ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany’s Social Democrats prepare for grand coalition with Merkel

ஜேர்மனியின் சமூக ஜனநாயகவாதிகள் மேர்க்கெலுடன் மாபெரும் கூட்டணிக்கு தயாராகின்றனர்

By Peter Schwarz
25 November 2017

பழமைவாத, தாராளவாத மற்றும் பசுமை கட்சியினருக்கு இடையிலான ஜமைக்கா கூட்டணி அமைப்பது குறித்து ஆராயும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து நான்கு நாட்களுக்குப் பின்னர், ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இதுவரை இருந்துவந்த மாபெரும் கூட்டணியை தொடர்வதற்கான பாதைக்கு தயாரிப்பு செய்கிறது.

திங்களன்று அக்கட்சி செயற்குழு, அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு எதிராகவும், புதிய தேர்தல்களுக்கு ஆதரவாகவும் ஒருமனதாக வாக்களித்திருந்தது. ஆனால் SPD தலைவர் மார்ட்டீன் சூல்ஸ் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையருக்கு இடையிலான பேச்சுவார்த்தை, மற்றும் SPD தலைமையை உள்ளடக்கிய ஒரு எட்டு மணி நேர பேச்சுவார்த்தை என இவற்றிற்குப் பின்னர், பொது செயலாளர் ஹூபேர்ட்டுஸ் ஹெயில், வெள்ளியன்று காலை அதன் நிலைப்பாட்டில் மாற்றத்தை அறிவித்தார். “பேச்சுவார்த்தை அவசியம் என்பதில் SPD உறுதியாக உடன்படுகிறது,” என்றவர் தெரிவித்தார். அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இருந்து SPD தன்னை விலக்கிக் கொள்ளாது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இருப்பினும், இந்த கட்டத்தில் அது வெளிப்படையாக மாபெரும் கூட்டணிக்கு ஒப்புதல் வழங்க விரும்பவில்லை. “SPD இனுள், மாபெரும் கூட்டணி தன்னிச்சையாக நடக்காது” என்று செயற்குழு அங்கத்தவர் மனுவேலா ஷ்வேஸிக் அறிவித்தார். ஆனால் இதன் நோக்கம், புதிய போக்கை நடைமுறைப்படுத்துவதற்கு வெறுமனே அவகாசம் எடுத்துக் கொள்வதாகும்.

இந்த போக்கை அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தி கட்சியை மாற்றுவதற்கு தயாரிப்பு செய்வது இப்போது கட்சி தலைவர் சூல்ஸிடம் விடப்பட்டுள்ளது. இது தான் SPD தலைமையகமான வில்லி பிராண்ட் இல்லத்திலிருந்து வரும் தகவலாகும். அரசாங்கத்தில் SPD பங்கெடுப்பதன் மீது அங்கத்தவர்களிடையே அவர் வாக்கெடுத்து நடத்தவிருப்பதாக சூல்ஸ் ட்வீட்டரில் அறிவித்தார். டிசம்பர் ஆரம்பத்தில் கட்சி மாநாட்டை நடத்த SPD திட்டமிட்டுள்ளது.

மாபெரும் கூட்டணியை தொடர்வதற்கு சமாந்திரமாக, தற்போது விவாதிக்கப்பட்டு வரும் மற்றொரு சாத்தியக்கூறு, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) ஆகியவற்றின் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு SPD ஆதரவளிப்பது குறித்ததாகும். ஆனால் இதற்கு குறைந்த சாத்தியக்கூறே உள்ளது. இந்த முன்மொழிவு வெறுமனே "மீண்டும் மாபெரும் கூட்டணிக்குள் நுழைவதற்கான முதல் படியாக" உள்ளது என்று Spiegel Online எழுதியது.

Süddeutsche Zeitung பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது, சிறுபான்மை அரசாங்கத்திற்கான விருப்பத்தெரிவு "தவாறாக" இருக்கும் ஏனென்றால் அது ஜேர்மனியின் வெளியுறவு கொள்கைகளை பலவீனப்படுத்தும்: “ஜேர்மனி தன்னை எந்த சூழ்நிலையில் காண்கிறதோ, ஐரோப்பாவில் ஜேர்மனி என்ன பாத்திரம் வகிக்க வேண்டுமென காண்கிறதோ, இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு சிக்கலான முடிவெடுப்பின் போதும் அரசாங்கம் அதன் சொந்த நாடாளுமன்றத்திலேயே ஒரு உடன்பாட்டு கிடைக்குமா என்று பயந்து கொண்டிருப்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று.”

