ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US defence secretary calls on military to be ready for war against North Korea

வட கொரியாவிற்கு எதிரான போருக்கு தயாராக இருக்க இராணுவத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலர் அழைப்பு விடுக்கிறார்

By Peter Symonds
10 October 2017

வட கொரியாவுடனான போர் குறித்த அமெரிக்காவின் முன்னேறிய தயாரிப்புகளை அடிக்கோடிட்டு குறிப்பிடுகையில் பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் நேற்று, ஆயுதப் படைகள், “தேவைப்பட்டால், ஜனாதிபதி செயல்படுத்தும் வகையில் இராணுவத் தெரிவுகளை நாம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவித்தார்.

தயார்நிலை கட்டமைவு குறித்த அமெரிக்க இராணுவ விளக்க அமைப்புக்கு (Association of the US Army Exposition on Building Readiness) மாட்டிஸ் வழங்கிய குறிப்புகள், ட்ரம்ப், மாட்டிஸ் உட்பட அவரது உயர்மட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன் கடந்த வியாழனன்று நடத்திய கூட்டத்தின் போது விடுத்த அறிவுறுத்தல்களை நேரடியாக எதிரொலித்தன. “தேவைப்படும் போது, மிக உயர்ந்த வேகத்திலானதொரு பரந்தளவிலான இராணுவத் தெரிவுகளை எனக்கு நீங்கள் வழங்க வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

“அமெரிக்க இராணுவம் தயாராக இருக்க வேண்டும்” என பாதுகாப்பு செயலர் நேற்று வலியுறுத்தினார். மேலும், மிக சமீப காலத்தில் மற்றொரு பேரழிவுகர மோதலுக்குள் இராணுவம் விரைவில் தள்ளப்படலாம் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக, அவரது இராணுவ பார்வையாளர்களை, 1950-53 இல் அமெரிக்க தலைமையிலான இரத்தந்தோய்ந்த கொரிய போரின் வரலாற்றை விளக்கும் T.R. Fehrenbach இன் “This Kind of War” ஐ படிக்க வேண்டுமென குறிப்பாக வலியுறுத்தினார்.

இராணுவம் குறித்து என்ன திட்டமிடப்பட்டு வருகிறது, மேலும் அதற்கு என்ன தேவைப்படும் என்பதைப் பற்றி அச்சுறுத்தும் அறிகுறியுடன் குறிப்பிடுகையில் மாட்டிஸ் Fehrenbach ஐ மேற்கோளிட்டார்: “நீங்கள் ஒரு தேசத்தை சுற்றி எப்போதும் பறக்கலாம், நீங்கள் அதன்மீது குண்டுகளை வீசலாம், அதை சிதறடிக்கலாம், அதை தூள்தூளாக்கலாம், மேலும் சுத்தமாக அதன் கதையை முடிக்கலாம். ஆனால் நீங்கள் அதை பாதுகாக்க விரும்பினால்…. உங்களது இளம் தலைமுறையினரை சேறுகளில் இறக்கி, ரோமப் படைகள் களத்தில் இறங்கி செயலாற்றியது போன்று நீங்களும் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.”

அதே இராணுவ கூட்டத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், பணியாளர்களின் அமெரிக்க படைத் தலைவர் ஜெனரல் மார்க் மில்லே, களத்தில் இறங்க இராணுவம் தயாராகவுள்ளது என்றும், நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்து செய்தி வெளியிட்டார். இதற்கு காலவரையறை எதுவும் இல்லை. மேலும் முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும், அதைப் பற்றி எந்தவொரு கேள்விக்கும் இங்கு இடமில்லை” எனவும் தெரிவித்தார்.

மாட்டிஸை போன்று, மில்லேயும் வட கொரியா மீதான போருக்கு என்ன தயாராக உள்ளது என்பது குறித்து எச்சரித்தார்: “இங்கே நல்ல, எளிதான, ஆபத்து இல்லாத தெரிவுகள் எதுவுமில்லை. இது அசாதாரணமான கஷ்டமானது, அசாதாரணமான அபாயமானது. யாரும் இதை குறைத்து மதிப்பிட முடியாது.”

மாட்டிஸ் தனது கருத்துக்களில், “வட கொரியாவை (போரை நோக்கிய) இந்த பாதையில் இருந்து திருப்ப முயலும் இராஜதந்திர தலைமையிலான, பொருளாதார ரீதியான தடைகளை மீறி ஒப்புதலளிக்கும் முயற்சியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டுள்ளதை பராமரித்தார்.

