ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Rohingya refugees face appalling conditions in Bangladesh

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் பயங்கரமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்

By Wimal Perera
30 November 2017

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் “மனிதாபிமான முறையில்” நடத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, அங்கு அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பரிதாபகரமான நிலையில் தான் வாழ்கின்றனர்.

பர்மிய அகதிகள் மீது சாதாரண வெகுஜனங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைக் கண்டு ஹசீனாவின் அரசாங்கம் அவர்களை நன்கு கவனிப்பது போல் பாசாங்கு செய்கிறது. இருப்பினும், முடிந்தவரையிலும் விரைவில் அவர்களை பர்மாவிற்கு திருப்பி அனுப்புவதற்கே முயன்று வருகிறது.

ஒரு ஒடுக்கப்பட்ட முஸ்லீம் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்கியா மக்கள், பர்மாவின் வடமேற்கு மாநிலமான ராக்கினியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். 1982 இல், பர்மிய ஆட்சி அவர்களது குடியுரிமைகளைக் கூட பறித்துவிட்டது.

ஆகஸ்டில், பர்மிய இராணுவம் ராக்கினி மாநிலத்தில் ஒரு வெகுஜன வெளியேற்றத்தை தூண்டும் வகையில் அதன் கொடூரமான தாக்குதல்களை முடுக்கிவிட்டதிலிருந்து, 622,000 இற்கு அதிகமான அகதிகள் பங்களாதேஷிற்குள் நுழைந்து விட்டனர். முன்னதாக தப்பியோடி வந்தவர்களும் உட்பட, மதிப்பீட்டின்படி பங்களாதேஷில் 834,000 அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இராணுவ வழிமுறையின் மூலம் அகதிகளைத் தடுப்பதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் முயன்ற போதும், இந்த வெகுஜனங்களின் உள்நுழைவை அனுமதிக்குமாறு பல நாடுகளினால் பின்னர் அது கட்டாயப்படுத்தப்பட்டது. பர்மிய இராணுவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கும்பல்களால் நடத்தப்பட்ட “இன அழிப்பின்” விளைவாக, அகதிகள் சித்திரவதை செய்யப்பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் கிராமங்கள் கூட அழிக்கப்பட்டன.

இந்த அகதிகள், டாக்காவிற்கு தெற்கில் 400 கிலோ மீட்டர் தொலைவிலும், ராக்கினி மாநில எல்லைக்கு அருகேயும் உள்ள காக்ஸ் பஜாரில் (Cox’s Bazar) சுகாதாரமற்ற மற்றும் திட்டமிடப்படாத அழுக்கடைந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அகதிகள் சுத்தமான நீர், சுகாதார வசதிகள், உடல்நல பராமரிப்பு மற்றும் உணவு ஆகிய வசதிகள் போதியளவு கிடைக்காமல் பற்றாக்குறையுடன் உள்ளனர்.

உதவிப் பணியாளர் கிம் பிளெச்சென்டன், நவம்பர் 21 அன்று ஊடகத்திடம் பேசுகையில், காக்ஸ் பஜாரில் உள்ள ஒரு அகதிகள் முகாமான குட்டுபலோங்கில் காணப்படும் நிலவரம் பற்றி விவரித்தார். “செங்குத்தான மலைப்பகுதிகள் மூங்கிலாலும், தார்ப்பாயினாலும் கட்டமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளால் சூழப்பட்டு jigsaw புதிர் கட்டத்தைப் போன்று ஒன்றுக்கொன்று நெருக்கடியாக பிணைக்கப்பட்டு உள்ளன” என்றும், “கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில், எந்தவொரு இடமும் காலியாக விடப்படவில்லை” என்றும் கூறினார்.

மேலும் பிளெச்சென்டன் இவ்வாறு தெரிவித்தார்: “ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு நாளுக்கு 150 க்கும் அதிகமான நோயாளிகளை நாங்கள் பார்க்கிறோம்; அவர்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களும், ஆபத்தான வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.”

முகாம்களுக்குள் இருக்கும் நிலைமைகளோ இன்னும் பயங்கரமானது. முகாம் பகுதிகளில் சாலைகள் கிடையாது, செங்குத்தான சேற்றுப் பாதைகள் மட்டுமே உள்ளன. கனமழை பெய்து வருவதால் அங்கிருக்கும் சூழ்நிலை இன்னும் மோசமடைந்து வருகிறது.

