ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German political establishment and big business call for grand coalition government

ஜேர்மன் அரசியல் ஸ்தாபகமும் பெருவணிகங்களும் மாபெரும் கூட்டணி அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றன

By Johannes Stern
27 November 2017

ஜமைக்கா கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்த முன்னோட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஆளும் உயரடுக்கின் செல்வாக்கான பிரிவுகள் புதிதாய் தேர்தல் நடத்துவதற்கு எதிராகவும் வார இறுதியில் ஒரு மாபெரும் கூட்டணி உருவாக்கப்படுவதற்கு ஆதரவாகவும் வெளிப்படையாகப் பேசின. மக்கள் மத்தியில் பெருகிச் செல்லும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், இராணுவவாதம், ஒரு போலிஸ் அரசு எந்திரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி ஆகிய அவற்றின் மக்கள்விரோதக் கொள்கைகளைத் தொடர்வதை இலக்காகக் கொண்டு அவை சென்று கொண்டிருக்கின்றன.

வலது-சாரி கிறிஸ்தவ சமூக ஒன்றிய (CSU) தலைவரான ஹோர்ஸ்ட் சீஹோஃபர், அதேபோன்று கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU)/CSU நாடாளுமன்றத் தலைவரான வோல்கர் கௌடர் ஆகியோர் ஞாயிறன்று ஒரு மாபெரும் கூட்டணிக்கு அழைப்புவிட்டனர். இதுவே “ஜேர்மனிக்கான சிறந்த வகையாகும்” என்று சீஹோஃபர் Bild am Sonntag பத்திரிகையிடம் கூறினார். “ஜமைக்கா, புதிய தேர்தல் அல்லது ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை விட சிறந்ததாகும்.” கௌடர் Bericht aus Berlin நிகழ்ச்சியில் பேசுகையில், “நாடாளுமன்ற செயல்பாடுகளை கொண்டுசெல்வதற்கு தற்செயலான பெரும்பான்மைகளைக் காட்டிலும் ஒரு கூட்டணியையுடன் செயற்படுவது கூடுதல் சுலபமானதாகும்.”

முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளும் இதேபோன்றதொரு தொனியை ஒலித்தனர். Volkswagen நிர்வாகக் குழு உறுப்பினரான ஹேர்பேர்ட் டீஸஸ், Handelsblatt பத்திரிகையிடம் கூறுகையில், புதிய தேர்தல் “ஒரு நல்ல தீர்வாய் இருக்காது...ஏனென்றால் அவை மிக அதிக காலம் எடுக்கக்கூடியது” என்றார். மாபெரும் கூட்டணி புதிதாக பதவியேற்பதையும் அவர் ஆதரித்தார். அவர் கூறினார், “பங்கேற்பாளர்கள் அனைவருக்குமே இது பரிச்சயமானதே. ஜமைக்கா கூட்டணியை விடவும் குறைவான மோதல் புள்ளிகளையே எதிர்பார்க்கலாம். நான்கு கூட்டாளிகளை விடவும் இரண்டு கூட்டாளிகள் சுலபமானதாகும்.” புதிய தேர்தலின் மூலமாக SPDக்கு இதற்கு மேலதிக நியாயப்படுத்தல் தேவைப்படுவதில்லை. “அவர்கள் தங்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தாலே போதுமானது.”

சமூக ஜனநாயகவாதிகள் தங்களுக்குத் தேவையான அளவுக்கு வெகுகாலத்திற்கு முன்னரே “அதிர்ச்சி” கொடுத்துவிட்டார்கள். குறைந்தபட்சம் சமூக ஜனநாயகத் தலைவர் மார்ட்டின் ஷூல்ஸ்க்கும் SPD ஜேர்மன் ஜனாதிபதியான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மருக்கும் இடையில் வியாழனன்று பேச்சுவார்த்தை நடந்தது முதலாக, SPD இன் தலைமையானது கட்சி அங்கத்தவர்களிடையே பாதை மாற்றத்தைத் திணிப்பதற்கு கடுமையாக வேலைசெய்து கொண்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று மாலையில் Saarbrücken இல் நடந்த அவர்களது காங்கிரசில், ஷூல்ஸ் SPD இளைஞர் அமைப்பிடம் இவ்வாறு தெரிவித்தார், “ஜனாதிபதி என்னை விவாதிக்க அழைப்பாரேயானால், என்னால் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை நிராகரிக்க முடியாது, நிராகரிக்கவும் மாட்டேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்”. முடிவில் என்ன விளையும் என்பது “திறந்திருக்கிறது”, ஆனால் SPD பல அரசியல் விடயங்களிலான குறைகளை அடையாளம் காணவும் அவை எவ்வாறு தீர்க்கப்பட முடியும் என்பதை பரிசீலிக்கவும் வேண்டியிருப்பதாக அவர் சேர்த்துக் கொண்டார். “பின் இந்தக் கேள்வி முன்நிற்கிறது: இதற்கான அதிகாரக் கோல்கள் நமக்குக் கிடைக்கும்போது நாம் இதை செய்யப் போகிறோமா அல்லது நாம் அவ்வாறு செய்யப் போவதில்லையா?”

