ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What would a “Jamaica” coalition in Germany represent?

ஜேர்மனியில் “ஜமைக்கா” கூட்டணி எதை பிரதிநிதித்துவம் செய்யும்?

By Peter Schwarz
7 October 2017

ஜேர்மனியில் புதிய அரசாங்கம் அமைப்பது தாமதமாகிறது. கூட்டாட்சி தேர்தல் முடிந்து பதினொரு நாட்களுக்குப் பின்னரும் ஒரு கூட்டணி அரசமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த காலங்களில் தேர்தலுக்கும் புதிய அரசாங்கம் பதவியேற்பதற்குமான கால இடைவெளி வழமையாக நான்கில் இருந்து ஆறு வாரங்கள் வரை ஆகியுள்ளன, அதேவேளையில் நான்காண்டுகளுக்கு முன்னர் அது ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை ஆனது. இப்போது ஒரு புதிய அரசாங்கத்தை ஒழுங்கமைக்க கிறிஸ்துமஸ் வரை அல்லது புத்தாண்டு வரை கூட ஆகலாம் என்பதாக தெரிகிறது.

சமீபத்திய தேர்தலில் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஸ்தாபக கட்சிகளுக்கும், பரந்த பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான ஆழ்ந்த இடைவெளியே இதை செய்து முடிப்பது மெதுவாக இருப்பதற்கான மிக அடிப்படை காரணமாக உள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக கட்சி (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) ஆகிய "மக்கள் கட்சிகள்" எனப்படும் இவை, 1945 க்கு பிந்தைய அவற்றின் மிக மோசமான தேர்தல்கள் முடிவுகளை அடைந்திருந்தன. இந்த அன்னியப்படலுக்குப் பின்னால், கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதும் மற்றும் வேகமான வறுமை அதிகரிப்பை உருவாக்கி உள்ளதுமான, இராணுவவாத மற்றும் சமூக வெட்டு கொள்கைகள் அமைந்துள்ளன.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி ஆகியவையும் இதே போன்ற கொள்கைகளைப் பின்பற்றியதால் தான், மக்கள் அதிருப்தியிலிருந்து தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கு மாற்றீடு (AfD) அதிகளவில் இலாபமடைந்து, நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிக பலமான கட்சியாக உள்நுழைய முடிந்தது. இதன் விளைவாக, சுதந்திர ஜனநாயகக் கட்சியினரின் பாராளுமன்ற மீள்வரவுடன் சேர்ந்து, ஆறு வெவ்வேறு நாடாளுமன்ற குழுக்கள் இப்போது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) பிரதிநிதித்துவம் செய்யும், இது ஓர் அரசாங்கம் அமைப்பதற்கு கூடுதல் சவாலை முன்னிறுத்துகிறது.

எவ்வாறிருப்பினும் இராணுவவாத மற்றும் சமூக வெட்டு கொள்கைகளை தொடர்வதற்கும், ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை பலப்படுத்துவதற்கும் மற்றும் எல்லா எதிர்ப்புகளையும் ஒடுக்குவதற்கும் தகைமை கொண்ட ஒரு ஸ்திரமான ஆட்சியை நிறுவ வேண்டியிருப்பதே ஓர் அரசாங்கம் அமைப்பதற்கான பிரதான தடையாக உள்ளது. இதில் எல்லா கட்சிகளும் உடன்படுகின்றன, எதிர்க்கட்சியாக இருக்க முடிவெடுத்துள்ள சமூக ஜனநாயகக் கட்சியும், ஒரு பெரும்பான்மை பெறுவதற்கு இப்போதைக்கு அவசியப்படாத இடது கட்சியும் இதில் உள்ளடங்கும்.