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் எல்லையைக் கடந்து வந்துகொண்டே இருப்பதால், நிலைமை தொடர்ந்து மோசமடையும் வாய்ப்பு உள்ளது.

அகதிகளில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே உள்ளனர். ஒரு ஊடக அறிக்கை, இரண்டு வயதிற்கும் குறைந்த இரண்டு சிறிய குழந்தைகளின் நிலைமை பற்றி குறிப்பிட்டது, அக்குழந்தைகளோ அவர்களது தாயின் கரங்களில் சோர்வாய் இருந்தனர். தாகத்தினால் இறந்துபோகும் நிலையில் இருந்த அக்குழந்தைகளின் வாயில் சர்க்கரை தண்ணீரைப் புகட்டுவதன் மூலமாகவே அவர்கள் புத்துயிர் பெற்றுக்கொண்டு இருந்தனர். பல அகதிகளும் இதே நிலைமையில் தான் இருந்தனர்.

பல குழந்தைகள் அங்கு பெற்ற அனுபவங்களால் அதிர்ச்சியாகி உள்ளனர். ரபேயா என்ற ஆறு வயது சிறுமி, ஒரு சிப்பாய் அவளது தந்தையின் தலையில் சுட்டுக் கொன்றபோது தனது உடன் பிறந்தவர்களுடன் அங்கு நின்று கொண்டிருந்ததாகக் கூறினாள். “அவரது காதுகளில் இருந்து இரத்தம் பொங்கிவழிந்தது, உயிரற்ற அவரது உடல் தரையில் சரிந்து விழுந்தது… அடுத்து உடனே அவளது தாயாரும் சுடப்பட்டார்,” என்று Daily Star பத்திரிகை தெரிவித்தது.

ரபேயாவை கவனித்துக்கொள்ளும் அவளது அத்தை, அவள் இரவில் அழுகிறாள் என்றும், என்ன நடந்தது என்று அறியமுடியாமல் அந்த முகாமையே சுற்றி சுற்றி வந்து அவள் நாட்களை கழித்து வருகிறாள் என்றும் தெரிவித்தார்.

World Vision தொண்டு நிறுவனத்துடன் உள்ள குழந்தை பாதுகாப்பு நிபுணர் கிரானர் மராக் பின்வருமாறு கூறினார்: “அவர்கள் கடந்து வந்த பயங்கரங்களோடு, அவர்களை மீட்க முடியுமா என்பது பற்றி சொல்வது கடினம் தான். குழந்தைகள் கொலைகளையும், அட்டூழியங்களையும் நேரில் கண்டிருக்கிறார்கள், இன்னும் நாட்கள் செல்ல செல்ல அது அவர்களது மனதை பாதிக்கத்தான் செய்யும்.”

சிறுமிகளில் பலரும் “கற்பழிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்கள்” என்று மற்றொரு மருத்துவர் தெரிவித்தார். அவரது மருத்துவமனையில் தினமும் 3,000 முதல் 5,000 வரையிலான அகதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகளே இருந்தனர் என்று கூறினார். மேலும், அவர்கள் நீரினால் உருவாகும் காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் உட்பட, எண்ணற்ற பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் (World Health Organization-WHO) தகவல்படி, அகதிகளுக்கு கிடைக்கும் 62 சதவிகித நீர், மல தூய்மைக்கேட்டை அளவிடும் ஒரு குறிகாட்டியான ஈ.கோலி பாக்டீரியாவினால் மாசுபட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி அமைப்பின் (United Nations Children’s Fund-UNICEF) செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் பவுலியேராக், “பலரது இறப்புக்கு காரணமான கடுமையான நீர்த்த வயிற்றுப்போக்கினால் (acute watery diarrhea-AWD) பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து நாங்களும் கவலையடைந்தோம்” என்று கூறினார். ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 11 வரையிலான நாட்களுக்கு மத்தியில், AWD யால் பாதிக்கப்பட்டு, அதனால் இறந்த 10 பேர் உட்பட, மொத்தம் 36,096 பேர் சிகிச்சை பெற்றனர். 327 அகதிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை வீதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.                  

