ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid Catalan crisis, Madrid prepares military rule across Spain

கட்டலான் நெருக்கடியின் மத்தியில், ஸ்பெயின் எங்கிலுமான இராணுவ ஆட்சிக்கு மாட்ரிட் தயாரிப்பு செய்கிறது

By Alejandro López
6 October 2017

ஸ்பானிய அரசியல் ஸ்தாபகமானது கட்டலோனியாவில் எவ்வாறு பிரிவினைவாத இயக்கத்தை நசுக்குவது என்றும் ஒட்டுமொத்தமாய் நாடெங்கிலும் எவ்வாறு இராணுவ ஆட்சியை நிறுவுவது என்றும் தனது தெரிவுகளை பகிரங்கமாய் விவாதித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மரியானோ ரஹோயின் கீழான ஸ்பெயினின் சிறுபான்மை மக்கள் கட்சி (PP) அரசாங்கமானது, கட்டலானின் பிராந்திய தன்னாட்சியை நிறுத்தி வைக்கக் கூடிய அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தது. இப்போதோ, எப்போது மற்றும் எவ்வாறு இராணுவம் நிலைநிறுத்தப்படும் போலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்படும் என்பது தான் விவாதப் பொருளாகி இருக்கிறது.

சிறந்த வகையில் எப்படி இராணுவ-போலிஸ் ஆட்சியை திணிக்கலாம் என்பது குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குள்ளான விவாதம் தீவிரப்படுவதே அரசியலமைப்பு நீதிமன்றத்தின் (CC) முடிவின் பின்புலமாகும்.

மாட்ரிட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஊடகங்கள் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இன்னும் துரிதமாய் இராணுவப் படையை கொண்டு செல்லாததற்காக ரஹோயைக் கண்டனம் செய்வதில் ஏகமனதாய் இருக்கின்றன. “அரசாங்கத்தின் விளங்கமுடியாத முடக்க”த்தையும் (El Mundo), “முடிவுகள் எடுப்பதில் அரசாங்கத்தின் தாமத”த்தையும் (ABC) நேற்று தலையங்கங்கள் தாக்கின; “பிரிவினைவாதிகளது கிளர்ச்சித் திட்டங்கள் முன்னேறிக் கொண்டிருக்க ... அரசாங்கத் தரப்போ அதனை தடுத்து நிறுத்துவதற்கு எந்த முன்முயற்சியையும் பரிசீலிக்காது இருக்கிறது” (El País) மற்றும் “அரசின் முடக்கமானது அரசியல்சட்டத்தினைப் பின்பற்றும் அணியை பலவீனப்படுத்தி பிரிவினைவாதிகளுக்கு துணிச்சலூட்டியிருக்கிறது” (El Español) என்று தாக்கின.

El Confidencial தெரிவிக்கிறது, “PPயின் அங்கத்தவர்களும் ஆதரவுத்தளங்களும் கட்டலோனியாவில் ஆட்சிக்கவிழ்ப்பை தடுத்து நிறுத்துவதற்கு அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கவலையுடன் இருக்கிறார்கள், அதிலும் மன்னரின் செய்தியைக் கேட்டதன் பின்னர் இன்னும் அதிகமாய் அந்த உணர்வு இருக்கிறது என்பதை PPயின் தலைமையில் இருப்பவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். இப்போதைக்கு பிரதிநிதிகளுக்கும் செனட்டர்களுக்கும் இடையில் கட்சி ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு, ‘என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்பதை தலைவர் அறிவார்’ என்பதே உத்தியோகப்பூர்வ செய்தியாக இருக்கிறது.”