எல்லா கட்சிகளும் AfD உடனான ஒரு கூட்டணியை நிராகரிக்கின்றன என்றாலும், அதன் வலதுசாரி கொள்கைகளை நோக்கியே அவை நீண்டகாலமாக பயணித்துள்ளன. அதன் "வலது பக்கம்" குறைநிரப்பப்படுமென வலியுறுத்தி வருகின்ற கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), இதை மிக வெளிப்படையாகவே செய்து வருகிறது. சாக்சோனி மாநில முதல்வர் ஸ்ரானிஸ்லாவ் ரில்லிஷ் (CDU), “மக்கள், ஜேர்மனி ஜேர்மனியாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள்,” என்று கூறி, வலதுக்கு திரும்புவதற்கான அவர் கட்சியின் அழைப்பை நியாயப்படுத்தினார். அவருக்கு முன்பிருந்த குர்ட் பீடன்க்கொவ் (CDU) கூட, “ஜேர்மனிக்கு மாற்றீட்டு கட்சியின் வலதுக்கு சென்றடைய" விரும்புவதாக ரில்லிச் ஐ குற்றஞ்சாட்டினார்.

ஆனால் இந்த கட்சிகள் ஒவ்வொன்றும், ஹிட்லர் மரணத்திற்குப் பின்னர் முதல்முறையாக நாடாளுமன்றத்துள் நுழையும் AfD ஐ மற்றும் அதில் நிர்வாகிகளாக உள்ள நாஜிக்களை எதிர்ப்பதற்கு பதிலாக, அவர்களை அரவணைக்கின்றன. ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) அவரது ஜேர்மன் நல்லிணக்க தின உரையில் மிகத் தெளிவாக இதை தான் செய்தார். “நமது கருத்துவேறுபாடுகளில் இருந்து விரோதம் எழுவதை (உடன்பாடின்மையில் இருந்து கருத்துமுரண்பாடு தலைதூக்குவதை) நாம் அனுமதிக்க கூடாது,” என்று வாதிட்ட ஸ்ரைன்மையர், அகதிகள் கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை கோரினார். இது AfD இன் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

பெரும்பாலும் அனேகமாக CDU-CSU, FDP மற்றும் பசுமை கட்சியினரை உள்ளடக்கிய "ஜமைக்கா" கூட்டணி எனப்படும் (அம்மூன்று கட்சிகளின் நிறங்களான கருப்பு, மஞ்சள், பச்சையைக் கொண்ட ஜமைக்கா கொடியுடன்) வரவிருக்கும் அரசாங்கம், ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரியாக இருக்கப் போகிறது. இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள பதவிகளுக்கான நபர்கள் சம்பந்தமான மற்றும் கொள்கைரீதியிலான அனைத்து முன்மொழிவுகளும் இதையே எடுத்துக்காட்டுகின்றன.

பசுமைக் கட்சியும் சுதந்திர ஜனநாயகக் கட்சியும், ஒரு முக்கிய அமைச்சகத்திற்கு தலைமை பெற வலியுறுத்தும் என்று நிச்சயமாக கருதப்படுகிறது. சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) ஐ பொறுத்த வரையில், இது அனேகமாக நிதி அமைச்சகமாக இருக்கலாம், நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள ஜேர்மன் நாடாளுமன்ற தலைவராக பதவியேற்றதால் அப்பதவி காலியாகி உள்ளது.

சுதந்திர ஜனநாயகக் கட்சியின் 38 வயதான தலைவர் கிறிஸ்டியான் லிண்ட்னர் மத்திய வரவு-செலவு திட்டத்திற்கு பொறுப்பேற்கக்கூடும். இந்நபர், கடுமையான சிக்கன கொள்கைகளைத் தொடர்வதிலும், செல்வந்தர்கள் மீதான வரி வெட்டுக்கள் மற்றும் ஐரோப்பாவிற்குள்ளாக நிதி மறுபகிர்வை எதிர்ப்பதிலும் வேறெவரையும் விட அதிகளவில் தொடர்புபட்டவர். FDP போன்ற பெருவணிக நலன்களுக்கு ஒத்துழைக்கும் ஒரு கட்சி, அரசு வரவு-செலவு கணக்கை நிர்வகிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பினாலேயே, ஒருவேளை ஜேர்மனி பங்குச்சந்தை DAX சாதனையளவுக்கு 13,000 ஐ கடந்து உயர்ந்திருக்கக்கூடும்.

