ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spanish king demands new crackdown in Catalonia

ஸ்பானிய மன்னர் கட்டலோனியாவில் புதிய ஒடுக்குமுறைக்குக் கோருகிறார்

By Alex Lantier
4 October 2017

நேற்றிரவு கட்டலோனை ஸ்பெயினின் சட்டவிரோத பிராந்தியம் என்று முத்திரை குத்தும் ஒரு திகிலூட்டும் உரையில், மன்னர் நான்காம் பிலிப் ஞாயிறன்று நடந்த கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை கண்டனம் செய்ததோடு அந்தப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை ஸ்பானிய அரசு  கைப்பற்ற வேண்டும் என்றும் கோரினார்.

ஸ்பெயினின் 1978 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான உருமாற்றத்திற்கு சற்றே பின்னர், 1981 பிப்ரவரி 23 இராணுவக் கவிழ்ப்புக்கு பின்னர்,  ஸ்பானிய மன்னர் பொது விவகாரங்களில் பகிரங்கமாகத் தலையீடு செய்வது முன்கண்டிராததாகும். போலிஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு கருத்துவாக்கெடுப்பை தடுத்துநிறுத்த முடியாத பின்னர், கட்டலோனியாவை துஷ்டராகக் காட்டுகின்ற ஒரு நச்சுத்தனமான ஊடகப் பிரச்சாரத்தின் மத்தியில் வந்திருக்கும் மன்னரின் உரை, கட்டலோனியாவுக்கு எதிராக இன்னும் பரந்த ஒரு இராணுவ-போலிஸ் தலையீட்டுக்கான திட்டங்கள் செயலூக்கத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பதன் அறிகுறியாகும்.

“கட்டலோனியாவின் மற்றும் ஸ்பெயினின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதற்காக” கட்டலான் அதிகாரிகள் மீது தாக்கிய நான்காம் பிலிப், அவர்கள் “அரசின் அதிகாரங்களுக்கு சகிக்கமுடியாத விசுவாசமின்மையைக் காட்டுகின்ற விதமாய், சட்டபூர்வமாக மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்டிருந்த நியமங்களை சிறிது சிறிதாக பலவீனப்படுத்தி விட்டிருந்தனர். ... இந்த அதிகாரிகள் ஒரு தெளிவான மற்றும் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில், தங்களை சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் சுற்றுவரம்புக்கு வெளியே நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.”

அவர் தொடர்ந்து கூறினார், இந்த நிலைமையில் “அரசியல் சட்ட ஒழுங்கையும் ஸ்தாபனங்களின் இயல்பான செயல்பாட்டையும் உறுதிசெய்ய வேண்டியது அரசில் இருக்கின்ற சட்டபூர்வ அதிகாரங்களது பொறுப்பாகும்.”

கட்டலோனியாவுக்கு எதிரான ஒரு புதுப்பிக்கப்பட்ட தாக்குதலுக்கான மன்னரின் உரை, பொய்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. உண்மையில், கட்டலோனியாவின் மக்களல்ல, ஸ்பானிய ஆளும் உயரடுக்கு தான், உடல்பலத்தை கொண்ட பயங்கரத்தின் மூலமாக கருத்துவாக்கெடுப்பைத் தடுத்து நிறுத்தும் ஒரு தோல்விகண்ட முயற்சியில், தீயணைப்புபடை வீரர்களையும், கட்டலான் போலிசையும், இன்னும் வாக்களிக்க முயன்ற வயதான பெண்களையும் கூட கொடூரமாகத் தாக்கிய 16,000 சிவில் கார்ட் போலிசை அனுப்பி, ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கியிருந்தது.

அமைதியான வாக்காளர்கள் மீது கொடூரமாக அடக்குமுறை ஏவப்பட்டதை காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவி உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. யதார்த்தத்தை தலைகீழாகத் திருப்பிக் காட்டுகின்ற நான்காம் பிலிப் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களை வன்முறைக்குக் காரணமென்கிறார் என்றால், அது ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு புதிய தாக்குதலுக்கு வாதிடுவதற்காகவே ஆகும்.

சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆகிய விவகாரங்களை பொறுத்தவரை, ஸ்பானிய அரசபீடத்துக்கு யாருக்கும் உபதேசம் செய்யும் அருகதை கிடையாது. ஸ்பெயினின் இரண்டாவது குடியரசை இரத்தத்தில் மூழ்கடித்த பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான 1936 பாசிச ஆட்சிக்கவிழ்ப்புக்குத் தான் -இந்த உள்நாட்டுப் போரில் பிராங்கோவின் பிரதான எதிரியாக இருந்தது தொழிலாள வர்க்கம்- அரசபீடம் தனது அதிகாரத்துக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மையாகும். 1939 இல் ஸ்பெயின் முழுமையிலும் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவிய பின்னர், 1947 இல் பிராங்கோ அரசபீடத்தை முறையாக மறுநிறுவல் செய்து, நான்காம் பிலிப்பின் தந்தையான முதலாம் யுவான் கார்லோஸை, அரசபீட வாரிசாக கைப்பட தெரிந்தெடுத்தார்.

