ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Catalan premier affirms right to independence from Spain, but delays formal declaration

கட்டலான் முதல்வர் ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரத்திற்கான உரிமையை வலியுறுத்துகிறார், ஆனால் உத்தியோகபூர்வ பிரகடனத்தை தாமதிக்கிறார்

By Alex Lantier
11 October 2017

பார்சிலோனாவின் கட்டலான் நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று மாலை அப்பிராந்திய முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் உரையாற்றுகையில், கட்டலான் சுதந்திரத்திற்கான அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்கேற்ப, ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா பிரியுமென அறிவித்தார். இருப்பினும், இப்போதைக்கு உத்தியோகபூர்வ சுதந்திர பிரகடனத்தை தள்ளி வைத்த அவர், மாட்ரிட் இல் உள்ள மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு முறையிட்டார். பிரதம மந்திரி மரீயானோ ரஹோயின் மக்கள் கட்சி (PP) அரசாங்கம் அந்த சர்வஜன வாக்கெடுப்பை சட்டவிரோதமானதென்றும், தேசதுரோகமென்றும் அறிவித்துள்ளதுடன், புய்க்டெமொன்ட் உடனான பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்துள்ளது.

ஐரோப்பா எங்கிலுமான அரசியல்வாதிகளிடம் இருந்து வந்த அழைப்பைப் புய்க்டெமொன்ட் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன நிலையில் அதற்குப் பின்னர் வந்துள்ள இந்த முன்னுக்குப்பின் முரணான அறிக்கை, ஐரோப்பிய அரசியல் நிலைமையை பெரிதும் ஸ்திரமற்ற மற்றும் வெடிப்பார்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது, அதேவேளையில் ஸ்பெயின் அதன் இராணுவ ஆட்சி மற்றும் உள்நாட்டு போர் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

கட்டலோனியாவுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஸ்பானிய இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடு மற்றும் அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பு அன்று நடத்தியதைக் காட்டிலும் அதிக இரத்தந்தோய்ந்த ஓர் ஒடுக்குமுறை குறித்து அதிகரித்துவரும் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு இடையே தான், புய்க்டெமொன்ட் அவ்வுரை நிகழ்த்தி இருந்தார். அந்த வாக்கெடுப்பு நடந்த நாளன்று, 16,000 ஊர்க்காவல் படையினர் (Guardia Civil) அமைதியான வாக்காளர்களைத் தாக்கியதுடன், சர்வஜன வாக்கெடுப்பைத் தடுக்கும் ஒரு தோல்வியுற்ற முயற்சியில் வாக்கெடுப்பு மையங்களை நசுக்கினர், முதிய பெண்கள் உட்பட படைதுறைசாரா ஊழியர்கள் மற்றும் வாக்காளர்களைப் பொலிஸ் அடித்ததைக் காட்டும் காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால் அதற்கு பின்னரும் கூட, ஸ்பானிய இராணுவ-பொலிஸ் பிரசன்னம் கணிசமானளவுக்கு மீளப்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் அரசு தலைவர்களும் ரஹோயின் ஒடுக்குமுறைக்கு அவர்களின் ஆதரவை தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகின்றனர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேற்று கட்டலான் சுதந்திர இயக்கத்தின் "பொருளாதார ஆணவத்தைக்" கண்டித்தார், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் செய்தி தொடர்பாளர் திங்களன்று அறிவிக்கையில் ரஹோய்க்கு ஆதரவு தெரிவிக்க அவரை தொடர்பு கொண்டதாக அறிவித்தார்.