லிண்ட்னரும் அகதிகள் கொள்கை மீது பலமான வலது நிலைப்பாட்டை பரிந்துரைக்கிறார். சான்றாக, “நாம் தேர்ந்தெடுக்கும் தகுதி வாய்ந்த நிரந்த புலம்பெயர்வுக்கும் மனிதாபிமான பாதுகாப்பை தேடும் நபர்களுக்கும் இடையே தெளிவாக வித்தியாசத்தை காட்டும் ஒரு புலம்பெயர்வோர் சட்டத்திற்கு" அவர் அழைப்புவிடுத்துள்ளார். அந்த FDP தலைவரைப் பொறுத்த வரையில், மனிதாபிமான பாதுகாப்பு காலவரையறுக்கப்பட்டதாக இருக்கவேண்டும், அவ்விதத்தில் உள்நாட்டு போர் அகதிகள் மற்றும் ஜேர்மனியில் பிறந்த அவர்களின் குழந்தைகளை பின்னர் ஒரு நாள் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு பசுமைக் கட்சியின் ஸெம் ஒஸ்டிமியர் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார். அட்லாண்டிக் பிரிட்ஜ் அறக்கட்டளையின் இளந்தலைவர் பாடப்பிரிவை படித்துள்ள இந்த பசுமை கட்சி அரசியல்வாதி, அமெரிக்காவில் ஜேர்மன் மார்ஷல் நிதி மீது அட்லாண்டிக் கடந்த ஆய்வாளராக நேரத்தை செலவிட்டவர் என்பதுடன், ஐரோப்பிய மற்றும் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகார குழுவில் இடம் பெற்றிருந்தவர், வெளியுறவு கொள்கை விடயங்களில் அவர் கருத்தை வெளியிட அவர் ஒருபோதும் சந்தர்ப்பத்தை தவறவிட்டதில்லை.

மனிதாபிமானம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான அக்கறை என்ற போர்வையில், ஒஸ்டிமியர், வெளிப்படையாகவே ஜேர்மன் இராணுவ தலையீடுகளுக்காக பேசும் ஒரு ஆதரவாளராவார். ரஷ்யா மற்றும் துருக்கியை நோக்கி ஒரு மோதல் கொள்கையை அறிவுறுத்தும் அவர், பலமாக ஆயுதமயப்பட்ட ஓர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டங்களை ஆதரிக்கிறார்.

பிரிட்டனின் Economist இதழுடனான ஒரு பேட்டியில், ஒஸ்டிமியர், ஜேர்மனி உலகளவில் தலைமை பாத்திரம் வகிக்க அழைப்புவிடுத்தார்: “ஜேர்மனி முன்னுக்கு வந்து பொறுப்பேற்க வேண்டும்: வளர்ச்சி, செல்வவளம், வேலைகள் மற்றும் காலநிலை மாற்ற நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தை உங்களால் ஒருங்கிணைக்க முடியும் என்பதை காட்டக்கூடிய ஒரு நாடு நம்முடையது,” என்றார்.

ஒஸ்டிமியர் இன் எதிர்கால கூட்டணி பங்காளியாக வரக்கூடிய தாராளவாத கட்சியின் லிண்ட்னர் ஒரு பேட்டியில் ரஷ்யாவுக்கு நட்பாக பேசியதற்காக, அவரை “புட்டினின் பிரச்சாரத்தை" பரப்புவதாகவும், “மேற்கத்திய-எதிர்ப்பு கோபத்தை ஜேர்மன் சமூகத்தினுள்" தூண்டுவதாகவும் ஒஸ்டிமியர் குற்றஞ்சாட்டினார்.

