ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: JVP leader assures business that it defends capitalism

ஜே.வி.பி. முதலாளித்துவத்தை பாதுகாப்பதாக அதன் தலைவர் வணிகத்திற்கு உறுதியளிக்கிறார்

By K. Ratnayake
25 September 2017

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தில் எதிர் கட்சி பிரதான கொரோடவுமான அநுர குமார திஸநாயக்க நாட்டின் இரண்டு ஸ்தாபன கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகியவற்றுக்கு ஒரு சாத்தியமான மாற்றீடாக தனது கட்சியினை அங்கீகரிக்குமாறு பெருவணிகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திஸநாயக்க, செப்டம்பர் 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜே.வி.பி.யினால் ஒழுங்கு செய்யப்பட்ட வணிக தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த அழைப்பை விடுத்தார். இந்த நிகழ்வு, “இலங்கைக்கான முன்னோக்கிய பாதை மற்றும் நாம் இலங்கையர்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இது 2020ல் இடம்பெறவுள்ள இலங்கையின் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஜே.வி.பி.யின்  பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

2௦15 ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த ஜே.வி.பி., பின்னர் உருவாக்கப்பட்ட ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு.க. ‘ஐக்கிய” கூட்டணி அரசாங்கதிற்கு ஆதரவளித்தது. பாசங்குத்தனமாக, இப்போது அதே அரசாங்கத்தை ஊழல் சம்பந்தமாக குற்றம்சாட்டிக்கொண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதன் மேல் பழி சுமத்தி, ஜே.வி.பி. அதே அரசாங்கத்தில் இருந்து தன்னை தூர விலகிக்கொள்ள முயற்சிக்கின்றது.

திஸநாயக்க, ஜேவிபி மற்றும் “தனியார் துறையை பற்றிய அதன் அணுகுமுறை” பற்றி “எவ்வித சந்தேகங்களையும் கொண்டிருக்கவேண்டியதில்லை என்று வணிகத் தலைவர்களுக்கு உறுதியளித்தார். “நாம் ‘எமது நோக்கங்களைக்’ கொண்டுள்ளோம், அனால் [ஜே.வி.பி.யின்] கொள்கைகள் உங்களதும் எங்களதும் கருத்துக்களை ஒன்றாக இணைத்தே தீர்மானிக்கப்படும். அரசாங்கத் துறையை போலவே தனியார் துறையும் பொருளாதாரத்துக்கு முக்கியமானது” என்று அவர் அறிவித்தார்.

காஸ்ட்ரோ வாதம், ஸ்ராலினிசம் மற்றும் சிங்கள பேரினவாதத்தின் கலவையை அடிப்படையாக கொண்டு 1960ல் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தை பரிந்துரைத்தது. இது நீண்ட காலத்துக்கு முன்னரே அதன் கெரில்லாவாதத்தினை கைவிட்டு, கொழும்பு அரசியல் ஸ்தாபகத்துடன் ஒருங்கிணைந்துகொள்வதற்கு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது. ஜே.வி.பி., சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த இராஜபக்ஷ ஆகிய ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு உதவியதன் மூலமாக முக்கிய பங்கை ஆற்றியது.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள், 2004ல் குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததோடு நான்கு அமைச்சர் பதவிகளை வகித்தனர். திஸநாயக்க விவசாய, கால்நடை மற்றும் நீர்பாசன துறை அமைச்சராக இருந்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 30 ஆண்டுகால இனவாதப்போரினை ஆதரித்த இந்த கட்சி, மேற்கத்தைய இராஜதந்திரிகளுடன், குறிப்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் நெருங்கிய உறவினை பேணியது.

திஸநாயக்க, செப்டம்பர் 14 ஒன்று கூடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் 5 பிரதான அம்சங்கள் இருந்ததாக கூறினார். அவற்றில் முதலாவது இலங்கையின் கடனாகும், இது 1985ல் 120 பில்லியன் ரூபாயிலிருந்து 2015 நவம்பரில் 10,500 பில்லியனாக உயர்ந்துள்ளது என அவர் கூறினார். இரண்டாவது அம்சம், 2000ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவிகிதமாக இருந்த நாட்டின் ஏற்றுமதி வருவாய், 2014ல் 14 சதவிகிதமாக குறைந்தது.

