ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Racialist attack on Muslims in Gintota

இலங்கை: கின்தொடவில் முஸ்லீம்கள் மீது இனவாத தாக்குதல்

By Ratnasiri Malalagama and Nandana Nanneththi
21 November 2017

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரான காலியில் உள்ள கின்தொட பிரதேசத்தில், சிங்கள–பௌத்த குண்டர்கள், முஸ்லீம்கள் மீது தொடர் வன்முறைத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

மூன்று பள்ளிவாசல்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன. முஸ்லீம்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உட்பட 60 கட்டிடங்கள் பொல்லுகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த கும்பலால் சேதமாக்கப்பட்டன. ஹபுகல, அம்பிட்டிய, காலிவீதி, கின்தொட மற்றும் வெலிவிட்டிமோதர ஆகிய பிரதேசங்களில் சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு இரவு 8 மணியளவில் அவர்கள் தீ வைத்தனர்.

சனிக்கிழமை, உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் நடந்ததை அறிய பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு சென்றனர். இந்த தாக்குதல்களை ஒழுங்கு செய்ததில் ஒரு தொகை பௌத்த பிக்குகள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு மணித்தியாலத்துக்கு முன்னர், பிரதேசத்தில் உள்ள ஒரு பௌத்த கோயிலான தூபாராமயவில் ஒரு கூட்டத்தினை நடத்தியிருந்ததாக முஸ்லீம் குடியிருப்பாளர்கள் எமக்குத் தெரிவித்தார்கள்.

ஹில்ரூ மசூதி சாலையில் ஒரு எரிந்த மோட்டார் சைக்கிள்

வெள்ளிக்கிழமை மாலை 4.17 மணியளவில், காலியில் இருக்கும் ஒவ்வொருவரும் “கின்தொட தூபாராமய புத்த கோயிலில் முஸ்லீம்களுக்கு எதிராக ஒன்று கூடுமாறு” உச்சித அருணோத குணசேகர என்னும் தனிநபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த வன்முறைத் தாக்குதல், பிக்குகளால் விகாரையில் வைத்துக் கலந்துரையாடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வார முற்பகுதியில் இதனுடன் தொடர்புபட்ட இரண்டு சிறு சம்பவங்களை முஸ்லீம் எதிர்ப்பு மனோநிலையை கிளப்பிவிடவும் மற்றும் மிலேச்சத்தனத்தை கட்டவிழ்த்துவிடவும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

நவம்பர் 13ம் திகதி, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுகொண்டிருந்த ஒரு சிங்கள் இளைஞன், ஒரு முஸ்லீம் தாயாரையும் மகளையும் இடித்துவிட்டார். இதில் மூன்று பேரும் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர், அவர்கள் அன்றே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். விபத்து சம்பந்தமான பிரச்சினை உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரண்டு தரப்புக்கும் இடையில் உடனடியாகவே தீர்த்து வைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டியவர், பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் 25,000 ரூபாவை நட்ட ஈடாக வழங்கினார்.

அடுத்த நாள் மாலைநேரம், சில சிங்கள் மற்றும் முஸ்லீம் இளைஞர்களுக்கு இடையில் வெடித்த முரண்பாட்டின் மூலம் ஒரு முஸ்லீம் இளைஞன் காயப்பட்டதுடன், சிங்களவர்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகள் தாக்கப்பட்டன. இந்த முரண்பாடுகளுடன் தொடர்புபட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும் இரண்டு சிங்கள இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

சிங்கள தீவிரவாதிகள் இந்தப் பிரச்சினையை பற்றிப்பிடித்துக் கொண்டு, இந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாத சாதாரண முஸ்லீம் குடும்பங்களை இலக்கு வைக்க ஆரம்பித்தார்கள்.

 “அமைதியை ஏற்படுத்தல்” என்ற பேரில் பொலிசார் கிராமங்களில் இறக்கப்பட்டனர், ஆனால் பொலிசாரின் வருகை சிங்கள குண்டர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. உண்மையில், வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர், 9 மணிக்கே பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தது. இனவாதிகள், இரவு 11 மணிவரை தங்கள் நடவடிக்கைகளை பிரதேசம் முழுவதும் தொடர்ந்தனர்.

முஸ்லீம் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என நமது நிருபர்களிடம் விளக்கினர். ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களால் நேரடியாக தங்கள் சமூகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், பொலிசார் அவர்களுக்கு தந்திரமாக ஆதரவளித்ததாகவும் அநேகமானவர்கள் தெரிவித்தார்கள்.

அம்பிட்டியவில், முஹமட் அலி கூறியதாவது: “குண்டர்கள் ஒருமுறை வீடுகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தவுடன், நாங்கள் பொலிசாருக்கு தொலைபேசியில் தெரிவித்தோம். இரவு 9.02க்கு இறுதியாக அழைப்பு ஏற்படுத்தினோம். இதே மாதிரி நூற்றுக் கணக்கான அழைப்புக்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன. பொலிசாரால் இந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். எமது இடங்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பொலிஸ் ஜீப் அதனைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது, ஆனால் நிறுத்துவதற்கு எதனையும் செய்யவில்லை.” மொகமட்டின் முச்சக்கர வண்டி குண்டர்களால் எரிக்கப்பட்டதால், அவரது ஜவனோபாயம் அபகரிக்கப்பட்டுள்ளது.