ஜனாதிபதி ஸ்ரைன்மையர், இவரின் SPD இல் அங்கத்துவ உரிமை உத்தியோகபூர்வமாக முடிவடைந்துள்ள நிலையில், அரசாங்கத்தில் நுழைவதற்காக அவர் சமீபத்திய நாட்களில் கட்சிக்கு பெரும் அழுத்தமளித்துள்ளார். இப்போது அவர் எந்தவிதத்திலும் காலம்கடந்துபோவதை விரும்பவில்லை. மேலும் விடயங்களை எவ்வாறு முன்நகர்த்துவது என்பதை விவாதிக்க SPD, CDU மற்றும் CSU தலைவர்களை அடுத்த வாரம் அவரது உத்தியோகபூர்வ பெல்வியு மாளிகைக்கு அழைத்துள்ளார். சுதந்திர ஜனநாயகக் கட்சியினர் (FDP), பசுமை கட்சியினர் மற்றும் வலதுசாரி தீவிரவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஆகியவற்றின் நாடாளுமன்ற தலைவர்களுடனும் அவர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சி, செப்டம்பர் 24 தேர்தலில் 70 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வாக்குகளைப் பெற்ற பின்னர், அது எதிர்க்கட்சியாக செல்ல முடிவெடுத்தது. அத்தேர்தலில் CDU மற்றும் CSU உம் குறிப்பிடத்தக்க இழப்புகளால் பாதிக்கப்பட்டன. ஆட்சியிலிருந்த கட்சிகள் ஒட்டுமொத்தமாக 14 சதவீத புள்ளிகளை இழந்தன. வாக்காளர்களின் இந்த அழிவுகரமான தீர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தில் தங்கியிருந்தால், அது முக்கியத்துவமற்ற நிலைக்கு வீழ்ச்சி அடையும் என்றும், தொழிலாள வர்க்கம் இடதுக்கு திரும்பும் என்றும் SPD அஞ்சுகிறது.

CDU-FDP மற்றும் பசுமைக் கட்சியின் கூட்டணியைச் சாத்தியமாக்கும் பேச்சுவார்த்தைகள் வாரக்கணக்கில் இழுபறியில் இருந்து, இறுதியில் தோல்வியடைந்த பின்னர், அவற்றின் முன்னுரிமைகள் மாறின. ஜனாதிபதி ஸ்ரைன்மையர், நாடாளுமன்ற தலைவர் வொல்ஃப்காங் சொய்பிள (CDU), மற்றும் ஏனைய முன்னணி அரசு பிரதிநிதிகளும் என்ன விலை கொடுத்தாவது புதிய தேர்தல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கான காரணம், ஒரு புதிய தேர்தல் பிரச்சாரத்தில் பரந்த சமூக அதிருப்தி அரசியல் வெளிப்பாட்டை காணும் என்றும், ஒரு நீடித்த அரசியல் நெருக்கடி ஜேர்மனியின் சர்வதேச நிலையை பலவீனப்படுத்தும் என அவர்கள் கவலை கொள்கின்றனர்.

அவர்கள் விரைவாக SPD க்குள் ஆதரவாளர்களைப் பெற்றனர். தற்காலிகமாக தொடர்ந்து பதவி வகித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்மார் காப்ரியேல், ஹம்பேர்க் நகர முதல்வர் ஓலாவ் ஷொல்ஸ் மற்றும் அக்கட்சியின் ஏனைய வலதுசாரி பிரதிநிதிகளும், SPD தொடர்ந்து எதிர்கட்சியாகவே இருக்க வேண்டுமென வலியுறுத்திய சூல்ஸை விமர்சித்தனர். வியாழனன்று சூல்ஸ் விட்டுக்கொடுத்தார்.

