ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

රොහින්ගියානු සරනාගතයන් ආරක්ෂා කරනු!

ரொஹிங்யா அகதிகளை பாதுகாத்திடு!

By Pani Wijesiriwardana
5 October 2017

மியன்மார் இராணுவத்தின் கொடூர தாக்குதலின் காரணமாக தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடிவரும் இலட்சக் கணக்கான ரொஹிங்ய அகதிகள் தமது நாடுகளுக்குள் நுழைவதை தடுத்தும், உள் நுழைந்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தும், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உட்பட பிராந்தியத்தில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத மனிதநேயமற்ற நடவடிக்கைகளை தெற்காசியாவிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். அதேபோல் பேரினவாத பாசிச கும்பல்களின் கொடூரங்களில் இந்த அகதிகளை பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் முன்வர வேண்டும்.

மியன்மாரில் மேற்குப் பிராந்தியமான ரகினேயில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த ரொஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக, ஆன் சாங் சுகி அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கொடூரமான இராணுவ நடவடிக்கை, அந்த நாட்டு ஆட்சியாளர்களால் நீண்ட காலமாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத பாரபட்சங்கள் மற்றும் ஒடுக்குமுறையின் புதிய வளர்ச்சியாகும். “சுயநிர்ணயத்துக்காக” போராடும் ரொஹிங்கிய கிளர்ச்சிக் குழுவினால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று இராணுவத்தின் மீது தொடுக்கப்பட்ட சில சிறிய தாக்குதல்களை வேட்டையாடலுக்கு சாக்காகக் கொண்டு, சுகி அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை “இன சுத்திகரிப்புக்கான பாட நூல் உதாரணம்” என பெயரிட்டுள்ளது.

ரகினேயில் வாழ்ந்த 13 இலட்சம் ரொஹிங்கியர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது சுமார் 5 இலட்சம் பேர், அயலில் உள்ள பங்களாதேஷிற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர். சர்வதேச அகதிகள் சட்டத்தின் படி, அவர்கள் இப்போதே அகதிகளாக கணிக்கப்படும் காரணத்தால், ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளும் கேட்டுக்கொண்டாலும், ரொஹிங்கியர்களுக்கு பங்களாதேஷிற்குள் உத்தியோகபூர்வ அகதிகள் நிலைமையை வழங்கப் போவதில்லை என ஷேக் ஹசினாவின் அரசாங்கம் மீண்டும் மீண்டும் சபதம் செய்கின்றது. செப்டெம்பர் 24 நிருபர்கள் மாநாட்டில் பேசிய தொழிற்துறை அமைச்சர் அமீர் ஹுசைன் அமு, “ரொஹிங்கியர்களுக்கு அகதிகள் நிலைமையை கொடுக்கும் எந்தவொரு திட்டமும்” கிடையாது என கொடூரமாக கூறினார்.

இதற்கிடையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள் பற்றிய தரவுகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அகதிகள் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்குள் மீண்டும் தள்ளப்படும் போது அடையாளம் காணுவதற்கு வசதியாக இதைச் செய்வதாக ஹுசைன் அமு வெட்கமின்றி வெளிப்படுத்தினார்.

“இந்த நடிவடிக்கையின் கீழ் உள்ள காரணம், ரொஹிங்கியர்களின் தரவுகளை சேகரிப்பதே. அவர்களை அவர்களது இடங்களுக்கு மீண்டும் அனுப்புவது அவசியம்.”

பாதிக்கப்பட்ட அகதிகளான ரொஹிங்கியர்களுக்கு அகதிகள் அந்தஸ்த்தை உத்தியோகபூர்வமாக வழங்கும் போது, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை, சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் தமது நாடு கைச்சாத்திட்டிருக்கவில்லை என்ற சாக்குப் போக்கின் கீழேயே, பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாமல் இருப்பதும் கூட, பங்களாதேஷ் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் வரலாற்று பிற்போக்குத்தனம் பற்றிய தெளிவான வெளிப்பாடாகும்.