ஹனீரின் எரிந்த மோட்டார் சைக்கிள்

வெலிவிட்டிமோதரவில் இருந்து எம்.ஏ. ஹனீர், குண்டர்கள் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டதாக கூறினார். மோட்டார் சைக்கிளுக்காக அவர் இன்னமும் தவணைக் கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்.

ஹிலுறு பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த இன்னொரு முச்சக்கர வண்டிச் சாரதியான முஹமட் நிஸார் கூறியதாவது: “ஒரு திட்டமிட்ட குழு, இந்த தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது என நாங்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். ஆனால் இங்கு நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படை மாலை 6 மணியளவில் வெளியேறியிருந்தது. எந்தவொரு சம்பவத்தினைப் பற்றியும் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தோம், ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.”

முஹமட் நிஸார்

பல இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துக்களும் சூறையாடப்பட்டிருந்துடன், தனிப்பட்ட பெறுமதிமிக்க பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன. கின்தொட்டவில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தில் இருந்து 650,000 ரூபா பெறுமதியான பாதணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவும், “அமைதியைப் பேணுவதாக” கூறிக்கொண்டு பொலிஸ், விசேட அதிரடிப்படை அதேபோல் இராணுவம் மற்றும் கடற்படையினரை அணிதிரட்டுவதற்காக உடனடியாக இந்தச் சம்பவங்களை பற்றிக்கொண்டனர். விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

முந்தைய இனவாத தாக்குதல்களைப் போலவே, இந்தப் படைகளின் அணிதிரள்வு வன்முறையை நிறுத்துவதற்கு எதனையும் செய்யவில்லை. உண்மையில், சிங்கள தீவிரவாதக் குழுக்கள், பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் ஆதரவுடன் இயக்கப்பட்டன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர “பொய் பிரச்சாரத்தினை பரப்பியவர்களுக்கு எதிராக” நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனல் குணசேகரவின் அச்சுறுத்தல், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களை உக்கிரமாக்குவதற்குமான அடிப்படையாக இருக்கும்.

முஹமட் மற்றும் அவரது மகன் சேதமடைந்த வீட்டின் முன்

இலங்கை பொலிஸ்மா அதிபர் இந்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, இந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பானவர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பிரதமர் விக்ரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் காலியில் இருந்து பல அமைச்சர்களும் விஜயம் செய்து “அமைதியாக வாழுங்கள்” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அரசாங்கம் எதிர்காலத்தில் இனவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்களுக்கான நட்டஈடு முழுமையாக வழங்கப்படும் எனவும் உத்தரவாதமளித்தனர்.

இந்த உறுதிமொழிகள் பெறுமதியற்றவையாகும். சிங்கள–பௌத்த இனவாத குழுக்களும் அதனோடு இணைந்த கும்பல்களும் இராஜபக்ஷ அரசாங்க ஆட்சியில் போலவே சிறிசேன–விக்ரமசிங்க அரசாங்கத்தின் தலைமையிலும்  இயக்கப்படுகின்றன.

கின்தொட பிரதேசத்தில் நடைபெற்ற அட்டூழியம் சம்பந்தமாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் கூறியுள்ளது. எவ்வறாயினும் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்களில் ஒரு சிலர் மீதே தண்டனை மட்டுப்படுத்தப்படும். தாக்குதல்களை அரசியல் ரீதியில் ஒழுங்குபடுத்தியவர்கள் தூண்டிலில் இருந்து விடுவிக்கப்படுவர்.

ஏப்ரல் மற்றும் யூன் மாதங்களுக்கிடையில், இலங்கை முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்வங்களைத் தூண்டி விட்டமைக்காக, பொதுபலசேனா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் இராஜபக்ஷவின் ஆசீர்வாத்துடன் தலைதூக்கிய பொதுபல சேனா, தற்போது சிறிசேன–விக்ரமசிங்க அரசாங்கத்தினது அரவணைப்பில் உள்ளது. 2014 ஜூனில், கொழும்பில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அலுத்கமவில் முஸ்லிம்-விரோத வன்முறைகளை பொதுபல சேனாவும் ஏனைய சிங்கள பேரினவாத குழுக்களும் கட்டவிழ்த்துவிட்டன. மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகையானோர் காயமடைந்தனர். பெருந்தொகை வீடுகள் மற்றும் கடைகள் சேதமாக்கப்பட்டன.

இவர்களின் முன்னோடிகளைப் போலவே, தற்போதை அரசாங்கமும், வளர்ந்துவரும் வேலை நிறுத்த அலைகள் மற்றும் எதிர்புக்களுக்கு முகம் கொடுப்பதற்கும், உழைக்கும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கும், பொதுபல சேனா மற்றும் சிஹல ராவய (சிங்கள எதிரொலி) மற்றும் ராவணா பலய (ராவணனின் படை) போன்ற மற்றைய தீவிர வலதுசாரி சக்திகள் மீது தங்கியுள்ளது.  இந்த அமைப்புக்களை, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக ஒரு பாசிச அதிர்ச்சித் துருப்புக்களாக எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என அரசாங்கம் கணக்கிடுகின்றது.