ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spanish government sends troops to Catalonia

ஸ்பானிய அரசாங்கம் கட்டலோனியாவுக்கு துருப்புகளை அனுப்புகிறது

By Paul Mitchell
5 October 2017

ஸ்பெயினில் உள்ள மக்கள் கட்சி (PP) அரசாங்கம் கட்டலோனியாவுக்கு துருப்புகளை அனுப்பியிருக்கிறது. கட்டலான் ஜனாதிபதி கார்லஸ் புயுக்டெமொன்ட் சுதந்திரப் பிரகடனம் செய்கின்றபட்சத்தில் அங்கிருக்கும் சிவில் கார்டு போலிஸ் மற்றும் தேசிய போலிசுக்கு துணையாக செயல்பட இத்துருப்புகள் அனுப்பப்பட்டிருப்பதாக ஊடக அறிக்கைகளை தெரிவிக்கின்றன.

பார்சிலோனாவுக்கு மேற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சரகோஸாவின் அரகோனிய தலைநகரில் தளம் கொண்டிருக்கின்ற தடவாள ஆதரவுக் குழு 41 உள்ளிட்ட இராணுவத் துருப்புகளை பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பியிருப்பதாக El Confidencial க்கு கசிந்த தகவல்கள் கூறுகின்றன.

செவ்வாயன்று மாலை 7 மணிக்கு, மன்னர் நான்காம் பிலிப் கட்டலான் தேசியவாதக் கட்சிகளைக் கண்டனம் செய்து நாட்டிற்கு உரையாற்றப் போகிறார் என்பது தெரியவந்த ஒரு மணி நேரத்தின் பின்னர், இராணுவக் கமாண்டர்கள் தங்களது கீழிருக்கும் அதிகாரிகளுக்கு பார்சிலோனாவுக்கு 20 டிரக்குகளில் இரண்டு படையணிகளை அனுப்புவதற்கு தயார்செய்வதற்குக் கூறினர். இந்த அலகு துரிதமாக வேறுஇடத்திற்கு அனுப்பப்படக் கூடிய வகையில் ஒரு வார காலமாகவே முன்கூட்டிய உஷார் நிலையிலேயே வைத்திருக்கப்பட்டிருந்தது.

இரவில் கிளம்பிய துருப்புகள் பார்சிலோனா நகரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் Santa Eulalia de Sant Boi de Llobregat  இல் உள்ள இராணுவ முகாமுக்கு அதிகாலை சென்றுசேரும்.

அக்டோபர் 1 அன்று நடந்த கருத்துவாக்கெடுப்பின் போது சிவில் கார்டுகளும் தேசிய போலிசும்  கொடூரமாய் நடந்துகொண்டதன் காரணத்தால் அவர்களுக்கு விடுதிகள் இடம்தர மறுப்பதன் விளைவாக, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் துவைக்கும் வசதிகளை வலுப்படுத்துவது தான் பிரதான நோக்கம் என்பதாக El Confidencial ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும், எதிர்காலத்தில் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவதற்குக் களம் தயாரித்து வைப்பதில் இத்துருப்புகள் சிறப்புத்தேர்ச்சி பெற்றவை என்பது தெளிவு. ஒரு அவசரகால தளவாட அலகாக, அவை “உலகின் எந்தப் பகுதிக்கும் குறுகிய காலத்தில் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு சேர்ப்பதற்கும் அதன் தளவாட சேவைகள் அவசியப்படும் இடங்களில் முழுத் திறனுடன் உடனடியாக எதிர்வினையாற்றுவதற்கும் திறம்படைத்தவை” என்று El Confidencial விளக்குகிறது.  

பொஸ்னியா, கொசாவோ, ஈராக், லெபனான் மற்றும் ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் இந்த அலகு பங்குபற்றியிருக்கிறது.

