக ஜனநாயக நாடாக இருந்தது. பொது வீட்டுவசதி, முதியோர் வசதிகள் ஆகிய பிரிவுகளிலும் ஏனையவற்றிலும் அங்கே சமூக வெற்றிகள் இருந்தன. ஆனால் இது, ஆஸ்திரியாவின் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் உலகளாவிய சந்தை போட்டியில் தாக்குப்பிடிக்க தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுக்க போட்டிப்போட தொடங்கியதும், அதிகரித்தளவில் தாக்குதலின் கீழ் வந்தன. முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களாக மாறிய முன்னாள்-ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகள் ஆட்சி செய்த வரி-குறைந்த பகுதிகளில் பரந்த மலிவு-கூலி உழைப்பை உருவாக்கியமையும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ மீட்சியும் இந்த தாக்குதலை இன்னும் அதிகரிக்க செய்தன.

ஆஸ்திரியாவை விட வெறும் மூன்றில் ஒரு பங்கு சராசரி சம்பளம் கொண்ட ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா எல்லையிலிருந்து வியன்னா 100 கிலோமீட்டருக்கும் குறைந்த தூரத்தில் உள்ளது. ஆஸ்திரிய சுதந்திர கட்சியின் இரண்டு கோட்டைகளான பர்கென்லாந்து மற்றும் கரின்தியாவின் கூட்டாட்சி அரசுக்கள் ஹங்கேரி மற்றும் ஸ்லோவேனியா எல்லைக்கருகில் அமைந்துள்ளன.

இத்தகைய சமூக பதட்டங்களும் வெறுப்புக்களும் சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி உள்ளன, முந்தையவை 2015 கோடையில் பத்தாயிரக் கணக்கான அகதிகள் பால்கன் வழியாக ஆஸ்திரியாவுக்குள் வந்த போது தீவிரமடைந்தன. அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் தொடுத்த போர்கள் மத்திய கிழக்கின் பெரும் பாகங்களை அழித்த போது அவர்கள் தப்பியோடி வந்தவர்களாவர். முதலில் அவர்களுக்கு மக்கள் அனுதாபம் கிடைத்தது என்றாலும், பழமைவாதிகளும் சமூக ஜனநாயகவாதிகளும் சமூக அதிருப்தியை ஒரு பிற்போக்கான திசையில் திருப்பிவிடும் முயற்சியில் சுதந்திர கட்சியின் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தை ஏற்றனர்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் சமூக நலன்களைப் பாதுகாக்கவும், திருப்பி தாக்குவதற்கும் ஒரு வழியை எதிர்நோக்கி உள்ளனர். என்ன அவசியப்படுகிறது என்றால், சமூக தாக்குதல்கள், போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவுக்கு எதிரான எதிர்ப்பை ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அணித்திரட்டும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும். உள்நாட்டு தொழிலாளர்கள் ஆகட்டும் புலம்பெயர்ந்தவர்கள் ஆகட்டும் அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளையும் ஒன்றுபோல நிபந்தனையின்றி பாதுகாத்து, தேச பிரிவினைவின்றி இனப் பிரிவினையின்றி அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தும் ஒரு கட்சியைக் கட்டமைப்பது அவசியமாகிறது. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளாகும்.