ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Democratic Party witch-hunters target Green Party candidate Jill Stein

ஜனநாயக கட்சியின் பழிசுமத்துவோர் பசுமை கட்சி வேட்பாளர் ஜில் ஸ்ரைனை இலக்கு வைக்கின்றனர்

Statement of the Political Committee of the Socialist Equality Party (US)
23 December 2017

சோசலிச சமத்துவக் கட்சி (SEP), செனட் உளவுத்துறை கமிட்டியின் நவ-மக்கார்த்தியிச பழி தீர்ப்போரால், 2016 தேர்தலில் பசுமை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்ரைன் இலக்கு வைக்கப்படுவதைக் கண்டிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி பசுமை கட்சியுடன் அடிப்படை அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால், அரசாங்கம் மற்றும் அதன் பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளால் தொந்தரவுக்கு உள்ளாகாமல் பசுமை கட்சி அதன் வேலையைச் செய்வதற்கும் மற்றும் பதவிக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்குமான அதன் அரசியலமைப்பு உரிமையை நாம் ஐயத்திற்கிடமின்றி பாதுகாக்கிறோம். ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படும் ஸ்ரைன் மீதான தாக்குதல், இரு-கட்சி முதலாளித்துவ அமைப்புமுறையின் ஏகபோகத்திற்கான அரசியல் எதிர்ப்பை நசுக்கவும் மற்றும் சட்டவிரோதமாக்கவும் அரசியலமைப்புக்கு விரோதமான ஒரு முயற்சியாகும்.

 “சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீதான தணிக்கை உருவாக்கம், பொலிஸின் இராணுவமயமாக்கல் மற்றும் உளவுத்துறை அரசின் பாரிய விரிவாக்கம் ஆகியவற்றுடன், நமது குடியுரிமைகள் மீதான தாக்குதல்களின்" ஒரு சூழலில், விசாரணைகள், “அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பை பீதியூட்டவும் மற்றும் மௌனமாக்கவும் பயன்படுத்தப்பட்டு" வருகின்றன என்று ஸ்ரைன் ஓர் அறிக்கையில் எச்சரித்தார்.

ரஷ்யாவுடனான அவரது தலையீடுகள் என்று கூறப்படுவது சம்பந்தமான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு செனட் விசாரணையாளர்கள் கோரியிருப்பதை திங்களன்று ஸ்ரைன் உறுதிப்படுத்தினார். காங்கிரஸில் உள்ள விசாரணையாளர்களின் கருத்துப்படி, அவரது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையில் RT சேனலின் பத்தாவது நினைவாண்டு கொண்டாட்டத்தின் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் உள்ளடங்கி இருந்தது, அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் கலந்து கொண்டிருந்தார். RT சேனல் மட்டுமே ஒரே தொலைக்காட்சி வலையமைப்பு அவர் பிரச்சாரத்தைக் குறிப்பிடத்தக்களவில் ஒளிபரப்பியது.

அமெரிக்க காங்கிரஸிற்கு பதிலளிக்க ஸ்ரைனிடம் முற்றிலும் ஒன்றும் இல்லை. ஒரு ஜனாதிபதி வேட்பாளராக, ஒரு ஊடக நிகழ்வில் கலந்து கொள்வதற்கு மட்டுமல்ல, மாறாக எந்தவொரு பொது பிரமுகரையும், அவர் வெளிநாட்டினராக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டுக்காரராக இருந்தாலும் சரி, அவரை சந்திக்கவும் மற்றும் அவருடன் விவாதிக்கவும் முழு உரிமையும் அவருக்கு இருந்தது.

ஹிலாரி கிளிண்டனோ அல்லது அவரது பிரச்சாரக் குழுவோ வேறு நாடுகளின் எந்தவொரு அரசியல் தலைவர்களுடனும் தொடர்பின்றி இருந்ததாக யாரும் நம்புவார்களென எதிர்பார்க்கலாமா? சான்றாக, கிளிண்டன், ஒரு பாசிசவாத தலைமையில் நடந்த பதவிக்கவிழ்ப்பு சதியில் ஆட்சியில் அமர்த்தப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ மற்றும் எகிப்திய புரட்சியை இரத்தத்தில் மூழ்கடித்த கெய்ரோவின் கொலைகாரர் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி உட்பட மூன்று வெளிநாட்டு அரசு தலைவர்களை செப்டம்பர் 19, 2016 இல் பகிரங்கமாக சந்தித்தார்.