ஸ்பெயினின் கடற்படை விநியோகம் மற்றும் போக்குவரத்து இயக்குநரகம் பல்வேறு இராணுவ அலகுகளுக்கான கலகத்தடுப்பு சாதனங்களையும் கொள்முதல் செய்திருப்பதாக Defensa.com தெரிவிக்கிறது. இதில் தற்காப்புக்கான 295 ஏரோசால் ஸ்ப்ரேக்கள், 253 கண்ணீர்ப்புகை துப்பாக்கிகள், 1,500 கார்ட்ரிட்ஜுகள், 1,500 இரப்பர் பந்துகள் மற்றும் 12-கேஜ் சுடுஎந்திரங்களுக்கான 300 முப்புகை கையெறி குண்டுகள் மற்றும் 1,000 கண்ணீர்ப் புகை கையெறி குண்டுகள் ஆகியவையும் அடங்கும்.

இப்போது தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தத்தக்க ஒரு வன்மையான ஆத்திரமூட்டலுக்கு மேடை அமைக்கப்படுகிறது. கட்டலோனியாவிலுள்ள மக்கள் கட்சியின் தலைவரான சேவியர் கார்சியா அல்பியோல், பார்சிலோனாவில் இந்த ஞாயிறன்று ஒரு “பாரிய” ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். “ஸ்பானியர்களாக உணரக் கூடிய கட்டலோனியர்கள் அனைவரும் அணிதிரள்வதற்கு நாங்கள் அழைக்கிறோம். ... ஜனநாயகத்தையும், ஸ்தாபனங்களையும் மற்றும் கண்ணியத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியே வருகின்ற ஒரு ஜனநாயக நடவடிக்கை இது” என்று அவர் அறிவித்தார்.

இத்தகைய மிரட்டல்களுக்கு முகம்கொடுத்த நிலையில், புயுக்டெமொன்ட் நேற்றிரவு தொலைக்காட்சியில் பேசுகையில், மத்தியஸ்தம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்தார்.

அவரது அரசாங்கம் கட்டலான் சட்டமன்றத்துக்கு அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பின் முடிவுகளை சமர்ப்பிக்க இருக்கிறது என்றும், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரங்களுக்குள்ளாக சுதந்திரத்தை பிரகடனம் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.  வெளிநாடுகளில் இருப்பவர்களது இறுதியான வாக்குகள் இந்த வார முடிவுக்குள்ளாக வந்துசேர இருக்கின்றன, ”வாக்கெடுப்பு முடிவுகளையும் அவற்றின் விளைவுகளையும் மதிப்பீடு செய்வதற்கு” திங்கள்கிழமையன்று சட்டமன்றத்தின் “அசாதாரணமான வழக்கமான பூரணக் கூட்டம்” நடத்த திட்டமிடப்படுகிறது, அதில் புயுக்டெமொன்ட் உரையாற்ற இருக்கிறார்.

ஆயினும் புயுக்டெமொன்ட்டின் PDeCat ஐச் சேர்ந்த பிரிவினைக்கு எதிரான ஒரு சட்டமன்ற அங்கத்தவர் கூறியதன் படி, “புயுக்டெமொன்ட் நிர்க்கதியாய் சர்வதேச மத்தியஸ்தத்தை எதிர்நோக்கியிருக்கிறார்...சுதந்திரப் பிரகடனத்தை நிறுத்த இயலுவதற்காக.”

ஆயினும் ஐரோப்பிய நாடாளுமன்றம் இது “ஸ்பெயினின் உள்விவகாரம்” என்று கூறி அவரது விண்ணப்பங்களை நேற்று நிராகரித்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கட்டலோனியா மோதல் “உள்நாட்டு விவகாரம்” என்றும் அதனை அந்த நாடு சமாளித்து விடும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

ஸ்பெயினில் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் மன்னரின் உரையைப் பாராட்டியதோடு, பிரதமர் மரியானோ ரஹோயின் தடுமாற்றமாக கூக்குரலிடப்படுகின்ற ஒன்றுடன் அதனை பேதப்படுத்திக் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட வலியுறுத்தின.