உண்மையில் இந்த “ஒழுங்கு” PPயின் முன்னாள் பிரதமரான ஜோஸ் மரியா அஸ்னார் மூலமாக முறிக்கப்பட்டிருக்கிறது. ரஹோய் “செயல்படுவதற்கும்” “எட்டக் கூடிய அத்தனை அரசியல்சட்ட சாதனங்களையும் பயன்படுத்துவதற்கும்” நேற்று அவர் அழைப்பு விடுத்தார். ரஹோய்க்கு “அதற்கான உத்வேகமோ அல்லது துணிச்சலோ” இல்லையென்றால் அவர், பிரிவினைவாதிகளுக்கு “எந்த அரசாங்கம் முகம் கொடுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் சாத்தியத்தை ஸ்பெயின் மக்களுக்கு வழங்குவதற்கு” தேர்தலுக்கு அழைப்பு விடவேண்டும் என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஒரு பிராந்திய அரசாங்கம் “ஸ்பெயினின் பொது நலன்களை தீவிரமாகப் பாதிக்கின்ற வகையிலான விதத்தில் செயல்படுமாயின்” பிரயோகிக்கப்படக் கூடிய ஸ்பானிய அரசியல்சட்டத்தின் பிரிவு 155 தான் பிரதானமாக விவாதிக்கப்படுகின்ற பொறிமுறையாகும். இதுவரை ஒருபோதும் பிரயோகிக்கப்பட்டிராத இந்தப் பிரிவானது, மாட்ரிட்டில் இருக்கும் மத்திய அரசாங்கம் ஒரு பிராந்திய அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு அனுமதிக்கிறது.

கட்டலோனியாவில் 16,000 போலிஸ் நிறுத்தப்பட்டும் சென்ற ஞாயிறன்று நடந்த கருத்துவாக்கெடுப்பை முழுமையாக முடக்குவதில் அது தோல்வியடைந்த நிலையில் —மொத்தம் 2,315 வாக்குச் சாவடிகளில் 79 ஐ மட்டுமே போலிசால் மூட முடிந்தது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது— இராணுவ மற்றும் இரத்தக்களரியான ஒடுக்குமுறைக்குத் திரும்பாமல் இத்தகைய ஒரு நடவடிக்கையானது அமல்படுத்தப்பட முடியாது.

இத்தகைய ஒரு நடவடிக்கை கட்டலோனியாவிலும் மற்றும் ஸ்பெயின் எங்கிலும் ஒரு சமூக வெடிப்புக்கு தொடக்கமளித்து விடும் என்ற அச்சத்தின் காரணத்தால் கடந்த காலத்தில் இந்த நடவடிக்கை சிந்திக்கப்படாததாக இருந்து வந்தது, இப்போது வலது-சாரி ஊடகங்கள் இத்தகைய ஒரு முடிவுக்கு ஆத்திரமூட்டுகின்ற வகையில் அழைப்பு விடுக்கின்றன. பழமைவாத ABC இல் கருத்துக் கட்டுரை எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டதைப் போல “இது வீதிகளில் வன்முறைக்கு இட்டுச் செல்லும் ... ஸ்பெயின் எங்கிலும் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கைதுகள், இடைநீக்கங்கள் மற்றும் பொதுப் பதவிகளில் இருந்தான தகுதிநீக்கங்கள் மற்றும் நசுக்கப்படவிருக்கும் மூர்க்கமான வீதிக் கிளர்ச்சிகள் ஆகியவற்றில் பங்குபற்றுவதற்கு தங்களை மனரீதியாகத் தயார் செய்தாக வேண்டும்.”

இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட சில நாட்களின் பின்னர், ABC இப்போது பிரிவு 155 ஐ கொண்டுவருவதற்கான காலமும் கடந்து விட்டதைக் காண்கிறது. “சரியான காலத்தில் அமல்படுத்தப்படும்போது மட்டுமே இந்தப் பிரிவு பயனளிப்பதாகும்” என்று ABC நேற்று எழுதியது. இப்போது அரசாங்கம் “அரசியல்சட்டம் பிரிவு 116 இல் நிறுவப்பட்டுள்ள அவசரகாலநிலையை எதிர்நோக்கக் கூடிய அரசியல்சட்ட ஷரத்துகளை” கொண்டுவர வேண்டியிருக்கிறது. 1936 இல் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆட்சிக்கவிழ்ப்பின் பக்கம் நின்ற ABC, ஸ்பெயினில் மறுபடியும் அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