ஸ்பானிய இராணுவ படைத்தளவாட பிரிவுகளும், குறைந்தபட்சம் 6,000 க்கும் அதிகமான தேசிய பொலிஸூம் அக்டோபர் 1 க்குப் பின்னரில் இருந்து அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டு, அவை கட்டலோனியாவின் துறைமுகங்கள் மற்றும் பார்சிலோனாவின் El Prat விமான நிலையத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளன. ஸ்பானிய உள்துறை அமைச்சகம் புய்க்டெமொன்ட் ஐ கைது செய்ய திட்டமிட்டு வருவதாக வரும் செய்திகளுக்கு இடையே, பொலிஸின் சிறப்பு நடவடிக்கை குழு (GEO) மற்றும் Guardia Civil இன் விரைவு அதிரடி குழு (GAR) மற்றும் சிறப்பு தலையீட்டு படை (UEI) உள்ளடங்கலாக, பல்வேறு சிறப்பு படைப்பிரிவுகள் தலையீடு செய்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.

திங்களன்று ரஹோயின் மக்கள் கட்சி அரசாங்கத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், லுயிஸ் கொம்பானிஸ் முடிவைப் போலவே புய்க்டெமொன்ட்க்கும் ஆகப் போகிறது என்றார். 1934 இல் ஸ்பெயினுக்குள் ஒரு கட்டலான் அரசை பிரகடனப்படுத்தியதும் கொம்பானிஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 1940 இல், நாஜி-ஆக்கிரமிப்பு பாரீசில், கெஸ்டாபோவினால் பிடிக்கப்பட்ட கொம்பானிஸ், பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஸ்பானிய பாசிசவாத ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கே அவர் அந்த ஆட்சியால் துப்பாக்கிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புய்க்டெமொன்ட் உரையாற்றுவதற்கு முன்னதாக, செவ்வாயன்று கட்டலான் பிராந்திய பொலிஸ் (Mossos d’Esquadra) நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை அடைத்தது. இப்போது அவர்கள் புய்க்டெமொன்ட் உட்பட கட்டலான் மந்திரிசபை உறுப்பினர்களுக்கு இரவு பகலாக பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த கட்டலான் அரசு அதிகாரிகள் ஸ்பானிய பொலிஸால் அவர்கள் பிடிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் இருப்பதற்காக, அடையாளந்தெரியாத கார்களில் பயணிப்பதாக El Confidencial அறிவித்தது.

மாலை 7 மணிக்கு உரையாற்றிய புய்க்டெமொன்ட், கட்டலோனியாவுக்கும் ஸ்பெயினின் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான உறவுகள் திரும்பப்பெறவியலாதளவுக்கு உடைந்துவிட்டதாக வாதிட்டார். அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அதில் வாக்களித்தவர்களுக்கும் நன்றி கூறிய அவர், 800 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த அந்நாளின் பொலிஸ் தாக்குதலை நினைவுகூர்ந்ததுடன், கட்டலான் பிரச்சினை இனி ஸ்பானிய உள்நாட்டு விவகாரமல்ல, மாறாக ஓர் ஐரோப்பிய பிரச்சினை என்று அறிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், 1978 இல் பிராங்கோயிச ஆட்சியிலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகமாக மாற்றமடைந்ததில் இருந்து உருவான ஸ்பானிய அரசியல் அமைப்புமுறை, கட்டலான் மக்களுக்கு தோல்வியையே வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கட்டலோனியாவின் பாத்திரத்தை ஸ்பெயினின் "பொருளாதார உந்துசக்தியாக" மேற்கோளிட்ட அவர், அதுவே ஜனநாயகத்தை ஏற்படுத்த உதவியதாக குறிப்பிட்டதுடன், 1978 அரசியலமைப்பு கட்டலோனியர்களுக்கு ஒரு முற்போக்கான கட்டமைப்பை வழங்குமென அவர்கள் நம்பியதாக சுட்டிக்காட்டினார். கடந்த தசாப்தங்களில் அதன் சுயாட்சி அந்தஸ்தை திருத்தி எழுத்துவதற்காக செய்த கட்டலான் அரசாங்கத்தின் முயற்சிகளை (அம்முயற்சிகள் மீண்டும் மீண்டும் ஸ்பானிய நீதிமன்றங்களில் தடுக்கப்பட்டிருந்தன) வரையறுத்த அவர், கட்டலோனியா இப்போது 1978 க்கு பின்னோக்கி செல்வதாக வாதிட்டார்.

