ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As Spanish crackdown looms, France’s New Anti-capitalist Party promotes Catalan nationalism

ஸ்பானிய ஒடுக்குமுறை விஸ்வரூபம் எடுக்கையில், பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி கட்டலான் தேசியவாதத்தை ஊக்குவிக்கிறது

By Alex Lantier
10 October 2017

ஸ்பானிய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக கட்டலானின் பரந்துபட்ட மக்களை பாதுகாப்பதும் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் இராணுவ ஆட்சி அபாயத்தை எதிர்ப்பதற்காகவும் கட்டலான் மற்றும் ஸ்பானிய தொழிலாளர்கள் இடையே சாத்தியமானளவு மிகப்பெரும் ஐக்கியத்தை உருவாக்குவதுமே இன்றைய நாளின் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. கட்டலோனியாவில் அக்டோபர் 1 அன்று நடைபெற்ற ஒடுக்குமுறையானது, ஸ்பெயின் முழுமையிலும் இராணுவ சர்வாதிகாரத்திற்கான நடவடிக்கைக்கான ஒரு ஒத்திகையாக இருந்தது என்று ஸ்பெயின் எங்கிலுமான தொழிலாளர்களை எச்சரிப்பது அவசியமாயுள்ளது. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா எங்கிலும் உள்ள அத்தனை பெரிய ஏகாதிபத்திய சக்திகளாலும் ஆதரிக்கப்பட்டது, ஏனென்றால் அவையும் வெகுஜன ஒடுக்குமுறைக்கும் போலிஸ் அரசு ஆட்சிக்கும் தயாரித்து வருபவையே ஆகும்.

கட்டலான் நெருக்கடியானது பிரான்சின் பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் ஸ்பெயினில் உள்ள அதன் கூட்டாளிகளான Anticapitalistas இன் பிற்போக்குப் பாத்திரத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கட்டலோனியாவுக்கு இராணுவத்தை அனுப்புவதற்கும் ஸ்பெயின் எங்கிலும் ஒரு அவசரகாலநிலையை திணிப்பதற்கும் மாட்ரிட் தயாரிப்பு செய்கின்ற நிலையில், NPA, ஒரு தனி முதலாளித்துவ அரசை ஸ்தாபிப்பதற்கான தனது முயற்சிக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கும், கட்டலான் அரசாங்கத்தின் திவாலான கொள்கையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளுக்கு விடுக்கப்படும் தார்மீக விண்ணப்பங்களில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்படி, அது, கட்டலோனியா மற்றும் ஸ்பெயினில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூறுகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இராணுவ ஒடுக்குமுறையைக் கண்டனம் செய்கிறது. அனைத்து ஸ்பானிய துருப்புகளையும் சிவில் பாதுகாவலர்களையும் அகற்றுவதற்கு கோருகிறது, அத்துடன் கட்டலோனியாவை ஸ்பெயினுடன் பலவந்தமாக பிணைத்து வைத்திருப்பதற்கு மாட்ரிட் செய்கின்ற எந்த முயற்சியையும் எதிர்க்கிறது. இது எந்தவகையிலும், கட்டலான் பிரிவினைவாதிகளின் கொள்கைகள் அல்லது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அர்த்தப்படவில்லை.

மறுபுறத்தில் NPA, உள்நாட்டுப் போர் அபாயத்தையும் பாசிச ஸ்பானிய தேசியவாதத்தை ஸ்பானிய ஊடகங்கள் தூண்டி விடுவதையும் காணமறுக்கின்றது. மற்றும் இராணுவ ஒடுக்குமுறையை கட்டலோனியாவில் ஒரு சுயாதீனமான முதலாளித்துவ அரசைக் கட்டுகின்ற தங்களது முன்னோக்கிற்கான ஒரு வரமாக அது கிட்டத்தட்ட வரவேற்கிறது.