116 ஆம் பிரிவானது, உஷார் நிலை, அவசரகாலநிலை மற்றும் முற்றுகை நிலை (இராணுவச் சட்டம்) ஆகியவற்றின் பல்வேறு காட்சிநிலைகளை எடுத்துரைக்கிறது. இதில், இராணுவத்தின் நிலைநிறுத்தம் இடம்பெறுவதுடன், முன்கூட்டிய கைதுகளை தடுப்பதற்கான உரிமை, அந்தரங்கத்திற்கான உரிமை, சுதந்திர தகவல் பரிவர்த்தனைக்கான உரிமை, சுதந்திரமான தேர்தல் மற்றும் தேசியப் பிராந்தியமெங்கும் சுதந்திரமான நடமாட்டம்; சிந்தனை சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம்; தகவல்களைப் பரப்புவதற்கு அல்லது உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு உள்ள உரிமை; நீதிமன்ற நடைமுறை மூலமாக அல்லாமல் வேறுவகையில் பிரசுரங்களையும் மற்ற தகவல் வகைகளையும் பறிமுதல் செய்வதற்கான தடை; வேலைநிறுத்தத்திற்கான உரிமை; மற்றும் கூட்டுப் போராட்ட வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கான உரிமை ஆகிய ஜனநாயக உரிமைகள் நிறுத்திவைக்கப்படுவதும் அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, அரசாங்கம் “பொது ஒழுங்கை சீர்குலைக்கக் கூடிய தொழிற்துறைகள் அல்லது வணிகங்களுக்கு” எதிராக தலையீடு செய்யலாம் என்றும், அரச ஊழியர்களை அவர்களது பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யலாம் என்றும், அத்துடன் “இந்தக் காலகட்டத்தில் குற்றம் சாட்டப்படுபவர்களை [நீதிபதிகள்] தமது மனதுக்குப் படுகின்றதற்குத் தக்கவாறு, தற்காலிகமாக சிறையிலடைக்க உத்தரவிடலாம்” என்றும் அது தெரிவிக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆளும் வர்க்கமானது ஒரு இராணுவ சர்வாதிகாரத்தைத் திணிப்பதையும் தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றாண்டில் அது பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடிப் பெற்ற உரிமைகளை நிறுத்திவைப்பதையும் குறித்து பகிரங்கமாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த உரிமைகளை நிறுத்தி வைப்பதென்பது, 1939-1977 வரை பிராங்கோ ஆட்சி செய்ததைப் போல, இராணுவம் தொழிலாள வர்க்கத்தை பயமுறுத்தி வைப்பதற்குப் பயன்படுத்துகின்ற வகையில் அரசுக்கு பரந்த போலிஸ் அதிகாரங்களைக் கொண்டு ஆயுதபாணியாக்குவது என்பதாகும்.

பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு பின்னர் 2015 இல் PP மற்றும் PSOE ஆல் நிறைவேற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் பரிசீலிக்கப்பட்டு வரும் இன்னொரு நடவடிக்கையாகும். இந்தச் சட்டமானது, “தேசிய பாதுகாப்பு நலனுக்கான நிலைமை” ஒன்றை அறிவிப்பதற்கும், பாதிக்கப்பட்ட பூகோளப் பகுதியை வரையறை செய்து அந்தப் பகுதியில், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்கள், ஸ்பானிய உளவு முகமைகளின் தலைவர் மற்றும் இராணுவத்தின் தலைவர்கள் ஆகியோர் கொண்ட தேசிய பாதுகாப்புக் கவுன்சிலுடன் கூடிப் பேசி “ஒரு நிர்வாக அதிகாரியை, பொருத்தமான இடத்தில் நியமனம்” செய்வதன் மூலமாக அந்தப் பகுதியின் அதிகாரத்தை கையில் கொண்டிருப்பதற்கும் ரஹோய்க்கு அதிகாரமளிக்கிறது.

