ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain prepares military crackdown in Catalonia

ஸ்பெயின், கட்டலோனியாவில் இராணுவ ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்கிறது

By Alex Lantier
6 October 2017

ஸ்பெயின் இராணுவமும் மற்றும் பொலிஸ் படைப்பிரிவுகளும் கட்டலோனியாவில் நேற்றும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்ட நிலையில் கட்டலோனியாவில் ஒரு இராணுவ ஒடுக்குமுறைக்கு அது தயாரிப்பு செய்து வருவதாக மாட்ரிட் சமிக்ஞை செய்தது.

கட்டலோனிய பிராந்திய பாராளுமன்றத்தில் பிரிவினைவாத கட்சிகள் ஒருதலைப்பட்டசமான சுதந்திர பிரகடனத்தை அறிவிக்கலாம் என்பதை எதிர்பார்த்து ஸ்பானிய அரசியலமைப்பு நீதிமன்றம் திங்கட்கிழமை நடாத்தவுள்ள கட்டலான் பிராந்திய பாராளுமன்ற கூட்டத்தை நடக்காது என அறிவித்துள்ளது. அக்டோபர் 1 அன்று கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை தடுப்பதற்கான ஒரு காட்டுமிராண்டித்தனமான முயற்சி தோல்வி அடைந்த பின்னர், பிரதம மந்திரி மரீயானோ ரஹோய், பொடெமோஸ் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவ தலைமையிலான மத்தியஸ்தத்திற்கான அழைப்புகளை நிராகரித்த இவ்வாறான நடவடிக்கை, அரசியலைப்புக்கு எதிரான கூட்டம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இடுகின்றது.

அரசியலமைப்பு நீதிமன்றம், ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியின் (PSOE),  கட்டலானிய பிரிவான, கட்டலானிய சோசலிச கட்சி (PSC) விடுத்த ஒரு குற்றச்சாட்டின்பேரிலேயே இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. PSOE தற்போது ஒரு இராணுவ தாக்குதலுக்காக மக்கள் கட்சியுடன் (PP) பகிரங்கமாக இணைந்து இயங்குகின்றது. கட்டலோனிய சோசலிஸ்ட் கட்சியின் புகாரை குறிப்பிட்டு, இவ்வாறான ஒன்றானது “முக்கியமானதும் பொதுவான சமூக, அரசியல் நலன்களுக்கானதும்” என்று கூறி கட்டலோனிய பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் எவ்விதமான நடவடிக்கையும் கட்டலோனிய சோசலிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமைகளை பாதிப்பதாக கூறி, முற்றாக நிராகரிக்கவும் மிகக்குறைந்த மதிப்போ அல்லது முயற்சியும் இல்லாமல் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவதானது, கைது மற்றும் குற்ற வழக்குகள் என்று பொருள் கொள்ளலாம் என்று எச்சரித்தது.

கட்டலோனியா எங்கிலும் பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அமைதியான வாக்காளர்கள் மீதும் வாக்கு மையங்கள் மீதும் 16,000 பொலிஸ் நடத்திய தாக்குதல்களின் காணொளிகள் இணையத்தை நிரப்பியதும், ஞாயிறன்று உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. அதன் ஆரம்ப ஒடுக்குமுறை தோல்வியடைந்ததால் சீற்றங்கொண்ட மாட்ரிட், இப்போது இராணுவத்தை பயன்படுத்தி அதனினும் இரத்தந்தோய்ந்த தாக்குதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. அண்டை நாடான பிரான்சில் உள்ளதைப் போல, ஓர் அவசரகால நிலை அறிவிப்பது குறித்து ஸ்பானிய பத்திரிகைகள் விவாதித்து வருகையில், இது இராணுவ ஆட்சிக்கான நன்கு முதிர்ந்த திட்டங்களுடனும், ஐரோப்பா முழுவதிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அகற்றுவதுடனும் பிணைந்துள்ளது என்பது முன்பினும் தெளிவாகிறது.

