ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU member states take major step toward a European army

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் ஐரோப்பிய இராணுவம் ஒன்றை நோக்கிய முக்கிய அடியை எடுத்துவைக்கின்றன

By Peter Schwarz
14 November 2017

ஐரோப்பிய ஒன்றியம் வருங்காலத்தில் அமெரிக்காவில் இருந்து சுயாதீனமான, மற்றும் அவசியமானால் அந்நாட்டிற்கு எதிராகவும் கூட, போரை நடத்துகின்ற திறனை அபிவிருத்தி செய்வதை நோக்கிய ஒரு முக்கிய அடியெடுப்பை எடுத்து வைத்திருக்கிறது.

பொதுப் பாதுகாப்பு கொள்கை ஒன்றுக்கான சுற்றுவரை ஆவணம் ஒன்றில் 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் 23 இன் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் திங்களன்று புரூசெல்ஸில் கையெழுத்திட்டனர். 2019 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக இருக்கும் பிரிட்டனுடன் சேர்ந்து, டென்மார்க், அயர்லாந்து, மால்டா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இன்னும் நான்கு சிறிய நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆயினும், அவையும் கூட எந்த சமயத்திலும் கையெழுத்திட முடியும்.

“நிரந்தரக் கட்டமைப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை” (PESCO) மூலம், ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், ஆயுதங்களின் அபிவிருத்தி மற்றும் கொள்முதலில் நெருக்கமான ஒத்துழைப்புக்கும், கூட்டு இராணுவத் தலையீடுகளுக்கு துருப்புகளையும் சாதனங்களையும் கொண்டிருக்கவும் உறுதிபூண்டிருக்கின்றன.

”PESCO ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்தியம் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பில் முதலீட்டுக்கான ஒரு இலட்சியநோக்குடனான, கட்டுப்படுத்துகின்ற மற்றும் உள்ளடக்கலான ஐரோப்பிய சட்ட சுற்றுவரையாகும்” என்று அந்த ஆவணம் தெரிவிக்கிறது. ஐரோப்பாவை செயல்படவும், விரைந்து செயல்படவும் திறனுடையதாக்குவதே முக்கிய பிரச்சினையாகும் என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கை ஐரோப்பிய இராணுவவாதத்தின் ஒரு தீவிரப்படலைக் குறித்து நிற்கிறது. இராணுவச் செலவினத்தில் சீரான அதிகரிப்பு இருக்க வேண்டும் என்பதுதான் அத்தனை தரப்பும் உறுதிகொடுப்பதற்கான 20 நிபந்தனைகளில் முதலாவதாய் இருக்கிறது. இதில் குறைந்தது 20 சதவீதமேனும் புதிய ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதை நோக்கி செலுத்தப்பட்டாக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் தனது பங்காக கூட்டு ஆயுதத் திட்டங்களுக்காக வருடந்தோறும் 500 மில்லியன் யூரோக்கள் பங்களிப்பு செய்யவும் 2021க்குப் பின்னர் 1 பில்லியன் யூரோக்கள் பங்களிப்பு செய்யவும் எண்ணம் கொண்டிருக்கிறது.

இந்த ஒத்துழைப்பின் வடிவம் தொடர்பான விவரங்கள், இனிவரும் வாரங்களில் பேசப்படும். கூட்டுத் திட்டங்களுக்கு இப்போதைக்கு 47 ஆலோசனைமொழிவுகள் இருக்கின்றன. ஒரு கூட்டு நெருக்கடி பதிலிறுப்புப் படை, பன்னாட்டு சண்டை பிரிவுகளின் உருவாக்கம், ஐரோப்பாவின் பயிற்சி நடவடிக்கைகளுக்கான ஒரு கூட்டு “செயல்சிறப்பு மையம்”, உலகெங்கிலும் பல்வேறு பிராந்தியங்களிலும் இராணுவத் தலையீடுகள் செய்வதற்கான முன்னெச்சரிக்கை திட்டங்கள், அதிகாரத்துவ இடைஞ்சல்கள் இன்றி துருப்புகளையும் கனரக ஆயுதங்களையும் துரிதமாக நிலைநிறுத்த அனுமதிக்கின்ற ஒரு “இராணுவ சுதந்திரநடமாட்ட” மண்டலம், கூட்டு செயற்கைக்கோள் வழி இராணுவக் கண்காணிப்பு, ஒரு ஐரோப்பிய மருத்துவக் கமாண்டோ, மற்றும் கூட்டுத் தளவாட மையங்கள் ஆகியவை இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த 47 திட்டங்களில் 10 டிசம்பரில் தொடக்கி வைக்கப்பட இருக்கின்றன.

ஜேர்மனியும் பிரான்சும் தான் PESCO இன் பின்னால் இருக்கும் சக்திகளாக உள்ளன. சமீப மாதங்களில், ஆறு பயிலரங்குகளை நடத்தி பேர்லின், பாரிஸ் மற்றும் பெல்ஜியம் இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தியிருக்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில் செப்டம்பரில் வழங்கிய ஒரு உரையின் போது அறிவித்தார், “அடுத்த தசாப்தம் தொடங்குவதற்குள்ளாக, ஒரு கூட்டுத் தலையீட்டுப் படை, ஒரு பொது பாதுகாப்பு வரவு-செலவு மற்றும் நடவடிக்கைக்கான ஒரு கூட்டு சித்தாந்தம் ஆகியவை ஐரோப்பாவிடம் இருந்தாக வேண்டும்”.

