ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN General Assembly repudiates Trump over Jerusalem announcement

ஐ.நா. பொது சபை ஜெருசலேம் மீதான ட்ரம்ப் அறிக்கையை மறுத்தளிக்கிறது

By Jordan Shilton
22 December 2017

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ஜனாதிபதியின் டிசம்பர் 6 அறிவிப்பை, 128 நாடுகள் கண்டனம் செய்த நிலையில், ஐ.நா. பொது அவையில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு அவமானகரமான தோல்வியைத் தழுவியது. அச்சபையில் 128 க்கு 9 வாக்குகள், 35 நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்ததுடன் சேர்ந்து, அமெரிக்கா முற்றிலும் தனிமைப்பட்டிருப்பதைப் பிரதிபலிக்கிறது என்பதோடு, இது மத்தியக் கிழக்கில் ஒரு வன்முறை மோதலுக்கான சாத்தியக்கூறை அதிகரித்துள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக ட்ரம்ப் மற்றும் பிற அதிகாரிகளின் மிரட்டும் மற்றும் பீதியூட்டும் ஓர் ஆக்ரோஷமான பிரச்சாரம் இருந்தது. அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி நிதியுதவிகள் வெட்டுப்படுமென புதனன்று ட்ரம்ப் அச்சுறுத்தினார். “நூறு மில்லியன் கணக்கான டாலர்களை, பில்லியன் கணக்கிலான டாலர்களையும் கூட நம்மிடம் பெற்றுக் கொண்டு, பின் அவர்கள் நமக்கு எதிராகவே வாக்களிக்கிறார்கள்,” என்று ட்ரம்ப் தெரிவித்தார். “நல்லது, அத்தகைய வாக்குகளை நாம் கவனத்தில் கொள்வோம். நமக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கட்டும். நாம் நிறைய சேமிக்கலாம். நமக்கு கவலையில்லை,” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலெ பொது அவையில் வழங்கிய அவரது உரையில் நேற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்தார். “ஒரு இறையாண்மை தேசமாக எங்களின் உரிமையை பயன்படுத்தியதற்காக பொது அவையில் தனிமைப்படுத்தி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்நாளை, அமெரிக்கா நினைவில் கொள்ளும்,” என்றவர் அறிவித்தார். “மேலும், பல நாடுகள் அவை பெரும்பாலும் செய்வதைப் போல, தங்களின் நலன்களுக்காக எங்களின் செல்வாக்கை பயன்படுத்தவும் மற்றும் கூடுதலாக நிதியுதவி வழங்குமாறு எங்களைக் கோரி வருகையிலும் இதை நாங்கள் நினைவில் கொள்வோம்,” என்றார். வாக்குகள் என்னவாக இருந்தாலும், வாஷிங்டன் அதன் கொள்கையில் உறுதியுடன் நிற்குமென தொடர்ந்து அப்பெண்மணி அவையில் ஆணவத்தோடு தெரிவித்தார்.

டோகொ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, பாலோ, நௌரூ, குவாண்டமாலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகியவை மட்டுமே ஜெருசலேம் அங்கீகாரத்தை ஆதரித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்தன. முப்பத்தைந்து நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன மற்றும் 21 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, இது ட்ரம்ப் மற்றும் ஹேலே இன் அச்சுறுத்தல்கள் சிறிது பாதிப்புகளைக் கொண்டிருந்ததற்கு அடையாளமாக இருந்தது.

தொடர்ச்சியான பல ஐ.நா. தீர்மானங்களில் இஸ்ரேலுக்கான அதன் ஆதரவில் அமெரிக்கா பெரும்பாலும் ஒரு சிறிய சிறுபான்மையையே பெற்றுள்ளது என்றாலும், அமெரிக்காவை இந்தளவுக்கு வெளிப்படையாக எதிர்க்க பல நாடுகள் தயாராக இருப்பதானது ஏகாதிபத்தியங்களுக்கு இடையே அதிகரித்து வரும் விரோதங்களுக்கும், அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த வீழ்ச்சிக்கும் ஒரு வெளிப்பாடாகும்.

