ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Catalonia announces plan for independence as Madrid threatens military rule

மாட்ரிட் இராணுவ ஆட்சிக்கு அச்சுறுத்துகையில், கட்டலோனியா சுதந்திரத்திற்கான திட்டத்தை அறிவிக்கிறது

By Alejandro López
26 October 2017

கட்டலான் பிராந்திய அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பறிப்பதற்காக ஸ்பானிய அரசியலமைப்பின் ஷரத்து 155 ஐ நடைமுறைப்படுத்துவதன் மீது ஸ்பானிய செனட்டில் இன்று தொடங்கவிருக்கும் இரண்டு நாள் விவாதத்திற்குப் முன்னதாக, கட்டலான் அதிகாரிகள் நேற்று ஸ்பெனிலிருந்து சுதந்திரம் அறிவிப்பதற்கான அவர்களின் திட்டத்தை சமிக்ஞை செய்தனர்.

ஷரத்து 155 ஐ பயன்படுத்துவதென பிரதம மந்திரி மரீனோ ரஹோயால் சனிக்கிழமை முடிவெடுக்கப்பட்டது. அது ஸ்பானிய இராணுவத்தின் ஆதரவுடன், கட்டலோனியாவில் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அரசாங்கத்தை நிறுவும் என்பதோடு, அப்பிராந்தியத்தின் நாடாளுமன்றம், அரசு வானொலி சேவை, தொலைக்காட்சி நிலையங்களையும், இராணுவமயப்பட்ட ஊர்க்காவல் படை மற்றும் பிற பொலிஸ் பிரிவுகளையும் கைப்பற்றும். நடைமுறைப்படி மந்திரிசபையின் முடிவுக்கு செனட் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றாலும், ரஹோயின் மக்கள் கட்சி (PP) அச்சபையில் முழு பெரும்பான்மையில் இருப்பதால், ஒப்புதல் என்பது வெறும் ஒரு சம்பிரதாயமாக இருக்குமென கருதப்படுகிறது.

நேற்று இரவு, கட்டலான் துணை முதல்வர் Oriol Junqueras அசோசியேடெட் பிரஸ் க்கு கூறுகையில், ரஹோய் "எங்களுக்கு வேறெந்த தெரிவையும் விட்டு வைக்கவில்லை" என்றதுடன், அவர் கட்சியான கட்டலோனிய இடது குடியரசு "ஒரு புதிய குடியரசைக் கட்டமைக்க செயல்படுமென" தெரிவித்தார். கட்டலான் தேசிய கூட்டணி (ANC) “குடியரசை பாதுகாக்க" கட்டலான் நாடாளுமன்றம் முன்பாக வெள்ளிக்கிழமை ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.

இது, கட்டலான் முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் அவர் வாதத்தை முன்வைக்க ஆணைக்குழு முன் ஆஜராவதற்கு மாட்ரிட் வாய்ப்பளித்த பின்னர் வந்தது. ஆனால் ஸ்பானிய செனட் ஷரத்து 155 க்கு ஒப்புதல் வழங்க முன்நகர்ந்துவிட்ட நிலையில் அதனிடம் உபயோகமற்ற ஓர் முறையீடு செய்வது அவமானகரமாக இருக்குமென கருதி, புய்க்டெமொன்ட் அதை மறுத்துவிட்டார்.

புய்க்டெமொன்ட் இன் ஆம் வாக்குகளாக இணைவோம் கூட்டணியின் ஒரு சட்ட ஆலோசகர் அன்டொனி காஸ்டெல்லா, “வெள்ளியன்று, நாங்கள் சுதந்திர பிரகடனம் செய்வோம்,” என்பதை உறுதிப்படுத்தினார். பிரிவினைவாத-ஆதரவு நாளிதழ் Nació Digital செய்தியின்படி, அக்கூட்டணி ஷரத்து 155 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக "ஒரு தற்காப்பு வழியாக" ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவிக்க விரும்புகிறது.

இந்நெருக்கடி பிராந்திய அரசாங்கத்தைச் சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறது. புய்க்டெமொன்ட் இன் கட்டலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PdeCat) அரசாங்கத்தின் பல அமைச்சர்களும்—வணிகத்துறை அமைச்சர் Santi Vila, துறைசார் உறவுகளுக்கான அமைச்சர் Meritxell Borras, நீதித்துறை அமைச்சர் Carles Mundó மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Toni Comin ஆகியோர்—சுதந்திரம் பிரகடனம் செய்வதை எதிர்த்து இராஜினாமா செய்ய அச்சுறுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் மாட்ரிட்டில், மக்கள் கட்சியும், குடிமக்கள் கட்சி மற்றும் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியும் (PSOE), பிரதான பத்திரிகைகளும் கட்டலோனியாவுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட தாக்குதலைக் கோரி வருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளும் அரசியல் எதிர்ப்புமே ஷரத்து 155 இன் மத்திய இலக்கில் உள்ளது.