1978 நாடாளுமன்ற உருமாற்றத்தை மேற்பார்வை செய்த யுவான் கார்லோஸ், 1981 இல் ஒரு தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை நடத்திய பாசிச விசுவாசிகளைக் கண்டனம் செய்தார். ஆனால், அவரது மகனின் உரை, உருமாற்றத்திற்கு பிந்தைய ஆட்சியும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளாலும் போரினாலும் மற்றும் குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஸ்பெயினை நாசம் செய்திருக்கும் பாரிய வேலைவாய்ப்பின்மையாலும் மதிப்பிழந்து விட்டிருப்பதற்குப் பின்னர் வந்திருக்கிறது. ஸ்பானிய ஆட்சி, சர்வாதிகாரத்திற்கும் உள்நாட்டுப் போருக்குமான விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பில் வாக்களித்த மில்லியன் கணக்கான மக்கள் தங்களை ஸ்பானிய அரசின் பாதுகாப்பிற்கு வெளியில் நிறுத்திக் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்று நான்காம் பிலிப் கிட்டத்தட்ட அறிவித்திருக்கிறார்.

“ஸ்பெயினின் ஐக்கியம் மற்றும் நிரந்தரம்” குறித்து திட்டவட்டம் செய்த அவர் கட்டலோனியாவில், “பிராந்திய அதிகாரிகளது நடத்தை குறித்த பல கவலைகளும் ஆழமான அக்கறைகளும் இருக்கலாம். அவ்வாறாய் கருதுபவர்களுக்கு நான் சொல்கிறேன், நீங்கள் தனியாக இல்லை, இருக்கவும் மாட்டீர்கள். மற்ற ஸ்பானிய மக்களின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கிறது, எங்களது சட்டத்தின் ஆட்சி உங்களது சுதந்திரங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் என்ற முழு உத்தரவாதம் இருக்கிறது” என்று கூறினார். ஆனால் கட்டலான் பிராந்திய அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பவர்களைப் பற்றி அவர் எதுவுமே கூறவில்லை.

ஸ்பானிய ஊடகங்கள் நான்காம் பிலிப்பின் கருத்துக்களுக்கு, பிரதமர் மரியானோ ரஹோயின் வலது-சாரி மக்கள் கட்சி (PP) அரசாங்கம் ஸ்பானிய அரசியல்சட்டத்தின் பிரிவு 155 ஐ கொண்டுவர வேண்டும் என்று கோருகின்ற ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தைக் கொண்டு எதிர்வினையாற்றின. இந்த பிரிவானது கட்டலோனியாவுக்கு படைகளை அனுப்புவதற்கும் அங்கிருக்கும் பிராந்திய அரசாங்கத்தை இடைநீக்கம் செய்வதற்கும், அதன் நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்களைக் கைப்பற்றுவதற்கும் மாட்ரிட்டை அனுமதிக்கும், அப்பிராந்தியத்தில் ஒரு இராணுவ-போலிஸ் ஆக்கிரமிப்புக்கு பாதையை திறந்து விடும்.

“உங்களால் 155 குறித்து முடிவெடுக்க முடியவில்லை என்றால், வெளியில் போங்கள்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், ரஹோய் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் அல்லது வெளியில் செல்ல வேண்டும் என்று El Español பத்திரிகை கோரியது. அது எழுதியது, “அல்பேர்ட்டோ ரிவேரா மட்டும் தான்” -வலதுசாரி குடிமக்கள் கட்சியின் தலைவர்- “மாட்டின் கொம்பைப் பிடித்து அடக்க விருப்பத்துடன் இருக்கிறார், கட்டலான் தன்னாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து தேர்தலுக்கு அழைப்பு விட அரசியல்சட்டத்தின் 155வது பிரிவை அமல்படுத்துவதற்கு ஆலோசனை சொல்கிறார்.... ரஹோய் அதற்குத் தயாரில்லை என்றால், அவர் அகன்று இன்னொருவருக்கு அந்த இடத்தை விட்டுவிடுவது தான் அவர் செய்யக் கூடிய உகந்த செயலாகும்.”

அதேபோல, El Mundo அதன் இன்றைய தலையங்கத்தில் எழுதுகிறது, “ரஹோய், அவரது பதவியின் படியும் கட்டலோனியாவில் மீறப்பட்டிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எடுத்துக் கொண்ட பிரமாணத்தின் படியும், தோல்விகாண இயலாதவராவர். புய்க்டெமொன்ட் மற்றும் அவரது கூட்டாளிகளின் தண்டிக்கப்படாத கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர பிரிவு 155 ஐ அமல்படுத்த நேற்று நாங்கள் அவரைக் கேட்டோம். அந்த அவசரம் இன்று மேலும் அதி அவசரமாகிறது. மன்னரின் செய்தி இதற்கு அவரை அழைக்கிறது.”

ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சிக்கு (PSOE) நெருக்கமான முக்கிய பத்திரிகையான El País, பிரிவு 155 ஐ கொண்டுவர வழிமொழியும் பேராசிரியர் Javier García Fernández இன் ஒரு பத்தியைத் தாங்கி நிற்கிறது. இந்தப் பிரிவு “பிராந்திய நெருக்கடிகளைக் கையாளுவதற்கான ஒரு சட்டபூர்வமான சாதனமாக இருக்கையில், அதனை மோசமான ஒன்றாகக் காட்டுவதற்கு” அனுமதிக்கின்றவர்களை பெர்னான்டேஸ் விமர்சனம் செய்தார்.

மாட்ரிட்டில் இப்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறை குறித்து ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் எச்சரிக்கப்படாதிருக்கிறது என்பது தான் இப்போதைய பெரும் அபாயமாகும். இருபதாம் நூற்றாண்டின் பாசிசம் மற்றும் உலகப் போரின் அனுபவத்தின் அடிப்படையில், ஒரு போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதற்கு தொழிலாள வர்க்கத்தில் பரந்த எதிர்ப்பு இருக்கிறது. இந்த எதிர்ப்பு, ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகத்திற்கு எதிரான ஒரு அரசியல்ரீதியாக சுயாதீனப்பட்ட, புரட்சிகரமான மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே அணிதிரட்டப்பட முடியும்.

ஸ்பெயினின் முக்கிய அரசியல் கட்சிகளது எதிர்வினையானது, கட்டலோனியா மீதான ஒரு புதிய ஒடுக்குமுறைக்கு, மாட்ரிட்டின் அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து எந்த ஒரு உருப்படியான எதிர்ப்பும் வரப் போவதில்லை என்பதை தெளிவாக்கியுள்ளது.

ரஹோயின் PP, ரிவேராவின் குடிமக்கள் கட்சி, மற்றும் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) அனைத்துமே மன்னரின் உரையை பாராட்டியதன் மூலம், அவை ஒரு புதிய ஒடுக்குமுறையை ஆதரிக்கும் என்பதை சமிக்கை செய்திருக்கின்றன. ரிவேரா ஸ்பெயினுக்கு இப்போது அவசியமாக இருக்கும் “நம்பிக்கையையும் தலைமையையும்” அளித்ததற்காக மன்னரை பாராட்டினார், PP இன் ஊடகப் பிரிவின் துணைச் செயலரான பப்லோ கசடோ, “ஸ்பெயினின் ஒற்றுமை, சகவாழ்வு, சட்டமுறைமை, மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியை” உத்தரவாதம் செய்ததற்காக நான்காம் பிலிப்பைப் புகழ்ந்தார்.

ஸ்தாபன உறவுகளுக்கான அதன் செயலர் அல்போன்ஸா ரோடரிக் கோமெஸ் டி செலிஸ் மூலம், PSOE, மன்னரின் கருத்துக்கள் “ஒற்றுமைக்கும் புரிதலுக்குமான ஒரு அழைப்பு” என்று கூறிப் பாராட்டியது. PSOE இன் மற்ற நிர்வாகிகள் El Diario யிடம் கூறுகையில், டி செலிஸ் கூறியது PSOE இன் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்றபோதினும், PSOE முன்வைக்கும் ஆலோசனையாக சொல்லப்படுகின்ற கட்டலான் பிராந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே மன்னர் அழைத்திருந்தார் என்பது தெளிவு என்றனர். “நாம் மன்னரை ஆதரிக்கிறோம் என்றால், நாம் இனியும் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்பது தெளிவு” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கட்டலான் தேசியவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிப்பதில், தன்னுடன் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்வதன் மூலம் PSOEக்கு இது ஒரு அரசியல் மறைப்பை வழங்கி வந்த பொடேமாஸ் (Podemos) கட்சி, கட்டலோனியாவுக்கு எதிரான ஒரு புதிய போலிஸ் தாக்குதல் குறித்த மன்னரின் மிரட்டலுக்குப் பதிலிறுப்பாக கையாலாகாத மற்றும் மெத்தனமான புகார்களைப் பதிலிறுத்தது. பொடேமாஸ் இரண்டாமிடத் தலைவரான Íñigo Errejón எழுதினார், “தீர்வின் பாகமாக இருக்கக் கிடைத்த வாய்ப்பை மன்னர் தொலைத்து விட்டார். பேச்சுவார்த்தைக்கான ஒரு அழைப்போ அல்லது ஆலோசனையோ அங்கே இல்லை. அது என்னை கவலைக்குள் ஆழ்த்துகிறது.”

முதலாளித்துவ தேசியவாதத்தின் ஒரு வடிவமான கட்டலான் பிரிவினைவாத அரசியல், உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு எந்த முன்னோக்கிய வழியையும் வழங்கபோவதில்லை. ஒரு சோசலிச முன்னோக்கைச் சூழ்ந்து உலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இது சாத்தியமாகக் கூடியதாகும்.

ஆயினும் அத்தகையதொரு போராட்டமானது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஸ்பானிய அரசால் முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ/போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு சளைக்காத எதிர்ப்புடனேயே முன்னேற முடியும்.