ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU anti-“fake news” authority prepares mass censorship

ஐரோப்பிய ஒன்றிய “போலிச் செய்திகள்”-தடுப்பு அதிகாரம் பாரிய தணிக்கைக்கு தயாரிப்பு செய்கிறது

By Alex Lantier
16 November 2017

“போலிச் செய்திகள்” என்று சொல்லப்படுவனவற்றை கண்காணிக்கவும் தணிக்கை செய்யவும் ஒரு அதிகார அமைப்புக் கட்டுமானத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கிறது. இது தொடர்பாக ஒரு உயர்நிலை நிபுணர்கள் குழுவை அது அமைப்பதோடு, அடுத்த வசந்தகாலத்தில் நடவடிக்கைகளைத் தொடங்க இருக்கும் இந்த ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு என்ன அதிகாரங்களை வழங்குவது என்பதைத் தீர்மானிப்பதற்கு ஊடக வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து “போலிச் செய்திகள்” மீதான விமர்சனங்களைக் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பை ஆய்வுசெய்தால், அது தயாரிப்பு செய்கின்ற பாரிய அரசுத் தணிக்கையின் இலக்காக இருக்கப் போவது பொய்யான செய்திகள் அல்ல, மாறாக ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்கான வெகுஜன எதிர்ப்பை ஊக்குவிக்கின்ற செய்தி அறிக்கைகள் அல்லது அரசியல் கண்ணோட்டங்கள் தான் என்பது புலப்படுகிறது.

“போலிச் செய்தி” என்ற பிரயோகம், அமெரிக்காவில், 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறக் காரணம், அவரது ஜனநாயகக் கட்சி போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான விடயங்களை விளம்பரப்படுத்தி ரஷ்யா தலையீடு செய்ததே என்பதான ஊர்ஜிதமில்லாத குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கின்ற பிரச்சாரத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரமானது, விமர்சனபூர்வ கண்ணோட்டங்களையும் சமூக எதிர்ப்புகளையும் வெளிப்படுத்துவதை தடுக்கின்றவிதமாக, இணையத்தை தணிக்கை செய்வதற்கான முன்னெப்போதினும் மூர்க்கமான கோரிக்கைகளாக அபிவிருத்தி கண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க செனட்டில் நடந்த ஒரு விசாரணையில், முன்னாள் FBI அதிகாரியான கிளின்ட் வாட்ஸ், அமெரிக்காவில் “இனரீதியான மற்றும் சமூகரீதியான பிளவுகளை பெருக்குவதற்கு” முயற்சி செய்ததாகச் சொல்லப்படுவதற்காக ரஷ்யாவை கண்டனம் செய்த தனக்கு அனுதாபமான அமெரிக்க செனட்டர்கள் முன்பாக தணிக்கைக்கான அழைப்பை விடுத்தார். வாட்ஸ் கூறினார், “உள்நாட்டுப் போர்கள், துப்பாக்கிக்குண்டுகள் முழங்குவதைக் கொண்டு தொடங்குவதில்லை, அவை வார்த்தைகளைக் கொண்டே தொடங்குகின்றன. அமெரிக்கா தனக்குள்ளேயே நடத்துகின்ற போர் ஏற்கனவே தொடங்கி விட்டது. வன்முறையான மோதல்களுக்கு துரிதமாக இட்டுச்செல்லத்தக்க அத்துடன் நம்மை சுலபமாக அமெரிக்கா பிளவுபட்ட அரசுகளாக மாற்றிவிடத்தக்க தகவல் கலகங்களை அடக்குவதற்கு சமூக ஊடக யுத்தக்களத்தில் நாம் அனைவரும் இப்போது செயல்பட்டாக வேண்டும்.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் “போலிச் செய்திகள்”-தடுப்பு தணிக்கை அமைப்பும் இதே அடிப்படை அரசியல் நோக்கங்களுக்கே சேவை செய்கிறது. மக்கள் இணையத்தில் என்ன வாசிக்கலாம் அல்லது சொல்லலாம் என்பதை தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் கட்டுப்படுத்தக் கூடிய நிலைமைகளை உருவாக்க அது நோக்கம் கொண்டிருக்கிறது. “தகவல்களும் புரளிகளும் கிட்டத்தட்ட நம்மை மூழ்கடிக்கக் கூடிய அளவுக்கு பாய்ந்துவருகின்றதான ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்” என்று ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவரான ஃபிரான்ஸ் ரிம்மர்மன்ஸ் அறிவித்தார். தனது குடிமக்களை “போலிச் செய்திகளில்” இருந்து பாதுகாப்பதும் “அவர்கள் பெறுகின்ற தகவல்களைக் கையாள்வதும்” ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமையாக இருக்கிறது என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்திக் குறிப்பு கூறுவதன் படி, “ஜனவரி 2018 இல் தொடங்கி அதன்பின் பல மாதங்கள் செயற்பட இருக்கின்ற” உயர்மட்ட நிபுணர் குழுவினை, இன்னொரு தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தேர்ந்தெடுக்க இருக்கிறது. “நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை குடிமக்கள் அணுகும்நிலையை வலுப்படுத்துவதற்கும் இணையத்தில் பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கும் வருங்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும்” என்பதை அது விவாதிக்க இருக்கிறது. எந்தக் கண்ணோட்டங்கள் “சரிபார்க்கப்பட்டவை”, யார் “நம்பகமானவர்” மற்றும் யாருடைய கண்ணோட்டங்கள் “பொய்யான செய்திகள்” முகநூலில் இருந்து அல்லது கூகுள் தேடுபொறி முடிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டியவை என்பதை யார் தீர்மானிப்பார்கள்? வேறு யார், ஐரோப்பிய ஒன்றியம் தான்.