எவ்வாறெனினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, மனித உரிமைகள் கண்காணிப்பக அகதிகள் திட்டத்தின் இயக்குனர் பில் ஃப்ரெலிக்மட், பங்களாதேஷ் சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும், “சர்வதேச சம்பிரதாய சட்டங்களின்” படி, பாதுகாப்புத் தேடி வரும் மக்கள் குழுவினரை அவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படக் கூடிய இடத்துக்கு மீண்டும் தள்ளிவிடாமல் இருக்க அந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது, என்றார்.

இருப்பிடங்களை இழந்து தமது பிள்ளைகளுடன் பட்டினியாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடந்து அடைக்கலம் தேடி வரும் இந்த அப்பாவி மக்களை மீண்டும் முதலையின் வாயிற்குள் திருப்பி அனுப்பும் மிலேச்சத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பங்களாதேஷ் மட்டுமல்ல. தப்பி வரும் அகதிகள் நாட்டுக்குள் நுழையாமல் இருக்கும்படி, கடும் இராணுவ காவலரண்களை பயன்படுத்தி இந்தியாவில் மோடி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டம் இங்கு மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய அகதிகள் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, இந்திய தென்மேற்கு எல்லையில் பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். செப்டெம்பர் 22 ராயிட்டர் செய்தியின் படி, அகதிகளை தடுப்பதற்காக மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மோடி அரசாங்கம் பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது. நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை விரட்டுவதற்காக, மிளகாய்த் தூள் குண்டுகளையும், கண்களை மங்கச் செய்யும், மற்றும் காதுகளை அடைக்கச் செய்யும் “ஸ்டன் கிரனேட்டுகளை” பயன்படுத்துமாறு தமது படையினருக்கு கட்டளையிட்டுள்ளதாக மேற்கு வங்காள எல்லையின் பாதுகாப்பு படைகளை இயக்கும் பிரதி பரிசோதகர் ஜெனரல் ஆர்.ஜி.எஸ். ஜஸ்வால் ஏற்றுக்கொண்டுள்ளார்.

செப்டெம்பர் 27, இந்து பத்திரிகை செய்தியின் படி, திருபுரா பிராந்தியத்துக்குள் நுழைய முயற்சித்த ரொஹிங்கியர்கள் பாதுகாப்பு படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் மணிப்பூர் பிராந்தியங்களின் முதலமைச்சர்களும், தமது பிராந்தியங்களுக்குள் ரொஹிங்கியர்கள் நுழைவதை தடுப்பதற்காக, எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

காவல் அரண்களை கடந்து நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை திருப்பி விரட்டும் புது டில்லி அரசாங்கம், இப்போதே நாட்டுக்குள் நுழைந்துள்ள சுமார் 40,000 ரொஹிங்கியர்களை திருப்பி அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றது. கடந்த மாதம் மோடி மியன்மார் விஜயம் செய்திருந்தபோது, அவர் ரகினேயில் இடம்பெறும் இராணுவ வன்முறைகள், “தீவிரவாத தாக்குதல்களுக்கு” கொடுக்கும் பதிலடிகளே என சுகி அரசாங்கத்தின் கதையை வஞ்சத்தனமாக அங்கீகரித்தார்.

ரொஹிங்கிய அகதிகள் சம்பந்தமாக இலங்கையில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை, மோடி அரசாங்கத்தினதும் ஹசினா அரசாங்கத்தினதும் கொள்கைகள் மட்டத்துக்கு கொடூரமானதாகும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவால் கல்கிசை பாதுகாப்பு முகாமில் வைத்திருந்த ரொஹிங்கிய அகதிகள் மீது, பௌத்த பிக்குகளின் தலமையில் பாசிச குண்டர்கள் நடத்திய மிலேச்ச தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கம் முழு மௌனமாக இருக்கின்றது.