PESCO கையெழுத்தானது “ஐரோப்பாவிற்கு ஒரு மகத்தான நாள்” என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லையன் (Ursula Von der Leyen) தெரிவித்தார். தரப்புகள் “ஐரோப்பாவுக்கு ஒரு இராணுவத்தை நோக்கிய ஒரு முன்னோக்கிய அடி”யை எடுத்துக் கொண்டிருந்தன.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான சிக்மார் காப்ரியல் இந்த உடன்பாட்டை “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று வருணித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கொள்கையின் சுயாதீனம் மற்றும் வலுப்படுத்தலில் இது ஒரு முக்கிய நடவடிக்கை” என்றார். PESCO இராணுவத் திறன்களில் ஒரு பெரும் அதிகரிப்பில் விளையும் என்று அவர் முன்கணித்தார்.

இராணுவத்திற்கு அமெரிக்கா செலவிடுவதில் பாதியளவுக்கு ஐரோப்பா இப்போது செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்ற அவர், ஆனால் வெறும் 15 சதவீத அளவுக்கான திறனையே எட்டுவதாகக் கூறினார். நெருக்கமான ஒத்துழைப்பு இதில் முன்னேற்றத்தை கொண்டுவர முடியும் என்றார்.

ஐரோப்பிய இராணுவ ஒத்துழைப்பை நேட்டோவுக்கு எதிர்ப்பானதாக அல்லாமல் அதன் துணையளிப்பாக சித்தரிப்பதற்கு பேர்லின், பாரிஸ் மற்றும் புரூசெல்ஸ் முனைந்து கொண்டிருக்கின்றன. PESCO உடன்பாடு பின்வருமாறு தெரிவிக்கிறது: “ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் இராணுவத் திறன் வலுவூட்டப்படுவது நேட்டோவுக்கும் பயனளிப்பதாக இருக்கும். இது ஐரோப்பியத் தூணை வலுப்படுத்துவதோடு, அட்லாண்டிக் கடந்த சுமை-பகிர்வை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக வரும் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதிலும் சேவைசெய்யும்.”

நேட்டோவுக்கு எந்த எதிர்ப்பையும் மறுப்பதற்கும் வொன் டெர் லையன் முயற்சி செய்தார். அட்லாண்டிக் கடந்த கூட்டணி எப்போதும் தேசிய மற்றும் கூட்டுப் பாதுகாப்புக்கு பொறுப்பானதாக இருக்கும் என்று கூறிய அவர், ஐரோப்பிய ஒன்றியமானது, அதன் “வலைப்பின்னல் கொண்ட பாதுகாப்பு” மூலமாக, ஆபிரிக்க அரசுகளுக்கு “உதவுதல்” போன்ற நேட்டோவின் பகுதியாக இல்லாத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

இது அபத்தமானதாகும். டொனால்ட் ட்ரம்ப் தேர்வானமை மற்றும் பிரெக்ஸிட் ஆகிய இரண்டு முக்கியமான நிகழ்வுகள், நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கின்ற ஆயினும் தொடர்ச்சியாக ஏமாற்றமளித்து வந்திருக்கின்ற ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கான திட்டங்களை அமலாக்க ஊக்கமளித்திருக்கின்றன என்பதில் வருணனையாளர்கள் பொதுவாக உடன்படுகின்றனர்.

1954 இல் ஐரோப்பாவின் பாதுகாப்பு சமூகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான ஒரு முதல் முயற்சி பிரான்சின் எதிர்ப்பை அடுத்து தோல்விகண்டது. அடுத்த பல தசாப்தங்களுக்கு எந்த மேலதிக முயற்சியும் நடக்கவில்லை. புதிய நூற்றாண்டின் திருப்பத்தின் போது, நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் லண்டனிடம் இருந்து வந்த எதிர்ப்பால் தோல்வி கண்டன, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக பிரிட்டன், நேட்டோவுக்கு எந்த மாற்றும் தோற்றுவிக்கப்படுவதை தடுப்பதற்கு விரும்பியது.

ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” கொள்கையானது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பதட்டங்களை கூர்மைப்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலான அமெரிக்காவின் கொள்கை பேர்லினிலும் பாரிஸிலும் தமது நலன்களின் மீதான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது, அத்துடன் ஆபிரிக்காவில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகள் செல்வாக்குக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவுடனான போருக்கான தயாரிப்புகளில் மட்டும் தான் ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவும் நேட்டோவின் மூலமாக நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன. ஆனால் அதிலும் கூட, இந்த மோதல் எந்த தூரத்திற்கு நெருக்கப்பட வேண்டும் என்பதிலான தந்திரோபாய பேதங்கள் நிலவுகின்றன.

