ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Foreign minister Gabriel promotes German big power politics

வெளியுறவுத்துறை அமைச்சர் காப்ரியேல் ஜேர்மன் வல்லரசு அரசியலை ஊக்குவிக்கிறார்

By Peter Schwarz
6 December 2017

செவ்வாயன்று, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் வெளியுறவு கொள்கை மீதான ஒரு முக்கிய உரையில், அமெரிக்காவை புறக்கணிக்கவும் மற்றும் ஜேர்மன் நலன்களின் அடிப்படையிலான வல்லரசு கொள்கைக்காகவும் மன்றாடினார். சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) இந்த அரசியல்வாதி பேர்லினில் உள்ள Körber அமைப்பின் வெளியுறவு கொள்கை பேரவையில் உயர்மட்ட வல்லுனர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தார்.

காப்ரியேல் என்ன கூறினாரோ அதில் முற்றிலும் புதியதுமான ஒன்றல்ல; அவரும் ஏனைய முன்னனி ஜேர்மன் அரசியல்வாதிகளும் நான்காண்டுகளாக இதே தொனியில் தான் வாதிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தளவுக்கு ஜேர்மனி ஓர் ஆக்ரோஷ வல்லரசு கொள்கைக்குத் திரும்புவதை பகிரங்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியதில்லை.

“நாம் அமெரிக்க ஐக்கிய அரசின் பாத்திரத்தை எவ்விதத்தில் பாதுகாப்பானதென கருதி வந்துள்ளோமோ —சிலவேளைகளில் பிரச்சினைகள் இருந்தாலும் கூட— அந்த மறைமுகமான பாதை சுக்குநூறாக நொருங்க தொடங்கி உள்ளது,” என்றார். அமெரிக்க நிர்வாகத்தால் "போட்டியாளராக, சிலவேளைகளில் ஒரு எதிர்ப்பாளராக கூட, கருதப்படும் பல பிரதேசங்களில் ஒன்றாக" ஐரோப்பா கருதப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் கூட, இது இவ்வாறு தான் இருக்குமென அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்: “ஒரேயொரு ஜனாதிபதியின் கொள்கையாக அமெரிக்கா பின்வாங்கிவிடாது. அடிப்படையில் அது அடுத்த தேர்தலுக்குப் பின்னரும் கூட மாறப்போவதில்லை.”

எதிர்காலத்தில் ஜேர்மனி இன்னும் நம்பிக்கையோடு அதன் நலன்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார். அது, “வாஷிங்டன் முடிவெடுக்கும் வரையிலோ அல்லது அவர்கள் விடையிறுக்கும் வரையிலோ காத்திருக்க" முடியாது. வாஷிங்டன் ஜேர்மன் அரசாங்கத்துடன் "சண்டையில்" உள்ளதா என்பதை அது மிகவும் அமைதியாக ஆராய்ந்து, அமெரிக்காவை நோக்கி மிகவும் சுதந்திரமான கொள்கை ஒன்றை அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கும்.

காப்ரியேல் புள்ளிகளை உறுதியாக குறிப்பிட்டார், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தடையாணைகளை விதித்த நிலையில், அது "நமது சொந்த பொருளாதார நலன்களை" நெருக்கடிக்கு உள்ளாக்கியது, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் ஏற்படவிருந்த அணுஆயுத உடன்படிக்கையை இரத்து செய்தும், ஜெரூசலமை இஸ்ரேலின் தலைநகராக சாத்தியமானளவுக்கு அங்கீகரித்தும் வாஷிங்டன் ஜேர்மனியை "சண்டைக்கு" நிறுத்தி உள்ளது.

உலகம் "மிக அதிகளவில் அசௌகரியமாகி" இருப்பதாக காப்ரியேல் தெரிவித்தார். நம் நாட்டில் மிகப் பெரியளவில் பொருளாதார செல்வவளம் இருந்தும் கூட சர்வதேச அரசியலின் பக்கவாட்டில் நமக்கு ஏதும் சௌகரியமான இடமில்லை என்பதை இப்போது நாம் உணர்கிறோம். நமக்கு ஜேர்மனியர்களாகவும் இல்லை, ஐரோப்பியர்களாகவும் இல்லை."