தாக்குதல்களை எதிர்ப்பது ஒரு புறம் இருக்க, அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் இந்த அடிப்படைவாத கும்பல்களுக்கு ஆதரவளித்து அரசாங்கத்தின் புலம்பெயர் விரோத கொள்கைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். துறைமுக மற்றும் கப்பற்படை நடவடிக்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை அகதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டிருக்கவில்லை, என ஊடகங்களிடம் கூறினார். கூடுமானவரையில் மியன்மார் அகதிகளை ஒரு மூன்றாவது நாட்டுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, அவர் இந்த அடிப்படைவாத கும்பல்களை திருப்திப்படுத்தும் வகையில் அவர் தெரிவித்தார்.  

தான் விரும்பிய எந்தவொரு நாட்டிலும் வாழ்வதற்கு அகதிகள் உட்பட சகல மனிதர்களுக்கும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமையாகும். இந்த உரிமையை கொடூரமாக நசுக்கி, பலாத்காரமாக அகதிகளை வெளியேற்றும் மற்றும் நாட்டுக்குள் வருவதை தடுக்கும் இந்த பிற்போக்கு வேலைத்திட்டம், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி, கொழும்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் உட்பட இந்திய துணைக்கண்ட ஆளும் வர்க்கத்தினதும் கொள்கையாகும்.

இலங்கை ஆளும் வர்க்கமானது, மூன்று தசாப்த காலங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றும், பத்தாயிரக்கணக்கான அகதிகளையும் உருவாக்கிய, மியன்மாரில் ரக்னேயில் நடைபெறும் இராணுவ குற்றங்களுக்கு சமனான, மற்றும் சில சமயம் அவற்றையும் விஞ்சும் போர்க் குற்றங்களை செய்த ஆளும் கும்பலாகும். அவர்களின் ஒட்டுமொத்த ஆட்சிக் காலத்திலும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக சிங்கள-பௌத்த பேரனவாதத்தையே பயன்படுத்தினர். இதன் நேரடி விளைவாகவே, பௌத்த பிக்குகள் தலைமையிலான தமிழர் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு பாசிச கும்பல்கள் வளர்ச்சியடைந்தன. தேவையான போது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மூர்க்கமாக பயன்படுத்திக்கொள்ளும் குறிக்கோளுடன் கொழும்பு ஆளும் வர்க்கம் இந்த அமைப்புகளை வளர்த்தெடுத்துள்ளது.

இலங்கையில் அடிப்படைவாத பௌத்த பிக்குகள் கும்பல்களுக்கும், மியன்மாரில் செயற்படும் பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தைக் கொண்ட அத்தகைய கும்பல்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளது. விசேடமாக முஸ்லிம் எதிர்ப்பு ஆத்திரமூட்டல்கள் சம்பந்தமாக இலங்கையில் பேர் போன பொதுபல சேனா அமைப்பு, மியன்மாரில் முஸ்லிம்-விரோத பௌத்த அடிப்படைவாத அமைப்புகளுடன் நீண்ட காலமாக சேர்ந்து வேலை செய்து வந்துள்ளது. 2014 செப்டெம்பரில், பொதுபல சேனா கொழும்பில் நடத்திய “மாநாட்டில்” விசேட அதிதியாக கலந்துகொண்டவர், தமது முஸ்லிம்-எதிர்ப்பு ஆத்திரமூட்டல்களால் பிரசித்தி பெற்ற மியன்மாரின் அஸின் விராது என்ற பௌத்த பிக்குவே ஆவார்.

“பௌத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் இஸ்லாமியவாதமே” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட, “969” என்ற பெயரிலான அமைப்பின் தலைவரான விராது, பொதுபல சேனா அமைப்புடன் கைகோர்த்து வேலை செய்வதாக, அந்த மாநாட்டில் சபதம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொதுபல சேனா உட்பட இந்த அடிப்படைவாத கும்பல், தமது முஸ்லிம்-எதிர்ப்பு பிரச்சாரத்தை புதிய மட்டத்துக்கு உயர்த்துவதற்காக, ரொஹிங்கிய அகதிகள் பிரச்சினையை சூட்சுமமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றது. கல்கிஸையில் ரொஹிங்கிய அகதிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அதன் ஒரு பாகமாகும்.