மூன்றாவது அம்சம், 1996ல் 23 விகிதமாக இருந்து 2014ல் 11.3 சதவிகிதமாக “அரச வருமானம் சரிந்து போனமை” மற்றும் நான்காவதும் ஐந்தாவதும் அம்சங்கள் இலங்கையின் உற்பத்தி கூர்மையாக வீழ்ச்சியடைந்தமையும் வருமான பங்கீட்டின் சமத்துவமின்மை விரிவடைந்து வருவதுமாகும் என திஸநாயக்க கூறினார்.

இந்த அம்சங்களுக்கும் தற்போதய பூகோள முதலாளித்துவ நெருக்கடிக்கும் இடையில் எவ்வித தொடர்பையும் காட்டாத திஸநாயக்க, நாட்டின் அமைவிடத்தினையும் இயற்கை மற்றும் மனிதவளங்கள் மற்றும் அதன் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இலங்கை எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையினை தீர்க்கலாம் என வலியுறுத்தினார். ஒரு எதிர்கால ஜே.வி.பி. அரசாங்கமானது பிற்போக்கு பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் பரிந்துரைத்தார் –அதாவது தேர்ந்த்டுக்கப்பட்ட தொழில் துறைகளில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டை அது ஏற்றுக்கொண்டு, அபிவிருத்தி நோக்கத்திற்காக கடன்கள் பெற முயலும்.

உண்மையில், இலங்கையின் நெருக்கடியானது மோசமடைந்துவரும் பூகோள முதலாளித்துவத்தின் பொறிவு மற்றும் கொழும்பு அன்றி சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் உட்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சி நிரலில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. ஜே.வி.பி., அதன் “எமது நோக்கு” வேலைத்திட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை வணிகமயமாக்கலுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில், அது சர்வதேச நாணய நிதியத்தின் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சமிஞை காடியுள்ளது.

இலங்கைக்கு அதன் ஏற்றுமதி பொருட்களை விரிவாக்குவதற்கான போதியளவு வளங்கள் இருந்ததில்லை, ஆனால் பாரியளவிலான பூகோள புலம்பெயர் தொழில் சந்தையில் பெரும் பங்கைக் கைப்பற்றுவதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கமுடியும் என திஸநாயக்க கூட்டத்தில் கூறினார்.

என்ன தேவைப்படுகிறது என்றால் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டிற்கு அரசாங்கத்தின் செலவு அதிகரிப்புடன் உயர்ந்த திறமை கொண்ட தொழிலாளர் படையை உருவாக்குவதே ஆகும் என அவர் தொடர்ந்தார். இந்த முன்னோக்கு, “வீட்டு பணியாளர்கள் போன்ற குறைந்த வருவாய் பெறும் தொழில்களை தக்கவைப்பதை இலக்காகக் கொண்டதல்ல” ஆனால், பிற நாடுகளுடன் போட்டியிடுவதற்கு மிக உயர்ந்த ஊதியம் பெறும் தொழில்தேர்ச்சி பெற்றவர்களை ஏற்றுமதி செய்யவதாகும் என அவர் வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைவர், இலங்கையின் வருமான வேறுபாட்டின் ஆபத்தினை பற்றியும் தனது பெரும் வர்த்தக பார்வையாளர்களை எச்சரித்தார். மக்கள் தொகையில் 43 சதவிகிதத்தினர் நாளொன்றுக்கு வெறும் 2 டாலர்களில் வாழத் தள்ளப்பட்டுனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த கருத்துக்கள், இந்த சமூக துருவப்படுத்தலால் உருவாக்கபட்ட எந்தவொரு எதிர்கால சமூக மற்றும் அரசியல் வெடிப்புகளை ஒடுக்குவதற்கு இந்த கட்சி செயற்படும் என்பதை பெரும் வணிகர்களுக்கு உறுதியளிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.

2020 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜே.வி.பி. டசின் கணக்கான கூட்டங்களை நடத்தினாலும், அது பெரு வணிகத்துக்கு கொடுத்த உத்தரவாதங்கள் பற்றி மௌனம் காக்கின்றது. உண்மையில், “கிராமத்தை உயர்த்து-நாட்டிற்கு பலம்” என்ற சுலோகத்தின் கீழ், ஜே.வி.பி. முன்னெடுக்கும் பிரச்சாரம், முந்தைய இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் பற்றிய மற்றும் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் பாரியளவிலான நிதி மோசடிகள் பற்றிய மக்கள் நலவாத கண்டனைகளை உள்ளடகியதாகும்.