”மாபெரும் கூட்டணிகளுக்கு எதிரான ஒரு அரணாக” தங்களை விவரித்து வந்திருக்கும் இளைஞர் அமைப்பான Jusos, ஷூல்ஸ்ஸின் உரைக்கு இடிமுழக்கம் போன்ற ஆரவாரக் கைதட்டலைக் கொண்டு பதிலிறுப்பு செய்தனர்.

கட்சியின் “இடது பிரிவை” சேர்ந்த மற்ற பிரதிநிதிகள், CDU/CSU உடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு தாங்கள் நிச்சயமாக தயாராக இருப்பதை சுட்டிக்காட்டினர். “புதிதாய் தேர்தல் என்பது வறுமையின் ஒரு அறிகுறியாக இருக்கும்” என்று கட்சியின் துணைத் தலைவர் ரால்ஃப் ஸ்டேக்னர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இப்போதிருக்கும் பெரும்பான்மைகள் “உருப்படியாக பயன்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் சேர்த்துக் கொண்டார். SPD “புதிய ஒத்துழைப்பு வடிவங்களை பரிசீலிக்க வேண்டும்”, ஒரு “ஆக்கபூர்வமான பாத்திரத்தை” வகிக்க வேண்டும்.

SPD இன் பாதை மாற்றத்தின் பின்னால் இரண்டு முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. புதிய தேர்தலும் நீண்ட கால அரசியல் நிச்சயமின்மையும் ஐரோப்பாவில் நிலைமைகளை ஸ்திரமிழக்கச் செய்து ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பலவீனப்படுத்தும் என்று SPD அஞ்சுகிறது. “ஜேர்மனியில் ஒரு ஸ்திரமான நிலைமை நிலவுவதை” உறுதிசெய்கிற முக்கியமான கடமை SPDக்கு இருக்கிறது என முன்னாள் SPD தலைவரும் இப்போதைய வெளியுறவு அமைச்சருமான சிக்மார் காப்ரியல் ஞாயிறன்று ஹம்பேர்க்கில் Die Zeit ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கூறினார். புதிதாய் தேர்தல் நடத்துவதை சிறந்த தெரிவாக தான் கருதவில்லை, ஏனென்றால் “ஐரோப்பாவின் மையத்தில் நிலவுகின்ற ஸ்திரமற்ற சூழ்நிலை” நிரந்தரமாவது சகித்துக் கொள்ளப்பட முடியாது என்றார்.

இந்த அணுகுமுறைக்கு இடது கட்சியும் ஆதரவாக இருக்கிறது. சனிக்கிழமையன்று, துரிங்கியா மாநில முதலமைச்சரான போடோ ராமலோவ் ஆளும் ஒரு கூட்டணி விடயத்தில் முடிந்த அளவுக்கு விரைவாக உடன்படுவதற்கு CDU மற்றும் CSU ஐ சந்தித்துப் பேசினார். “சுய-பரிசோதனைக்கு பலமாத காலம் எடுப்பது என்பது நமது ஜனநாயகத்தின் மீதான ஒரு பெரிய சுமையாக ஆவதாய் நான் கருதுவேன்” என்று Ilmenau நகரில் நடந்த இடது கட்சியின் மாநில கட்சி மாநாட்டில் ராமலோவ் எச்சரித்தார். “SPD அதன் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்த விரும்புவதாக கேள்விப்படுகிறேன் - அவ்வாறாயின் அவர்கள் அதைத் தயவுசெய்து விரைவாக செய்து முடிக்க வேண்டும்.”

இடது கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்றத் தலைவர்களும் இதேபோன்றதொரு கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனர். “Das!” என்னும் NDR நிகழ்ச்சியில் பொங்கிய ஸாரா வாகன்கினெட், நிலவும் நிலைமைகளின் கீழ், புதிய தேர்தல் என்பது “மக்கள் எதிர்கொள்ளத் தள்ளப்படக் கூடாத” ஒரு “கபடநாடகமாக” இருக்கும் என்றார். SPD “மறுபடியும் ஒரு மாபெரும் கூட்டணிக்குள் நுழைவதற்கான பயணத்தில் இருப்பது” தனக்கு நல்லதாகப் படவில்லை என்றபோதிலும், SPD இன் ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரமுமே “மாபெரும் கூட்டணிவாதத்தை” சேர்ந்ததாகவே இருந்தது என்றார். அவரது சகாவான Dietmar Bartsch ம் ஒரு மகா கூட்டணி தொடர்வதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ”CDU/CSU/SPD ஒரு இடது சமூக எதிர்ப்பணியிடம் இருந்து கடுமையான அழுத்தத்தை எதிர்பார்க்கலாம்” என்று அவர் Die Welt யிடம் தெரிவித்தார்.

