ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Denouncing Iran as a terrorist state, Trump refuses to recertify nuclear accord

ஈரானை ஒரு பயங்கரவாத நாடாக பழிசுமத்தி, ட்ரம்ப் அணுசக்தி உடன்படிக்கைக்கு மறுஅங்கீகாரம் வழங்க மறுக்கிறார்

By Keith Jones
14 October 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான 2015 அணுசக்தி உடன்படிக்கையை விரைவில் வாஷிங்டனின் விருப்புக்கு அமைய திருத்தவில்லையென்றால், அதை இரத்துச்செய்ய ஜனாதிபதிக்கான அவரது சிறப்பு அதிகாரங்களைப் பிரயோகிக்க இருப்பதாக வெள்ளியன்று அறைகூவல் விடுத்தார்.

“காங்கிரஸ் மற்றும் நமது கூட்டாளிகளுடன் செயல்பட்டு நம்மால் ஒரு தீர்வை எட்ட முடியாமல் போனால், பின் அந்த உடன்படிக்கை முறித்துக் கொள்ளப்படும்,” என்று அறிவித்த ட்ரம்ப், “அது தொடர்ச்சியான மீளாய்வில் உள்ளது, நமது பங்கேற்பு எந்த தருணத்திலும் ஜனாதிபதியாக என்னால் இரத்து செய்யப்படலாம்,” என்றார்.

ஈரானை "வெறிபிடித்த,” ஒரு "தான்தோன்றித்தனமான நாடாகவும்", “பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உலகின் முன்னணி நாடாகவும்" சாடிய ஓர் ஆத்திரமூட்டும் சீற்றத்தின் முடிவில், ட்ரம்ப் அந்த அறைகூவலை விடுத்திருந்தார். “மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலும் மோதல், பயங்கரவாதம் மற்றும் கொந்தளிப்பை" தூண்டுவதாக தெஹ்ரானை அவர் குற்றஞ்சாட்டினார்.

மத்திய கிழக்கிலும் வேறு இடங்களிலும் மோதலைத் தூண்டுவதாகவும் பயங்கவாதத்தால் மக்களைப் பீதியூட்டுவதாகவும் வேறெவரையும் கண்டிப்பதற்கு, ட்ரம்புக்கோ அல்லது அவர் யாருக்காக பேசுகிறாரோ அந்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கிற்கோ எந்த தகுதியும் கிடையாது. கடந்த கால் நூற்றாண்டாக, பரந்த மத்திய கிழக்கு எங்கிலும் அமெரிக்கா சட்டவிரோத ஆக்ரோஷ போர்களைத் தொடர்ந்து நடத்தியுள்ளது, அதில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்த சமூகங்களும் அழிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன் சுன்னி-ஷியா மோதலைத் தூண்டிவிட்டுள்ளதுடன், இஸ்லாமிய பயங்கரவாதிகளை அதன் பினாமி போராளிகளாக பயன்படுத்தி உள்ளது, இதில் லிபியா மற்றும் சிரியாவில் நடத்தப்பட்ட அதன் ஆட்சி மாற்றத்திற்கான போர்களும் உள்ளடங்கும்.

அணுசக்தி உடன்படிக்கையை "பேரம்பேசி", மத்திய கிழக்கில் தெஹ்ரானின் "தீங்கு விளைத்துவித்து வரும்" செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில், ட்ரம்பின் ஆத்திரமூட்டலானது, ஈரானை நோக்கிய அதிக ஆக்ரோஷமான அமெரிக்க மூலோபாயத்தை வரையறுத்தும் ஓர் உரையாக இருந்தது. அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் (விரிவான கூட்டு நடவடிக்கை திட்டம் - JCPOA) ஈரான் அதன் கடமைப்பாடுகளை நிறைவேற்றி வருகிறது என்றும், JCPOA அமெரிக்க "தேசிய நலன்களுக்கு" சேவையாற்றுகிறது என்றும் தொடர்ந்து அங்கீகரிப்பதை அவர் நிராகரித்து முடிவெடுப்பார் என்று நீண்டகாலமாக பரப்பப்பட்டு வரும் வதந்தியை வெளிப்படுத்தி காட்டுவதற்கு ட்ரம்ப்க்கு அதுவொரு சந்தர்ப்பமாக இருந்தது.