NPA உம் அதன் சர்வதேச இணைச்சேர்க்கைகளும் ”கட்டலான் மக்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!” என்ற ஒரு அறிக்கையில், அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பானது, பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆட்சியில் இருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான 1978 உருமாற்றத்தில் இருந்து எழுந்திருந்த ஆட்சிக்கு எதிராய் ஒரு பலத்த அடி கொடுத்திருந்ததாகக் கூறின. “1978 ஆட்சியை கட்டலோனியாவில் ஒரு பெரும் அரசியல் தோல்விக்கு” அழைத்துச் சென்றதற்காக இந்த கருத்துவாக்கெடுப்பை (இது பிரிவினைக்கு ஆதரவாக 89 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அது வெறும் 42 சதவீத மொத்த வாக்குப்பதிவின் அடிப்படையிலானதாகும்) அவை பாராட்டின.

இப்போது ஸ்பெயின் அரசரும், ஆளும் மக்கள் கட்சியும் (PP), சோசலிஸ்ட் கட்சியும் (PSOE) மற்றும் ஊடகங்களும் “கட்டலான் மக்கள் இயக்கத்தின் மீது அவதூறுகள், பொய்கள் மற்றும் சேறுபூசலின் ஒரு பிரச்சாரத்தை தொடக்கியிருக்கின்றனர்” என்று அவை எழுதுகின்றன. அவை தொடர்ந்து எழுதுகின்றன: “ஒருவர் இதைக் கணக்கில் எடுத்தாக வேண்டும்; ஸ்பானிய அரசின் (மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்) வெகுஜன வர்க்கங்களை கட்டலான் மக்களுக்கு எதிராக கிளறிவிட்டு “ஸ்பானிய தேசத்தின் ஒற்றுமை” என்ற சாக்கில் அவர்களை அச்சுறுத்துவதற்கு வசதியான கருத்துகளை போதனையளிக்க ஒரு காரணமாகின்றது. ஸ்பானிய அரசின் மக்களது கண்கள் முன்பாகவும், மற்றும் சர்வதேச மட்டத்திலும், புதிய மற்றும் இன்னும் பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதே இந்த சக்திகளது கூட்டின் இலக்காக இருக்கிறது...”

பாசிசத்தினால் சித்தாந்த நஞ்சு புகட்டப்பட்டிருப்பதாய் கூறி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை நிராகரிக்கின்ற NPA இன் பகுப்பாய்வு அவநம்பிக்கையானதும் விரக்திகொண்டதுமாகும். PPக்கு தொழிலாள வர்க்கத்தில் பாரிய எதிர்ப்பு நிலவுகிறது, PPயும் PSOE ஐப் போல, ஸ்பெயினை பொருளாதாரரீதியாக நாசம் செய்திருக்கும் பல தசாப்த கால ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளினால் மதிப்பிழந்து விட்டிருக்கிறது. தேர்தல்கள் மீண்டும் மீண்டும் ஒரு தொங்கு நாடாளுமன்றத்திற்கு இட்டுச் சென்றதன் பின்னர் ஓராண்டு கால நெருக்கடிக்குப் பின்னர் தான் 2016 இல் PP ஆல் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது.

ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட பாசிஸ்டுகள் என்பதான NPA இன் அடிக்கோல், ஒரு படுபயங்கரமான அரசியல் பொய் ஆகும். சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்டு வருகின்ற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு புறநிலைமைகள் முதிர்ச்சியடைந்துள்ளன.

அத்தகைய ஒரு அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடுவதிலும், அதன்மூலம் இயல்பாக, வலது-சாரி சக்திகளுக்கு வலுவூட்டுவதிலும் NPA உம் மற்றும் ஸ்பெயினில் உள்ள பொடேமோஸ் (Podemos) போன்ற மற்ற குட்டி-முதலாளித்துவக் கட்சிகளும் பெரும் அரசியல் பொறுப்பு வகிக்கின்றன. PP தனது மனதை மாற்றிக்கொண்டு கட்டலான் தேசியவாதிகளுடன் ஒரு அமைதியான ஏற்பாட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்தும் என்று நம்பிக்கை கொள்வதற்கு, பொடேமோஸ் ஸ்பானிய தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கிறது என்றால், NPAவும் அதன் கூட்டாளிகளும் அவர்களை கட்டலான் தேசியவாதிகளை ஆதரிப்பதற்கு ஊக்குவிக்கின்றன.