ரஷ்யா "தலை நுழைத்தது" என்ற குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள், ரஷ்யா அமெரிக்க தேர்தல்களில் சூழ்ச்சி செய்தது என்ற அடித்தளமற்ற வாதங்களில் அமைந்துள்ளன. ஆனால், சிசி மற்றும் பொறோஷென்கோ அதிகாரத்தில் உள்ளனர் என்ற உண்மையானது, ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை நடத்தியும், சர்வாதிகாரங்களுக்கு முட்டுக்கொடுத்தும் மற்றும் விருப்பம் போல நாடுகள் மீது குண்டுவீசியும், படையெடுத்தும், அமெரிக்கா மொத்த உலகெங்கிலும் ஒவ்வொரு நாட்டின் அரசியல் விவகாரங்களிலும் எந்தளவுக்கு தலை நுழைக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

அக்கமிட்டியின் இரண்டாவது முக்கிய அங்கத்தவரான ஜனநாயக கட்சியின் மார்க் வார்னரின் கருத்துப்படி, RT சேனல் நடத்திய இரவு விருந்தில் ஸ்ரைன் கலந்து கொண்டார் என்பதற்கு கூடுதலாக, ஸ்ரைன் "ஜூலியன் அசான்ஜ் குறித்து மிகவும் நல்ல விதமாகக் கூறி" இருந்தார். கிரிமினல் நடவடிக்கையாக கூறப்படுவதற்கு இப்போது இது ஆதாரமாகிறதா? ஒரு பத்திரிகையாளரான விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜ், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் குற்றங்களை அம்பலப்படுத்த உதவியுள்ளார்.

ஓர் அரசியல் கைதி மற்றும் அதிருப்தியாளரை பகிரங்கமாக ஆதரித்து பேசியுள்ளார் என்பதற்காக, ஸ்ரைன், ஏதோ தேசத்துரோக நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதைப் போல ஒரு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இழுக்கப்படுவதற்கு அச்சுறுத்தப்படுகிறார்.

இது, எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் சகித்துக் கொள்ள முடியாத மற்றும் சகித்துக் கொள்ளாத இரண்டு வலதுசாரி, பிரபுத்துவ கட்சிகளால் ஆளப்படும் அமெரிக்காவின் 2017 ஓர்வெல்லியன் யதார்த்தமாகும்.

பரந்த மக்கள் பிரிவுகளிடையே ஜனநாயகக் கட்சியின் சொந்த ஆதரவு குறைந்து வருவதைக் குறித்து விவரிப்பதிலிருந்து விலகும் நோக்கில் மற்றும் இரு-கட்சி அமைப்புமுறைக்கு ஒரு மாற்றீடு எழுந்தால் அவர்களுக்குத் தேர்தல் தோல்வி ஏற்படுமென கருதி, இந்த ஒட்டுமொத்த அனுமானமும் “ரஷ்யா உடனான நயவஞ்சக கூட்டு" என்ற ஆடையால் ஒட்டுமொத்தமாக போர்த்தப்படுகிறது.

என்ன நடந்தது (What Happened) என்ற அவர் நூலில், கிளிண்டன், “முடிவு செய்திராத வாக்காளர்களை நோக்கியும், வீட்டில் இருந்திருக்கக் கூடிய அல்லது மூன்றாவது கட்சி வேட்பாளரை ஆதரித்திருக்க கூடிய கிளிண்டன் ஆதரவாளர்களை 'மென்மையாக்குவதும்' ரஷ்ய பிரச்சாரத்தின் இலக்கில் இருந்தது" என்று சீறினார்.