வெறும் 42 சதவீத வாக்குப்பதிவில் சுதந்திரத்திற்கான 89 சதவீத வாக்குகளைப் பெற்று, அவரை ஒரு சுதந்திர கட்டலான் குடியரசை பிரகடனம் செய்யச்செய்த அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பை, பிணைத்த வாக்குகள் என்று புய்க்டெமொன்ட் மேற்கோளிட்டார். எவ்வாறிருப்பினும், அவர் மாட்ரிட் உடனான மத்தியஸ்தத்தை ஏற்க வேண்டுமென்ற சர்வதேச முறையீடுகளுக்கு விடையிறுப்பதற்காக, கட்டலான் சுதந்திரத்தை "பல வாரங்களுக்கு" இடைநிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

துணை-முதல்வர் Soraya Sáenz de Santamaría மூலமாக ஸ்பானிய அரசாங்கம் செவ்வாயன்றே புய்க்டெமொன்ட்க்கு விடையிறுத்தது, அப்பெண்மணி மத்தியஸ்தத்திற்கான எல்லா அழைப்புகளையும் திட்டவட்டமாக நிராகரித்தார். அந்த சர்வஜன வாக்கெடுப்பும் அது அடித்தளமாக கொண்டிருந்த கட்டலான் சட்டமும், சட்டவிரோதமானவை என்ற மக்கள் கட்சியின் வலியுறுத்தலை அப்பெண்மணி மீண்டும் வலியுறுத்தியதுடன், கட்டலான் பிரிவினைவாதிகிளுடன் எந்த பேச்சுவார்த்தைகளும் இருக்காது என்றார்.

“இல்லாதவொரு சட்டத்திலிருந்து திரு. புய்க்டெமொன்ட்டோ அல்லது வேறு எவருமோ தீர்மானங்களை எடுக்க முடியாது, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடக்கவே இல்லை, இருப்பினும் மீண்டும் மீண்டும், அவர்கள் கட்டலான் மக்கள் விரும்புவதாக கூறி, அவர்களின் சொந்த விருப்பத்தை உருவாக்கவும், கைப்பற்றவும் முயன்று வருகிறார்கள்,” என்றார். எந்த மத்தியஸ்தமும் கிடையாது என்பதை சேர்த்து அறிவித்த அப்பெண்மணி, “நாளை, அரசு தலைவர் எங்களின் அடுத்த நடவடிக்கைகளை விவாதிக்க அமைச்சர் குழுவைக் கூட்டும்,” என்றார்.

அமைச்சர் குழு கூட்டத்திற்குப் பின்னர், இன்று மாலை 4 மணிக்கு ரஹோய் கட்டலான் நெருக்கடி குறித்த ஓர் அறிக்கை வெளியிட உள்ளார்.

இந்த நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வு வழங்கக்கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. ஸ்பெயினுக்குள் கட்டலோனியாவைப் பலவந்தமாக பிடித்து வைக்க, வன்முறை மற்றும் ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் ஸ்பானிய அரசு மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் மூர்க்கமான கொள்கையானது பிற்போக்குத்தனமானதாகும், அதை ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து, ஐபீரிய தீபகற்பம், ஸ்பானிய மற்றும் கட்டலான் எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஒருசேர எதிர்க்க வேண்டும். அனைத்து தேசிய பொலிஸ் மற்றும் இராணுவ படைகளை கட்டலோனியாவிலிருந்து உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்ற கோரிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) ஆதரவுடன், வலதுசாரி ரஹோய் ஆட்சி தேசியவாத உணர்வைத் தூண்டிவிட்டு, பெருந்திரளான கட்டலான் மக்களுக்கு எதிராக மட்டுமின்றி மாறாக நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஓர் இராணுவ ஒடுக்குமுறைக்குத் தயாரிப்பு செய்வதற்காக பிராங்கோயிச பாசிசவாத சக்திகளை ஊக்கப்படுத்த முயன்று வருகிறது. இதுவே, ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கடுமையாக மோசமடைந்து வரும் நெருக்கடிக்கு அதன் தீர்வாக உள்ளது.