அரசு ஒடுக்குமுறையானது, கட்டலான் தேசியவாதிகளது வலது-சாரி மற்றும் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளால் இப்போது அந்நியப்பட்டிருக்கும் கட்டலான் மக்களின் பரந்த அடுக்குகளை, பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளக்கூடும் என்பதால், அரசியல்ரீதியாக அது பயனுள்ளதே என்பதாக NPA காண்கிறது. NPA எழுதுகிறது: “ஒரு தட்டுத்தடுமாறும் ஸ்தாபனரீதியான விரிசல் தொடங்கி விட்டது, இது அரசு ஒடுக்குமுறையின் பெருங்காற்றில் தீவிரப்படலைக் காண்பது நிச்சயம்.”

இந்த ஒடுக்குமுறையானது, உலகெங்குமான அரசாங்கங்களை திடுக்கிடச் செய்து அவை தங்கள் பாதையை மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளும்படி செய்யும் என்ற நம்பிக்கையில், இவர்கள் தங்கள் வாசகர்களிடம், “இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறையாண்மை நடவடிக்கையை அங்கீகரிப்பதற்கும், இறுதியில் கட்டலான் குடியரசுப் பிரகடனத்தை அல்லது சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கும் தத்தமது அரசுகளுக்கு நெருக்குதலளிக்கவும்” கேட்டுக் கொள்கிறார்கள்.

இது கட்டலான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்ததாய் இருக்கிறது. இது சூழ்நிலை குறித்த ஒரு மெத்தனமான மற்றும் தவறான மதிப்பீடு ஆகும், இது நாசகரமான பின்விளைவுகளது சாத்தியத்துடன், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நிராயுதபாணியாக்க மட்டுமே செய்யக்கூடியது. அக்டோபர் 1 போலிஸ் ஒடுக்குமுறைக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும், மற்றும் ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்சின் அரசாங்கங்களும் ஸ்பெயினின் தலைவராக ரஹோயை வழிமொழிந்து தொடர்ச்சியாக விடுத்திருக்கும் அறிக்கைகள் மூலமாக, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது அது PPக்கு ஒரு வெற்றுக்காசோலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. ஸ்பானிய சிவில் பாதுகாவலர்களும் படையினரும் கட்டலோனியாவிலும் மற்றும் அதன் அண்மைப் பிராந்தியங்களிலும் நிலைநிறுத்தப்படுகின்ற நிலையில், ஒரு ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பானது, நொருங்கிக்கொண்டிருக்கும் ஸ்பெயினில் உள்ள உருமாற்றத்திற்கு பிந்தைய ஆட்சிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு புரட்சிகர அடி அல்ல. உண்மையில், அது அந்த ஆட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அரசியல் சக்திகளால் —கட்டலான் தேசியவாதக் கட்சிகள் மற்றும் மக்கள் ஐக்கிய வேட்புக் கட்சி (CUP) போன்ற அதன் குட்டி-முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள்— அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்டலான் பிராந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இவை, குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியில் தொழிலாளர்களுக்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றிக் கொண்டிருந்தன.