அமெரிக்காவில் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் “போலிச் செய்தி”-தடுப்பு பிரச்சாரமும் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்தும் முன்னெப்போதினும் கூடுதலாக வெகுஜன விரோதமானவையாக இருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளை —குறிப்பாக, ஐரோப்பிய முதலாளித்துவம் இராணுவவாதம் மற்றும் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கி துரிதகதியில் திரும்பிக் கொண்டிருப்பது— விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளில் இருந்தும் பிறக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த புதிய முன்முயற்சியானது, 2015 மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலால், “கிழக்கு மூலோபாய தகவல்தொடர்பு நடவடிக்கை படை” (East Stratcom) உருவாக்கப்பட்டதுடன் தொடங்கியதாக அதன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கியேவில் இருந்த ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்த நாஜி-ஆதரவு, ரஷ்ய-விரோத Right Sector போர்க்குழு தலைமையிலான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் மூலமாக, உக்ரேனில் 2014 பிப்ரவரியில் ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கையை அமெரிக்காவும் பேர்லினும் வெற்றிகரமாக ஒழுங்கமைத்ததற்குப் பிந்தைய சற்று காலத்தில் இது நடந்திருந்தது. இது கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் கடுமையான ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது, அது 2015 தொடக்கம் வரையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் உக்ரேன் கூட்டாளிகளது பாசிசத் தன்மை குறித்து நன்கு தெரியும். ஐரோப்பிய நாடாளுமன்றம் கியேவில் அது அதிகாரத்தில் அமர்த்திய கட்சிகளில் ஒன்றான, Svoboda ஐ உத்தியோகபூர்வமாக கண்டனம் செய்யும் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக 2012 இல் வாக்களித்திருந்தது. Svoboda வின் “இனவாத, யூத-விரோத மற்றும் அந்நியர் வெறுப்புமிக்க கண்ணோட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானதாய்” இருப்பதாகத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், “இந்தக் கட்சியுடன் தொடர்புபடுவதோ, வழிமொழிவதோ அல்லது கூட்டணிகள் உருவாக்குவதோ” வேண்டாம் என ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கு விண்ணப்பம் செய்தது.

ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் Svoboda ஐ அதிகாரத்தில் அமர்த்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் நவ-பாசிஸ்டுகளுடன் சேர்ந்து வேலைசெய்வதாக எழுந்த விமர்சனத்தை, “பொய்யின் உச்சம்” என்று ஐரோப்பிய ஊடகங்கள் கண்டனம் செய்தன, அதனை “பொய்யுரைக்கும் ரஷ்யப் பிரச்சாரம்” என்று அழைத்தன.

இவையே பொதுவாக ஐரோப்பாவிலும், குறிப்பாக East Stratcom இலும் “போலிச்செய்தி”- தடுப்புப் பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான அரசியல் வேர்களாக இருப்பவை ஆகும். இப்போதைய ஐரோப்பிய ஒன்றிய செய்திக் குறிப்பின் படி, இந்த முகமையானது “நடப்பில் இருக்கின்ற ரஷ்யாவின் பொய்ப் பிரச்சாரங்களை நாளாந்திர அடிப்படையில் அடையாளம் காண்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்” ஏற்படுத்தப்பட்டதாகும். “திறம்பட்ட தகவல்தொடர்பையும் கிழக்கத்திய அண்மைப்பகுதிகளை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை ஊக்குவிப்பதையும்” -அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூர்க்கமான கொள்கைகள் மற்றும் உக்ரேன், கிழக்கு ஐரோப்பா, மற்றும் அதனைத் தாண்டி நவ-பாசிஸ்டுகளுடன் அது கொண்டுள்ள தொடர்புகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது- உறுதிசெய்வதே அதன் தலைமை நோக்கமாக அதன் இலட்சிய அறிக்கை அறிவிக்கிறது.