மாறிவரும் உலக ஒழுங்கமைப்பில் ஐரோப்பா மிகப் பெரிய பாத்திரம் வகிக்க வேண்டும். அந்த வெளியுறவுத்துறை அமைச்சர், “நம்மால் செல்வாக்கு செலுத்த முடியாத, புதிய இடங்கள் பரிணமித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது,” என்றார். “ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த நலன்கள் மற்றும் திட்டங்களை வரையறுத்தால் மட்டுமே, அதன் அதிகாரத்தை அதனால் காப்பாற்றி கொள்ள முடியும்.”

அதுபோன்றவொரு ஐரோப்பிய பலத்தைக் காண்பிக்காவிட்டால், எங்கெல்லாம் அமெரிக்கா பின்வாங்குகிறதோ, அங்கே மற்ற அரசுகள் முன்னேறும் —மத்திய கிழக்கில் ரஷ்யா, மற்றும் ஆபிரிக்காவில் சீனா— என்று காப்ரியேல் எச்சரித்தார். இந்நாடுகள் "அவற்றின் அந்தஸ்திற்காக ஒரு வித 'வல்லரசு வரி' செலுத்த தயாராக இருக்கின்றன என்றார். இவை, “பிராந்திய தலைமை மற்றும் தேசிய இறையாண்மையைக் காண்பிக்க" பொருளாதார இழப்புகளைப் பொறுத்துக் கொள்வதுடன், இராஜாங்க நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கி கொள்கின்றன.

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மத்திய கிழக்கு குறித்த அவர் கருத்துக்களில், “பலத்தைக் காண்பித்தல்" என்பது இராணுவ பலத்தைப் பாரியளவில் பயன்படுத்துதல் என்று அர்த்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தினார். 1991 இல் இருந்து அமெரிக்கா ஏறத்தாழ தடையின்றி, ட்ரில்லியன் கணக்கில் செலவிட்டு, போரில் இருந்துள்ளது என்றபோதும், இந்த மூலோபாய பிராந்தியத்தில் "மேற்கு" பொறுப்பேற்க தவறியதைக் குறித்து காப்ரியேல் குறைகூறினார்: “கடந்த ஏழாண்டுகளில், மேற்கு, அதன் இலட்சிய தேவைகளுக்கும் மற்றும் இதற்காக பயன்படுத்துவதற்கான ஆதாரவளங்களுக்கும் இடையே காரண காரியத்துடன் உறவை ஒருபோதும் ஸ்தாபித்திருக்கவில்லை.” ஆனால் “மென்மையாக பேசுங்கள் ஆனால் ஒரு பெரிய தடியை வைத்திருங்கள்,” என்ற தியோடர் ரூஸ்வேல்டின் குறிக்கோளைப் பின்தொடர்வதற்கு பதிலாக, “நமது சிரியா கொள்கை", “உரக்க பேசுங்கள், ஆனால் ஒரு சிறிய குச்சியை வைத்திருங்கள்,” என்று எதிர்தரப்பில் இருந்தது.

ஜேர்மனியின் வல்லரசு அரசியல் தார்மீக மதிப்புகளால் தடுக்கப்பட கூடாது என்று காப்ரியேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்: “ஜேர்மனியர்களாகிய நாம், நமது வெளியுறவு கொள்கைக்காக குறிப்பிட விரும்புவதைப் போல, இந்த பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியில் தன்முனைப்பான உலகில் நம்மை பலப்படுத்தி கொள்வதற்கு, மதிப்புகளை நோக்கிய நோக்குநிலை நிச்சயமாக போதுமானதாக இருக்காது,” என்றார்.

முப்பதாண்டுகளின் போர் மீது பேர்லின் அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முங்லெரின் சமீபத்திய நூலில் இருந்து அவர் விவரங்களை குறிப்பிட்டார். அதில் முங்லெர் கூர்மையாக "ஜேர்மனியில் வெளியுறவு கொள்கை அடுக்கைச் செயல்பட செய்யும் பணியை முன்னெடுக்கிறார்", மேலும் "ஏறத்தாழ யதார்த்தத்தை நிராகரிப்பதற்கு இணையான" ஒன்றாக, “அரசியல் சவால்களைக் கையாளும் ஒரு கருவியாக சட்டத்திற்கு" ஒரு ஜேர்மன் "நிர்ணயம்" செய்வதை நீக்கி இருந்தார். “இரக்கம் காட்டாமல் பகுப்பாராய்வது" மற்றும் "அரசியல்ரீதியில் மற்றும் மூலோபாயரீதியில் சிந்திப்பது" என்பதை விட, நமது "கருத்தூன்றிய பார்வை, எப்போதும் 'தார்மீக வழிமுறைகள் மற்றும் தவிர்க்க முடியாத நிர்பந்தங்களின் தொலைதூர எல்லைக்கு' நகர்ந்து வருகிறது.”