மூன்றாவது முறையாக மாபெரும் கூட்டணி நிறுவப்பட்டால், 2005 இல் இருந்து 2009 மற்றும் 2013 இல் இருந்து 2017 ஆகிய அதன் முந்தைய பதவிகாலங்களில் இருந்து அது குறிப்பிடத்தக்களவில் வேறுவிதமாக இருக்கும். ஒரு மிகப்பெரிய தேர்தல் தோல்வியிலிருந்து எழும் இந்த அரசாங்கம், எந்தவொரு ஜனநாயக சட்டபூர்வத்தன்மையையும் இழந்திருக்கும். இதன் விளைவாக, அது சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து எழும் அழுத்தங்களுக்கு அதன் முந்தையவரைக் காட்டிலும் இன்னும் அதிக ஈவிரக்கமற்ற சர்வாதிபத்திய பாணியில் விடையிறுக்கும். SPD இன் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பத்திரிகை கருத்துரைகளை வாசிக்கையில், இதில் எந்த ஐயத்திற்கும் இடமின்றி உள்ளது.

ஜமைக்கா பேச்சுவார்த்தைகளை FDP முடமாக்கி, “முழு முரண்பாடுகளின் ஒரு அரசாங்கத்தில்" இருந்து ஜேர்மனியை "காப்பாற்றியதற்காக" திங்களன்று, Frankfurter Allgemeine Zeitung (FAZ) இன்னமும் FDP க்கு "மரியாதை" செலுத்தியது. SPD “அரசு நலன்களுக்கு" அடிபணிந்ததற்காக, அதே பத்திரிகை இப்போது வரவேற்கும் தொனியில் SPD ஐ பாராட்டுகிறது.

“ஜனாதிபதியின் பெயரில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பிரசவவிடுதியில் செவிலித்தாயாக சேவையாற்ற நுழையும் போது, அரசு நலன்களுக்கு முன்னால் எல்லா கட்சி விருப்பங்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன,” என்று பிராங்க்பேர்ட் பங்குச்சந்தையின் அந்த பழமைவாத ஊதுகுழல் எழுதியது.

ரைஹ் ஜனாதிபதி, இராணுவ தளபதி, நீதித்துறை மற்றும் முதலாளித்துவ கட்சிகள் என அரசு உயரடுக்குகள் தங்களை மிகவும் பிற்போக்கு சக்திகளுடன் அணி சேர்த்துக் கொண்டதனாலோ, ஹிட்லரை சான்சிலராக நியமித்ததானாலோ கூட, வைய்மர் குடியரசு தோல்வியடையவில்லை (இது தற்போதைய நிலையுடன் ஒப்பிடப்படுகின்றது), மாறாக "ஒரு அதிகரித்தளவில் துண்டுகளாக பிளவுபடும் பிரிவினரின் கட்சி ஆட்சி" “அரசு நலன்களுக்கு எதிராக மேலாதிக்கத்தை பெற்றதால்" ஏற்பட்டது என்று FAZ எழுதியது.

சமூக மற்றும் அரசியல் மோதல் தீவிரமடைகையில், சமூக நலன்களின் அரசியல் வெளிப்பாடுகளாக உள்ள கட்சிகளும், அவ்விதத்தில் ஜனநாயகமும், “அரசின் நலன்களுக்காக" அதன் முன் மண்டியிடுகின்றன என்ற இக்கருத்து தான் ஒவ்வொரு சர்வாதிகாரத்தின் தொல்சீர் நியாயப்படுத்தலாக உள்ளது. ஆகஸ்ட் 4, 1914 இல், முதலாம் உலக போர் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு SPD வாக்களித்த போது, மற்றும் போர் எதிர்ப்பாளர்கள் சிறையில் தள்ளப்பட்ட போது, கைய்சர் வில்ஹெல்ம், “நான் எந்த கட்சிகளையும் இனி அங்கீகரிக்க போவதில்லை, நான் ஜேர்மனியர்களை மட்டுமே அங்கீகரிக்கிறேன்,” என்று இந்த இழிவார்ந்த கருத்தை தான் உச்சரித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் அரசாங்கத்திற்குத் திரும்பி வருவது குறித்து Die Zeit உம் உற்சாகமடைகிறது. “அன்றாட வேலைகளை நிர்வகிக்க தகைமை கொண்ட ஒரு புதிய அரசாங்கத்தை மட்டுமல்ல, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தைப் புதுப்பிக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முன்மொழிவுகளுக்குப் பதிலளிக்கின்ற மற்றும் நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் ஒரு புதிய அரசாங்கத்தை ஜேர்மனி விரைவில் பெறும் என்பது இப்போது மிக முக்கிய விடயமாகும்,” என்று SPD தரப்பில் உள்ள அந்த வாராந்தர பத்திரிகை எழுதியது.

ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கேற்ப "நாட்டின் பிரச்சினைகளைக் கையாள்வது" மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு விடையிறுப்பது என்று வருகையில், SPD நீண்ட காலமாகவே மிகவும் ஆக்ரோஷமான கட்சியாக இருந்து வந்துள்ளது. ஹார்ட்ஸ் சட்டங்களில் இருந்து ஓய்வூதிய வயதை 67 ஆக அதிகரித்தது வரையில், சிறிய தொழிற்சங்கங்களை ஒடுக்கும் ஒருங்கிணைந்த ஒப்பந்த சட்டம் வரையில், இணையத்தை தணிக்கை செய்யும் பேஸ்புக் சட்டம் வரையில், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் அழிப்பு பெரிதும் SPD ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மாபெரும் கூட்டணிக்குப் பின்னால் உந்துசக்தியாக உள்ள ஜனாதிபதி ஸ்ரைன்மையர், 2003 இல் ஹெகார்ட் ஷ்ரோடர் அலுவலகத்தின் தலைவராக இருந்த இவரே, உண்மையில் 2010 வலதுசாரி திட்டநிரலை எழுதியவர். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து, 2014 இல் ஜேர்மன் இராணுவவாத மீள்வருகையில் இவர் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தார், இவரை அடுத்து வந்த சிங்மார் காப்ரியேல் ஜேர்மன் இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கும், ஒரு சுதந்திர ஐரோப்பிய இராணுவத்தை கட்டமைப்பதற்கும் அழுத்தமளித்து வருகிறார். ட்ரம்ப் மேலுயர்ந்ததை வெறுமனே ஒரு அச்சுறுத்தலாக மட்டுமல்ல, மாறாக உலகின் புதிய பிராந்தியங்களில் இன்னும் தீர்க்கமாக ஜேர்மன் பெருவணிகங்கள் தலையீடு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்க வேண்டுமென காப்ரியேல் அறிவிக்கை வெளியிட்டார்.

கூட்டாட்சி தேர்தலுக்கான அதன் அறிக்கையில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) எச்சரித்தது, “CDU/CSU இல் இருந்து, FDP, பசுமை கட்சி, SPD மற்றும் இடது கட்சி வரையில், ஸ்தாபக கட்சிகள் அனைத்துமே இராணுவவாதத்தை, உள்நாட்டு ஒடுக்குமுறைக்கான அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதை மற்றும் சமூக வெட்டுக்களின் கொள்கைகளை ஆதரிக்கிறது. இவை கூட்டாட்சி மட்டத்திலும் மாநில அளவிலும் சமூக வெட்டுக்களை ஒழுங்கமைக்கின்றன. இவை அனைத்துமே மக்களுக்கு எதிராக சதியாலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.”

இது இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. கூட்டாட்சி தேர்தலில் அதன் தோல்வியில் எடுத்துக்காட்டப்பட்டவாறு, மாபெரும் கூட்டணி ஆழமாக மதிப்பிழந்துள்ளது. இது தொடருமேயானால், திரைக்குப் பின்னால் நடக்கும் ஒரு சூழ்ச்சியில் தான் போய் முடியும். SGP இதை நிராகரிப்பதுடன், மீண்டும் தேர்தலை நடாத்துமாறு கோருகிறது.

சமூக வெட்டுக்கள், அரசு எந்திரம் மற்றும் இராணுவவாதத்தைப் பலப்படுத்துதல் ஆகிய கொள்கைகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த எதிர்ப்புக்கு ஓர் அரசியல் முன்னோக்கு அவசியமாகும்; இல்லையென்றால் அதிகரித்து வரும் இந்த பதட்டத்திலிருந்து வலதுசாரி இலாபமடையும். சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் போருக்கு எதிரான போராட்டத்தை இணைக்கும் ஒரு சோசலிச மாற்றீட்டை கட்டமைக்க ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) போராடி வருகிறது.