ஒஸ்டிமியர் தொடர்ந்து கூறினார், “உங்களை ஒரு உக்ரேனியராக நீங்கள் கருதிக்கொண்டு,” “மைதான் சதுக்கத்தில் நீங்கள் ஐரோப்பிய மதிப்புகளுக்காக எழுந்து நின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நாடு அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு உத்தரவாதம் பெறுவதற்கு கைமாறாக, 1994 புடாபெஸ்ட் புரிந்துணர்வில், அதன் அணுஆயுதங்களைக் கைவிட வேண்டியிருந்தது. இப்போதோ கிரிமியாவை ரஷ்யா உடைத்தெடுத்து கொள்கின்றபோது, லிண்ட்னர் 'நாம் அதனுடன் வாழ வேண்டும்' என்று கூறுகிறார்.”

உள்துறை அமைச்சகம் யாருக்கு வழங்க வேண்டுமென்ற விவாதங்களும் ஏற்கனவே நன்கு முதிர்ந்துள்ளன. பவேரிய உள்துறை அமைச்சர் ஜோஅஹிம் ஹேர்மான் (CSU) பரிசீலிக்கப்பட்டு வருகிறார், இவரது சட்டம்-ஒழுங்கு கொள்கைகள் இப்போதைய உள்நாட்டு அமைச்சர் தோமஸ் டு மஸியரை விட இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. ஹேர்மான் கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க, கண்காணிப்பு மற்றும் கடுமையான எல்லை கட்டுப்பாடுகளுக்கு பலமாக ஆதரவளிப்பவர். பசுமை கட்சியினர் மற்றும் FDP தாராளவாதிக்களின் ஆட்சேபணைகள் குறித்து அவருக்கு எந்த பயமும் இல்லை, அவர்களுமே தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரியளவில் பொலிசைப் பலப்படுத்த அழைப்பு விடுத்திருந்தார்கள்.

சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (CDU) இன் ஒரு நெருங்கிய கூட்டாளியான டு மஸியர் அவரது பதவியில் தொடர்ந்திருக்க விரும்பினால், ஹேர்மான் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம். தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஹிட்லரின் ஜேர்மன் இராணுவ (Wehrmacht) பாரம்பரியத்தை இனி விதைக்கக்கூடாதென கோரி இராணுவத்தில் உள்ள வலதுசாரி பயங்கரவாத குழுவை வெளிப்படுத்தி காட்டியதால் இராணுவத்தினுள் அவர் எதிரிகளை சம்பாதித்து கொண்டார். இதற்கு மாறாக ஹெர்மனோ ஆயுதப்படையின் தோழராவார். இருப்புப்படையின் (reserve) ஒரு லெப்டினென்ட் கர்னலான அவர், உள்நாட்டில் ஆயுதப்படை நிலைநிறுத்தலை பரிசோதித்த ஓர் இராணுவ ஒத்திகையில் பல மாதங்கள் பங்குபற்றியவராவார்.

எவ்வாறிருப்பினும் ஜமைக்கா கூட்டணி நிறுவப்படுமா என்பதே ஒரு பகிரங்க கேள்வியாக நீடிக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தனது கருத்தை மாற்றிக் கொள்ளலாம், அல்லது AfD —அல்லது அதிலிருந்து உடைந்து வரும் ஒரு பிரிவு— அரசாங்கத்திற்குள் கொண்டு வரப்படலாம். ஒரு புதிய தேர்தலே கூட முற்றிலுமாக விவாதத்திற்கு வெளியில் இல்லை. ஆனால் இதற்கும், எதிர்கால அரசாங்கத்தின் வலதுசாரி குணாம்சம் மாறுவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதன் வேலைத்திட்டம் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியாலும் மற்றும் தீவிரமடைந்து வரும் பதட்டங்களாலும் தீர்மானிக்கப்படும், இவற்றிற்கு ஆளும் வர்க்கம் ஒரேயொரு பதிலைத் தான் கொண்டுள்ளது: அது, இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறையுமாகும்.

சுதந்திரத்திற்கான கட்டலோனிய சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக ஸ்பானிய அரசாங்கத்தின் கண்மூடித்தனமான ஒடுக்குமுறையும், இதற்கு ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவும், எந்தவொரு எதிர்ப்பின் அறிகுறிக்கும் ஆளும் வர்க்கம் எந்தளவுக்கு ஈவிரக்கமின்றி விடையிறுக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.