மாட்ரிட், ஸ்பெயினுக்குள்ளாக ஒரு பாசிச சூழலை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு தீர்க்கமான அடி கொடுக்கப்பட்டதற்கெல்லாம் வெகு அப்பால், ஸ்பானிய இராணுவமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கட்டலோனியாவுக்கு எதிராகத் தலையிடத் தயாராக உள்ளது. ஊடகங்கள் கட்டலோனியாவைக் கண்டனம் செய்வதோடு ஸ்பெயின் எங்கிலுமான நகரங்களில் அதி-வலது ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்தபடி இருக்கின்றன,  அதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் Hymn to the Legion மற்றும் Cara al Sol போன்ற பிராங்கோவாத பாடல்களைப் பாடுகிறார்கள். அரசியல் ஸ்தாபகம் ஒரு அவசரகாலநிலையை திணிப்பது குறித்தும் ஸ்பெயினில் ஜனநாயக உரிமைகளை இரத்துச்செய்வது குறித்தும் செயலூக்கத்துடன் விவாதித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் பாசிச மற்றும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதற்கு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு ஆழமான, வரலாற்றில் வேர் கொண்ட எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் இந்த எதிர்ப்பானது, கட்டலோனியாவிலும் மற்றும் ஸ்பெயின் முழுமையிலும் அதிகாரத்தை கையில் கொண்டிருந்து வந்திருக்கின்ற ஊழலடைந்த சக்திகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தில் இருந்தும் சுயாதீனமாகவும், அதற்கான புரட்சிகர எதிர்ப்பிலும் தான் அணிதிரட்டப்பட முடியும். ICFI விளக்கியிருப்பதைப் போல, இதற்கு முதலும் முதன்மையுமாய் இருப்பது ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கில் கட்டலான் மற்றும் ஸ்பானிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான ஒரு போராட்டமே ஆகும்.

ஐரோப்பாவில் 1968-மாணவர் இயக்கத்திற்குப் பின்னர் எழுந்திருந்த வசதியான நடுத்தர வர்க்க அடுக்கு ஒன்றிற்காகப் பேசுகின்ற NPA உம் அதன் கூட்டாளிகளும் இதற்கு மாறான, ஒரு முதலாளித்துவ-ஆதரவு முன்னோக்கை முன்வைக்கின்றன. ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் பாசிசத்தால் சித்தாந்தநஞ்சூட்டப்பட்டு விட்டதாகக் கூறி நிராகரிக்கும் இவை, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மனச்சாட்சிக்கு தார்மீக விண்ணப்பங்களை செய்வதன் மூலம் ஒரு சுயாதீனமான முதலாளித்துவ அரசுக்காக போராடுவதில் கட்டலான் மக்களை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி செய்கின்றன.

இந்த கட்டலான் தேசியவாத வேலைத்திட்டமானது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அரசு ஒடுக்குமுறைக்கும் மற்றும் எதேச்சாதிகார ஆட்சிக்குமான அதன் எதிர்ப்பை பலவீனப்படுத்துவதில் ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவியே செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய அறநெறி விண்ணப்பங்கள், எதனையும் பெற்றுத்தரப் போவதில்லை. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பானது ஏகாதிபத்திய போர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வறுமைப்படலுக்கு இருந்த ஒரு எதிர்த்தட்டு எடையை அகற்றி விட்டிருந்ததன் பின்னான கால்நூற்றாண்டு காலத்தில், ஆளும் வர்க்கமானது மனித துயரத்தை பற்றி அது கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது என்பதை மீண்டும் மீண்டும் காட்டி வந்திருக்கிறது. ஈராக் மற்றும் சிரியா முதல் லிபியா வரை ஏகாதிபத்தியப் போர்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு வாங்கியிருப்பதோடு பத்து மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக்கின. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழமான சிக்கன நடவடிக்கைகள், குறிப்பாக 2008க்குப் பின்னர், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை நாசம்செய்திருக்கின்றன.  

மற்ற ஐரோப்பிய சக்திகள் ரஹோயை தடுத்து நிறுத்தப் போவதில்லை, ஏனென்றால் அவை தத்தமது நாட்டில் இதே கொள்கைகளுக்கே தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. கட்டலோனியாவிலான ஒடுக்குமுறையும், பிராங்கோயிசத்தை அங்கீகரிப்பதும், ஸ்பெயினில் இராணுவ ஆட்சி நோக்கித் திரும்புவதும், முதலாளித்துவ நெருக்கடி மற்றும் ஐரோப்பாவெங்கிலும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய ஒரு திருப்பம் ஆகியவற்றின் பகுதியாகும். பிரான்ஸ் தொழிலாளர் விரோத தொழிற்சட்ட சீர்திருத்தங்களைத் திணிப்பதற்காக நிரந்தரமான ஒரு அவசரகாலநிலையை நிறுவிக் கொண்டிருக்கிறது; சென்ற மாதத்தில் நடந்த ஜேர்மன் தேர்தலுக்குப் பின்னர், ஜேர்மனிக்கான மாற்று (AfD) என்ற ஒரு பாசிசக் கட்சி இரண்டாம் உலகப் போர் மற்றும் நாஜி ஆட்சியின் முடிவுக்குப் பின்னர் முதன்முறையாக ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இருக்கைகளைக் கொண்டிருக்கப் போகிறது.