அந்த அணுசக்தி உடன்படிக்கையை வெள்ளை மாளிகை தொடர்ந்து ஆமோதிக்கும் சான்றிதழை, 90 நாட்கள் இடைவெளிக்குள், ஜனாதிபதி வழங்க தவறினால், ஈரான் மீது விரைவாக பொருளாதார தடையாணைகளை விதிக்கும் அதிகாரத்தை 2015 ஆம் ஆண்டு சட்டம் ஒன்றின் கீழ், காங்கிரஸ் அதற்கு அதுவே வழங்கி இருந்தது.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி உடனடியாக தேசிய தொலைக்காட்சியில் ட்ரம்பின் உரைக்கு பதிலுரை அளித்தார். “ஈரான் குறித்த திரு. ட்ரம்பின் கருத்துகளில் … ஈரான் தேசத்திற்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக மூளைகுழம்பிய குற்றச்சாட்டுக்களும் அர்த்தமற்ற வெற்றுப்பேச்சுக்களையும் தவிர வேறொன்றும் இல்லை,” என்றார்.

அமெரிக்கா நிறுவிய ஷாவினது கொடுங்கோலாட்சியை தூக்கி வீசிய 1979 மக்கள் புரட்சி குறித்த ட்ரம்பின் தூற்றல்களுக்கும், கடந்த நாற்பதாண்டுகளாக தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களும் மற்றும் தடையாணைகளும் ஈரானிய "ஆக்ரோஷத்தினால்" ஏற்பட்டதாக சித்தரிக்கும் அவர் முயற்சிக்கும் ரௌஹானி பதிலளிக்கையில், ட்ரம்ப் "வரலாறைச் சரியாகவும், இன்னும் ஆழமாகவும் படித்து, சுமார் கடந்த அறுபது ஆண்டுகளாக (அமெரிக்க அதிகாரிகள்) ஈரானிய மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதையும், புரட்சிக்குப் பின்னர் … அவர்கள் ஈரானிய மக்களை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும்" தெரிந்து கொள்ள வேண்டும் என்றுரைத்தார்.

அந்த அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஏனைய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அனைத்தும் அந்த உடன்படிக்கையில் மறுதிருத்தம் கூடாது என்றும், சட்டபூர்வமாக அவ்வாறு செய்யவும் முடியாது என்றும் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளன.

ட்ரம்ப் அந்த 2015 உடன்படிக்கையை முறிக்க தீர்மானகரமாக உள்ளார் என்பதை சமீபத்திய வாரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ள நிலையில், உலக தலைவர்கள், குறிப்பாக வாஷிங்டனின் பாரம்பரிய ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் தலைவர்கள், அதிகரித்தளவில் கிலியூட்டும் எச்சரிக்கைகளை விடுத்தனர். அந்த உடன்படிக்கையை உடனடியாகவோ அல்லது ட்ரம்ப் இப்போது செய்துள்ளதைப் போல திட்டமிட்டு சதிசெய்வது மூலமாகவோ முறிப்பதென்பது, மத்திய கிழக்கில் போர் அபாயத்தை மிகப்பெரியளவில் தூண்டிவிடுமென அவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் சர்வதேச உடன்படிக்கைகளை தன்னிச்சையாக திருத்தவோ அல்லது மறுத்தளிக்கவோ அதற்கு உரிமை இருப்பதாக வாஷிங்டன் பிடிவாதத்தைக் காட்டினால், கொரிய தீபகற்ப நெருக்கடிக்கான எந்தவொரு இராஜாங்க தீர்வுக்கும் கதவுகளை மூடிவிடுவதாக அமையுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ரௌஹானியைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஃப்ரெடிரீகா மொஹரினியும் ட்ரம்ப் உரைக்கு உடனடியாக விடையிறுத்தார். ஈரான் JCOPA ஐ மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியின் வாதத்தை அப்பெண்மணி நிராகரித்ததுடன், “அந்த உடன்படிக்கையில் உள்ள எந்த கடமைபாடுகளும்" ஈரானிய தரப்பில் "மீறப்படவில்லை" என்று அறிவித்தார். (உண்மையில், உடன்படிக்கையில் உள்ளவற்றை தெஹ்ரான் கடைபிடித்திருப்பதாக பென்டகனும் அமெரிக்க வெளியுறவுத்துறையுமே கூட ஒப்புக் கொள்கின்றன.)

