ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Nearly 200 million are modern slaves or child laborers

கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் நவீன அடிமைகளாகவோ அல்லது குழந்தை தொழிலாளர்களாகவோ இருக்கின்றனர்

By Trévon Austin
20 November 2017

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (United Nation’s International Labour Organization) அறிக்கையின் படி, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் நவீன அடிமைத்தனத்தினாலோ அல்லது குழந்தை தொழிலாளர் முறையினாலோ பாதிக்கப்பட்டுள்ளனர். 2016 இல், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளுமாக 40.3 மில்லியன் பேர் நவீன அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், கிட்டத்தட்ட பத்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீதம், அல்லது 151.6 மில்லியன் பேர் குழந்தை தொழிலாளர் முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கை “நவீன அடிமைத்தனத்தை”, “மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் தரங்கள் பற்றிய சர்வதேச அமைப்புமுறைகளால் தடைசெய்யப்பட்ட கட்டாயப்படுத்தலின் பல்வேறுவடிவங்கள் என வரையறுக்கின்றது. இந்த வரையறை, அடிமைத்தனம், அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. கட்டாய உழைப்பு முறையால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் குழந்தை தொழிலாளராகவும், மேலும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவிகிதம் பேர் பெண்களாகவும் உள்ளனர்.

2016 இல் எந்தவொரு குறிப்பிட்ட நாளிலும், சுமார் 16 மில்லியன் தனிநபர்கள் தனியார் துறையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானோர் உள்நாட்டு, கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தப்பியோடுவதற்கோ அல்லது விடுவிக்கப்படுவதற்கோ முன்னர், சராசரியாக 20.5 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படுகின்றனர்.

4.8 மில்லியன் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தப்பியோடுவதற்கோ அல்லது விடுவிக்கப்படுவதற்கோ முன்னர், சராசரியாக 23.4 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் பெருமளவில் பெண்களும், சிறுமிகளும் மற்றும் குழந்தைகளுமாகவே உள்ளனர்.

பிராந்தியவாரியாக பார்த்தால், ஆபிரிக்காவில்தான் ஒவ்வொரு 1,000 பேருக்கு 7.6 வீதம் என நவீன அடிமைத்தனத்தின் மிக உயர்ந்த விகிதம் உள்ளது. இந்த விகிதம் ஆசியா மற்றும் பசிபிக்கில், ஒவ்வொரு 1,000 பேருக்கு 6.1 வீதம்; ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 3.9 வீதம்; அராபிய நாடுகளில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 3.3 வீதம்; அமெரிக்காவில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 1.9 வீதம் என்று உள்ளது. போரினால் சமீபத்தில் சூறையாடப்பட்ட அல்லது அழிந்து போயுள்ள நாடுகள் தான் அதிகளவிலான சுரண்டலை அனுபவிக்கின்றன.

ILO அதன் வரையறைக்குள், சட்டபூர்வமான வேலைவாய்ப்புகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை உட்படுத்தவில்லை. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட வரையறை, அபாயகரமான, பல மணிநேரங்களைக் கோருகின்ற, விளையாடும் மற்றும் படிக்கும் குழந்தைகளை பெரும்பாலும் தடுக்கின்ற, மற்றும் அவர்களது நல்வாழ்வை ஆபத்திற்கு உட்படுத்துகின்ற வேலைகளை உள்ளடக்கியது. இந்த வரையறையின் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆய்வு, உலகெங்கிலும் நிலவும் குழந்தை தொழிலாளர் முறையின் அதிர்ச்சியுற வைக்கும் ஒரு வடிவமைப்பை தருகிறது.

