ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington’s secret wars

வாஷிங்டனின் இரகசிய போர்கள்

Bill Van Auken
13 December 2017

“போருக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட அமெரிக்க ஆயுத படைகளின் நிலைநிறுத்தல்கள் குறித்து காங்கிரஸிற்கு தகவல் அளிப்பதற்காக", பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பௌல் ரெயன் மற்றும் செனட்டின் மிகமுக்கிய தலைவர் ஓரின் ஹாட்ச் ஆல் உரையாற்றப்பட்ட "போர் அதிகாரங்கள்" கடிதம் (War Powers) என்றழைக்கப்படும் ஒன்றை திங்களன்று ட்ரம்ப் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

1973 இல், வியட்நாம் போர் தோல்விக்குப் பின்புலத்தில், அமெரிக்க காங்கிரஸ், அப்போதைய ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் வீட்டோ அதிகாரத்தை ஒதுக்கி விட்டு, போர் அதிகார சட்டத்தை (War Powers Act) நிறைவேற்றியது. காங்கிரஸைக் கணக்கில் கொள்ளாமல் அல்லது ஏதோ சிறிது கணக்கில் கொண்டவாறு, அறிவிக்கப்படாத மற்றும் பகிரங்கமான போர்களைத் தொடுப்பதில் இருந்து எதிர்கால ஜனாதிபதிகளைத் தடுப்பதே அச்சட்டமசோதாவின் நோக்கமாக இருந்தது, அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் போரை அறிவிக்க காங்கிரஸிற்குப் பிரத்யேக அதிகாரம் உள்ளது.

ஜனாதிபதி அவர் விருப்பப்படி 60 நாட்கள் வரையில் இராணுவ படைகளைப் பயன்படுத்துவதற்கு அது உரிமை வழங்கியது —இதுவே கூட நிர்வாக பிரிவுக்கு வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரும் அதிகார விட்டுக்கொடுப்பு தான் என்றாலும்— காங்கிரஸ் அந்த இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க தவறினால், மொத்தம் 90 நாட்களுக்குள் அந்நடவடிக்கையைத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது.

இப்போதும் போர் அதிகார சட்டம் எழுத்துக்களில் இருக்கின்ற போதும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்பைத் தொடர்ந்து கால் நூற்றாண்டு காலமாக, காங்கிரஸின் போர் பிரகடனம் இல்லாமலேயே தொடுக்கப்பட்ட தடையில்லா எல்லா அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களாலும், நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அச்சட்டம் உயிரற்று வெற்று எழுத்துக்களாக மாற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் சரி குடியரசுக் கட்சியினரும் சரி இரு தரப்புமே, வெளிநாடுகள் மீது போர் தொடுக்கும் எல்லா-முக்கிய விடயங்களிலும், சர்வாதிகார அதிகாரம் நடைமுறையளவில் "தலைமை தளபதியின்" கரங்களில் குவிந்திருப்பதற்கு விருப்பமுடன் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய கடிதம், அமெரிக்க ஜனநாயகத்தின் இந்த நீடித்த சீரழிவிலும் மற்றும் இராணுவம் மீதான படைத்துறைசாரா கட்டுப்பாடு மீதான கடைசி பாசாங்குத்தனங்களை நீக்குவதிலும் மற்றொரு பண்புரீதியிலான முன்நகர்வைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. சண்டையிடுவதற்கான அமெரிக்க நிலைநிறுத்தல்கள் குறித்து காங்கிரஸிற்கு "தகவல்" கூட தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்ற நிலையில், அந்த ஆவணம், முதல் முறையாக, வாஷிங்டனின் பல்வேறு போர்கள் மற்றும் இராணுவ தலையீடுகளில் எத்தனை துருப்புகள் பங்குபற்றுகின்றன என்பது குறித்து எந்த தகவலும் அளிப்பதைத் தவிர்த்துக் கொண்டது.

அமெரிக்க இராணுவம் அல் கொய்தா மற்றும் ISIS க்கு எதிராக மட்டுமல்ல, மாறாக தாலிபானுக்கு எதிராகவும் மற்றும் "ஆப்கான் அரசாங்கத்தின் நிலைக்குந்தன்மையை" மற்றும் அதன் பாதுகாப்பு படைகளை "அச்சுறுத்துகின்ற" எந்தவொரு சக்திகளுக்கு எதிராகவும் "செயலூக்கமான விரோதங்களில்" ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு, ஆப்கானிஸ்தானில் 16 ஆண்டுகால தலையீடு என்ற அதன் வரலாற்றில் மிக நீண்டகால போரைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது என்பதை அக்கடிதம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் இந்த பகிரங்கமான மோதலில் எத்தனை துருப்புகள் ஈடுபடுத்தப்படுகின்றன என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஈராக் மற்றும் சிரியாவில் பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொன்ற மற்றும் காயப்படுத்தி உள்ள ஒரு "திட்டமிட்ட விமானத் தாக்குதல் நடவடிக்கையை", அத்துடன் அவ்விரு நாடுகளில் தரைப்படை துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது குறித்து அக்கடிதம் குறிப்பிடுகிறது. ஆனால் மீண்டும், அவற்றின் எண்ணிக்கை மூடிமறைக்கப்படுகிறது.