ரஹோயினின் சிறுபான்மை மக்கள் கட்சி (PP) அரசாங்கம் பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை சார்ந்துள்ளது. ஜேர்மன், இங்கிலாந்து மற்றும் பிரான்சின் உத்தியோகபூர்வ நபர்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒடுக்குமுறையை பின்தொடர்ந்து மாட்ரிட்டுக்கான அவற்றின் ஆதரவை சமிக்ஞை காட்டியதும், ஐரோப்பிய ஒன்றியம் புதனன்று ஸ்பானிய ஒடுக்குமுறையை உத்தியோகபூர்வமாக மீண்டும் அங்கீகரித்தது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கட்டலான் நெருக்கடி மீதான விவாதத்தை தொடங்கி வைத்த, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் முதல் துணை தலைவர் ஃபிரான்ஸ் ரிம்மர்மான்ஸ், கட்டலோனியா மக்களுக்கு எதிராக, மாட்ரிட் அதன் படைகளை பயன்படுத்தியதை சிறிதும் தயக்கமின்றி அங்கீகரித்தார். “கட்டலோனியா பிராந்திய அரசாங்கம் கடந்த ஞாயிறன்று சர்வஜன வாக்கெடுப்பை ஒழுங்கமைப்பதில் சட்டமீறலை தெரிவு செய்திருந்ததாக" அறிவித்த ரிம்மர்மான்ஸ், “எந்த அரசாங்கமாக இருந்தாலும் சட்டத்தை நிலைநிறுத்துவது அதன் கடமையாகும், அதற்கு சில சமயங்களில் பொருத்தமான அளவில் வலுவைப் பிரயோகிப்பது அவசியமாயிருக்கிறது” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

நேற்று ஸ்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் María Dolores de Cospedal கூறுகையில், கட்டலோனியாவில் ஓர் இராணுவ தலையீட்டை நியாயமான விடையிறுப்பாகவே மாட்ரிட் காண்கிறது என்பதை தெளிவுபடுத்தினார். பாதுகாப்புத்துறை உயர் ஆய்வுக்கான பயிலகத்தின் ஒரு கூட்டத்தில் அப்பெண்மணி வலியுறுத்துகையில், ஸ்பெயின் இராணுவம் “அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கமைப்பை பாதுகாக்க" பணிக்கப்பட்டுள்ளது என்றார். கட்டலான் தேசியவாதிகள், அவர்களை சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு வெளியே நிலைநிறுத்தி இருந்ததாக செவ்வாயன்று அரசர் ஆறாம் ஃபிலிப் ஓர் ஆத்திரமூட்டும் உரையில் அறிவித்த பின்னர், “ஜனநாயகத்திற்கு வெளியே இடம்பெறும் ஒவ்வொன்றும் நமது தேசத்திற்கு ஓர் அச்சுறுத்தலே,” என்பதையும் Cospedal சேர்த்துக் கொண்டார்.

ஸ்பானிய இராணுவ பிரிவுகள் ஏற்கனவே கட்டலோனியாவில் பொலிஸ் நிலைநிறுத்தலுக்கு படைத்தளவாட ஆதரவை வழங்கி வருகின்றன. கட்டலான் பிராந்திய முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட், திங்களன்று அவர் சுதந்திர பிரகடனம் செய்யவிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை ஒடுக்குமுறைக்கு பின்னர் அறிவித்ததும், ஏற்கனவே மாட்ரிட் பல மாதங்களாக இந்நடவடிக்கையை சட்டவிரோதமானதென அறிவித்துள்ள நிலையில், கட்டலான் அரசாங்கத்தைக் கைப்பற்ற மாட்ரிட்டால் அரசியல் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களை ஒடுக்க தவறியதற்கும், பிரிவினைவாதிகளுக்கு அனுதாபம் காட்டியதற்கும், கட்டலான் நீதிபதிகள் மற்றும் கட்டலான் பொலிஸ் (Mossos d’Esquadra) மீது வழக்குப்பதிய ஸ்பானிய நீதித்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டலான் பொலிஸ்துறை தலைமை அதிகாரி Josep Lluis Trapero, முன்னொருபோதும் இல்லாத வகையில், 15 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவினைவாத குற்றச்சாட்டிற்காக இன்று ஒரு நீதிமன்றத்தின் முன் ஆஜராக உள்ளார்.

CaixaBank விரைவில் மல்லோர்காவிற்கு இடம் மாற்றப்படும் என்ற செய்திகளுக்கு இடையே, வங்கிகளும் பெருநிறுவனங்களும் கட்டலோனியாவிலிருந்து அவற்றின் தலைமை அலுவலகங்களை இடம் மாற்றுவதற்கான முடிவுகள் மீதிருந்த சட்டத் தடைகளையும் நீதிமன்றங்கள் நீக்கியுள்ளன.

பொடெமோஸ் பொது செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் மற்றும் புய்க்டெமொன்ட் ஆகியோரிடமிருந்து மத்தியஸ்தத்திற்கான முறையீடுகளையும் வியாழனன்று ரஹோய் நிராகரித்தார், இத்தகைய மத்தியஸ்தத்தை ஸ்ராலினிசத்தின் தொழிலாளர் ஆணைக்குழுக்கள் (CCOO) மற்றும் சமூக ஜனநாயவாதிகளது தொழிலாளர்களின் பொது சங்கம் (UGT) ஆகிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஆதரிக்கின்றன. இத்திட்டம் குறித்து விவாதிக்க இக்லெஸியாஸ் ரஹோய் ஐ தொலைபேசியில் அழைத்தபோது, ரஹோய் இக்லெஸியாஸ் க்கு நன்றி தெரிவித்தார் என்றாலும் "அரசை இந்தளவுக்கு கடுமையாக மிரட்டுகின்ற" எவரொருவருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று அறிவித்தார்.

