ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chinese leader calls for “strong nation” and “strong military”

சீனத் தலைவர் “பலமான தேசத்திற்கும்” மற்றும் “பலமான இராணுவத்திற்கும்” அழைப்புவிடுக்கிறார்

Peter Symonds
21 October 2017

ஜனாதிபதி ஜி ஜின்பிங் 19 வது சீன கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸிற்கு இவ்வாரம் வழங்கிய அவரது நீண்ட சொற்பொழிவில், வரவிருக்கும் காலத்தில் சீனா ஒரு "வல்லரசாக", ஒரு "பலமான சக்தியாக" மாறுமென மீண்டும் மீண்டும் அறிவித்தார். இது "சீனா மத்திய அரங்கிற்கு நெருக்கமாக நகர்வதைக் காணும் ஒரு சகாப்தமாக" இருக்கும் என்றார்.

ஜி, “சீன பண்பியல்புகளுடனான சோசலிசத்தின் மிகப்பெரும் வெற்றியை" சம்பிரதாயமாக மேற்கோளிட்டார். யதார்த்தத்தில், முதலாளித்துவ மீட்சியின் நான்கு தசாப்த காலத்தில் பாரிய செல்வ வளங்களைக் குவித்துக் கொண்டு, மேற்கொண்டும் முன்னேறுவதற்கு பெய்ஜிங் உலக அரங்கில் அதிக ஆக்ரோஷமான பாத்திரம் வகிக்க வேண்டுமென எதிர்பார்க்கும் புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் அபிலாஷைகளை அவர் விவரித்துக் கூறுகின்றார்.

ஜி இன் புத்தெழுச்சி கொண்ட ஒரு பலமான "சீனக் கனவு", தவிர்க்கவியலாமல் நடப்பு ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுடன், அனைத்திற்கும் மேலாக இராணுவ பலத்தைக் கொண்டு உலகில் அதன் மேலாதிக்க அந்தஸ்தை தக்க வைக்க பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகின்ற அமெரிக்காவினது நலன்களுடன் மோதலுக்கு வருகிறது. ஜி கூறுகின்ற இந்த "புதிய சகாப்தம்", சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டின் சகாப்தமாக இருக்காது, மாறாக போர் மற்றும் புரட்சியின் சகாப்தமாக இருக்கும்.

சீனா, ரஷ்யா மற்றும் பிற பிரதான அணுஆயுத சக்திகளையும் விரைவில் உள்ளிழுக்கக்கூடிய, வட கொரியாவுடன் அதிகரித்துவரும் ஒரு பேரழிவுகரமான அமெரிக்க போர் அச்சுறுத்தல் குறித்து ஜி அவர் உரையில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதிய பேச்சுவார்த்தைகளுக்கான பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவின் முன்மொழிவுகளை திட்டவட்டமாக நிராகரித்து, சீனாவின் அந்த ஒரே அதிகாரபூர்வ இராணுவ கூட்டாளியை "முழுமையாக அழிக்க" அமெரிக்க இராணுவத்தை ஆயத்த நிலையில் வைத்துள்ளார்.

இந்த பொறுப்பற்ற அமெரிக்க போர் முனைவு வெறுமனே பாசிசவாத தனிநபர் ட்ரம்பின் விளைவல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போதுள்ள வரலாற்று முட்டுச்சந்து நிலைமையின்  விளைவாகும். அதன் மலிவு உழைப்பைச் சுரண்டுவதற்காக வெள்ளமென பாய்ச்சப்பட்ட அன்னிய முதலீட்டின் அடிப்படையில், கடந்த நான்கு தசாப்தங்களில் சீனப் பொருளாதார வளர்ச்சியானது, உலகம் முழுவதிலும் சீன பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கின் வளர்ச்சியையும் உள்ளடக்கி உள்ள நிலையில், அதுவோ மூலப் பொருட்கள் மற்றும் சந்தைகளைத் தேடி வருகிறது. சீனாவின் பொருளாதார உதவிகளுக்கு, அல்லது "இராணுவமுறைகளற்ற வழிமுறைகளுக்கு" அதிகரித்தளவில் ஈடுகொடுக்க இயலாமல், அமெரிக்கா, பெய்ஜிங்கிற்கு சவால் விடுக்க அதன் வன்மையான பலத்தில், அல்லது இராணுவ பலத்தில் தஞ்சமடைந்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", இந்தோ-பசிபிக் முழுவதிலும் பெய்ஜிங்கை இராஜாங்க ரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பலவீனப்படுத்தி, சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைக்க நோக்கம் கொண்ட ஒரு பரந்த மூலோபாயமாக இருந்தது. ஒபாமா வேண்டுமென்ற கொரிய தீபகற்பம் போன்ற அபாயகரமான வெடிப்புப்புள்ளிகளில் தீவிரத்தைத் தூண்டியதுடன், தென் சீனக் கடலில் சீனாவின் கடல் எல்லை உரிமைகோரல்களை இராணுவ ரீதியில் சவால்விடுப்பதை உள்ளடக்கிய புதிய வெடிப்புப்புள்ளிகளையும் உருவாக்கினார்.