இஸ்ரேல் சம்பந்தமான தீர்மானங்களைப் புறக்கணித்து விடும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற பாரம்பரிய அமெரிக்க கூட்டாளிகள், ட்ரம்பின் அறிவிப்பைக் கண்டித்து வாக்களித்தன. அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளியாக ஏற்கப்படுவதும் மற்றும் ஐ.நா. சபையில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து வாக்களித்துள்ளதுமான கனடாவே கூட, வாக்களிப்பைப் புறக்கணித்தது.

ட்ரம்பின் உளறலான அச்சுறுத்தல்கள் வெகு சிறிதே தாக்கத்தைக் கொண்டிருந்தன என்பதோடு வாஷிங்டனின் அந்தஸ்து முடிவாக மதிக்கப்படவில்லை என்ற உண்மையானது, மத்தியக் கிழக்கில் அமெரிக்கா ஆக்ரோஷமான விளாசலில் இறங்கி, ஒரு பேரழிவுகரமான பிராந்திய மோதலைத் தூண்டிவிடலாம் என்ற அபாயத்தை மட்டுமே அதிகரிக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனமான மற்றும் மிரட்டும் நடவடிக்கைகள், இவ்வார தொடக்கத்தில் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் எடுத்துரைக்கப்பட்டதைப் போல, வல்லரசு மோதல்களில் போய் முடிவதுடன் பிணைந்துள்ளன. ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தோற்றப்பாட்டளவில் தடையில்லா போரில் ஈடுபட்டு, இந்நிகழ்முறையில் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்களுக்குப் பின்னர் பார்த்திராத அளவிலான இராணுவ மோதல்களை இப்போது பரிசீலித்து வருகிறது.

ஜெருசலேம் மீதான அவர் போக்கை எதிர்த்த நாடுகளுக்கு நிதியுதவிகளை வெட்டுவதற்கான தனது அச்சுறுத்தலை ட்ரம்ப் மேற்கொண்டாலும் கூட, அதுவும் மேற்கொண்டு மத்தியக் கிழக்கில் வல்லரசு பதட்டங்களை மட்டுமே தீவிரப்படுத்தும். எகிப்து, ஜோர்டான், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அனைத்து நாடுகளும் இத்தீர்மானத்தை ஆதரித்ததன் மூலமாக வாஷிங்டனை மீறின. ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய சக்திகள், அப்பிராந்தியத்தில் அமெரிக்காவை விலையாக கொடுத்து அவற்றின் செல்வாக்கை விரிவாக்க ஜெருசலேம் தீர்மானத்தை ஒரு சந்தர்ப்பமாக விளங்கப்படுத்தி கொண்டன, மேலும் அமெரிக்க ஆதரவு கீழிறங்கியதால் பின்னுக்கு விடப்பட்ட வெற்றிடத்தை விரைவாக அவை நிரப்பக்கூடும். எரிசக்தி வளம் மிகுந்த அப்பிராந்தியத்தில் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை திரட்டுவதற்கான வாஷிங்டனின் ஆக்ரோஷமான முனைவுக்கு, பிரதான தடைகளாக விளங்கும் ரஷ்யாவும் சீனாவும் கூட இச்சந்தர்ப்பத்தைக் கைப்பற்றலாம்.

பாதுகாப்பு அவையில் அத்தீர்மானத்திற்கு எதிராக ஹேலே இன் ஒரேயொரு வாக்கு, அங்கே அத்தீர்மானம் நிறைவேறாத வகையில் வீட்டோ அதிகாரத்தால் தடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், நிபந்தனை ஏதுமற்ற பொது அவையில் இந்த வாக்குகள் வந்தன.

ஜெருசலேம் மீதான ட்ரம்பின் தீர்மானம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு வாஷிங்டன் மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளால் ஊக்குவிக்கப்பட்ட இரு-அரசு தீர்வு என்ற தசாப்த-கால மோசடியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஏகாதிபத்திய சக்திகளுடன் பேரம்பேசி பாலஸ்தீனர்கள் தங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளைப் பாதுகாத்து கொள்ளலாம் என்று வாதிடும், முதலாளித்துவ தேசியவாத முன்னோக்கின் திவால்நிலையை இது அவிழ்த்துக் காட்டியுள்ளது.