இது அதற்கு முந்தைய நாள் மாலை பொடெமோஸ் தலைவரின் கருத்துக்களை நேரடியாக நிராகரிப்பதாக இருந்தது. இக்லெஸியாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நம்பகமானவர்களின் குழு ஒன்று பேச்சுவார்த்தைக்கான ஒரு குழுவாக இருந்து விவாதிக்க மேசைக்கு வரவேண்டும். இதைத்தான் நான் கட்டலோனிய பிராந்திய முதல்வரிடமும் ஸ்பெயின் பிரதம மந்திரியிடமும் கூறினேன். நான் புய்க்டெமொன்ட் உடனும் ரஹோயுடனும் பேசினேன், அவர்கள் முடியாது என்று கூறவில்லை,” என்றவர் கூறியிருந்தார். ரஹோய் உடனான அவரின் உரையாடல் "சுமூகமாக" இருந்ததாகவும், ரஹோய் அந்த முன்மொழிவை "குறிப்பெடுத்துக்" கொண்டதாகவும் இக்லெஸியாஸ் தொடர்ந்து கூறியிருந்தார்.

பொடெமோஸ் தலைவர் ஸ்பெயினின் வலதுசாரி பிரதம மந்திரியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ள அதேவேளையில் தான், வலதுசாரி சக்திகள் ஸ்பெயின் முழுவதிலும் கட்டலான்-விரோத போராட்டங்களை ஒழுங்கமைத்து, தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் 1939-1978 காலத்திய பாசிசவாத ஆட்சியின் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றன.

ஒரு புதிய ஒடுக்குமுறையானது, நாடு முழுவதிலும் தொழிலாளர்களிடையே வெடிப்பார்ந்த சமூக எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்பதை நன்கறிந்துள்ள ஸ்பானிய பத்திரிகைகள், ஒரு பொலிஸ்-அரசு சர்வாதிகாரத்திற்கு நகர தூபமிட்டு வருகின்றன. அவை, கட்டலான் அரசாங்கத்தையே இடையில் கலைத்துவிடக்கூடிய “அணுஆயுதத்திற்கு ஒத்த விருப்பத்தெரிவு" என்றழைக்கப்படும் ஸ்பெயின் அரசியலமைப்பின் ஷரத்து 155 ஐ பயன்படுத்துவது மீது மட்டும் விவாதித்து கொண்டிருக்கவில்லை, மாறாக ஷரத்து 116 குறித்தும் விவாதித்து வருகின்றன. இது, கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்து சுதந்திரம், வேலைநிறுத்தத்திற்கான உரிமை, தேர்தல்கள் உள்ளடங்கலாக அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநீக்கம் செய்வதுடன், பத்திரிகை தணிக்கையையும் அனுமதிக்கிறது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய ஒரு கால் நூற்றாண்டு ஏகாதிபத்திய போர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கு பின்னர், ஐரோப்பிய ஜனநாயகம் உடையும் புள்ளியை எட்டியுள்ளது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய ஆழ்ந்த சிக்கன திட்டங்களின் ஒரு தசாப்தம் ஸ்பானிய வேலைவாய்ப்பின்மையை 20 சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அது ஸ்பெயினின் பொருளாதாரத்தை சீரழித்து, அதன் ஆளும் உயரடுக்கை மதிப்பிழக்க செய்துள்ளது. ஸ்பெயினில் பிராங்கோயிசத்துக்குப் பிந்தைய ஆட்சியின் ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே, ஆளும் வர்க்கம் ஐரோப்பா முழுவதிலும் ஜனநாயக உரிமைகளை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்ற நிலையில், ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கம் கட்டலான் நெருக்கடியை ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் திரும்புவதற்காக பயன்படுத்துகிறது.

கட்டலோனியாவில் இரத்த ஆறு ஓடச் செய்வதற்கான மாட்ரிட்டின் திட்டங்கள் எதிர்க்கப்பட வேண்டும். உள்நாட்டு போர் அச்சுறுத்தல் மற்றும் பொலிஸ்-அரசு சர்வாதிகாரத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில், கட்டலோனியாவில் மட்டுமல்ல மாறாக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் சுயாதீனமாக, புரட்சிகரமாக அணிதிரட்டுவதே முக்கிய விடயமாகும்.

