ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian workers and students in Chennai support campaign against Google censorship

சென்னையில் உள்ள இந்திய தொழிலாளர்களும் மாணவர்களும் கூகுள் தணிக்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றனர்

By our correspondents
3 October 2017

கடந்த பல வாரங்களாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International-ICFI) இந்திய ஆதரவாளர்கள், உலக சோசலிச வலைத் தளம் மீதான கூகுள் தணிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை சென்னையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும், அந்நகர மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் மத்தியில்  நடத்தினர்.

தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலை நகரம் சென்னையில் ICFI இன் இந்திய ஆதரவாளர்கள்  குழு வழமையான பிரச்சாரங்களை நடத்தி வருகின்றது. ஆகஸ்ட் 27 அன்று, இந்த குழு, அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்தியது அதில் தொழிலாளர்களின் ஒரு பரந்த வேறுபட்ட பிரிவினர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர், அக்கூட்டம் பேஸ்புக் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் ஏனைய போர்-எதிர்ப்பு மற்றும் முன்னோக்கு பிரசுரங்கள் மீதான கூகுளின் தணிக்கையை எதிர்க்கும் ICFI இன் பிரச்சாரத்திற்கு சென்னையில் உள்ள மாணவர்களும், தொழிலாளர்களும் பலமாக ஆதரவளித்தனர். அத்துடன், தேடல் முடிவுகளில் இருந்து WSWS ஐ தடுக்கும் தொழில்நுட்ப ஏகபோகத்தை நிறுத்தக் கோரும் இணையவழி மனுவில் 4,500 க்கும் மேற்ப்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர், அம்மனுவில் தங்களது பெயர்களையும் பலர் சேர்த்துக் கொண்டனர்.  

மனுவில் கையெழுத்திட்ட சிலருடன் WSWS நிருபர்கள் பேசினர்.

கணேஷ் என்ற 28 வயதான அரசு ஊழியர் ஒருவர், “கூகுளை ஒரு மிகுந்த நம்பிக்கைக்குரிய அமைப்பாக நான் கருதினேன். ஆனால் இந்த அமெரிக்க நிறுவனமோ, அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு இடதுசாரி வலைத் தளங்களை தணிக்கை செய்வதன் மூலம் முற்போக்கு சிந்தனையை தடை செய்து கொண்டிருக்கிறது. தகவல் பெறுவதைத் தடுப்பது என்பது ஒரு சர்வாதிகார நடவடிக்கையாகும். அரசாங்கங்களும், பெரும் நிறுவனங்களும் முக்கிய தகவல்களை நாங்கள் கண்டறிவதை தடுக்க முயன்று வருகின்றன” எனத் தெரிவித்தார். 

கடந்த மாதம், பிற்போக்கு ஓய்வூதிய திட்டத்தை ஒழிக்க கோரிக்கை விடுத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ்நாடு அரசாங்க ஊழியர்களில் கணேஷும் ஒருவராவார். “தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கங்கள், எங்களது போராட்டத்தை நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒடுக்க இணைந்து செயல்பட்டதால், எட்டாவது நாளில் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது,” என்றவர் விளக்கினார். 

வேலைநிறுத்த கோரிக்கைகள் பற்றி பேசுகையில் கணேஷ் பின்வருமாறு தெரிவித்தார்: “தற்காலிக தொழிலாளர்கள் மாத ஊதியமாக 3,000 ரூபாய் ($US45) மட்டுமே பெறுகின்றனர். அவர்களும் நிரந்தரமாக்கப்பட வேண்டும், அவர்களது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்திற்கு சுமார் 40,000 ரூபாய் ($US600) வரை நான் சம்பளமாக பெறுகிறேன், என்றாலும் கூட அதிகளவு வாடகை, குழந்தைகளுக்கான மருத்துவ செலவினங்கள் மற்றும் கல்வி செலவினங்களை சமாளிக்க அதுவே போதுமானதாக இல்லை.”

வெங்கடேஷ், 42 வயதான அரசு ஊழியர், “கூகுளின் தணிக்கை சுயாதீனமான முறையில் விநியோகிக்கப்படும் தகவல்களைத் தடை செய்கின்றது. இது ஜனநாயக உரிமைகள் மீதானதொரு பெரும் தாக்குதலாகும்” எனத் தெரிவித்தார். மேலும், கூகுள் அமெரிக்க அரசாங்கத்துடனும், உளவுத்துறை முகமைகளுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது என்று உலக சோசலிச வலைத் தள பிரச்சாரகர்கள் குறிப்பிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான ICFI இன் அழைப்பிற்கு வெங்கடேஷும் அவருடைய ஆதரவை வெளிப்படுத்தினார். ஹிமாலய மலைமுகட்டுப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உருவாகியிருந்த சமீபத்திய இக்கட்டான இராணுவ நிலைப்பாட்டின் போது வெளிப்பட்ட வெடிப்புறும் பதட்டங்கள் மறுபடியும் தோன்றும் என்பது குறித்த அவரது கவலையையும் தெரிவித்தார். மேலும், “நாங்கள் போரை எதிர்க்கிறோம். தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தையும் நாங்கள் நாடுகிறோம்” எனவும் தெரிவித்தார்.

ராம், சென்னையிலுள்ள MNC தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர், இவர் WSWS நிருபர்களிடம் கூறினார்: “ஏகாதிபத்திய போர் அபாயம் பற்றி வேறு எந்த கட்சியும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அதனால்தான் உங்களது சர்வதேச பிரச்சாரம் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. உங்களுடைய கட்டுரைகளும், ஆவணங்களும் தொழிலாள வர்க்கத்திற்கு செறிந்த அரசியல் அறிவை வழங்குகின்றன.”