அந்த உடன்படிக்கை, JCOPA, அதற்குப்பின்னர் ஐ.நா. பாதுகாப்பு அவையால் ஆமோதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட மொஹரினி, தொடர்ந்து கூறுகையில், “எனக்குத் தெரிந்த வரையில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை உலகில் ஒரேயொரு நாடு முறித்துவிட முடியாது. அமெரிக்க ஜனாதிபதிக்கு பல அதிகாரங்கள் இருக்கலாம், ஆனால் இதற்கான அதிகாரம் கிடையாது,” என்றார்.

பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரெசா மே, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் JCPOA ஐ “13 ஆண்டுகால இராஜாங்க நடவடிக்கைகளின் விளைவு” என்று பாராட்டியதுடன், அதற்கான அவர்களின் ஆதரவை மறுஉறுதிப்படுத்துவதற்கு ஓர் அரிய நடவடிக்கையாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அணுசக்தி உடன்படிக்கையை "பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளும் எடுப்பதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மற்றும் அதன் நேச நாடுகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து பரிசீலிக்குமாறு,” “அமெரிக்க நிர்வாகத்தையும் காங்கிரஸையும் நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்,” என்று ஐரோப்பாவின் பிரதான சக்திகளின் அத்தலைவர்கள் குறிப்பிட்டனர்.

மிகத் தெளிவாக, ஈரான் உடனான நேருக்குநேரான ஒரு மோதல் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதல்களைக் குறுக்கறுக்கூடும் என்றும், அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் மற்றும் நேட்டோ கூட்டணியை அபாயகரமாக பாதிக்குமென்றும் என்று கருதுவதால், இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஈரான் உடன்படிக்கையை விட்டொழிப்பதை எதிர்க்கின்ற வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர் போன்ற நிர்வாகத்தின் மூத்த அங்கத்தவர்களைக் கொண்டு இப்போதும் ட்ரம்பைக் கட்டுப்படுத்த முடியுமென ஐரோப்பிய தலைவர்கள் நம்புகின்றனர்.

ட்ரம்ப் அவரின் வெள்ளிக்கிழமை கருத்துக்களில், ஈரான் மீது "திரும்பவும்" உடனடியாக தடையாணைகளை விதிக்குமாறு காங்கிரஸிற்கு அழைப்புவிடுக்கவில்லை. ஆனால் ஈரானின் தொலைதூர ஏவுகணை திட்டத்துடன் எவ்விதத்திலும் பிணைந்துள்ள எந்தவொரு நபர் மீதோ அல்லது குழு மீதோ தடையாணை விதிக்கும் ஒரு முன்மொழியப்பட்ட அமெரிக்க சட்டமசோதாவையும், ஈரானின் படைத்துறைசாரா அணுசக்தி திட்டத்தின் மீது JCPOA இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கடுமையான தற்காலிக கட்டுப்பாடுகளை நிரந்தரமாக்கும் மற்றொரு சட்டமசோதாவையும் அவர் புகழ்ந்தார்.

"பயங்கரவாதத்தை" ஆதரிக்கிறது என்பதற்காக அமெரிக்க நிதித்துறை, ஈரானின் ஒட்டுமொத்த புரட்சிகர பாதுகாப்புப் படையையும் தடையாணைகளின் கீழ் நிறுத்தி இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். ஈரானிய பொருளாதாரத்தில் புரட்சிகர பாதுகாப்புப் படை பரந்த பாத்திரம் வகித்து வருகின்ற நிலையில், இந்நடவடிக்கையானது ஈரானில் அன்னிய முதலீட்டைப் பலமாக தடுக்கக்கூடிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