“இங்கே முன்ங்லெர் ஒரு பண்பட்ட புள்ளியைத் தொடுகிறார் என்று நினைக்கிறேன்,” என்று காப்ரியேல் கருத்துரைத்தார்.

அவர் வெளிப்படையாக சீனாவின் வெளியுறவு கொள்கை மீதான அவர் வியப்பை வெளிப்படுத்தினார், அது முன்னர் "அமெரிக்க பிரசன்னம் மற்றும் கொள்கைகளால் பிரத்யேகமாக தீர்மானிக்கப்பட்ட" பகுதிகளுக்குள் முன்னேறுகிறது. ஒரே இணைப்பு ஒரே பாதை திட்டம் "ஒரு புவிசார் மூலோபாய கருத்துருவாகும், சீனா இதில் அதன் ஒழுங்கமைப்பிற்கான கருத்தை அமல்படுத்துகிறது: வர்த்தக கொள்கை, புவிசார், புவிஅரசியல் மற்றும் சாத்தியமான அளவுக்கு இராணுவமும் கூட.” இது "சீனாவை குறை கூறுவதற்காக இல்லை,” ஆனால் அவரிடமிருந்து "மதிப்பும் ஆச்சரியமும்" வெளிப்பட்டது. மேற்கில் நாம், “இத்துடன் ஒப்பிடத்தக்க நமது சொந்த மூலோபாயம் எதுவும் இல்லாதிருப்பதற்காக குறை கூறப்பட" வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அவர் உரையில், காப்ரியேல் பிரான்சுடன் நெருக்கமாக செயல்படுவதற்கு ஆதரவாக பேசினார், ஐரோப்பாவில் ஜேர்மனியுடன் சேர்ந்து பிரான்சை அவர் ஓர் உந்துசக்தியாக காண்கிறார். அவர் வரிக்கு வரி ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஐரோப்பிய நடவடிக்கைகளையும் மற்றும் "பாதுகாப்பு கூட்டுறவையும்" பாராட்டியதுடன், “நிதியியல் விவகாரங்களில் பிரான்ஸ் ஜேர்மன் அளவுக்கு சிறிது உயர வேண்டும், ஜேர்மனி பாதுகாப்பு விடயங்களில் பிரான்ஸ் அளவுக்கு சிறிது உயர வேண்டுமென,” அவர் விரும்புவதாக தெரிவித்தார். மறுபுறம், அவரது உரையில் நேட்டோ குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

காப்ரியேலின் புதிய போக்கு கடந்த 70 ஆண்டு கால வெளியுறவு கொள்கை உடனான ஒரு முறிவைக் குறிக்கிறது, அந்த கொள்கையின் அடித்தளம், பேர்லின்-பாரிஸ் அச்சுடன் சேர்ந்து, வாஷிங்டன் உடனான கூட்டணியாக உருவெடுத்திருந்தது. ஜேர்மனி 1945 க்கு முந்தைய அரசியலுக்குத் திரும்பி வருகிறது. அதேநேரத்தில், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா/சோவியத் ஒன்றியம் ஆகிய அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, அது, "மத்திய சக்தியாக" அக்கண்டத்தில் மேலாதிக்கம் செலுத்த முனைந்தது—இது இரண்டு முறை பேரழிவுகரமான ஓர் உலக போருக்கு இட்டுச் சென்றது. பழைய வெளியுறவு கொள்கைக்கு திரும்புவதுடன் சேர்ந்து, கடந்த காலத்தின் ஏனைய பூதங்கள் அனைத்தும் திரும்பி வருகின்றன.