“எங்கள் நாட்டு அரசியல், இலாபமீட்டும் வணிகமாக மாறியுள்ளது. பதிலாக, (எதிர்கால ஜேவிபி அரசாங்கம்) அரசியலை பொதுச் சேவையாக மாற்றுவதற்கு நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” என்று திஸநாயக்க கூட்டமொன்றில் கூறியுள்ளார். “ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் ஓன்று சேர முடியும், எங்கள் அரசாங்கத்தின் கீழ், ஆட்சியாளர்கள் மக்கள் பெறும் ஆதாயத்தினை விட மேலதிகமான இலாபத்தினை பெற்றுகொள்ளமாட்டர்கள் என்பதை எங்களால் உறுதியளிக்க முடியும்” என்று இன்னொரு நிகழ்வில் அவர் வாய்ச்சவடாலாக அறிவித்தார்.

தன்னை ஒரு “சுத்தமான கட்சியாக’’ காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி.யின் ஊழல் எதிர்ப்பு வாய்ச்சவடால், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பினை பாராளுமன்ற பாதையில் திசைதிருப்பிவிட்டு முடக்கி வைக்கும் ஒரு முயசியே ஆகும். திஸநாயக்க சமீபத்தில் சிலோன் டுடே பத்திரிகையிடம் பேசும்போது, தனது கட்சி “தொழில்தேர்ந்தவர்கள், ஊடகவியலாளளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய ஒரு சிவில் அமைப்புகளுடன் ஒரு பரந்த முன்னணியினை அமைத்து வருகின்றது எனக் கூறினார்.

ஜே.வே.பி. தலைவர்கள் தொழிலாளர்களும் ஏழைகளும் இளைஞர்களும் அரசியல் மறதி நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றனர். ஸ்தாபக கட்சிகள் மற்றும் குழுக்களுடன் எண்ணற்ற “கூட்டணிகளை” அமைப்பதில் பேர்போன திஸநாயக்கவின் கட்சி, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொண்ட பரந்த தாக்குதல்களுக்கு நேரடி பொறுப்பாளியாகும்.

2015 தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவின் “நல்லாட்சி அரசாங்க இயக்கம்” என்றழைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, ஆட்சி மாற்றத்திற்கான பிரசாரத்தில் ஜே.வி.பி. முக்கிய பங்கினை ஆற்றியது. இதற்கும் ஊழலுக்கு முடிவு கட்டுவதற்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய நடவடிக்கைகளுடன் கொழும்பை இணைப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் ஒன்றாகும்.

சிறிசேன தெரிவு செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னர், இலங்கை அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குவதற்கான தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபிப்பதற்கு அழைப்பு விடுத்து திஸநாயக்க ஒரு அறிக்கையினை வெளியிட்டார். ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பட்டியலிட்ட ஜே.வி.பி., நிறைவேற்று தேசிய சபையானது “ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ்” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

திஸநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடனும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனகள் மற்றும் போலி இடதுகளுடன் கூட்டாக இந்த புதிய நிறுவனத்தில் சேர்ந்து, நான்கு மாதங்களுக்கு தீர்க்கமான அரசியல் ஆதரவை வழங்கியதுடன் புதிய அமெரிக்க-சார்பு ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கு உதவியது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எமாற்றுவதற்காக, ஜே.வி.பி. இன்னமும் மார்க்சிசம் மற்றும் சோசலிசம் பற்றிய போலி விசுவாசத்தை காட்டி வருகின்றது. அதன் நியமுவா பத்திரிகை, கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பக்கத்திலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அல்லது லெனினின் மேற்கோள்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சீனா, வியட்நாம், லாவோஸ், வட கொரியா மற்றும் கியூபாவும் “சோசலிச நாடுகள்” என்றும் முதலாளித்துவதிற்கான “மாற்றீடுகளை” அபிவிருத்தி செய்துள்ளன என்றும் கேலிக் கூத்தான முறையில் கூறிக்கொள்கின்றது. இந்த நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரங்கள் ஆகும். இவற்றை பழைய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எச்சங்களே ஆட்சி செய்கின்றன. இந்த அரசுகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்பு சுரண்டல் களமாக தமது நாடுகளை மாற்ற்யுள்ளன.

இவை “சோசலிச” நாடுகள் எனக் கூறுவது, வெறும் அரசியல் குழப்பத்தை விதைப்பதற்கானது மட்டுமல்ல, மாறாக ஜே.வி.பி இது போல் இலாபத்தை பெருக்குவதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதோடு தாம் சுரண்டப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கும் என்ற செய்தியை சர்வதேச மூலதனத்துக்கும் பெருவணிகங்களுக்கும் அனுப்புகிறது.