ட்ரம்பும் அதே நோக்கங்களை அதிக ஆக்ரோஷத்துடன் பின்தொடர்ந்து, போர் அபாயங்களை மிக அதிகளவில் உயர்த்தி வருகிறார். சீனாவுக்கு எதிரான வர்த்தக மற்றும் முதலீட்டு அணிக்கான ஒபாமாவின் திட்டமான, பசிபிக்கிற்கு இடையிலான கூட்டு (TPP) உடன்படிக்கையைக் கலைத்து, ட்ரம்ப், பெய்ஜிங்குடன் வர்த்தக போருக்கு அச்சுறுத்துகிறார். வட கொரியாவுடனான மோதலுக்கு இராணுவத்தை ஆயத்தப்படுத்துவது, சீனாவுடனான போருக்கான தயாரிப்பும் ஆகும். அமெரிக்கா தொடர் வீழ்ச்சியடைந்து வருவதால், சீனாவுடனான மோதலை தாமதமின்றி விரைவாக்குவதே ஏற்புடையதென்பது அமெரிக்க மூலோபாய வட்டாரங்களில் நடந்து வரும் கணக்கீடாக உள்ளது.

புதனன்று, ஜி உரையாற்றி வெறும் ஒருசில மணி நேரங்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் சூசகமாக சீன அபிலாஷைகளுக்கு சவால்விடுத்தார். “தென் சீனக் கடலில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை" உதாரணமாக காட்டி, அவர் அறிவிக்கையில், "சீனா, இந்தியாவைப்போல் வளர்ந்துவந்தாலும், சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்குமுறையைப் பலவீனப்படுத்தி, மிக குறைந்த பொறுப்புடனே நடந்து கொண்டுள்ளது,” என்றார். உண்மையில், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட உலக ஒழுங்கமைப்பான, இந்த "சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்கமைப்பில்" வாஷிங்டன் மேலாதிக்கம் செலுத்தி, தனக்கேற்ப சட்டங்களை அமைத்தது.

சீனாவின் பொருளாதார மூலோபாய நலன்களை நடப்பு உலக ஒழுங்கமைப்பிற்குள் உள்ளடக்க முடியாது என்பதை ஜி இன் உரை சமிக்ஞை செய்கிறது. தனக்காக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்ற சீனாவின் விருப்பத்தை பிற நாடுகள் குறைமதிப்பீடு செய்துவிட வேண்டாமென அவர் எச்சரித்தார். “அதன் நலன்களைப் பலவீனப்படுத்தும் எதையொன்றையும் சீனா ஏற்றுக் கொள்ளுமென யாரும் எதிர்பார்க்க வேண்டாம்,” என்று ஜி மாநாட்டு பிரதிநிகளிடையே தெரிவித்தார்.

தென் சீனக் கடல் மீதான சீன கடல் எல்லை உரிமைகோரல்களில் இருந்து பின்வாங்காமல், ஜி அவரது அறிக்கையின் அண்மித்து தொடக்கத்திலேயே அறிவிக்கையில், சர்ச்சைக்குரிய கடல்களில் உள்ள தீவுதிட்டுக்கள் மீதான சீன கட்டுப்பாட்டை ஸ்திரப்படுத்துவதே அவர் பதவிகாலத்தின் முதல் ஐந்தாண்டின் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றார். யுரேஷிய பெருநிலத்தை சாலை, புகையிரத மற்றும் கடல் மார்க்கமாக ஒருங்கிணைத்து, அவ்விதத்தில் சீனாவை ஐரோப்பாவுடன் இணைத்து, நேரடியாக அமெரிக்க சுற்றிவளைப்புக்கு குழிபறிக்கும் அவரது பாரிய உள்கட்டமைப்பு திட்டமான "ஒரே இணைப்பு, ஒரே பாதை" திட்டத்தையும் அவர் பெருமையுடன் எடுத்துரைத்தார்.