ஈரானின் எரிசக்தி மற்றும் வங்கித்துறை மீது காங்கிரஸ் கடுமையான தடையாணைகளை மீண்டும் திணித்து, அவ்விதத்தில் அணுசக்தி உடன்படிக்கையை உடைப்பது, அல்லது அந்த உடன்படிக்கையை முறிக்க அவர் தரப்பிலிருந்து நேரடி நடவடிக்கை மேற்கொள்வது என இரட்டை-அச்சுறுத்தலானது, தெஹ்ரான் JCPOA இன் "பல முறைகேடுகளை" “திருத்திக் கொள்ள" வேண்டுமென கோருவதில் ஐரோப்பியர்களை வாஷிங்டனுக்குப் பின்னால் கொண்டு வர நிர்பந்திக்கும் என்பதே ட்ரம்பின் தந்திரம் மற்றும் நம்பிக்கையாகும்.

ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் இருப்பதானது, அவர் ஓர் இறுதிஎச்சரிக்கை விடுத்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத கோரிக்கைகள் பலவற்றை சர்வசாதாரணமாக விவரித்திருந்தார், அவை ஈரானின் இறையாண்மையை மீறுவதுடன், நடைமுறையளவில் அந்நாட்டை ஒரு ஏவல் அரசின் அந்தஸ்திற்குக் குறைக்கக்கூடியவை என்பதோடு, அதேவேளையில் JCPOA இல் கையெழுத்திட்டுள்ள, குறிப்பாக வெளித்தோற்றத்திற்கு வாஷிங்டனின் கூட்டாளிகளாக தெரியும் பிற நாடுகள் ஈரானை அடிபணியச் செய்ய அதற்கு அழுத்தமளிக்குமாறு மறைமுகமாக கோருகின்றன.

இந்த கோரிக்கைகளில் உள்ளடங்குபவை: JCPOA இன் "சூரிய அஸ்தமன" அம்சங்களை நீக்குவது, அதாவது ஈரானின் படைத்துறைசாரா அணுசக்தி திட்டம் மீதான தற்காலிக வரம்புகளை நிரந்தர தடைகளாக மாற்றுவது; ஈரானிய இராணுவத் தளங்களுக்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்களுக்குக் கட்டுப்பாடில்லா அனுமதி வழங்குவது; மற்றும் ஈரானின் தொலைதூர ஏவுகணை திட்டத்தை கலைப்பது ஆகியவை உள்ளன.

இந்த கோரிக்கைகளை ஈரான் ஏற்பதென்பது நவ-காலனித்துவ அந்தஸ்தை ஏற்பதற்கும் மற்றும் ஒருதலைபட்சமாக ஆயுத குறைப்பிற்கும் ஒப்பானதாகும். பல பத்தாண்டுகளாக, வாஷிங்டன், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும் ஒன்றுபோல, தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்துள்ளன அதேவேளையில் அப்பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவில் தொடங்கி அமெரிக்க ஆதரவு அரசுகளை மூர்க்கமாக ஆயுதபாணியாக்கி உள்ளன.

வாஷங்டனின் ஒருதலைபட்சமான போக்கின் மீது ஐரோப்பாவில் நிலவும் அச்சமும் கோபமும் எளிதில் புரிந்து கொள்ளத் தக்கவையே என்பதுடன் அவை ஆழமாக வேரூன்றியவையாகும். ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல், வாஷிங்டன் "சட்டத்தின் ஆட்சியை பலத்தின் சட்டத்தைக் கொண்டு பிரதியீடு" செய்து வருவதாக இவ்வார ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்கா “ஈரான் உடன்படிக்கையை முறிப்பது மத்திய கிழக்கை கொதிப்பான நெருக்கடிகளின் ஒரு பிராந்தியமாக மாற்றி", வட கொரியா உடனான இராஜாங்க நடவடிக்கைகளுக்கான கதவுகளை அடைத்துவிடுமென அவர் எச்சரித்தார். “ஈரான் பிரச்சினை சம்பந்தமான அமெரிக்கர்களின் அணுகுமுறை ஐரோப்பியர்களை அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு எதிராக, ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு கொண்டு செல்லும் என்பதை அமெரிக்கர்களுக்கு" ஐரோப்பிய ஒன்றியம் "தெரிவிக்க வேண்டும்" என்று காப்ரியேல் குறிப்பிட்டார்.