கடந்த வெள்ளியன்று அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் மாநாட்டில், வலதுசாரி இராணுவ அதிகாரிகளும், பழைய பிரபுத்துவவாதிகளும், தேசியவாத பழமைவாதிகளும் மற்றும் வெளிப்படையான நவ-நாஜிக்களும் தொலைக்காட்சி கேமராக்களின் முன்னால் அணிவகுத்தனர், ஜேர்மன் வரலாற்று குற்றங்கள் ஒருபோதும் நடந்திராததைப் போல, இந்த வெறுக்கத்தக்க காட்சிப்படுத்தல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. வலதுசாரி தீவிரவாத கட்சியின் தலைவர்கள், புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து கூட்டாட்சியின் ஜனாதிபதி உடன் பேச்சுவார்த்தை நடத்த ஜேர்மன் ஜனாதிபதி மாளிகைக்கு (Schloss Bellevue) அழைப்பட்டுள்ளனர் என்பதோடு, ஏனைய சகல கட்சிகளாலும் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றனர். உத்தியோகபூர்வ அரசியலை ஒட்டுமொத்தமாக வலதுக்கு நகர்த்த அவர்கள் அவசியப்படுகிறார்கள்.

கடந்த நான்காண்டுகளில், கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் மகா கூட்டணி பாரியளவில் ஜேர்மன் இராணுவ தகைமைகளை அபிவிருத்தி செய்ததன, ஆயுத படைகளை (Bundeswehr) புதிய போர் நடவடிக்கைகளுக்குள் இறக்கி விட்டன, மொத்த ஐரோப்பாவையும் கடுமையான சிக்கன கொள்கைக்கு உள்ளாக்கின, ஜேர்மனியிலேயே கூட வறுமையின் அளவையும் மற்றும் கடுமையான வேலை நிலைமைகளையும் பாரியளவில் அதிகரித்தன. இதனால் தான் இக்கட்சிகள் செப்டம்பர் பொது தேர்தலில் கடுமையாக தண்டிக்கப்பட்டன. இப்போது, மீண்டுமொருமுறை, இதே கொள்கையைத் தீவிரப்படுத்த மகா கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.

அவர் உரையில், காப்ரியல் இந்த அரசாங்கத்திற்கான வேலைத்திட்டத்தை நெறிப்படுத்தினார், அதில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்க எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக, வெகுஜனங்களுக்கான காப்பீட்டு திட்டங்கள், மாசு வெளியேற்றம் மீது வரம்பு நிர்ணயிப்பது மற்றும் எந்தவிதத்திலேனும் வெட்டுக்கு பலியாகக் கூடிய பிற பிரச்சினைகள் மீதான சிறிய பூசல்களுக்குள் பொதுமக்கள் திசை திருப்பிவிடப்பட்டு வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், “ஜமைக்கா கூட்டணி" (ஜமைக்கா கொடியில் இருப்பதைப் போன்று பல்வேறு கட்சி நிறங்களைக் கொண்டிருப்பதால் அவ்வாறு பெயரிடப்பட்டது) மீதான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த போது, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) குறிப்பிட்டது, ஒரு புதிய அரசாங்கம் அமைப்பது மீதான பேச்சுவார்த்தைகள் "திரைக்குப் பின்னால்" நடந்து வருகின்றன, “இது அதிகரித்தளவில் ஓர் அரசியல் சூழ்ச்சிக்கு ஒத்துள்ளது.”

“ஆளும் உயரடுக்குகள், அரசியல் நெருக்கடியை அவற்றிற்குள்ளேயே ஒரு புதிய அரசாங்கம் அமைத்து தீர்த்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது,” என்று அந்நேரத்தில் எழுதிய SGP, "இதன் விளைவு, எந்தவொரு ஜனநாயக கட்டுப்பாடுக்கும் உட்படாத மற்றும் முதலாளித்துவ அரசு நலன்களுக்கு கடமைப்பட்டதாக உணரும் ஒரு வலதுசாரி எதேச்சதிகார ஆட்சியாக இருக்கும்.”

இது இப்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இதனால் தான் SGP புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கிறது. “தற்போதைய நிலைமைகளின் கீழ், இவ்விதத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கம் தனது நலன்களைப் பெறுவதற்கும் மற்றும் அதிவலதின் அரசியல் தாக்குதலை எதிர்ப்பதற்கும், அரசியல் நிகழ்வுகளில் தலையீடு செய்ய முடியும்,” என்று அந்த நவம்பர் 23 அறிக்கை குறிப்பிடுகிறது. “ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகின்ற ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கும் மற்றும் இப்போதைய இந்த சமூக ஒழுங்கமைப்பில் அது காணும் ஒரு முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு சோசலிச பாதையை வழங்குவதற்கும், அத்தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தும்.”