இருப்பினும், ஜனாதிபதி ட்ரம்ப், வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை பலமுறை வெளிப்படையாக நிராகரித்ததோடு, கடந்த வாரம், பியோங்யாங் உடனான பேச்சுவார்த்தைகளை ஒழுங்குசெய்வதில் தேசிய பாதுகாப்பு செயலர் றெக்ஸ் ரில்லர்சன் “அவரது நேரத்தை வீணடிக்கிறார்” என அறிவித்தார்.

வட கொரியாவுடன், ஒட்டுமொத்த அழிவுகர போர் என்ற “ஒரேயொரு விடயம் மட்டும் தான் வேலை செய்யும்,” என்று ஞாயிறன்று ட்ரம்ப் அச்சுறுத்தும் வகையில் டவீட் செய்ததை நேற்று எதிரொலித்தார். திங்களன்று, அவர் மேலும் ட்வீட் செய்தார்: “25 ஆண்டுகளாக எங்களது நாடு, வட கொரியாவுடன் பில்லியன் கணக்கிலான டாலர்களை இழந்து, ஒன்றையும் பெற்றுக்கொள்ளாத வெற்றிபெறாத தொடர்பையே கொண்டுள்ளது. கொள்கை எதுவும் வேலை செய்யவில்லையே?”

ட்ரம்பின், பண்படாத, அறியாமை நிறைந்த மற்றும் அச்சமூட்டும் அச்சுறுத்தல்கள் குறித்து, பியோங்யாங் ஆட்சியின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் மூலமாக போருக்கான ஒரு பிரச்சார கும்பலாக மீண்டும் செயல்படுகின்ற இணக்கமான அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களில் குறிப்பிடத்தக்க எதிர்ப்போ அல்லது விமர்சனமோ எழவில்லை. உலகிற்கு உண்மையான அச்சுறுத்தலாக இருப்பது வட கொரியாவோ அல்லது அதன் மட்டுப்படுத்தப்பட்ட அணுஆயுத படைக்களமோ அல்ல, மாறாக அனைத்து முக்கிய அணுஆயுத சக்திகளையும் போருக்குள் இழுத்துவிடக்கூடிய வகையில் போரின் விளிம்பில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக, அடுத்தடுத்த அமெரிக்க அரசாங்கங்கள், பியோங்யாங்கிற்கு எதிரான தெளிவற்ற விரோதப் போக்குடனான கொள்கையை பின்பற்றி வந்துள்ளதோடு, நல்ல நம்பிக்கைக்குரிய பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. 1994 இல், ஜனாதிபதி கிளின்டன் வட கொரியாவிற்கு எதிராக முழுமையான போர் ஒன்றைத் தொடங்கும் நிலையில் தீவிரமாக இருந்தார். போரின் முதல் மூன்று மாத காலத்திலேயே பத்தாயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ இழப்புக்களும், கிட்டத்தட்ட அரை மில்லியன் கணக்கிலான தென் கொரிய இராணுவ இழப்புக்களும் இருக்கும் என அவரது தளபதிகள் தெளவுபடுத்தியபோது, கடைசி நேரத்தில் போர் தொடுப்பதிலிருந்து பின்வாங்கினார்.

கிளின்டன் நிர்வாகம், வட கொரியாவுடன் அவசரமாக மேற்கொண்ட 1994 உடன்படிக்கைக்குட்பட்ட கட்டமைவின் விதிமுறைகளை ஒருபோதும் கடைபிடித்தது இல்லை என்பதோடு, அடுத்துவந்த புஷ் நிர்வாகத்தால் விரைவாக நிராகரிக்கப்பட்டது. அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் சிக்கியிருந்த நிலையில், பியோங்யாங் உடன் 2007 அணுஆயுத பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து புஷ் தானே பேச்சுவார்த்தை நடத்தினார். பியோங்யாங் ஆட்சியில் ஒருதலைப்பட்சமாக ஒரு புதிய, இன்னும் ஊடுருவலான ஆய்வை கோரும் உடன்படிக்கையை அவர் திறம்பட சேதப்படுத்தினார். ஒபாமாவோ பேச்சுவார்த்தைகளை மறுசீரமைக்க ஒருபோதும் முயலவில்லை.

வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு பியோங்யாங்கின் முழுமையான சரணடைதல் போன்ற எதுவும் அமெரிக்க போர் உந்துதலை தடுத்து நிறுத்தாது என்பதை வட கொரியாவை கையாள்வதில் “ஒரேயொரு விடயம் மட்டும் தான் வேலை செய்யும்” என்ற ட்ரம்பின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.