ஆசியாவில் அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கையில், ஜி, 2050 வாக்கில் ஓர் “உலக தரம் வாய்ந்த” சீன இராணுவத்தை ஏற்படுத்துவதற்கான பிரத்யேக இலக்குகளை அமைத்து, இன்னும் அதிக தீவிர ஆயுத போட்டி வரவிருப்பதை முன்அறிவித்தார். “ஓர் இராணுவம், போருக்காக தயாரிப்பு செய்யப்படுகிறது. அனைத்து இராணுவ பணிகளும் ஒரு போரில் சண்டையிடுவதற்கும், போரில் ஜெயிப்பதற்கும் வல்லமை கொண்ட தரநிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்படும்,” என்றவர் பட்டவர்த்தனமாக அறிவித்தார்.

ஜி இன் உரையில் தொடக்கம் முதல் முடிவு வரை தேசியவாதத்தின் துர்நாற்றம் வீசியது. “சீன தேசம் ஒரு மகத்தான தேசம்; அது கடுமையான மற்றும் பாதகமான நிலைமைகளினூடாக வந்திருந்தாலும், தோற்கடிக்க முடியாததாக நிற்கிறது. சீன மக்கள் மகத்தானவர்கள்; அவர்கள் உழைப்புமிக்கவர்கள், தைரியமானவர்கள், அவர்கள் முன்னோக்கி நகர்வதை ஒருபோதும் நிறுத்தியதில்லை,” என்றார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் செய்வதை போன்றே, ஜி, சீன ஆளும் வர்க்கத்தின் நலன்களை ஆக்ரோஷமாக ஊக்குவிப்பதற்கு நாட்டுப்பற்றை மட்டும் தூண்டிவிடவில்லை, மாறாக பல மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கத்தை அதே நலன்களுக்கு அடிபணிய செய்யவும் முயல்கிறார். மிகப்பெரும் செல்வந்தர்களின் ஒரு சிறிய அடுக்கிற்கும் மக்களின் பாரிய பெரும்பான்மையினருக்கும் இடையிலான ஆழ்ந்த பிளவையும், முதலாளித்துவ மீட்சியையும் உருவாக்கி உள்ள சமூக பதட்டங்கள் குறித்து ஜி க்கு மிகத் துல்லியமாக தெரியும். மேற்கொண்டு விரிவடையக் கூடிய இந்த சமூக பிளவானது, போர் முனைவு தீவிரமடைகையில், அதிகரித்த சமூக அமைதியின்மைக்கு மட்டுமே இட்டுச் செல்லும், இதனால் தான் ஜி ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதற்கும் அழைப்புவிடுக்கிறார்.

வட கொரியா விவகாரத்தில் ஆகட்டும், தென் சீனக் கடல் அல்லது ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் நிலவும் எண்ணற்ற ஏனைய வெடிப்பு புள்ளிகளில் ஆகட்டும், தொழிலாள வர்க்கம் தலையிடாமல், மோதலைத் தவிர்க்கவியலாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக மோலாதிக்கத்திற்கு சீனாவை அதன் முக்கிய சவாலாக கருதுகிறது, சீன முதலாளித்துவமோ வாஷிங்டனின் மேலாதிக்கத்தில் நிறுவப்பட்ட நடப்பு உலக ஒழுங்கமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.

சீனா மற்றும் அமெரிக்காவிலும், ஆசியாவிலும், உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, பெரும் செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு போரில் தாங்கள் போர்கள பலிப்படைகளாக பயன்படுத்தப்படுவதில் எந்த ஆர்வமும் கிடையாது. உண்மையான சோசலிசத்தின் அடிப்படையில், அதாவது ஒருசிலரின் பாரிய இலாபங்களுக்காக அல்ல, பெரும்பான்மையினரின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் அடிப்படையில், ஒரு சர்வதேச இயக்கத்தில் ஒன்றுபடுவதன் மூலமாக மட்டுமே போர் முனைவைத் தடுத்து நிறுத்த முடியும். இந்த முன்னோக்கிற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலகெங்கிலுமான அதன் பிரிவுகளும் போராடி வருகின்றன.