இதற்கு பொடெமோஸ் மற்றும் கட்டலான் தேசியவாதிகளிடம் இருந்து நனவுபூர்வமாக முறித்துக் கொள்வது அவசியப்படுகிறது, இவர்கள் ஒட்டுமொத்த கடந்த காலம் முழுவதிலும் வெடிப்பார்ந்த சமூக அதிருப்திக்கு இடையே தொழிலாள வர்க்க எதிர்ப்பை நிராயுதபாணியாக்கி குழப்புவதற்காக செயல்பட்டவர்களாவர். செவ்வாயன்று கட்டலோனியாவில் பெருந்திரளான இளைஞர்களும் தொழிலாளர்களும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்திருந்த நிலையில், பொடெமோஸ் மற்றும் PSOE க்கு நெருக்கமாக உள்ள முறையே CCOO மற்றும் UGT உம், கட்டலோனியாவுக்கு வெளியே எந்த ஸ்பானிய தொழிலாளர்களும் அணிதிரளாமல் இருப்பதைக் கவனமாக பார்த்துக் கொண்டன.

கட்டலான் நெருக்கடி குறிப்பாக பொடெமோஸ் இன் திவால்நிலையை அம்பலப்படுத்தி உள்ளது. பொடெமோஸ் இடைவிடாது தொடர்ச்சியாக PSOE இன் பிரமைளை ஊக்குவித்தது, அது ரஹோயை பதவியிலிருந்து நீக்குவதற்காக ஒரு கூட்டு அரசாங்கத்தை உருவாக்க PSOE க்கு அழைப்புவிடுத்து, அரசரின் உரைக்குப் பின்னர் அவசரகதியில் கட்டலோனிய ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள நகர்ந்துள்ளது. ரஹோய்க்கு PSOE அடிபணிந்ததும், பொடெமோஸ் இப்போது PP மீது பிரமைகளைத் தூண்டிவிட்டு வருகிறது. அதுவும் ஒரு இரத்தந்தோய்ந்த இராணுவ ஒடுக்குமுறை தொடருகையிலும், ரஹோய் பார்சிலோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமக்கு எந்த விருப்பமும் இல்லை என்று குறிப்பிட்டு வருகின்றன இத்தருணத்திலும் கூட அவ்வாறு செய்து வருகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் விமானநிலைய தொழிலாளர்களின் பல வேலைநிறுத்தங்களை நசுக்கியவர்களும், கட்டலானில் அடுத்தடுத்து வந்த சிக்கன கொள்கை அரசாங்கங்களை நிர்வகித்தவர்களுமான கட்டலான் தேசியவாதிகளைப் பொறுத்த மட்டில், ஒரு கட்டலான் முதலாளித்துவ அரசை உருவாக்குவதற்கு மாட்ரிட் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை அபிவிருத்தி செய்யவதற்குமான அவர்களின் திட்டங்கள் வீணாகிவிட்டன.

ஓர் இராணுவ ஒடுக்குமுறைக்கான சாத்தியக்கூறுகளை முகங்கொடுத்திருப்பதோடு, புய்க்டெமொன்ட் இன் ஆதரவாளர்களிடையே பீதி பரவி வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பார்சிலோனாவின் நாளிதழ் La Vanguardia எழுதியது, அந்நகரின் கட்டலான் தேசியவாதிகளிடையே, “போர்குணமிக்க உத்வேகங்கள், புரட்சிகர கண்ணோட்டங்கள், தடித்தெழுத்துக்களில் கோபமும், தேசப்பற்றுமிகு தீவிரத்தன்மைகள் வலுவிழந்தபோய் ஒவ்வொருவருக்கும் கடுமையாக தலைச்சுற்றுவது போன்றவொரு உணர்வு உள்ளது.” அரசர் ஆறாம் ஃபிலிப் இன் உரை "இந்த தலைசுற்றும் உணர்வை மேலும் புத்துயிர்ப்பூட்டி உள்ளது. தற்போதைய இந்த தீவிரப்பாடு பேரழிவுகரமாக போய் முடியுமோ என்ற அச்சமும் நிலவுகிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

மாட்ரிட்டின் ஒடுக்குமுறைக்கு ஸ்பானிய தொழிலாள வர்க்கத்திடையே நிலவும் பரந்த எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு திராணியற்றும், விரோதமாகவும் உள்ள கட்டலான் தேசியவாதிகளின் முதலாளித்துவ-சார்பு அரசியல், இரத்தந்தோய்ந்த தாக்குதலை மாட்ரிட் அதிகரித்து வருகையில், தொழிலாளர்களை பிளவுபடுத்த மட்டுமே சேவையாற்றுகிறது.