ஆனால் கட்டலான் பிரிவினைவாத முதலாளித்துவ வர்க்கமும் அதன் நடுத்தர வர்க்க கூட்டாளிகளும் எந்த ஜனநாயக மாற்றீடோ அல்லது முற்போக்கான மாற்றீடோ வழங்குவதாக இல்லை. அவர்கள் கட்டலான் தொழிலாளர்களை மலிவுக்கூலி உழைப்புக்காக பயன்படுத்தி அன்னிய முதலீட்டை ஈர்க்கவும், சிக்கன நடவடிக்கைகளை இன்னும் ஆழப்படுத்தவும் ஏகாதிபத்திய அதிகாரங்களுடன் அதிக இலாபமுள்ள உறவுகளை நிறுவும் பொருட்டும் ஒரு தனி முதலாளித்துவ அரசைக் கோருகின்றனர். அவர்கள் இன்னும் அதிகமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் அவர்களின் "சொந்த" தொழிலாளர்களைச் சுரண்டவும் கட்டலான் தேசியவாதத்தை தூண்டிவிடுகின்றனர்.

முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில், ஒரு சர்வதேசவாத சோசலிச முன்னோக்கின் மீது, ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணித்திரள்வது மட்டுமே, ஒரு முன்னோக்கிய பாதையை வழங்கும்.

கட்டலான் மற்றும் ஸ்பானிய பெருந்திரளான பரந்த மக்கள் முகங்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகள் தேசிய ஒடுக்குமுறையில் வேரூன்றியவை அல்ல, மாறாக வர்க்க ஒடுக்குமுறையில் வேரூன்றியவை ஆகும். அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பில் பங்கெடுக்காத பெரும்பான்மை கட்டலான் மக்களில், பிரிவினையை எதிர்க்கும் மிகப்பெரியளவிலான தொழிலாள வர்க்க பிரிவுகளும் உள்ளடங்கி உள்ளன.

என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது 1978 ஸ்பானிய அரசியலமைப்பின் ஒரு நெருக்கடி மட்டுமல்ல, மாறாக ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஒரு நெருக்கடியாகும். ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு, உலகளாவிய நிதியியல் பொறிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாரிய வங்கி பிணையெடுப்புகளுக்கு நிதி வழங்கி எதிர்வினையாற்றியதில் இருந்தே, ஒரு தசாப்தமாகவே மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் உள்ள ஆளும் உயரடுக்கிற்கு இடையே பிராந்திய சுயாட்சி மீதான மோதல்களும், வரவு-செலவு திட்டக் கணக்கு சண்டைகளும் நடந்து வந்துள்ளன. சிக்கன கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போரை நீண்டகாலமாக ஆதரித்து வந்துள்ள அரசியல்வாதிகள் தலைமையில் ஒரு கட்டலான் முதலாளித்துவ குடியரசை உருவாக்குவதென்பது, இந்த சர்வதேச நெருக்கடியை தீர்க்க எதுவும் செய்யப் போவதில்லை.

வாஷிங்டன் மற்றும் பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுடன் செயல்பட்டு வரும் மாட்ரிட் இப்போது ஒரு புதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த அதன் அரசியல் மூலோபாயத்தைத் தயாரித்து வருகிறது என்பதற்கு அங்கே ஒவ்வொரு அறிகுறியும் உள்ளது. கட்டலான் பிராந்திய சுயாட்சியையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் இடைநிறுத்த ஸ்பானிய அரசியலமைப்பின் ஷரத்து 155 அல்லது 116 ஐ எதையேனும் பயன்படுத்துவதற்கு ஸ்பானிய ஊடகங்களில் விரிவான விவாதங்கள் நடக்கின்றன. இது கட்டலோனியாவில் மட்டுமல்ல, ஸ்பெயினின் ஏனைய பகுதிகள் எங்கிலுமே விரைவாக இராணுவ ஆட்சியை விரிவுபடுத்த வழிவகுக்கும்.