அவர் தொடர்ந்தார், “மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் 2012 இல் பெற்றதைக் காட்டிலும் 2016 இல் ஐந்து மில்லியனுக்கும் அதிக வாக்குகளைப் பெற்றதற்கான ஒரு காரணம் ஒருவேளை இதுவாக கூட இருக்கலாம். இது தான் ரஷ்யர்கள் மற்றும் குடியரசுக் கட்சியினரின் நோக்கமாக இருந்தது, அது செயலுக்கு வந்து,” விளைவாக கிளிண்டன் தோல்வி அடைந்தாராம்.

இப்போது ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் தேர்தல் தோல்விக்கு பங்களிப்பு செய்த ஒரு கட்சிக்கு எதிராக பழிசுமத்தும் நடவடிக்கைகளைப் பின்தொடர, அவர்களின் அமைப்புரீதியிலான அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2016 இல் மூன்றாவது கட்சிக்கு வாக்கு அதிகரித்ததற்கான காரணம் ரஷ்யர்களின் "தலையீடு" அல்ல, மாறாக அது ஏனென்றால் மில்லியன் கணக்கான மக்கள் இவ்விரண்டு பெரு வணிக கட்சிகளின் வேட்பாளர்களையும் வெறுத்தனர். அமெரிக்காவுக்குள் அரசியல் எதிர்ப்பு மீதான தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சி தலைமை கொடுத்து வருகிறது, ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இடது நோக்கி நகர்ந்து வரும் மக்களின் மனோபாவத்தால் அது சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறது.

இந்த காரணத்தினால் தான், ஜனநாயகக் கட்சி ரஷ்ய "தலையீடு" என்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து பாலியல் ஒழுக்கக்கேட்டை சுற்றிய விஷமப் பிரச்சாரம் வரையில் தொடர்ச்சியாக பல ஆத்திரமூட்டல்களை முன்தள்ளுகிறது. ஆனால் அதேவேளையில் அது ஒட்டுமொத்தமாக, பெருவணிக வரிக்களில் பாரிய வெட்டை நிறைவேற்றுவதற்கு குடியரசுக் கட்சியினருக்கு மிகவும் சாதகமான சாத்தியமான நிலைமைகளை உருவாக்கி உள்ளது, இக்கொள்கை இரு கட்சிகளது ஆதரவையும் பெற்றுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு கொள்கை பின்னடைவுகளையும் அனைத்து அரசியல் அதிருப்தியையும், வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் மற்றும் இடதுசாரி கிளர்ச்சியாளர்களின் ஒரு சதியின் விளைவு என்பதாக சித்தரித்த, பனிப்போர் காலத்திய மக்கார்த்தியிசத்தின் உச்சக்கட்டத்தில், குடியரசு கட்சியின் மிகவும் வலதுசாரி பிரிவுகளின் பழைய கூறுபாடுகளை ஜனநாயகக் கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது.

பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை கமிட்டியின் இரண்டாவது முக்கிய பிரமுகரான ஜனநாயகக் கட்சியின் ஆடம் ஸ்கிஃப் மற்றும் வார்னர் போன்றவர்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய அரசியல் தணிக்கைக்கு அழுத்தமளித்து வருகின்ற வேளையில், மற்றும் எதிர்ப்பு வலைத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்காக இணைய சேவை வழங்குனர்களுக்கு சுதந்திர அதிகாரம் வழங்கி, FCC இணைய நடுநிலைமையைக் கைவிட உத்தரவிட்டுள்ள நிலையில் தான், பசுமை கட்சி மீதான செனட் விசாரணை வந்துள்ளது.

ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான மற்றொரு தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்து வருவதுடன், மற்றும் ஒரு புதிய உலக போரைக் கொண்டு அச்சுறுத்தும் "வல்லரசு" மோதல்களுக்கான திட்டங்களை வரைந்து வருகின்ற நிலையில், பசுமைக் கட்சியை இலக்கு வைப்பதானது அமெரிக்காவுக்குள் அதிருப்தி மற்றும் அரசியல் எதிர்ப்பை குற்றகரமாக்குவதற்கான முனைவின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.