இந்தச் சட்டம் தொழிலாள வர்க்கத்தை நேரடியாக இலக்கு வைத்த 1969 இல் பிராங்கோ அறிமுகம் செய்த ஒன்றை ஒத்திருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்ததைப் போல, “இந்தச் சட்டத்திற்கான முன்னோடி தொழிலாள வர்க்கத்தின் போர்க்குண எழுச்சியை அடக்குவதற்காக பாசிச ஆட்சியால் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்பது ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும். 1970க்கும் 1979க்கும் இடையில் அது மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவின் மெட்ரோக்கள், இரயில்வேக்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் துறைமுகங்கள், அஞ்சல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மற்றும் மின்சாரத் துறை ஆகிய துறைகளில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

ஸ்பெயினில் நடைபெற்றுவருகின்ற விவாதங்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்கு பரந்த விளைவுகளைக் கொண்டதாகும். முன்னாள் துணைப் பிரதமரும் சோசலிஸ்ட் கட்சியின் நீண்டகாலப் பிரதிநிதியுமான அல்ஃபோன்சா குவேரா, கட்டலோனியாவுக்கு இராணுவத்தை அனுப்புவதற்கு ஆதரவை அறிவித்ததில் ஆச்சரியமில்லை, கூடுதலாக அவர், “பிரான்சில் இரண்டு வருடங்களாக இராணுவம் தான் வீதிகளைப் பாதுகாத்து வந்திருக்கிறது, யாரொருவரும் அதனை விவாதித்துக் கொண்டிருக்கவில்லை” -அதாவது பிரான்ஸ் ஒரு ஜனநாயக நாடா இல்லையா என்பது குறித்து- என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஸ்பெயினில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்பை தடுத்துநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தலைப்படும் என்பதான எந்தப் பிரமைகளும் அங்கே இருக்கக் கூடாது. புதன்கிழமையன்று, ஆணையத்தின் முதல் துணைத் தலைவரான ஃபிரான்ஸ் ரிம்மர்மான்ஸ், சென்ற ஞாயிறன்று நடந்த போலிஸ் வன்முறையில் 800 பேர் காயமடைந்ததைக் குறிப்பிடுகையில், “எந்த அரசாங்கமாக இருந்தாலும் சட்டத்தை நிலைநிறுத்துவது அதன் கடமையாகும், அதற்கு சில சமயங்களில் பொருத்தமான அளவில் வலுவைப் பிரயோகிப்பது அவசியமாயிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பிராங்கோவின் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இராணுவ சர்வாதிகாரத்திற்கான உந்துதலை தடுத்துநிறுத்துவதற்கு ஸ்பெயின் முழுமையிலும் உள்ள தொழிலாள வர்க்கம் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

பார்சிலோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு PPஐ கெஞ்சிக் கொண்டிருக்கின்ற -ஆனால் ரஹோய் இந்த ஆலோசனையை மறுத்து விட்டார்- பொடேமோஸின் கையாலாகாத கூக்குரல்களில் இருந்தும், அத்துடன் ஒரு பெரும் ஒடுக்குமுறை நடந்தால் அதுவே தங்கள் அரசியல் முறையீட்டை அதிகரிக்கும் என்பதான பிரிவினைவாதிகளது நம்பிக்கைகளில் இருந்தும் முழுமையான அரசியல் சுயாதீனம் இதற்கு அவசியமாயுள்ளது. இவர்கள் இராணுவ சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலை உதாசீனம் செய்து  தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கும்விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அதேசமயத்தில் PP மீதும் இராணுவத்தின் மீதும் அபாயகரமான பிரமைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.