கணக்கிடமுடியாத விளைவுகளைக் கொண்டிருக்கும், வரவிருக்கும் வட கிழக்கு ஆசியப்போர், வெள்ளை மாளிகை, அத்துடன் உலகம் முழுவதிலும் உள்ள தலைநகரங்களும் உட்பட வாஷிங்டனுக்குள் பதட்டங்களை உருவாக்குகிறது.

ஒரு பரந்த மோதல் குறித்த ஆபத்து மற்றும் போர் விரோத எதிர்ப்பு மீதான வெடிப்புறும் சாத்தியம் பற்றி கவலையுற்று, மாட்டிஸும், ரில்லர்சனும் “இராணுவத் தெரிவு” என அழைக்கப்படுவதை ஆதரித்தாலும் கூட, இராஜதந்திர வழிவகைகளை முழுமையாக பயன்படுத்த வலியுறுத்தினர்.

அடிப்படையில் வட கொரியா மீதான போரை எதிர்க்காத ஏனைய நீண்டகால அரசியல் ஸ்தாபகத்தின் பிரமுகர்கள் எவரும் இதேபோன்ற கவலையையே வெளிப்படுத்தினர்.

CNN இல் நேற்று, முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர், ட்ரம்பின் அறிக்கைகளை வட கொரியா, “போருக்கானதொரு அறிவிப்பாகவோ அல்லது குறைந்தபட்சம் அச்சுறுத்தலாகவோ புரிந்து கொள்ளக் கூடும்” என்பது குறித்து அவர் “அமைதியாக” இருக்க வேண்டுமென தெரிவித்தார். ட்ரம்பின் “போர்குணமிக்க வாய்ச்சவடால்” பியோங்யாங்கை பதிலடி கொடுக்க தூண்டும் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார்.

திங்களன்று சிட்னியில் ஒரு சர்வதேச பார் அசோசியேஷன் மாநாட்டில் முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் பேசுகையில், வட கொரியா மீதான அமெரிக்காவின் முன்கூட்டிய தாக்குதல் பேரழிவுகரமான போரைத் தூண்டும் ஒரு “பெரிய தவறாக” இருக்கும் என குறிப்பிட்டார். “ட்வீட் செய்வது எந்த கட்டத்தில் ஆத்திரமூட்டுவதாகவும், ஒரு மிகப்பரந்த மோதலுக்கு இட்டுச்செல்லும் ஒரு நிகழ்வுக்கான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் மாறும் என்பது தெரியுமா?” என கேட்டார்.

ட்ரம்பின் ஆக்கிரோஷமான ட்வீட்களை அடுத்து, ரஷ்யாவும், சீனாவும் நேற்று, அனைத்து தரப்பினரும் பின்வாங்க வேண்டுமென அழைப்பு விடுத்தன. “நிலைமையை மிக மோசமடையச் செய்யும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், தவிர்க்கவும்” அனைத்து கட்சிகளிடமும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் முறையிட்டார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிலைமை மிகமிக சிக்கலானதாகவும், தீவிரமானதாகவும் உள்ளது என விவரித்தார். இரு நாடுகளும் வட கொரிய அணுஆயுத திட்டங்களை எதிர்க்கின்ற போதிலும், அதன் நுழைவாயிலில் ஒரு பெரும் போர் நிகழவிருப்பதை விரும்பவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மோதலுக்கு தயாராகி வருகின்றன. தென் கொரியாவின் Hankyoreh பத்திரிகை கடந்த வாரம், அமெரிக்க ரொனால்ட் ரீகன் தலைமையிலான விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் குழு, அக்டோபர் மத்தியில் “அதிதீவிர கூட்டுப் பயிற்சிகளுக்காக” தென் கொரிய போர்க்கப்பல்களுடன் இணையும் என்று அறிவித்தது. ஒரு வார கால இராணுவ பயிற்சிகளில் பங்கேற்க இந்த மாத கடைசியில் ஆஸ்திரேலியா, தென் கொரியாவிற்கு இரண்டு கடற்படை போர் விமானங்களை அனுப்புவதாக கூறப்படுகிறது.

பிரிட்டனின் Daily Mail பத்திரிகை, வட கிழக்கு ஆசியாவில் ஒரு அமெரிக்க போருக்கு கடற்படையின் புதிய விமானந்தாங்கி கப்பலான HMS Queen Elizabeth ஐயும் மற்றும் ஏனைய போர்க்கப்பல்களையும் அனுப்புவதில் ஈடுபடக்கூடிய போர் திட்டங்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் வகுத்து வருவதாக அறிவித்தது.