பூகோள முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடியின் மத்தியில், ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தை கரைத்துவிடுவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கே, உலகம் பூராவும் இந்த கருத்தியல்வாத பிரதிபலிப்பு முன்கொணரப்பட்டுள்ளது. தாம் சிக்கிக்கொண்டுள்ள பிரதான பொறி முதலாளித்துவ அமைப்பு முறையே என்ற சிந்தனையில் இருந்து, தொழிலாள வர்க்கத்தை திசை திருப்புவதே இந்த பிளவுபடுத்தலின் நோக்கமாகும்.

சிரேஷ்ட புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலகப் போரின் போது, நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டத்தில் பின்வருமாறு எழுதினார்: “மனித நாகரீகத்துக்கு முழுமையாக முடிவுகட்டுவதற்கு அல்லது குருதியில் மூழ்கடிப்பதற்கு முன்னதாக, முதலாளித்துவமானது தேசிய மற்றும் இனத்துவேச நச்சுப் புகையில் உலக நிலைமையை மாசுபடுத்தும்.” ட்ரொட்ஸ்கியின் இந்த சொற்கள், மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் உள்ள இன்றைய சூழ்நிலைக்கு, அன்றைய சூழலைவிட பொருத்தமானதாகும். ஏகாதிபத்தியத்துக்கும் நிதிய சிறுகுழு ஆட்சிக்கும், அதன் கைக்கூலிகளான பின்தங்கிய நாடுகளில் உள்ள “தேசிய முதலாளித்துவத்துக்கும்” எதிராக, சோசலிசத்துக்கான பொதுவான போராட்டத்தின் மூலம் மட்டுமே, முதலாளித்துவத்தின் இந்த பிற்போக்கு தாக்குதலை தோற்கடிக்க முடியும்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களின் தலைமையில் தேசிய முதலாளித்துவத்துடன் செய்த சதியின் மூலமே, 1947-48ல் தெற்காசியாவை இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்தி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பர்மா மற்றும் பின்னர் பங்களாதேஷும் ஸ்தாபிக்கப்பட்டன. தொழிலாளர்களை, கோடிக்கணக்கான வறியவர்களை இனவாதத்தை தூண்டிவிட்டு பிளவுபடுத்தி, ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதே அதன் இலக்காக இருந்தது. இந்த அரசுகள், யதார்த்தத்தில், அவற்றில் வாழும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறைக் கூடங்களாகும்.

உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் புவி அரசியல் பதட்டங்களில் நசுங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் புரட்சிகர எழுச்சி சம்பந்தமாக பீதியடைந்திருக்கும் இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள், இனவாதத்தை தூண்டிவிடுவதை உக்கிரமாக்கியுள்ளன. ஏகாதிபத்தியவாதிகளும் இந்த முதலாளிகளும் தம்மாலேயே உருவாக்கப்பட்ட அகதிகளையே இந்த தீமூட்டல்களுக்கான பகடைக்காய்களாக பயன்படுத்தும் விதம் ரொஹிங்கியர்கள் மீதான மிலேச்சத் தாக்குதல்களில் தெளிவாகின்றது.

இதை நிறுத்துவதற்கு தெற்காசியாவில் தொழிலாள வர்க்கம் முன்னணிக்கு வர வேண்டும். தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பூமியில் மனிதனுக்கு தான் விரும்பும் இடத்தில் வாழும் அடிப்படை உரிமையை ஸ்தாபிக்க முடியும். முதலாளித்துவ அரச எல்லைகளை தூக்கியெறியும், தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காகப் போராடுவது, இந்த உரிமையை ஸ்தாபிப்பதுடன் பிணைந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராடுகின்றது.