ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Three billionaires are wealthier than half the US population

மூன்று பில்லியனர்கள், அமெரிக்க மக்கள்தொகையின் பாதிப் பேரது மொத்த செல்வத்தினை விட அதிகமாக கொண்டுள்ளனர்

Eric London
10 November 2017

கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (Institute for Policy Studies) புதனன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, மூன்று அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் —ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், மற்றும் வாரன் பஃபெட்— இப்போது அமெரிக்காவின் வறுமைப்பட்ட பாதி மக்கள்தொகை, அதாவது சுமார் 160 மில்லியன் பேர் கொண்டிருப்பதற்கும் அதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர்.

பத்திரிகையாளர் ஃபெர்டினான்ட் லுன்ட்பர்க்கின் 1937 அம்பலப்படுத்தலில் ஆவணப்படுத்தப்பட்டிருந்த பாரிய செல்வத்தைக் கொண்ட அமெரிக்காவின் “60 குடும்பங்கள்” வெறும் மூன்று பில்லியனர்களைக் கொண்டு பிரதியிடப்பட்டுள்ளன, இவர்களது ஒட்டுமொத்த செல்வத்தின் மதிப்பு 264 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

“பில்லியனர் கொண்டாட்டம்: ஃபோர்ப்ஸ் 400 பேரும் எஞ்சிய நாமும்” என்ற கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் அறிக்கையானது, அமெரிக்காவின் மிகவும் பணக்காரர்களாய் இருக்கும் 25 பேரது சொத்துமதிப்பு அமெரிக்காவின் கீழிருந்தான 56 சதவீத மக்களது சொத்து மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்பதை வெளிக்காட்டுகிறது. மிகவும் பணக்காரர்களாய் இருக்கும் 400 பேரது மொத்த சொத்துமதிப்பு நாட்டின் கீழிருந்தான மூன்றில் இரண்டு பங்கு மக்களது, அதாவது கிட்டத்தட்ட 200 மில்லியன் பேரது சொத்துமதிப்பிற்கு நிகரானதாய் இருக்கிறது. அமெரிக்கா “சொத்து மற்றும் அதிகாரத்துவத்தின் ஒரு வம்சாவளி பிரபுத்துவமாக” ஆகியிருப்பதாக இந்த அறிக்கையின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்து முன்கண்டிராத அளவில் ஓரிடத்தில் குவிவது என்பது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காக இருக்கிறது. உலகின் மிக செல்வந்தர்களான எட்டு பேரிடம் வறுமைப்பட்ட உலக மக்கள்தொகையின் பாதிப்பேர் கொண்டிருப்பதற்கு நிகரான செல்வம் இருப்பதாக 2017 ஜனவரியில் Oxfam தெரிவித்தது. இது முன்பு 2015 இல் 80 ஆக இருந்திருந்தது. இன்று உச்சத்தில் இருக்கும் ஐந்து பில்லியனர்களில் ஒவ்வொருவரிடமும் 750 மில்லியன் மக்களிடம், அதாவது லத்தீன் அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை அல்லது அமெரிக்காவின் மக்கள்தொகை போன்று இரண்டு மடங்கு மக்களிடம் இருப்பதற்கு நிகரான சொத்து உள்ளது.


சொத்துப் பரவல். Credit: Peoples Policy Project

அமெரிக்கத் தரவு, “செல்வக் குவிப்பின் இப்போதைய மட்டங்களை குறைத்துமதிப்பிடுகிறது”, ஏனென்றால் “கடல்கடந்த வரிஏய்ப்பு புகலிடங்கள் மற்றும் சட்டரீதியான அறக்கட்டளைகளின் பயன்பாட்டுப் பெருக்கமானது முன்னெப்போதினும் மிகப் பரந்த அளவில் சொத்துக்களை மறைத்திருக்கிறது” என்று IPS அறிக்கை விளக்குகிறது. ”வரிஏய்ப்பு புகலிடங்களில் யார் சொத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்?” என்ற தலைப்பில் Alstadsaeter, Johannesen, மற்றும் Zucman 2017 இல் வழங்கிய ஒரு அறிக்கையானது உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் 5.7 டிரில்லியன் டாலர் முதல் 32 டிரில்லியன் டாலர் வரையான தொகையை வரிவிதிப்பு அல்லது புள்ளிவிவரப் பகுப்பாய்வில் இருந்து மறைந்த நிலையில் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