பல தசாப்தங்களாக பாலஸ்தீன மக்களை ஈரவிக்கமின்றி இஸ்ரேல் ஒடுக்கி வரும் நடப்பில் உள்ள நிகழ்வுபோக்கையே பிரதானமாக வலியுறுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பாலஸ்தீன ஆணைய அதிகாரிகள் கைத்தட்டி ஆர்ப்பரித்த போது, இது வியாழனன்று முழுமையாக காட்சிக்கு வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு பாதுகாவலராக மற்றும் விசுவாசமாக சேவையாற்றி உள்ளதும், பாலஸ்தீனர்களால் பரவலாக வெறுக்கப்படும் ஓர் ஆட்சியான பாலஸ்தீன ஆணையத்தின் (PA) ஜனாதிபதி மௌமத் அப்பாஸ், அந்த வாக்குகளை "பாலஸ்தீனத்திற்கான வெற்றியாக" கொண்டாடினார்.

“இந்த ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டவும் மற்றும் கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு எங்களின் பாலஸ்தீன அரசை நிறுவவும் ஐக்கிய நாடுகள் சபையிலும் மற்றும் அனைத்து சர்வதேச விவாதக்களங்களிலும் நாங்கள் எங்களின் முயற்சிகளைத் தொடர்வோம்,” என்பதை அப்பாஸின் செய்தி தொடர்பாளர் நபில் அபு ரதைன்னாஹ் சேர்த்துக் கொண்டார்.

யதார்த்தத்தில், இது போன்றவொரு அரசு உருவாக்குவதை வாஷிங்டன் சகித்துக் கொள்ள தயாராக இல்லை என்பதை அது தெளிவுபடுத்தி உள்ளது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளோ பாலஸ்தீனர்களின் கதியைக் குறித்து அதிக கவலை கொள்ளவில்லை, ஆனால் மத்தியக் கிழக்கில் தங்களின் சொந்த சூறையாடும் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஒரு தீர்வை மத்தியஸ்தம் செய்வதில் வாஷிங்டனின் திராணியற்றத்தன்மையையும், சிரியாவில் அதன் இராணுவ தலையீட்டால் ஏற்பட்ட நெருக்கடியையும், சாதகமாக்கிக் கொள்ள முடியுமென அவை நம்புகின்றன.

ட்ரம்ப் கொள்கையைத் தாக்குவதற்கு பொது அவையைப் பயன்படுத்திய முதலாளித்துவ அரபு ஆட்சிகள், பாலஸ்தீனர்கள் முகங்கொடுத்த கொடூரமான நிலைமைகளுக்கு முற்றிலும் உடந்தையாய் இருப்பவை. இந்த ஆட்சிகள் அனைத்திற்கும், ட்ரம்பின் கொள்கை அறிவிப்பு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரானை இராணுவரீதியில் எதிர்ப்பதற்கான தனது கொள்கைக்கு இஸ்ரேலின் ஆதரவைப் பெற விருப்பமுறும் சவூதி அரேபியா, ஜெருசலேம் மீது இஸ்ரேல் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வது மற்றும் ஒரு சில சிறிய துண்டு துண்டு நிலங்களாக பாலஸ்தீன பகுதிகளைக் குறைப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீர்வின் வரையறைகளை அப்பாஸ் க்கு விவரிக்க அவரை ரியாத்துக்கு வருமாறு நவம்பரில் உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஜெருசலேம் தீர்மானம் பென்ஜமின் நெத்தென்யாகு இன் வலதுசாரி அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத்தியது. ட்ரம்ப் உரைக்குப் பின்னர் சுட்டுத்தள்ளும் ஆயுதங்களுடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மக்கள் போராட்டங்களுக்கு விடையிறுத்ததில் 10 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,900 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர், 200 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல் அவிவ் இன் சட்டவிரோத குடியமர்வு திட்டத்தை நீடிப்பது உட்பட, ஆக்கிரமிப்பு பகுதிகளில் தொடர்ந்து சர்வதேச சட்டத்தை மதியாதிருக்கவும் அமெரிக்காவின் முடிவால் டெல் அவிவ் உறுதி பெற்றுள்ளது.