உயிரை அச்சுறுத்தும் அளவிற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு வளர்ச்சி அடைந்துள்ளது. யுனிசெஃப் மற்றும் அதன் பங்காளர்களும், அக்டோபர் 25 அன்று நிலவரப்படி 59,604 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என்று திரையிட்டுக் காண்பித்தது. அதில், 1,970 அல்லது 3.3 சதவிகிதம் பேர் “மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள்” என்றும், 6,971 அல்லது 12 சதவிகிதம் பேர் “ஓரளவு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள்” என்றும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.     

UNHCR குழுவிடம், ஒரு அகதிகள் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்: “மழை பெய்யும் போது, மலைகளின் பின்னால் இருந்து மழை கீழ் நோக்கி வரும், மேலும் அதுவே உயர் அலைகளாக எழும் போது, தண்ணீர் அந்த பக்கத்தில் இருந்து வருகிறது.” அடிக்கடி தண்ணீர் முழங்கால் உயரத்தை எட்டுவதுடன், அவர்களது முகாம்களிலும் தேங்கிவிடுவதாக அவர் தெரிவித்தார்.   

உயிர் பிழைப்புக்காக, அகதிகள் ரிக்சா இழுப்பது, மீன் பிடிப்பது, செங்கல் தயாரிப்பது அல்லது அருகிலுள்ள உப்பளங்களில் வேலை செய்வது போன்ற ஏதேனுமொரு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

செப்டம்பர் 12 அன்று, பிரதம மந்திரி ஹசீனா, அனுதாபத்தைக் காட்டும் விதமாக குட்டுபலோங் அகதிகள் முகாமை பார்வையிட்டார். அப்போது அவர் அகதிகளை அரவணைத்துக் கொண்டதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு குறித்து புலம்பினார். மேலும் ஹசீனா பத்திரிகையாளர்களிடம், “மனிதாபிமான அடிப்படையில் தான் நாம் அவர்களுக்கு நமது நாட்டில் அடைக்கலம் கொடுத்தோம்” என்று தெரிவித்தார்.    

இதேபோல், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.ஹெச். மஹ்மூத் அலி, ஜேர்மனி, சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

இதற்கிடையில், ஹசீனா அரசாங்கம், அகதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அனைத்து அகதிகளையும் பயோமெட்ரிக் ரீதியாக பதிவு செய்து வருகின்றது. பர்மாவில், இவ்வகதிகள் அட்டூழியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கின்ற நிலையிலும், நூறாயிரக்கணக்கான மக்களை திருப்பி அனுப்ப முயற்சிப்பது நம்பிக்கைத்துரோகமானது.

நவம்பர் 23 அன்று, வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் அலி மற்றும் பர்மிய அமைச்சர் யூ க்யா டிண்ட் இருவரும் ரோஹிங்கியாக்கள் நாடு திரும்புவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பர்மிய இராணுவ வன்முறையில் இருந்து தப்பியோடி வந்த அகதிகளை திருப்பியனுப்ப வகை செய்யும் 1992 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு உடன்படிக்கையை இது அடிப்படையாகக் கொண்டது.

விதிமுறைகளின்படி, ஆங் சான் சூ கீயின் பர்மிய அரசாங்கம், உத்தியோகபூர்வ அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். இருப்பினும், இரக்கமற்ற அடக்குமுறையை எதிர்கொண்ட போது அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடி வந்ததால் அத்தகைய ஆவணங்கள் எதுவும் பெரும்பாலான அகதிகளிடம் இல்லை.

அகதிகள் திரும்பிப் போக மறுத்து வருகின்றனர். ராய்ட்டர்ஸ் பத்திரிகை, சலிமுல்லாஹ் என்ற ஒரு அகதி, “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நாங்கள் எங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்வோம். எங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். மேலும் அவர்கள் எங்களது நிலத்தையும் எங்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டும்” என்று கூறுவதாக செய்தி வெளியிட்டது.

பங்களாதேஷ் அரசாங்கம் அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளை மீறுகிறது. சர்வதேச சக்திகள் அவர்களது கவலைகளை தெரிவிப்பது போன்ற பாசாங்குத்தனத்தில் இரு நாடுகளுக்கும் சமமாக இருமுகம் காட்டுகின்றனர். ஐரோப்பிய நாடுகள் கூட, சிரியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த போர்களில் இருந்து தப்பியோடி வந்த அகதிகளைக் கொடூரமாகத் தடுத்துள்ளன.