பெரும்செல்வந்தர்கள், உத்தரவிடும் உயர்மட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற நேரத்தில், கீழிருக்கும் 90 சதவீதம் பேரோ கடினநிலைமையையும் எத்தனை தூரத்தில் என்பதில் மட்டுமே வித்தியாசப்படுகின்ற நெருக்கடிக்கும் முகம்கொடுத்திருக்கின்றனர். வாகனங்கள், வீட்டு சாதனங்கள் மற்றும் மரச்சாமான்கள் போன்ற பயன்பாட்டுப் பொருட்களைக் கழித்த பின்னர் தொழிலாள வர்க்க குடும்பங்களின் நிகர செல்வம் என்னவாக இருக்கிறது என்பதை IPS அறிக்கை அளவிடுகிறது. அதன் மதிப்பீட்டின்படி, 19 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க குடும்பங்கள் —சுமார் 60 மில்லியன் மக்கள்— இத்தகைய பயன்பாட்டு பொருட்களைக் கழித்து விட்டால் “பூச்சியம் அல்லது எதிர்மறை நிகர சொத்தையே” கொண்டிருக்கின்றனர்.

வறுமைப்பட்ட 20 சதவீதத்திற்கு அப்பாலும் கூட, அந்த அறிக்கை விளக்குகிறது, “கொஞ்சம் சொத்து வைத்திருக்கக் கூடிய குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்பங்களில் பெரும்பாலும் விரைவில் பணமாக்க கூடிய எந்த சொத்துக்களும் —ரொக்கம் அல்லது சேமிப்புகள்— உடனடியாக எடுத்து செலவிடும் நிலையில் இருக்கவில்லை. 60 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் 500 டாலர் அவசர செலவுக்கு போதுமான சேமிப்பினை கொண்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.”

எந்த சேமிப்பும் இல்லாத சுமார் 200 மில்லியன் மக்களுக்கும் அப்பாலும் கூட, 60 முதல் 90 சதவீதம் வரை இருக்கின்ற மக்களின் நிலைமைகளும் கூட அதேஅளவுக்கு சிரமமானதாகவே உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் இந்தப் பிரிவின் பெரும்பகுதியின் நிகர செல்வமானது அவர்களது வீட்டு மதிப்பில் இருந்தே பெறப்படுகிறது, அதைக் கழித்து விட்டால், பெரும்பாலானோரிடம் ஓய்வுக்காலத்தின் ஒரு சில வருடங்கள் தாக்குப்பிடிப்பதற்குக் கூட போதுமான கையிருப்பு இல்லாதிருக்கின்றனர். பொருளாதாரக் கொள்கை நிறுவனம் (Economic Policy Institute) புள்ளிவிவரத் தரவுகள் மீது நடத்திய ஒரு சமீபத்திய ஆய்வின் படி, ஓய்வூதியக் கணக்கு சேமிப்புகள், சமீபத்திய ஆண்டுகளில் அத்தனை வயது வகைகளிலும் பெரும்சரிவு கண்டிருக்கிறது.

IPS அறிக்கையானது அமெரிக்க பெடரல் ரிசேர்வின் நுகர்வோர் நிதிக் கணக்கெடுப்புத் தரவினை அடிப்படையாகக் கொண்டதாகும், இத்தரவுகளையே சென்ற மாதத்தில் உலக சோசலிச வலைத் தளம் விரிவாக ஆராய்ந்தது. பெரும் செல்வந்தர்கள் பெரும் செல்வத்தைக் குவித்திருக்கும் நிலையில், தலைமையில் இருக்கின்ற 10 சதவீத பேரைக் கொண்ட ஒரு விரிந்த அடுக்கும், சமீபத்திய ஆண்டுகளில், உழைக்கும் மக்களின் நலன்களை விலைகொடுத்து தங்களை பெருமளவில் வளமாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தலைமையில் இருக்கும் 10 சதவீதம் பேர் —இவர்கள் தான் பாலின மற்றும் அடையாள அரசியலின் சமூக மற்றும் அரசியல் அடித்தளமாய் உள்ளனர்— மொத்த சொத்துக்களில் 77.1 சதவீதத்தைக் கொண்டுள்ள அதேநேரத்தில் கீழிருக்கும் முக்கால்வாசிப்பேரிடம் வெறும் 10 சதவீத சொத்துக்களே உள்ளது.