பார்சிலோனா கருத்து வாக்கெடுப்புக்காக பொது நிதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்காகவே கடந்த செப்டம்பரில் நிதித்துறை அமைச்சர் Cristobal Montoro கட்டலான் நிதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தாரென கூறப்பட்டது. இப்போதோ, உணவு, குழந்தைகளின் திறன் வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற சமூக சேவைகளை வழங்கும் அமைப்புகளுக்கான 10 மில்லியன் யூரோ பரிவர்த்தனைகளையும் மாட்ரிட் முடக்கி வருகிறது. இந்நடவடிக்கை அப்பிராந்தியத்தில் 900,000 மக்களையும், 1,300 தொழிலாளர்களையும் பாதிப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

மக்கள் கட்சி (PP) அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு உள்ளது என்ற நம்பிக்கையில், ஸ்பெயினின் பிற பகுதிகளிலும் ஷரத்து 155 ஐ பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இப்போதைக்கு கட்டலோனியா தான் இலக்கில் உள்ளது என்றாலும், வரவு செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறைகளை நிரப்புவதற்கு ஒத்துழைக்காத பிராந்தியங்களுக்கு எதிராக தலையிட மாட்ரிட் பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காத பிராந்தியங்களுக்கு எதிராக ஷரத்து 155 ஐ பயன்படுத்த சட்டப்பூர்வ இயங்குமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மக்கள் கட்சி தலைவர்கள் பாஸ்க் உள்ளாட்சியிலும், மாட்ரிட்டைச் சுற்றியுள்ள Castilla La Mancha பிராந்தியத்திலும் ஷரத்து 155 ஐ பயன்படுத்த அச்சுறுத்திய பின்னர், இப்போது அவர்கள் Navarre ஐ இலக்கு வைத்து வருகிறார்கள். Navarre இன் மக்கள் கட்சி தலைவர் Ana Beltrán கூறினார், “கட்டலோனியா மீதான அரசு நடவடிக்கை Navarre க்கும் விரிவாக்கப்படலாம்,” ஏனெனில் "அவ்விரு அரசாங்கங்களும், சிறுபான்மையினர் ஒரு தேசியவாதமற்ற பெரும்பான்மையினரை நசுக்க வேண்டுமென விரும்புகின்றனர்,” என்றார்.

ஸ்பெயினில் இராணுவ சர்வாதிகாரத்திற்கான இந்த முனைவின் அடியிலிருக்கும் வர்க்க தர்க்கம், நான்காண்டுகளுக்கு முன்பே ஜே. பி. மோர்கன் வங்கியினது ஒரு /06/17/morg-j17.html"பகுப்பாய்வில் வரையறுக்கப்பட்டது. அது தொழிலாளர் விரோத வெட்டுக்களை வேகமாக திணிப்பதற்கு, தெற்கு ஐரோப்பிய “வெளிச்சுற்றுப் பகுதி” எங்கிலுமான பிராந்திய அரசாங்க வடிவங்களை தடைகளாக குறிப்பிட்டு அவற்றை அது நசுக்க கோரியது. இவை இரண்டாம் உலக போரின் போதிருந்த பாசிசவாத ஆட்சிக்குப் பின்னர் உதித்தவையாகும், ஸ்பெயின் விடயத்தில், இவை 1978 இல் பாசிசவாத ஆட்சியின் பொறிவுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டன.