மேலும் அவர், “அமெரிக்காவில் அதிகரித்துவரும் சமூக நெருக்கடி குறித்து WSWS அறிக்கை வெளியிடுவதை முதலாளித்துவ செய்தி ஊடகத்தினாலும், மற்றும் ஆளும் வர்க்கத்தினாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்கள் WSWS ஐ தடுக்க முயற்சிக்கின்றனர்” எனவும் தெரிவித்தார்.

“உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு தலைவரின் (டேவிட் நோர்த்) பகிரங்க கடிதம், சர்வதேச தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு இருந்துவரும் உண்மையான பிரச்சினைகளை விளக்குகின்றது. அது சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் நோக்குநிலைப் படுத்த அவர்களுக்கு உதவுகிறது.”

லோகேஷ்

லோகேஷ், மெட்ராஸ் யுனிவெர்சிட்டியில் MBA (Master of Business Administration) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர், இவர், இந்த வருடம், ஹரியானா மாநிலம், மானேசரில் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனை விதித்து சிறையிலிடப்பட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க கோரும் WSWS மனுவில் முன்னதாகவே கையெழுத்திட்டுள்ளார்.

கூகுளின் தணிக்கை நடவடிக்கை பற்றி அவரிடம் கேட்டபோது, “தற்போதைய சூழ்நிலை பற்றி வெளிவரும் முக்கியமான கட்டுரைகளை தேடும் வாசகர்களுக்கு இது பெரும் தடைகளை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு அவர்கள் விரும்புவதை வாசிக்கும் உரிமை உண்டு. அனைத்து இடதுசாரி வலைத் தளங்கள் மீதான, அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான முன்னோக்கை வழங்கும் உலக சோசலிச வலைத் தளம் மீதான கூகுளின் தாக்குதல்களை நான் எதிர்க்கிறேன்” என்று லோகேஷ்,  குறிப்பிட்டார்.

 “கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் தனியார் சொத்து அமைப்புமுறையை பாதுகாக்கவே முனைகின்றன” என்று லோகேஷ் கூறினார். “ஆனால் நீங்கள் விவரித்தது போல, இந்த சமூக ஊடகங்களும், இணைய நிறுவனங்களும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டால், அனைவரும் தங்களது அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். சுதந்திர பேச்சுக்கான உரிமை உறுதிசெய்யப்படும். உங்கள் பிரச்சாரம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் எந்தக் கட்சியும் இந்த பிரச்சினைகளைப் பற்றி எதையும் எங்களுக்கு சொல்லவில்லை” என்றும் தெரிவித்தார். 

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக லோகேஷ் பேசினார்: “அவர்கள் 100 மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்குவோம் எனக் கூறினர், ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனும் பயனடையும் வகையில் வரியேப்பு செய்யப்பட்ட “கறுப்புப் பணத்தை”, தான்  இல்லாதொழிக்கப் போவதாக மோடி தெரிவித்தார். அதற்கு மாறாக, விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரையே இந்த வரி திட்டம் ஒடுக்குகிறது. மோடி எங்களுக்காக இல்லை.” 

சே குவேரா

மற்றொரு மாணவரான சே குவேரா, “உலக சோசலிச வலைத் தளம் மீதான தணிக்கை ஜனநாயக விரோதமானது. கூகுள் இதை உடனடியாக நிறுத்த வேண்டும். WSWS தொடர்புடைய பிரசுரத்திற்கு  நான் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும், செய்திகளையும் எதிலிருந்து பெறவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த மாணவர், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியில் (Stalinist Communist Party of India-CPM) உறுப்பினராக இருக்கும் அவரது தந்தை தனது இடதுசாரி உணர்வுகளின் காரணமாக அவருக்கு சேகுவேரா எனப் பெயரிட்டதையும் சேர்த்துக் கூறினார். கியூபா குறித்த ICFI இன் அணுகுமுறை பற்றியும் மாணவர் கேட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலை, விரல் விட்டு எண்ணக்கூடிய  சில கொரில்லாக்களின் நடவடிக்கைகளினால் பிரதியீடு செய்த, குவேராவின் குட்டி-முதலாளித்துவ அரசியலுக்கும் மார்க்சிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரச்சாரகர்கள் விளக்கினர். கியூபா ஆட்சி பின்பற்றி வந்த தேசியவாத திட்டமும், பெருகிவரும் சமூக சமத்துவமின்மையின் வெளிப்பாடும் இதை அடிக்கோடிட்டுக் காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

குவேரா பின்வருமாறு பதிலளித்தார்: “நீங்கள் சொல்வது முற்றிலும் எனக்கு புதியதாக உள்ளது, என்றாலும் நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்களோ என்றும் தோன்றுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தை நான் வாசிக்க வேண்டும்.”

தீபக் என்பவரும் கூகுள் நடவடிக்கைகளை எதிர்த்தார். மேலும், WSWS இன் சர்வதேச நிகழ்வுகள் குறித்த தினசரி மார்க்சிச பகுப்பாய்வு, ஆழமடைந்துவரும் போர் உந்துதல், தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் ரஷ்ய புரட்சியின் வரலாறு ஆகியவற்றை அவர் வழமையாக வாசித்து வருவதாகக் கூறினார்.

மேலும் தீபக், “உங்களது அமைப்பு சர்வதேச அளவில் வேலை செய்கிறது. பூகோளமயப்பட்ட உலகில் உள்ள முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்க இந்த வழியில் மட்டுமே நாம் போராட முடியும்” எனவும் கூட சேர்த்துக் கூறினார்.