SPD தலைமையானது ஆரம்பத்தில் CDU மற்றும் CSU உடனான மக்கள்வெறுப்பை சம்பாதித்த கூட்டணியை தொடர்வதற்கு எதிராகவே பேசியது. இது எல்லாவற்றையும் விட தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச எதிர்ப்பு அபிவிருத்தி காண்பதைக் குறித்த அச்சத்தாலேயே செலுத்தப்பட்டதாக இருந்தது. நிகழ்வுகளின் அழுத்தத்தின் கீழ் -கடந்த வாரத்திற்குள் மட்டுமே பாரிய வேலையிழப்புகள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராக  Siemens, Air Berlin மற்றும் ThyssenKrupp இல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்- SPDயும் ஆளும் வர்க்கமும் ஒரு முற்றிலும் புதிய நோக்குநிலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தில் பெருகும் எதிர்ப்பை தொழிற்சங்கங்களின் உதவியுடன் ஒடுக்கும்பொருட்டு முதலாளித்துவக் கட்சிகள் அத்தனையும் மேலும்மேலும் நெருங்கி வருகின்றன.

வரவிருக்கும் நாட்களில் ஜனாதிபதி ஸ்ரைன்மையர் அத்தனை கட்சிகளது தலைவர்களையும் இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கவிருக்கிறார். பசுமைக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்களான கத்தரின் கோரிங் எக்கார்ட் மற்றும் அன்டன் கோவ்ரைட்டர் ஆகியோர் இன்று அழைக்கப்படுகின்றனர், அதனைத் தொடர்ந்து கௌடர், அதன்பின் மாலைத் தொடக்கத்தில், வாகன்கினெக்ட் மற்றும் பார்ட்ஷ் அழைக்கப்படுகின்றனர். SPD நாடாளுமன்றத் தலைவரான அந்திரேயா நாலஸ் செவ்வாய் காலை சந்திப்பார். இப்போதைய சான்சலரான அங்கேலா மேர்கெல், ஷூல்ஸ் மற்றும் சீஹோஃபர் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் செவ்வாய்கிழமையன்று நடைபெற இருக்கின்றன.

சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவப் பெருக்கத்தின் தனது கொள்கைகளை திணிப்பதற்கு, ஆளும் வர்க்கமானது, 1930களில் போலவே, மேலதிகமாய் வலது-சாரி தீவிரவாத சக்திகளையே நம்பியிருக்கிறது. ஹிட்லரின் Wehrmacht குறித்த ஒரு நேர்மறையான மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக அழைப்புவிடுத்த AfD நாடாளுமன்றத் தலைவரான அலெக்சாண்டர் கௌலாண்ட் ஐயும் ஸ்ரைன்மையர் அழைக்கவிருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. புதியதொரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுகின்ற வரை நாடாளுமன்றத்தின் செயல்படுவதற்கான திறனை உத்தரவாதம் செய்வதற்காக என்று சொல்லப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற பெரும் குழுவில் AfD பிரதிநிதித்துவம் கொண்டுள்ளது. மாபெரும் கூட்டணி தொடருமானால், AfD பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையாக ஆகும்.

அத்தனை நாடாளுமன்றக் கட்சிகளும் மக்களின் முதுகுக்குப் பின்னால் சூழ்ச்சி செய்வதை சோசலிச சமத்துவக் கட்சி (The Sozialistische Gleichheitspartei - SGP) உறுதியாக எதிர்க்கிறது, அது மீண்டும் தேர்தலை நடாத்தக் கோருகிறது. இராணுவவாதம் மற்றும் சமூகத் தாக்குதல்களது கொள்கைகளை தொடர்வதற்கு முற்றிலும் எந்த ஜனநாயகரீதியான ஆதரவும் இல்லை. CDU/CSU மற்றும் SPD செப்டம்பரில், பெடரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது முதலான தமது ஆகமோசமான முடிவுகளைப் பெற்றன, ஒட்டுமொத்தமாக 14 சதவீத வாக்குகளை இழந்தன.

வலது நோக்கிய நகர்வானது தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிசக் கட்சி உருவாக்கப்படுவதன்  மூலமாக மட்டுமே தடுத்துநிறுத்தப்பட முடியும் என்பதை SGP தனது அறிக்கையில் விளக்கியது. “SPD, இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி உட்பட முதலாளித்துவக் கட்சிகளின் உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்தவும்” முதலாளித்துவம், போர் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான ஒரு சோசலிச மாற்றினைக் கட்டியெழுப்புவதற்குமே தேர்தலை மீண்டும் நடாத்தும் கோரிக்கையை SGP எழுப்பியது.