அது குறிப்பிட்டது, “வெளிச்சுற்றுப் பகுதிகளின் அரசியல் அமைப்புமுறை சர்வாதிகாரத்திற்குப் பின்னர் நிறுவப்பட்டவை என்பதால், அந்த அனுபவத்திற்கேற்ப வரையறுக்கப்பட்டன. பாசிசவாதத்தின் தோல்விக்குப் பின்னர் இடதுசாரி கட்சிகள் பெற்ற அரசியல் பலத்தை அந்த அரசியலமைப்புகள் [பிரதிபலிக்கின்றன]. விளிம்பு பகுதிகளைச் சுற்றிய அரசியல் அமைப்புமுறையானது, பலவீனமான நிர்வாகங்கள்; பிராந்தியங்களுடனான பலவீனமான மத்திய அரசு உறவுகள்; அரசியலமைப்புரீதியில் தொழிலாளர் உரிமை பாதுகாப்பு; அரசியல் வாடிக்கைமயமாக்கலைப் பேணும் நல்லிணக்கம்-கட்டமைக்கும் அமைப்புமுறை மற்றும் நடப்பு அரசியல் நடைமுறைகளில் விரும்பாத மாற்றங்களைச் செய்தால் போராடுவதற்கான உரிமை என இந்த அம்சங்களில் பலவற்றை ஏறத்தாழ கொண்டுள்ளது. இந்த அரசியல் மரபின் குறைபாடுகளையே இந்நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது.”

ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் ஒரு பத்தாண்டு கால ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் பெற்ற சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் நீக்குவதற்கு நகர்ந்து வருகிறது. மாட்ரிட்டும் சரி, ஐரோப்பிய ஒன்றியமும் சரி, பாரிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒரு தேசிய /10-Oct/span-o07.shtml"அவசரகால நெருக்கடியை திணித்தும், மற்றும் சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் குரல்வளையை நெரிப்பதற்காக ஸ்பானிய தேசியவாதத்தை ஊக்குவித்தும், ஸ்பெயினில் வர்க்க உறவுகளை வேகமாக மறுகட்டமைப்பு செய்வதற்காக ஷரத்து 155 ஐ பாவிக்கின்றன.

பழமைவாத நாளிதழ் ABC க்கு எழுதிய ஒரு கருத்துரையில் Isabel San Sebastián எழுதினார், “உபதேசங்களுக்காகவும், கிளர்ச்சியூட்டுவதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட அப்பிராந்தியம் எங்கிலுமான பொது தொலைக்காட்சி மற்றும் வானொலி, கல்வி மற்றும் குறிப்பிட்ட 'கலாச்சார அமைப்புகள்' மூலமாக பல பத்தாண்டுகளாக பிரிவினையை ஊக்குவிக்கும், மக்களை பிணைத்துள்ள நூலிழைகளை முற்றிலுமாக அறுத்தெறிய வேண்டியுள்ளது. பிரிவினைவாதிகளின் தூண்டுதலுக்கு ஆதரவாக அவர்களால் எழுப்பப்பட்ட கட்டமைப்புகளை முற்றிலுமாக துடைத்தெறிய நாம் இந்த சந்தர்ப்பத்தைக் கைப்பற்றி கொள்ள வேண்டும்.”

இதுபோன்ற பாசிசவாத மொழிகள் மாட்ரிட் பத்திரிகைகளில் வழமையாகி உள்ளன. மாட்ரிட்டும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதி பிரபுத்துவமும் கட்டலோனியா மக்களுடனும், சர்வாதிகாரத்திற்கு திரும்பும் மாட்ரிட்டின் திருப்பத்தை ஆழமாக எதிர்க்கும் ஸ்பெயினின் பிற பகுதிகளிலும், ஒரு வன்முறை மோதலை இலக்கில் வைத்துள்ளன. மாட்ரிட் எதேச்சதிகாரமாக இரண்டு கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளைக் கைது செய்ததற்கு எதிராக சனிக்கிழமையன்று அரை மில்லியன் பேர் பார்சிலோனாவில் அணிவகுத்தனர். அதற்கடுத்த நாட்களில், தீயணைப்பு வீரர்களும், ஆசிரியர்கள் மற்றும் கட்டலான் பொது தொலைக்காட்சி மற்றும் வானொலியின் தொழிலாளர்களும் மாட்ரிட்டின் தலையீட்டுக்கு பணிய போவதில்லையென அறிவித்தனர்.

சனிக்கிழமை ரஹோயின் மந்திரிசபை நிறைவேற்றிய நடவடிக்கைகள் கட்டலோனியாவின் 200,000 படைத்துறைசாரா பணியாளர்களுக்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாகும். அவற்றில் ஒன்று, பிராந்திய அரசாங்கத்தின் "அரசு அதிகாரிகள் அல்லது தொழிலாளர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருந்த பணியாளர்களாக இருந்தாலும் … நிர்வாகத்தின் கட்டாய பணியாளர்களாக ஆக்க" உத்தரவுகளைப் பிறப்பிக்க மாட்ரிட்டை அனுமதிக்கிறது. இதை பின்தொடர்ந்து, தங்களின் சொத்துக்கள் மற்றும் குற்ற வழக்குகள் மீது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவது உட்பட கீழ்படியாதிருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக "ஒழுங்குமுறை நடவடிக்கைகளின்" அச்சுறுத்தல்கள் வந்தன.