இன்னும் அதிக ஒடுக்குமுறைக்கான ஒரு அறிவிக்கப்படாத அழைப்பாக, சோசலிஸ்ட் கட்சிக்கு (PSOE) ஆதரவான El País அறிவித்தது: “கட்டலான் அதிகாரிகள் அரசியல் சட்டத்தையும் கட்டலோனிய சாசனங்களையும் மீறியிருப்பதோடு சட்டபூர்வமான மற்றும் ஜனநாயகரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்களை கொஞ்சம்கொஞ்சமாய் மீறிவிட்டிருக்கின்றனர் என்று கடுமையான வார்த்தைகளில் மன்னர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.... அரசியல்சட்டம் மற்றும் அதன் தன்னாட்சிச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் ஒழுங்கு மற்றும் ஸ்தாபனங்களின் இயல்பான செயல்பாடு, மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் கட்டலோனியாவின் தன்னாட்சி ஆகியவற்றை உறுதி செய்வது சட்டபூர்வமான அதிகாரங்களது பொறுப்பாகும்.”

El Mundo அறிவித்தது, “ஸ்பானியர்கள் அனைவருக்கும் அவசியமாக இருந்த, அத்துடன் அவர்கள் தமது அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்து எதிர்பார்த்திருந்த அந்த செய்தியை, அவர்களின் அரசின் தலைவரிடம் இருந்து வைரம் போன்ற தெளிவுடனும், அத்தனை இறுகிய சம்பிரதாயங்களில் இருந்தும் வெகுதூரபட்ட ஒரு சக்தியுடனும் அவர்கள் பெற்றனர்.”

“இப்போது கட்டலான் பிரிவினைக்கு பொறுப்பாயிருப்பவர்கள்... நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படிய மறுப்பது, எதிர்ப்பவர்களின் அரசியல் உரிமைகளை உதறித்தள்ளுவது, மற்றும் இறுதியாக தமது புரட்சியின் வெற்றிக்காக வீதிகளை ஜாகோபின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நம்பியிருப்பது என தங்களது எதேச்சாதிகார திட்டத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மீது திணிப்பதில் ஒரு இராணுவ ஒழுங்கைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

“புயுக்டெமொன்ட் மற்றும் அவரது கூட்டாளிகளின் தண்டிக்கப்படாத கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்து கட்டலோனியாவில் சட்ட ஒழுங்கை மீட்சி செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 155வது பிரிவை செயல்படுத்துமாறு நேற்று நாங்கள் ரஹோயிடம் கேட்டிருந்தோம். இந்த அவசரம் இன்று அதிஅவசரமாகிறது. மன்னரின் செய்தி அவர் அதைச் செய்வதற்கு அழைக்கிறது.”

ABCயின் தலையங்கம், கட்டலோனியா “சட்டவிரோதமான கருத்துக்கணிப்பில் இருந்து பொதுமைப்பட்ட கிளர்ச்சிக்கு நகர்ந்ததாக” ஒப்பாரி வைத்தது. செவ்வாய்கிழமையன்றான பொது வேலைநிறுத்தத்தை “கட்டுப்பாட்டில் இல்லாத அத்துடன் நடுத்தர வர்க்கங்களுக்கு அரசிடம் இருந்து அந்த பெயருக்குப் பொருத்தமான பாதுகாப்பு இருக்காத ஒரு புரட்சிகர நிகழ்முறையில் கட்டலோன் சமூகத்தை விழுங்க நோக்கம் கொண்டிருக்கின்ற அதி இடது-சாரி தீவிரவாத புலி”யின் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு “உள்முகமான ஆட்சிக்கவிழ்ப்பு” என்று முத்திரையிட்டது.

155வது பிரிவை அமல்படுத்தக்கோரிய ABC, அரசாங்கம் அதிக நேரமெடுக்கும்போது, “கட்டலோனிய கிளர்ச்சி”யானது பிரிவு 116 இன் கீழ் “அவசரகாலநிலைக்கும் முற்றுகைக்கும்” அழைப்பதற்கான அவசியத்தை அதிகமாக்கிச் செல்லும் என்றது. உஷார் நிலை, பிரத்யேக நிலை மற்றும் முற்றுகை நிலை ஆகியவை எவ்வாறு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை பிரிவு 116 விவரிக்கிறது.