இந்த மிகப்பெரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியானது முதலாளித்துவ ஐரோப்பாவின் அரசியல் அடித்தளங்களைக் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறது. முதலாம் உலகப் போரின் சமயத்தில் லெனின் குறிப்பிட்டார், ஏகாதிபத்தியம் மற்றும் போரின் சகாப்தமானது, “ஜனநாயக-குடியரசு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பிற்போக்கான முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை எல்லாம் மங்கச் செய்து விடுகிறது என்றால் அதற்கான துல்லியக் காரணம், அவை இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன என்பது தான்.” ஐரோப்பா எங்கிலும் ஜனநாயக உரிமைகள் மீது வரலாற்றுப் பெரும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கு மத்தியில், ஸ்பெயினின் உருமாற்றத்திற்கு பிந்தைய ஆட்சிக்கும், அது எதிலிருந்து எழுந்ததோ அந்த பிராங்கோ ஆட்சிக்கும் இடையில் எஞ்சியிருந்த வித்தியாசங்கள் அகன்று கொண்டிருப்பதே, இப்போது ஸ்பெயினில் நடந்து கொண்டிருப்பதாகும்.

இந்த ஆழமான நெருக்கடியின் மத்தியில், NPA உம் அதன் கூட்டாளிகளும், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அதி-வலது கட்சிகள் உள்ளிட்ட முதலாளித்துவ ஆதரவு சக்திகளுடன் கட்டிப் போடுவதற்கு முயற்சி செய்வதற்காய், தொடர்ச்சியாக தலையீடு செய்து வந்திருக்கின்றன. லிபியா மற்றும் சிரியாவிலான போர்களின் போது, அங்கே ஆட்சி-மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், அல்-கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய போராளிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட கிளர்ச்சிகளுக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆயுதமளிக்க வேண்டும் என்று இவை வலியுறுத்தின. 2014 இல், இவை உக்ரேனின் பாசிச வலது-செக்டருக்கு உள்ளே ஒரு “இடது செக்டாரை” கட்டுவதற்கு அழைப்புவிடுத்தன, இதன் மூலம் உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு அரசாங்கம் ஒன்றை நேட்டோ கவிழ்த்தற்கு முன்முனையாக இருந்த ஒன்றை அவர்கள் ஆதரித்தனர்.

பப்லோவாதிகளது கட்டலான் தேசியவாதமும் அத்துடன் கட்டலோனியா மற்றும் ஸ்பெயினில் இராணுவ-பாசிச ஒடுக்குமுறையின் அச்சுறுத்தலுக்கு அவர்கள் காட்டும் அலட்சியமும், இந்த பிற்போக்கான சர்வதேசக் கொள்கையின் ஒரு பகுதியாகும். பிரிவினைக்கான கோரிக்கையானது, தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களை ஆதரிக்கின்ற ஒரு குட்டி-முதலாளித்துவ இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு சேவை செய்திருந்தது என்பதை அவர்களேயும் கூறுகின்றனர்.