அனுமானிக்கத்தக்க வகையில், அந்த வாக்குகளுக்குப் பின்னர் நெத்தன்யாகு அத்துமீறினார். அந்த முடிவை "பகுத்தறிவுக்கு ஒவ்வாதது" என்று விளாசிய அவர், ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக "எப்போதும் இருந்தது, எப்போதும் இருக்கும்,” என்று அறிவித்தார்.

ட்ரம்பின் ஜெருசலேம் கொள்கை, தெஹ்ரான் உடன் போருக்கு தயாராகும் நோக்கில் மத்திய கிழக்கில் ஓர் ஈரான்-விரோத கூட்டணியைக் கட்டமைக்கும் முயற்சிகளுடன் பிணைந்துள்ளது. அரபு தலைவர்களின் கூட்டம் ஒன்றில் உரை வழங்க, மே மாதம் ட்ரம்ப் சவூதி அரேபியா விஜயம் செய்து, ஈரானை எதிர்க்க ஒரு சுன்னி கூட்டணியை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்த பின்னர் இருந்து, ட்ரம்பும் அவரின் மூத்த அதிகாரிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெஹ்ரானுடனும் மற்றும் அதன் கூட்டாளிகளுடனும் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் 2015 இல் பேசி முடிக்கப்பட்ட ஈரான் உடனான அணுசக்தி உடன்படிக்கைக்கு அது கீழ்படிந்திருந்தது என்பதற்கு ட்ரம்ப் சான்றிதழ் வழங்க மறுத்து இரண்டு மாதங்களுக்கும் குறைந்த நாட்களில், அவர் ஜெருசலேம் க்கு அங்கீகாரம் வழங்கினார். அந்நாட்டின் தொலைதூர ஏவுகணை திட்டத்தையும் உள்ளடக்கி காங்கிரஸ் கடுமையான தடையாணைகளை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

வியாழனன்று ஐ.நா. வாக்கெடுப்புக்கு சற்று முன்னர் தான், மத்திய கிழக்கு எங்கிலும் ஆழமடைந்த வரும் பதட்டங்கள் எடுத்துக்காட்டப்பட்டன. துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன், அமெரிக்காவுக்கு "ஒரு நல்ல பாடம்" கற்பிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்புவிடுத்து, நிதியுதவிகளை வெட்டுவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களைக் கண்டித்தார். “திரு ட்ரம்ப், உங்களது டாலர்களைக் கொண்டு துருக்கியின் ஜனநாயக விருப்பத்தை விலைக்கு வாங்க முடியாது,” என்றவர் தொடர்ந்து குறிப்பிட்டார். “நான் ஒட்டுமொத்த உலகிற்கும் அழைப்பு விடுக்கிறேன்: நீங்கள் அற்பமான டாலர்களுக்காக உங்களின் ஜனநாயக போராட்டத்தையோ மற்றும் உங்களின் விருப்பத்தையோ விற்க துணியாதீர்கள்.”

இது போன்ற கருத்துக்களில் சிறிதும் அரசியல் தோரணை இல்லையென்றாலும், துருக்கி அப்பிராந்தியத்தில் அதன் இடத்தைப் பலப்படுத்தி கொள்ள பாலஸ்தீன பிரச்சினையைச் சாதகமாக்க விரும்புகிறது என்றாலும், எர்டோகனின் கருத்துக்கள் வாஷிங்டனுடன் அங்காராவின் அதிகரித்து வரும் பிளவைப் பிரதிபலிக்கிறது. எர்டோகன் இந்தாண்டு மட்டும் ஏழு முறை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைச் சந்தித்துள்ளார், அவர் அரசாங்கம் ரஷ்யாவின் விமான-தகர்ப்பு பாதுகாப்பு அமைப்புமுறை ஒன்றை வாங்கும் அதன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக, சிரியா மீதான சமாதான பேச்சுவார்த்தைகளில் குர்திஷ் பிரதிநிதிகளைச் சேர்ப்பது மீது ரஷ்யா மற்றும் ஈரானுடன் துருக்கிய அரசாங்கம் ஓர் உடன்படிக்கையை எட்டுமென தெரிகிறது, இதில் வாஷிங்டன் பெரிதும் தவிர்க்கப்பட்டுள்ளது.