தகவல்களைத் தணிக்கை செய்யவும் போராட்டங்களைத் தடுக்கவும் இணையம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை மூடுவதும் இந்த ஒடுக்குமுறையின் ஒரு பிரதான கூறுபாடாக இருக்கும். கட்டலான் தேசிய சபை மற்றும் ஓம்னியம் (Omnium) ஆகிய இரண்டு கட்டலான் தேசியவாத அமைப்புகள் அவற்றின் ஆதரவாளர்களுடன் தகவல்கள் பரிமாற பயன்படுத்தி வந்த ட்வீட்டர் கணக்குகளை நேற்று மாட்ரிட் இடைநிறுத்தியுள்ளது.

கட்டலான் தேசியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுடன் மாட்ரிட் ஒரு கடுமையான மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது, அவர்களில் பலர் உடனடியாக சுதந்திரம் பிரகடனம் செய்யாததற்காக புய்க்டெமொன்ட் ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புய்க்டெமொன்ட் கட்டலான் நாடாளுமன்றத்தில் அவரது சிக்கன வரவு-செலவு திட்டத்தை ஆதரித்துள்ள குட்டி-முதலாளித்துவ தேசியவாத கட்சியான மக்கள் வேட்பாளர்களின் கூட்டணி (CUP) உடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததால், ஒரு மணி நேரம் தாமதமாகவே காட்சிக்கு வந்தார். எவ்வாறிருப்பினும் CUP இறுதியில் அவர் உரையைப் புறக்கணித்தது.

CUP இன் துணைத் தலைவர் அன்னா காப்ரியேல் பின்னர் புய்க்டெமொன்டை விமர்சிக்க அத்தளத்தை கைப்பற்றி அறிவிக்கையில், “கட்டலான் குடியரசை மனப்பூர்வமாக அறிவிக்க இன்றே சரியான சந்தர்ப்பமென நாங்கள் கருதுகிறோம், ஒருவேளை நாம் அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளோம்,” என்றார். கட்டலான் பிரிவினைவாத திட்டம் "வர்க்க சுதந்திரம் மற்றும் வம்ச சுதந்திரத்தை" உருவாக்கும் வரையில், அதை தொடர்வதற்கான ஒரு வெற்று சூளுரை உரைத்த அவர், “நாம் ஒரு குடியரசை உருவாக்க வந்துள்ளோம்,” என்று கூறி நிறைவு செய்தார்.

ஓர் ஒடுக்குமுறை மற்றும் இராணுவ ஆட்சியின் அபாயத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை தடுப்பதில் ஸ்பெயினின் பொடெமோஸ் கட்சி மீண்டும் மத்திய பாத்திரம் வகித்து வருகிறது, அதற்கு பதிலாக அது பார்சிலோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரஹோய்க்கும் மக்கள் கட்சிகும் தார்மீக முறையீடுகளைச் செய்யும் ஒரு பலவீனமான கொள்கையை ஏற்றுள்ளது.

பொடெமோஸ் பொது செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் சுதந்திர அறிவிப்பை ஒத்தி வைத்த புய்க்டெமொன்டின் முடிவைப் பாராட்டினார். “ஸ்பெயின் பன்முக-தேசியம் கொண்டது என்பதுடன், கட்டலான் மக்கள் அதை செவிமடுக்க தகுந்தவர்கள்" என்பதை உணர்ந்து, அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர் ரஹோயைக் கேட்டுக் கொண்டார்.