2008 முதலாக, பார்சிலோனா மாட்ரிட் இரண்டிலுமே இருந்த நிர்வாகங்கள் வேலைகளையும் சமூக செலவினங்களையும் வெட்டுவதற்கும் வங்கிகளையும் நிதிப் பிரபுத்துவத்தையும் செழிப்பாக்குவதற்கும் செயற்பட்ட நிலையில், கட்டலான் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகள் ஸ்பானிய மத்திய அரசாங்கத்துடன் ஒரு கடுமையான நிதிஒதுக்கீட்டு மோதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பார்சிலோனாவில், சிக்கன நடவடிக்கைகளை திணித்ததும் மற்றும் இரயில் ஓட்டுநர்கள் மற்றும் விமானநிலைய தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களை அடித்துநொருக்கியதுமான தொழிலாளர்-விரோத பிராந்திய அரசாங்கங்களுக்கு கட்டலான் தேசியவாதிகள் தலைமை கொடுத்தனர். Anticapitalistas மற்றும் IAC போன்ற சக்திகள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை தடுத்துநின்றதால், அதில் விளைந்த அரசியல் வெற்றிடத்தை புயுக்டெமோன்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் மாட்ரிட்டுக்கு எதிராக கட்டலான் தேசியவாதத்தை கிளறிவிடுவதன் மூலமாக நிரப்பிக் கொள்ள முடிந்தது. தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் எழுந்து விடாமல் தடுப்பதே இலக்காக இருந்தது.

இது ஒரு திட்டமிட்ட மூலோபாயமாக முன்னெடுக்கப்பட்டு அதில், NPAவும் அதன் கட்டலான் இணைப்புகளும் பங்குபெற்றன. இப்போது வர்த்தகத்திற்கான கட்டலான் ஆளுனராக இருக்கும் சாண்டி விலா, அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பங்குகொண்ட ஒருகூட்டத்தில், கட்டலோனியா “தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒரு பிரசங்கத்தை முன்வைக்காதிருந்திருந்தால், அது 6 பில்லியன் யூரோ அளவுக்கான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை தாக்குப்பிடித்திருந்திருக்க முடியுமா?” என்று குறிப்பிட்டார்.

இந்த சுதந்திர இயக்கமானது, நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிக்கன நடவடிக்கைகள்-ஆதரவு இயக்கம், இது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு குரோதமானது அத்துடன் அரசியல் வலதுகளின் கணிசமான பிரிவுகளையும் கொண்டிருக்கிறது என்று Anticapitalistas இன் தலைமையேவும் தெரிவிக்கிறது, இருந்தும் அதனை ஆதரிக்கிறது. ஜோசப் மரியா ஆன்டென்டாஸ் "கட்டலானின் முடிவு” என்ற அவரது கட்டுரையில் எழுதுகிறார், “சுதந்திர இயக்கமானது சிக்கன நடவடிக்கைக்கு எதிராக செலுத்தப்பட்டது அல்ல என்றபோதும், அது பொருளாதார சூழல் குறித்த அதிருப்தியிலிருந்து ஆதாயமடைய முடிந்தது என்பதுடன் நடப்பு சூழ்நிலையிலிருந்து வெளிவருவதற்கான ஒரு வழியாக ஒரு ஸ்தூலமான யோசனையையும் —ஸ்பெயினில் இருந்தான சுதந்திரம்— வழங்கியது.”

அதாவது, ஸ்பெயினில் இருந்து கட்டலானுக்கு சுதந்திரம் கோரும் கோரிக்கையானது பார்சிலோனா ஆட்சி பொதுவாக கண்டமெங்கிலுமான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை அடியொற்றிய கொள்கைகளை பின்பற்றியபோதும் அதற்கு ஒரு “தீவிரப்பட்ட” முலாம் கொடுப்பதற்கு சேவைசெய்தது. கட்டலான் தேசியவாதிகளுக்கும் CUP போன்ற குட்டி-முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்கும் தொழிலாள வர்க்கத்தில் குறைந்த அளவே ஆதரவு இருந்தது என்பதே இதன் பொருளாகும் — இது Anticapitalistas உம் கூட ஒப்புக்கொள்கிற ஒரு உண்மையாகும்.