சமூக சமத்துவமின்மையின் வெடிப்பு என்பது, ஒரு தற்செயலான நிகழ்ச்சிப்போக்கு அல்ல. இது, டிரில்லியன் கணக்கான டாலர்களை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வந்தர்களின் சட்டைப்பைகளுக்கு மாற்றுவதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டும் நடத்திய பல தசாப்த காலப் பிரச்சாரத்தின் விளைபொருளாகும். செல்வந்தர்களுக்கு வரி விலக்குகள், சமூக வேலைத்திட்டங்களில் வெட்டுக்கள், மிட்வெஸ்டின் பரந்த பகுதிகளில் தொழிற்துறை நடவடிக்கைகள் அகற்றப்பட்டமை, பெருநிறுவன நெறிமுறைகளை அகற்றியமை மற்றும் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஏகாதிபத்தியப் போர், அரச கண்காணிப்பு மற்றும் பாரிய எண்ணிக்கையில் நாடுகடத்தல் மற்றும் சிறையிலடைப்பு ஆகியவற்றுக்காக செலவிட்டமை ஆகியவையே கடந்த நாற்பது ஆண்டு காலத்தின் போது இரண்டு கட்சிகளும் செய்த “சாதனைகள்” ஆகும்.

இந்த நீண்டநெடிய சமூக எதிர்ப்புரட்சியில், ஒபாமா நிர்வாகம் 2008-2009 வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பு, 2009 இல் வாகனத் துறை மறுசீரமைப்பு மற்றும் 2013-2014 இல் டெட்ராயிட் திவால்நிலை ஆகிய வரிசையின் வரைமுறையில் ஒரு மைல்கல்லைக் குறித்து நின்றது. ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் உதவியால், ஆளும் உயரடுக்கினர் நிதி நெருக்கடியை சுரண்டிக் கொண்டனர்.

விளைவு, அமெரிக்கா இப்போது ஒரு சிலவராட்சியாக இருக்கிறது. பெரும் செல்வந்தர்கள் தமது அடர்ந்த செல்வத்தின் மூலமும் பெரிய பெருநிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதன் மூலமும், அரசியல், கலாச்சார மற்றும் புத்திஜீவித்தன அதிகாரத்தின் அத்தனை உத்தியோகபூர்வ ஸ்தாபனங்களிலும் முழுமையான ஆதிக்கத்தை ஸ்தாபித்திருக்கின்றனர்.

நீதிமன்றங்களும், நாடாளுமன்றமும் மற்றும் ஜனாதிபதியும் நிதிப் பிரபுத்துவத்துக்குள்ளாக இருக்கும் போட்டியான குழு நலன்களின் சார்பாகச் செயல்படுவது மட்டுமல்ல, டொனால்ட் ட்ரம்ப்பின் ஆளுமையில் மிக நேரடியான வெளிப்பாட்டைக் கண்டவாறு, மேலும் மேலும் அதிகமாய் அவை மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களைக் கொண்டு நிரப்பப்படுவதும் நடக்கிறது. இராணுவம் பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்காக உலகெங்கும் நிரந்தரமாகப் போர் நடத்துகிறது. பிரதான ஊடகங்களானது, அமெரிக்க சிலவராட்சிக் குழுவின் உத்தியோகபூர்வ பிரச்சாரக் குழு என்பதற்கு மேலாய் ஒன்றுமில்லை என்பதாய் செயல்படுகின்றன. தொழிற்சங்கங்களோ, அவற்றின் வழக்கமான கொடூரமான மற்றும் ஊழலடைந்த வடிவத்தில், தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்கும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் பெருநிறுவனங்களால் ஊதியமளிக்கப்படுகின்றவையாக இருக்கின்றன.

மக்கள் தொகையின் இந்த சலுகைபடைத்த அடுக்கின் சிந்தனைக் குவிப்புகளும் யோசனைகளும் கீழிருக்கும் 90 சதவீதம் பேரின் கவலைகளுக்கு முற்றிலும் அந்நியமானதாய் இருக்கின்றன. ஆரோக்கிய பராமரிப்புச் செலவுகள் விண்ணைமுட்டிச் செல்கின்றன; ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குடும்பங்கள் ஒவ்வொரு வாரமும் சொந்த ஊருக்கு நாடுகடத்தப்படும் நிகழ்ச்சிப்போக்கால் கிழிபட்டுக் கொண்டிருக்கின்றன; ஓபியாய்ட் (opioid) பயன்பாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 பேர் இறக்கின்றனர்; மாணவர் கடன் ஒரு மொத்தத் தலைமுறையையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது; மில்லியன் கணக்கான மக்கள் வெள்ளத்தாலும், நெருப்பினாலும் சூறாவளிகளாலும் நாசப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்கின்றனர்; ஒட்டுமொத்த மாநிலங்களிலும் பெண்கள் ஆரோக்கிய மையங்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு 80 நிமிடத்திற்கும் ஒரு மூத்த குடிமகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்; இன்னும் எத்தனை எத்தனையோ.