அதேசமயத்தில், பிரெக்ஸிட்டானது ஐரோப்பிய இராணுவம் உருவாக்கப்படுவதற்கு இருந்த மிக முக்கியமான எதிரியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அகற்றி விட்டிருக்கிறது.

PESCO உடன்பாட்டினால் ஐரோப்பாவுக்குள்ளான அத்தனை மோதல்களும் வெல்லப்பட்டு விட்டதாகவோ, ஜேர்மனியும் பிரான்சும் இனி ஒரே நிலைப்பாட்டையே பின்பற்ற இருக்கின்றன என்றோ அர்த்தமில்லை. உடன்பாட்டுக்கு முன்பாகவே கூட, கூர்மையான பேதங்கள் எழுந்தன.

இந்த உடன்படிக்கையை, ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் தீர்மானகரமாக தலையீடு செய்யத்தக்க பெரும் இராணுவங்கள் கொண்ட ஒரு சிறிய, பிரத்தியேகமான அரசுகளின் குழுவோடு மட்டுப்படுத்திக் கொள்ள பாரிஸ் விரும்பியது, ஆனால் பேர்லினோ முடிந்த அளவுக்கு மிக அதிகமான பங்கேற்பு நாடுகளையும், பரந்து விரிந்த செயல்பாடுகளையும் கொண்டிருக்க அழுத்தமளித்தது. ஜேர்மனியே வென்றது.

ஒருமனதான முடிவுகள் அவசியப்படுவதால், முடிவெடுப்பது சிரமமாகவே இருக்கும். ஆனாலும், அதிகமான அளவில் தேசியவாத மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-விரோத மனோநிலையால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கின்ற கிழக்கு ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காவின் பின்னால் சென்று விடக் கூடும் என்று பேர்லின் அஞ்சியது.

PESCO தொடர்பில் இராணுவச் செலவினங்களில் ஏற்படவிருக்கும் மிகப்பெரும் அதிகரிப்பு ஐரோப்பாவில் வர்க்கப் பதட்டங்களை தீவிரப்படுத்தும். ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலுமே வர்க்கப் பதட்டங்களுக்கு, அரசு ஒடுக்குமுறையின் எந்திரத்தை பெருமளவில் கட்டியெழுப்புவதைக் கொண்டுதான் ஆளும் உயரடுக்கினர் ஏற்கனவே பதிலிறுத்துக் கொண்டிருக்கின்றனர். இது வலது-சாரி மற்றும் தேசியவாத சக்திகளை ஊக்குவித்துக் கொண்டிருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்தை சுக்குநூறாகக் கிழித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் பெருகிச் செல்லும் பதட்டங்கள், இறுதி ஆய்வில், உலக சோசலிச வலைத் தளம் ”மாபெரும் கட்டுச்சிதறல்: போருக்குப் பிந்தைய புவியரசியல் ஒழுங்கமைப்பின் நெருக்கடி” என்ற தலைப்பிலான அதன் ஜூன் 2, 2017 அன்றான முன்னோக்கில் எழுதியவாறாக, ”வெறுமனே வெள்ளை மாளிகையில் இப்போது அமர்ந்திருப்பவரின் அதி தேசியவாதக் கொள்கைகளின் விளைபொருளன்று”.

அந்தக் கட்டுரை தொடர்ந்தது:

”மாறாய், இந்தப் பதட்டங்கள் சென்ற நூற்றாண்டில் இரண்டுமுறை உலகப் போருக்கு இட்டுச் சென்றிருந்த பெரும் ஏகாதிபத்திய சக்திகளது நலன்களுக்கு இடையிலான ஆழமான முரண்பாடுகளிலேயே வேரூன்றியிருக்கின்றன...”

”ட்ரம்ப்பின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை சூழ்ந்த நிகழ்வுகள் வெறுமனே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியையும் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவுடன் போட்டியிடும் நாடுகளில் எதுவொன்றும் —உள்நாட்டில் சிக்கனநடவடிக்கைக் கொள்கைகளுக்காக வெறுக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியமும் சரி, அல்லது பொருளாதாரரீதியாக மரணப்படுக்கையில் இருக்கும் ஜப்பானின் வலது-சாரி ஆட்சியும் சரி, அல்லது சீனாவின் மாவோயிசத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ நிதியப்பிரபுத்துவமும் சரி— ஒரு முற்போக்கான மாற்றை வழங்கவில்லை. உலக முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பெரிய-அளவிலான வர்த்தகப் போரும் இராணுவ மோதலும் உருவாவதை தடுக்கும் வகையிலும் இந்த சக்திகளது ஒரு கூட்டணி உருவாகியே தீரும் என்று எவரொருவர் திட்டவட்டம் செய்தாலும், அவர் வரலாற்றுக்கு எதிராய் கனமாய் பந்தயம் கட்டுகிறார் என்பதே அர்த்தமாயிருக்கும்.”

ஐரோப்பா மறுஆயுதபாணியாவது இதையே ஊர்ஜிதம் செய்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காகவும் போராடுவதும் மட்டுமே இன்னுமொரு உலகப் போரின் பேரழிவைத் தடுத்துநிறுத்திட முடியும்.