ஆன்டென்டாஸ் எழுதுகிறார், “சுதந்திர இயக்கம், வர்க்கம் மற்றும் தலைமுறை வரிசைகளைக் கடந்து நிற்கிறது என்றாலும் நடுத்தர வர்க்கங்கள் மற்றும் இளைஞர்கள் தான் அதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும் முதலாளித்துவ வர்க்கம் சுதந்திர நிகழ்ச்சிப்போக்கை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறது என்பதுடன், அதனை தடம்புரளச் செய்வதற்கு திரைமறைவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்திருக்கிறது. பாரம்பரியமான தொழிலாள வர்க்கம் —வரலாற்றுரீதியாக, 1960களில் தெற்கு ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவுக்கு புலம்பெயர்ந்து வந்திருந்தவர்கள்— குறைவாகவே ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. கட்டலோனியாவில் உள்ள தொழிலாளர்கள் சுதந்திர விடயத்தில் பிளவுபட்டு நிற்கின்றனர், அவர்களின் ஒரு கணிசமான பகுதியினர், ஒரு சுதந்திரமான அரசை ஒரு வருங்கால தொடுஎல்லையாகக் காணவில்லை.”

ஒரு சுதந்திர கட்டலான் அரசைக் கட்டுகின்ற முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்கத்தில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற அலட்சியப்படுத்தலும் எதிர்ப்பும், சுதந்திர இயக்கத்தில் பகிரங்கமான வலது-சாரி சக்திகள் செல்வாக்கு செலுத்துவதுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அவர் எழுதுகிறார்: “சுதந்திர இயக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே கட்டலான் தேசியவாத வலது, Convergència Democràtica de Catalunya (CDC) தான் அதன் மேலாதிக்கமான அரசியல்சக்தியாக இருக்கிறது என்பது அதன் ஒரு விசித்திரப் புதிராகும்.”

தொழிலாள வர்க்கத்திற்கு குரோதம் காட்டுவதாகவும், ஐரோப்பா எங்கிலுமான சிக்கன நடவடிக்கை ஆதரவு மற்றும் போர் ஆதரவு அரசாங்கங்களின் கொள்கைகளில் இருந்து கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாததாக இருக்கின்ற கொள்கைகளைக் கொண்டதாகவும் இருக்கின்ற கட்டலான் தேசியவாத கட்சிகளின் தன்மையானது, அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பில் “வேண்டாம்” என்று வாக்களிக்க ICFI விடுத்த அழைப்பினை ஊர்ஜிதம் செய்வதாக இருக்கிறது. ஒரு கட்டலான் அரசை உருவாக்குவதற்கான அதிகாரத்தை இத்தகைய சக்திகளிடம் ஒப்படைப்பதானது, கட்டலான் தொழிலாளர்களுக்கு ஸ்பெயினின் எஞ்சிய பகுதியைச் சேர்ந்த அவர்களது சகோதர சகோதரிகளிடம் இருந்து அவர்களைப் பிரிப்பதைத் தவிர வேறு எதுவொன்றையும் செய்யப் போவதில்லை.

கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிராகப் போராடுகின்ற கடமை தொழிலாளர்களுக்கு உரியதாகும். அத்தேசியவாதிகளது கொள்கைகள் எத்தனை பிற்போக்கானதாய் இருந்தபோதிலும், அவர்களை எதிர்க்கின்ற வேலையை, ஸ்பெயினின் ஒரு பலவந்தமான ஐக்கியத்தை திணிக்கின்ற பொருட்டான PP அரசாங்கம், அதன் பாசிசக் கூட்டாளிகள், PSOE மற்றும் ஸ்பானிய இராணுவத்தின் துப்பாக்கிக்கூர்முனைகளின் முயற்சிகளுக்காய் விட்டுவிட முடியாது.

கட்டலோனியாவில் ஒரு இராணுவ ஒடுக்குமுறையின் பெருகும் அபாயத்திற்கு முகம்கொடுக்கும் நிலையில், உள்நாட்டுப் போர் மற்றும் எதேச்சாதிகார ஆட்சியின் அபாயத்திற்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ அரசு, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் குட்டி-முதலாளித்துவ போலி-இடது கூட்டாளிகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும்.