1978 இல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகாரம் முடிவடைந்த பின்னர் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவில் இராணுவ ஆட்சியின் பயங்கர அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, 155 ஐ நடைமுறைப்படுத்துவது என்பது, பல பத்தாண்டுகளாக ஸ்பானிய "இடது" என்று இருந்து வந்த அரசியல் சக்திகளின் திவால்நிலையை அம்பலப்படுத்துகின்றன. அவை தொழிலாள வர்க்கத்தை ரஹோய் ஆட்சி உடனும் மற்றும் ஸ்பெயினில் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகளுடனும் பிணைத்து வைக்க பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன.

1,139,000 அங்கத்தவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ராலினிச தொழிற்சங்கமான COOO இன் (தொழிலாளர்கள் கமிஷன்கள்) பொதுச் செயலாளர் Unai Sordo, ஸ்பெயினின் பிரதான தொழிற்சங்கத்திடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்காதென ரஹோய்க்கு சமிக்ஞை காட்டினார். ஷரத்து 155 “கூடவோ அல்லது குறையவோ விரும்பப்படலாம்", ஆனால் தொழிலாளர்கள் "தொழில் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் எந்த முடிவுகளையும் தவிர்க்க" வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

பொடெமோஸ் கட்சியின் பெரும்பான்மை பிரிவுகள் அதிகரித்தளவில் மாட்ரிட்டின் சர்வாதிகார முனைவை ஆதரிக்கின்ற நிலையில், அக்கட்சிக்குள் ஒரு நெருக்கடி வெடித்துள்ளது. அதன் பொது செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ், " குறிப்பிட்ட மற்றும் நீண்டகாலத்திற்கு ஓர் அரசியல் மற்றும் பிராந்திய யதார்த்தமாக நிலைத்திருப்பதற்கான ஸ்பெயினுக்கான" பாதை என்றரீதியில், ஒரு பேரம்பேசப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கும், கட்டலான் தேசியவாதிகளுக்கான விட்டுக்கொடுப்புகளுக்கும் அழைப்புவிடுத்து அவர் நிலைப்பாட்டை பாதுகாக்க திங்களன்று ஒரு கடிதம் வெளியிட நிர்பந்திக்கப்பட்டார்.

இது இப்போது முன்னணி பொடெமோஸ் அங்கத்தவர்களால் தாக்கப்படுகிறது, ரஹோயின் திட்டங்களுக்கு வெளியிட்டுள்ள அதன் மிதமான விமர்சனங்களைக் கூட பொடெமோஸ் கைவிட வேண்டுமென அவர்கள் கோரி வருகின்றனர். ஸ்தாபக அங்கத்தவர் கரோலினா பெஸ்கான்சா கூறுகையில், “நாங்கள் பிரிவினைவாதிகளுக்காக மட்டுமல்ல, ஸ்பானிய மக்களுக்காகவும் அதிகம் பேச விரும்புகிறோம்,” என்றார்.

அதேபோல, Andalusia இன் பொடெமோஸ் செய்திதொடர்பாளர் Esperanza Gómez, கட்சி "[கட்டலானியர்களுக்கு] அதிகளவில் குரல் கொடுத்திருப்பதாக" குறிப்பிட்டு, பெஸ்கான்சாவை ஆதரிக்கிறார். பொடெமோஸ் இன் மற்றொரு ஸ்தாபக அங்கத்தவர் Luís Alegre கூறுகையில், “பொடெமோஸின் அபிலாஷைகளைக் கொண்ட ஒரு கட்சி, தேசிய திட்டத்தைக் கட்டமைப்பதை கைவிட முடியாது, அது ஒட்டுமொத்த ஸ்பெயினை கவனிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

சர்வாதிகாரத்திற்கு திரும்புவதன் மீது தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற பாரிய எதிர்ப்பானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் மற்றும் செல்வசெழிப்பான நடுத்தர வர்க்கத்தின் பொடெமோஸ் போன்ற "பின்-மார்க்சிய" வெகுஜனவாத கட்சிகளையும் எதிர்ப்பதன் மூலமாக மட்டுமே அரசியல் வெளிப்பாட்டைக் காண முடியும்.