இந்த விடயங்களில் எல்லாம், நாடாளுமன்றம் எந்த விசாரணைகளும் நடத்துவதில்லை. அமெரிக்க அரசியலில் ரஷ்யா தலையிட்டதாக சொல்லப்படுவது மற்றும் ஸ்தாபக-எதிர்ப்பு ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக சமூக ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை மண்டியிடச் செய்வது ஆகியவற்றுக்கான விசாரணைகளில் அதன் கால அட்டவணை நிரம்பிக் கிடக்கிறது. டிரில்லியன் கணக்கான பணத்தை செல்வந்தர்களிடமும் பெருநிறுவனங்களிடமும் ஒப்படைக்கின்ற ஒரு வரி மசோதா குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இரவுபகல் பாராது வேலைசெய்து கொண்டிருக்கின்றனர், செனட் குடியரசுக் கட்சியினர் தங்களது பதிப்பை நேற்று அறிவித்துள்ளனர்.

சமத்துவமின்மை விண்ணைமுட்டுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளமையும், வெகுஜனங்கள் அவர்களின் சமூகக் குறைகளை நிவர்த்தி செய்வதற்குரிய எந்த ஸ்தாபகரீதியான பொறிமுறையும் இல்லாதிருப்பதும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வரலாற்று பெரும்வெடிப்புக்கு கட்டியம் கூறுகிறது. பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெறுகின்ற வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தவிர்க்கமுடியாததாகும், ஆனாலும் அவை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட்டாக வேண்டும்.

பில்லியனர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தேவை உள்ளவர்களுக்கு மறுவிநியோகிகம் செய்யப்பட வேண்டும். அவர்கள் செல்வங்களை பெறுவதற்கான வழிவகையாக இருக்கும் அந்தப் பெருநிறுவனங்கள் தொழிலாளர்களது ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் பொதுமக்கள் தேவைக்காய் சேவைசெய்யும் வகையில் தொழிலாளர்களால் அவை மறுஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

Jeff Bezos இன் அமேசன் போன்ற நிறுவனங்கள் பேரிடர்களால் நாசப்பட்ட பகுதிகளுக்கும் வறுமைப்பட்ட பகுதிகளுக்கும் மருந்து, உணவு, குடிநீர் மற்றும் கட்டுமான சாதனங்களை கொண்டுசெல்வதற்கு பயன்படுத்தப்பட முடியும். பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் மென்பொருள் மற்றும் நிரல் உருவாக்கமானது உலகப் பொருளாதாத்தில் முன்கண்டிராத மட்டத்திற்கான சமூகத் திட்டமிடலை அறிமுகம் செய்கிற வகையில் பட்டைதீட்டப்பட முடியும், இது அடிப்படை வளங்களின் பற்றாக்குறை அகற்றப்படுகிற வகையிலும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் சீரடையும் வகையிலும் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுவதை அனுமதிக்கும். அத்தனை தொழிற்துறைகளும் மனிதகுலத்தின் நலன்களுக்கு சேவை செய்யும்படி செய்யப்பட முடியும்.

சோசலிசத்தின் கீழ், அத்தனை நாடுகளிலும் உள்ள அத்தனை தொழிற்துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள், உலகின் உற்பத்தி சக்திகளை சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் பின்பற்றிச் செல்கின்ற பாதையில் செலவிடும்பொருட்டு அவர்களது பட்டறைகளிலும், தொழிற்சாலைகளிலும் மற்றும் அலுவலங்களிலும் ஒன்றுபடுவார்கள். ஆனால் ஆளும் வர்க்கம் அதன் செல்வத்தை தானாய் முன்வந்து விட்டுக்கொடுக்கப் போவதில்லை. சோசலிசத்துக்கான போராட்டத்தில் இணைவதற்கு, இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.