நான்காண்டுகளாக ஈரான் பொருளாதாரத்தைச் சீரழித்த கடுமையான தடையாணைகளைத் திணிப்பதில் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், இப்போது பிரமாண்டமாக மீள்ஆயுதமேந்தும் திட்டங்களுக்கு நடுவே உள்ளன. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுடனான அவர்களின் உடன்பாடின்மைகள், முற்றிலும் அவர்களின் சொந்த சூறையாடும் திட்டநிரல்களுடன் பிணைந்துள்ளன.

அவை, 2015 அணுசக்தி உடன்படிக்கைக்குப் பின்னர், தெஹ்ரான் வழங்கிய அதிக வர்த்தக வாய்ப்புகளிலிருந்து ஆதாயம் பெற முண்டியடித்து சென்றுள்ளன, எரிசக்தித்துறையும் அதில் உள்ளடங்கும். ஈரான் உடன்படிக்கையை விட்டொழிக்கும் ட்ரம்பின் திட்டங்கள் இத்தகைய முதலீடுகளைச் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன என்பது மட்டுமல்ல; மத்திய கிழக்கு எண்ணெய்யை அமெரிக்காவை விட மிக அதிகமாக சார்ந்துள்ள ஐரோப்பிய சக்திகள், ஈரானுடன் பதட்டங்களை அதிகரிப்பதானது ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சிக்கும், சமூகரீதியில் ஸ்திரமின்மைக்கும் உட்படுத்துமென அஞ்சுகின்றன.

அமெரிக்க-மேலாதிக்க உலக நிதியியல் அமைப்புமுறையைக் கொண்டு, ஈரானுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகள் மேற்கொள்வதன் மீது ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தடைவிதிப்பது என்ற அச்சுறுத்தல் இறுதியில் ஈரானுக்கு எதிரான ஒரு புதிய பொருளாதார போரில் அவற்றை வாஷிங்டனின் கோரிக்கைக்கு ஐரோப்பியர்களை இணைந்து வர நிர்பந்திக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தைச் சுற்றியுள்ள ஈரான்-விரோத போர்வெறியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் வாஷிங்டனுக்கு எதிராக திருப்பி அழுத்தமளிக்கும் மனோபாவம் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் டேவிட் ஓ'சுல்லிவன் கூறுகையில், அமெரிக்க தடையாணை அச்சுறுத்தல்களில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை பாதுகாக்க ஐரோப்பா சட்டமசோதா கொண்டு வரக்கூடும் என்றார்.

ஈரான் அணுசக்தி உடன்படிக்கை குறித்து வாதிடுகையில், ஜனாதிபதி ஒபாமா மீண்டும் மீண்டும் ஒரே மாற்றீடு போர் மட்டுமே என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்ன கூறவில்லை என்றால் அதுபோன்றவொரு போர் விரைவிலேயே சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் போன்ற அமெரிக்க கூட்டாளிகளையும், ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஈரானுடன் அணிசேர்ந்த குழுக்களையும், சாத்தியமான வகையில் ரஷ்யா மற்றும் வெளியிலிருந்து பிற சக்திகளையும் உள்ளிழுத்து, ஒரு பிராந்திய போராக மாறக்கூடும்.

ட்ரம்ப் நிர்வாகத்தில் நிச்சயமாக இராணுவ நடவடிக்கை விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்நிர்வாகத்தின் புதிய ஈரான் மூலோபாயத்தை நெறிப்படுத்துவதில் ட்ரம்ப் மற்றும் அவருடன் இருப்பவர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்ற குடியரசுக் கட்சி செனட்டர் டோம் காட்டன் வெளியுறவுகள் கவுன்சிலின் சமீபத்திய ஒரு கூட்டத்தில் பேசுகையில், புதுப்பிக்கப்பட்ட தடையாணைகள் ஈரானை அடிபணிய செய்யாவிட்டால், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக அமெரிக்கா "கணக்கிட்ட தாக்குதல்களைத்" தொடங்கும் என்று தெரிவித்தார்.