ஐரோப்பாவில் எழுந்து வருகின்ற சூழல் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். Svoboda மற்றும் Right Sector -இது இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தில் இருந்த யூதர்களை நாஜிக்கள் படுகொலை செய்ததில் பங்குபெற்ற உக்ரேன் படைகளை பெருமையுடன் பேசுவதாகும்- போன்ற சக்திகளை ஊக்குவிப்பதற்கு ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதென்பது, ஐரோப்பாவில் இணையத்தையும் உத்தியோகபூர்வ பொது வாழ்க்கையையும் தணிக்கை செய்யும் ஒரு முனைப்புக்கு இட்டுச் செல்வதாகும். ஐரோப்பாவில் போலிஸ்-அரசு ஆட்சி செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கண்டமெங்கிலும் பல தசாப்த காலங்களில் அபிவிருத்தி கண்டிருந்த ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஒரு வரலாற்றுப் பெரும் உருக்குலைவுக்கு ஆட்பட்டிருப்பதை இது பிரதிபலிக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலான கால் நூற்றாண்டு காலம் சொந்த நாட்டில் சிக்கன நடவடிக்கைகளையும், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ போர்களின் தீவிரப்படலையும் கண்டிருக்கிறது. ஐரோப்பிய முதலாளித்துவம் திவாலடைந்து கிடக்கிறது, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், பொருளாதார சமத்துவமின்மையானது ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு இணக்கமில்லாத மட்டங்களை எட்டிக் கொண்டிருக்கிறது.

பத்து மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பற்றோர் மற்றும் இளைஞர்கள் எந்த எதிர்காலமுமற்ற நிலையில் விடப்பட்டிருக்கும் நிலையில், சமூகக் கோபமானது வெடிப்பான மட்டங்களை எட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் “Generation What” கருத்துக்கணிப்பு நிறுவனம், நிலவும் ஒழுங்கிற்கு எதிரான ஒரு “வெகுஜன எழுச்சி”யில் பங்கேற்பதற்கு பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பிய இளைஞர்கள் விருப்பத்துடன் இருப்பதைக் கண்டறிந்தது. அதன் கொள்கைகள் மீதான விமர்சனங்களை “போலிச் செய்திகள்” என்றும் ரஷ்ய பிரச்சாரம் என்றும் கண்டனம் செய்கின்ற அதேநேரத்தில் சொந்த நாட்டில் ஒடுக்குமுறைக்கும் எதேச்சாதிகார ஆட்சிக்கும் தயாரிப்பு செய்வது தான் இதற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பதிலிறுப்பாய் இருக்கிறது.

குறிப்பிடத்தக்கதாய், ஐரோப்பிய ஒன்றிய “போலிச் செய்தி” பிரச்சாரத்தின் ஒரு முக்கிய யுத்தக்களமாக ஸ்பெயின் இருக்கிறது. அக்டோபர் 1 அன்று கட்டலான் சுதந்திரக் கருத்துவாக்கெடுப்பில் அமைதியாக வாக்களித்துக் கொண்டிருந்தவர்களின் மீது போலிஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பின்னர், பார்சிலோனாவில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் எழுந்ததன் மத்தியில், சென்ற மாதத்தில் மாட்ரிட் கட்டலோனியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இடைநீக்கம் செய்தது. பேர்லின், லண்டன், பாரிஸ் அத்தனையும் மாட்ரிட்டுக்கு ஆதரவான அறிக்கைகளை விடுத்தன. ஸ்பானிய ஜெனரல் ஃபெர்னான்டோ அலெஹான்ட்ரே கட்டலோனியாவில் இராணுவத் தலையீடு செய்வதற்கு அச்சுறுத்தியதோடு, “அத்தனை சகாப்தங்களது” ஸ்பானிய இராணுவத்திற்கும் -1939 இல் ஸ்பானிய உள்நாட்டுப் போரின் சமயத்தில் பாசிச சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவினால் கட்டலோனியா படையெடுக்கப்பட்டது உள்ளிட என்பது மறைமுகமாக கூறப்பட்டது- புகழாரம் சூட்டினார்.