ஆய்வின்படி, குழந்தை தொழிலாளர்களாகவுள்ள குழந்தைகளில் (72.5 மில்லியன்) பாதிக்கும் சற்று குறைந்தவர்கள் அவர்களது ஆரோக்கியம், பாதுகாப்பு அல்லது தார்மீக வளர்ச்சியை ஆபத்திற்கு உட்படுத்தும் அபாயகர வேலைகளையே செய்கின்றனர். 5 முதல் 11 வயதிற்கு இடைப்பட்ட 19 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள்; 12 முதல் 14 வயதிற்கு இடைப்பட்ட 16.3 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள்; 15 முதல் 17 வயதிற்கு இடைப்பட்ட 37 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் என அனைவருமே அபாயகரமான வேலையில் தான் ஈடுபட்டுள்ளனர். இந்த குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் மணி நேரங்களோ இன்னும் பயங்கரமானது. குழந்தை தொழிலாளர்களில் 15 முதல் 17 வயதிற்கு இடைப்பட்டவர்களில் தோராயமாக 63.3 சதவிகிதத்தினர் ஒரு வாரத்திற்கு 43 அல்லது அதற்கு கூடுதலான மணிநேரங்களுக்கு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட முக்கால் பங்கினர் கல்வியறிவு பெறமுடியாதவர்களாக உள்ளனர். அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அவர்களது சக பணிபுரியாத குழந்தைகளை விட மிக மோசமாக செயலாற்றும் போக்கையே கொண்டுள்ளனர். வேலை செய்வதற்கென செலவழிக்கப்படும் நேரமும் சக்தியும், வகுப்பு நேரங்களில் முற்றாக பெறப்படும் நன்மைகளையும், வகுப்பறைக்கு வெளியில் பயிலும் நேரத்தை பெறுவதற்கான சாத்தியப்பாட்டையும் தடுக்கின்றது.

நவீன அடிமைத்தனத்தை போலவே, மோதல்களினாலும், பேரழிவினாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் கணிசமான விகிதத்தில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 17 சதவிகித குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர், அதாவது கிட்டத்தட்ட உலகளாவிய சராசரியை விட இரு மடங்காகும்.

ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொலம்பியா, ஈராக், மாலி, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தெற்கு சூடான், உக்ரேன், யேமன் மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்ட நாடுகள் இந்த அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் கிடைக்கப் பெறாததால் சிரியா மற்றும் லிபியா உள்ளிட்ட மற்ற நாடுகள் அதில் உட்படுத்தப்படவில்லை.

ஆபிரிக்காவில், ஐந்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீதம் குழந்தை தொழிலாளராக இருப்பதானது, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை அடுத்து, இந்த பிராந்தியத்தை பெருமளவு குழந்தை தொழிலாளர்கள் கொண்ட பகுதியாக்குகிறது. இருப்பினும், குறைந்த வருமானம் உள்ள பகுதியில் மட்டுமே குழந்தை தொழிலாளர் முறை இருப்பதாக அர்த்தம் இல்லை. உண்மையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேலானோர் குறைந்த நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர் என்பதோடு, 1.3 சதவிகிதத்தினர் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் தான் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.

உலகளவில் 2012 இல் இருந்து குழந்தை தொழிலாளர் சதவிகிதம் சிறிது வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அது உப-சஹாரா ஆபிரிக்காவில் உண்மையில் அதிகரித்துள்ளது.

அடிமைத்தனம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை எனும் தொற்றானது முதலாளித்துவ சுரண்டலின் ஒரு அம்சமாகும். கட்டாய தொழிலாளர் முறை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் தனியார் துறையில் 150 பில்லியன் டாலர் வரை இலாபங்கள் உருவாக்கப்படுகின்றன என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization-ILO) மதிப்பிடுகிறது.

நவ காலனித்துவ சுரண்டலினாலும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த பிரச்சினை இன்னும் தீவிரமடைந்துள்ளது. இந்த வாரம் CNN இல் வெளியான ஒரு காணொளிப்பதிவு, ஒபாமா நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட அமெரிக்க ஆதரவிலான போரினால் அழிக்கப்பட்ட லிபியாவில், விவசாய தொழிலாளர்களாக இருந்த இளைஞர்கள் ஏலத்திற்கு விடப்பட்டு வருவதைக் காட்டியது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து உலகெங்கிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள், கார்கள் மற்றும் கணினி உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் சுரங்க வேலைகளில் ஏழு வயதிற்கு குறைவான சிறு குழந்தைகள் கொடூரமான நிலைமைகளில் வேலை செய்கின்றனர் என்று சர்வதே மன்னிப்புச்சபை (Amnesty International) இன் 2016 ஆய்வு தகவல் வெளியிட்டது. இந்த சுரங்கங்கள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் வோடஃபோன் போன்ற பெருநிறுவனங்களுக்கு விநியோகம் செய்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையும், தொழிற்துறை நாடுகளின் தலைவர்களும், நவீன அடிமைத்தனம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்கு செயலற்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுள்ளனர். இந்த தொற்று என்பது சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய கேள்வி அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் பலாபலனாகும்.