உத்தியோகபூர்வ “இடது” கட்சிகள் வெறும் சம்பிரதாயப் பேச்சுகளை மட்டுமே கூறி வருகின்றன. ஸ்ராலினிச ஐக்கிய இடதின் தலைவரான ஆல்பர்டோ கர்சான், “குடிமகன் ஃபிலிப் டு போர்போன்” இன் உரை தான் எதிர்பார்த்தவாறாய் “சமநிலையானதாகவும் அளந்தெடுத்ததாகவும்” இருக்கவில்லை என்று கூறி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மன்னரின் ஒரு ஆலோசகராகப் பேசிய அவர் தொடர்ந்து கூறினார், “அரசின் தலைவரை எனக்குத் தனிப்பட்ட வகையில் தெரியும். அவருடன் பலமுறை நான் பேசியிருக்கிறேன், எதையும் பேசுவதற்கு முன்னால் விடயங்களை முழுமையாக சிந்திக்கக் கூடியவர். ஆனால், இன்று, அநேகமாக, அவருக்கு ஆலோசனையளித்தது அவரது எதிரிகளாய் இருப்பார்களோ என்று நான் அஞ்சுகிறேன்.”

பொடெமோஸ் (Podemos) ஆதரவு El Diario இல் எழுதிய Iñigo Sáenz de Ugarte, பிலிப்பின் உரை கட்டலான் தன்னாட்சி அரசாங்கத்தின் மீதான “நடைமுறையிலான ஒரு போர் அறிவிப்பு” என்று புகாரிட்டதோடு “இந்த நெருக்கடியில் பொடேமோஸ் எடுத்திருக்கின்ற ஒட்டுமொத்த நிலைப்பாடுகளிலான ஒரு திருத்தத்தை” பிரதிநிதித்துவப்படுத்தினார்.  

ஸ்பானிய அரசை மீட்பதற்கு ரஹோயை வெளியேற்றுவதற்கும் ஒரு இடது அரசாங்கத்தை உருவாக்கவதற்கும் பொடேமோஸ் உடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு PSOEக்கு ஒரு விண்ணப்பம் செய்வதும் இந்த நிலைப்பாட்டில் அடங்கியிருக்கிறது.

PSOE இத்தகைய ஒரு அழைப்புக்கு பதில்கூற மறுத்து வருகிறது, PSOE இன் மூத்த தலைவரும் 1982-1991 வரை Felipe González கீழான PSOE அரசாங்கத்தில் துணை ஜனாதிபதியாக இருந்திருந்தவருமான அல்போன்சா குவேரா இந்த விண்ணப்பத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

155வது பிரிவைக் கொண்டுவருவதை PSOE வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்று அழைத்த குவேரா, கட்டலோனியாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலிசால் முடியாது போனால் அங்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதையும் பாதுகாத்துப் பேசினார், அதற்கு ஒரு கவிழ்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் “பாசிச-ஆதரவு” சுதந்திர இயக்கத்தை காரணம் காட்டினார். முந்தைய சமயங்களில் பிரத்யேகமாக அதி-வலதுகள் கொண்டிருந்த கண்ணோட்டங்களை வெளிப்படுத்திய அவர், கட்டலான் போலிசான Mossos d’Esquadra இன் தலைவரான Josep Lluís Trapero வை “ஜனநாயகத் துரோகி” என்று  முத்திரை குத்தியதோடு, ”Mossos கலைக்கப்பட வேண்டியிருக்கலாம்” என்றும் வாதிட்டார்.

செப்டம்பர் 20 அன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாய் பிரிவினைவாதக் குற்றச்சாட்டுகளின் கீழான ஒரு விசாரணையின் பாகமாக, ட்ரபேராவும் அவருடன் கட்டலான் தேசிய சட்டமன்ற தலைவரான ஜோர்டி சான்செஸ், மற்றும் ஓம்னியம் கல்சுரல் அமைப்பின் தலைவர்  Jordi Cuixart ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராக வெள்ளிக்கிழமையன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.