ஐரோப்பிய ஊடகங்களும், ஸ்பானிய அரசாங்கமும், மற்றும் East Stratcom ம் மாட்ரிட்டின் கொள்கைகள் மீதும் அவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவின் மீதும் எழுகின்ற  விமர்சனங்களை “போலிச் செய்திகள்” என்று கண்டனம் செய்வதற்காக ஒரு பிரச்சாரத்தை தொடக்குகின்றன என்பதும் எதிர்பார்க்கத்தக்கதே. திங்களன்று, பிரிட்டிஷ் கார்டியன் தெரிவித்தது: “புருசெல்ஸில் இருக்கின்ற East Stratcom நடவடிக்கைப் படையில் வேலைபார்க்கின்ற அதிகாரிகள், கட்டலான் கருத்துவாக்கெடுப்பு தொடர்பான செய்திகளில் ஊடக ஆர்வம் வெடிப்புடன் இருந்ததை அடியொற்றி, அது தொடர்பான போலிச் செய்திகளில் ஒரு அதிகரிப்பை அவர்கள் கண்டதாகக் கூறுகின்றனர்.”

“கட்டலோனியாவிலான அரசியல் நெருக்கடி குறித்த கிரெம்ளின் ஆதரவு பொய்ச்செய்திகள் மற்றும் தவறான கூற்றுகளில் அதிகரிப்பு” இருந்ததாக கூறப்படுவதை எடுத்துக்காட்டுவதற்காக, மால்டோவா அரசியல்வாதியான போக்டான் டிர்டா போட்டிருந்த ஒரு முகநூல் பதிவை கார்டியன் மேற்கோளிட்டது: “கட்டலோனியாவில் வன்முறையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஆதரித்தனர்.”

உக்ரேனில் போலவே, இத்தகைய கூற்றுகளை “போலிச் செய்திகள்” என்றும் ரஷ்ய பிரச்சாரம் என்றும் கூறி ஆளும் உயரடுக்கு தாக்குகிறது என்றால், அதற்குக் காரணம் அவை பொய்ச் செய்திகள் என்பதால் அல்ல, மாறாக அவை சொந்த நாட்டில் அரசியல் எதிர்ப்பைத் தூண்ட அச்சுறுத்துகிற காரணத்தாலேயே ஆகும்.

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் அதன் கூட்டாளிகள், கட்டலான் நெருக்கடியைத் தூண்டின அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சேறுவீசுவதற்கு அதனைப் பயன்படுத்தின என்பதான கூற்றுகள் மாட்ரிட்டின் சொந்த அறிக்கைகளாலேயே மறுக்கப்பட்டிருக்கக் கூடிய பொய்களாகும். அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்புக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், மாட்ரிட் அதன் உள்நாட்டு ஒடுக்குமுறைக்கு மாஸ்கோ வழங்கிய பிற்போக்குத்தனமான ஆதரவுக்கு புகழாரம் சூட்டியது. ரஷ்யாவுக்கான ஸ்பெயினின் தூதரான இக்னாசியோ இபானேஸ் ரூபியோ கூறினார்: “ரஷ்யாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை ஸ்பெயின் வழிமொழிகிறது. இது எங்கள் நாட்டின் ஒரு உள் விவகாரம் என்பதை மிக ஆரம்பத்தில் இருந்தே, ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது... ஆகவே கட்டலோனியாவிலான நெருக்கடி தொடர்பில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.”

ஐரோப்பாவில் போலிஸ்-அரசு ஆட்சியை நோக்கி துரிதப்பட்டுச் செல்லும் நடவடிக்கைகளும், ரஷ்ய “பொய்ச் செய்திகளுக்கு” எதிரான ஊடகப் பிரச்சாரமும் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்திகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் எதிர்ப்பு, அதனைத் தணிக்கை செய்வதற்கு கூகுள் முயலுவதற்கு எதிரான அதன் போராட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஐரோப்பாவில் எதேச்சாதிகார ஆட்சியையும் அதி-வலது அரசியலையும் அங்கீகரிப்புக்குரியதாக ஆக்க முனைவதற்கு எதிரான தலைமைக் குரலாக அது எழுந்து கொண்டிருக்கிறது.

கூகுளுக்கு ஒரு பகிரங்க கடிதம்: இணைய தணிக்கையை நிறுத்து! உலக சோசலிச வலைத் தளத்தை இருட்டடிப்பு செய்வதை நிறுத்து!