அமெரிக்க ஆதரவிலான சவூதி படை அண்மித்து இனப்படுகொலை போர் ஒன்றை நடத்தி வருகின்ற யேமனில், இது மில்லியன் கணக்கானவர்களைப் பாரிய பட்டினியின் விளிம்பில் விட்டுள்ள நிலையில், அங்கே “ஒரு சிறிய எண்ணிக்கை" நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக முதல் முறையாக அது குறிப்பிடுகிறது.

அக்கடிதம் லிபியா, கிழக்கு ஆபிரிக்கா, ஆபிரிக்காவின் லேக் சாட் பேசின் மற்றும் சாஹெல் பிரதேசம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளையும், அத்துடன் ஜோர்டன், லெபனான், துருக்கி மற்றும் கியூபாவில் படைகளின் நிலைநிறுத்தல்கள் குறித்தும் குறிப்புகளை காட்டி செல்கிறது.

ட்ரம்பின் "போர் அதிகார கடிதத்துடன்" பொருந்திய விதத்தில், பென்டகன் உலகெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள மொத்தம் 44,000 துருப்புகளின் தற்போதைய இடங்களை "அறியப்படாதவை" என்பதாக பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த புதனன்று பென்டகன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இராணுவ கர்னல் ரோப் மேனிங் குறிப்பிடுகையில், “தவிர்க்க முடியாத பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்க மக்களுக்கு தெரிவிப்பதற்கும், [அந்த தகவல்களில் இருந்து] எதிரி ஏதேனும் ஆதாயமடைவதைத் தடுப்பதற்கும் இடையே சமநிலையைப் பேணுவதே" அமெரிக்க இராணுவத்தின் நோக்கமென அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போரைத் தீவிரப்படுத்துவது மீதான அவர் திட்டங்களை ட்ரம்ப் கடந்த ஆகஸ்டில் அறிவித்த போது, இதே தான் அவரது போலி வாதமாக இருந்தது. “இனிமேல் இராணுவ நடவடிக்கைகளுக்கான நமது திட்டங்கள் மற்றும் துருப்புகளின் எண்ணிக்கை குறித்து நாங்கள் பேசப் போவதில்லை,” என்றார். “திட்டவட்டமான கால அட்டவணை அல்ல, இப்போதிருந்து கள நிலவரமே நமது மூலோபாயத்தை வழிநடத்தும். அமெரிக்காவின் எதிரிகளுக்கு நமது திட்டங்கள் ஒருபோதும் தெரியக் கூடாது அல்லது நாம் வெளிப்படுத்துவதற்காக அவர்கள் காத்திருக்க வேண்டும். எப்போது நாம் தாக்குவோம் என்பதை நான் தெரிவிக்க மாட்டேன், ஆனால் நாம் தாக்குவோம்,” என்றார்.

இராணுவத் தளபதிகள் அமெரிக்க நிலைநிறுத்தல்களை அவர்கள் விருப்பப்படி தீவிரப்படுத்துவதற்கு விட்டுவிடும் வகையில், ட்ரம்ப் நிர்வாக வெள்ளை மாளிகை ஒபாமா நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கை மீதான வரம்புகளை நீக்கி உள்ளது. ஒபாமாவின் வரம்புகளே கூட, தற்காலிக நிலைநிறுத்தல்கள் என்று கூறி வழமையாக தந்திரமாக மாற்றி அமைக்கப்பட்டு, உத்தியோகபூர்வ எழுத்துக்களில் இருந்ததை விடவும் அதிக துருப்புகளை அமெரிக்க போர்களுக்கு அனுப்பியது.

துருப்பு நிலைநிறுத்தல்களைச் சுற்றியுள்ள இரகசியம், அக்டோபர் மாதம் நைஜரில் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு சிறப்பு நடவடிக்கை துருப்புகள் கொல்லப்பட்டு, அந்த மத்திய மேற்கு ஆபிரிக்க நாட்டிலும் அதன் எல்லைகளிலும் சுமார் 1,000 அமெரிக்க துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதை பகிரங்கமானதை அடுத்து சமீபத்திய மாதங்களில் எடுத்துக்காட்டப்பட்டது. அமெரிக்க செனட்டின் முன்னணி அங்கத்தவர்கள் அத்தலையீடு குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறினர். இது, சிரியா மண்ணில் 4,000 அமெரிக்க துருப்புகள் இருப்பதாக பென்டகன் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், ஈராக் மற்றும் சிரியாவுக்கான அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகளின் தளபதி வாய் தவறி கூறியதாக கூறப்பட்டதற்கு பின்னர் வந்தது. அவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, உத்தியோகபூர்வ எண்ணிக்கை 500 என்று மீண்டும் வலியுறுத்தினார். அதற்குப் பின்னர், பென்டகன் அதன் நிஜமான எண்ணிக்கையை 2,000 க்கு அதிகம் என்று ஒப்புக் கொண்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் —மிகக் குறைவாகவே ஊடக கவனத்திற்கு வந்திருந்த— பென்டகன் வெளியிட்ட புள்ளிவிபரங்கள், ஈரானுக்கு எதிராக ஒரு புதிய அமெரிக்க போருக்காக அபிவிருத்தி செய்யப்படும் தயாரிப்புகளைக் குறிப்பிட்டு காட்டும் விதத்தில், பல பாரசீக வளைகுடா நாடுகளில் நடந்து வரும் கூர்மையான அதிகரிப்புகளோடு சேர்ந்து, மத்திய கிழக்கில் ஒட்டுமொத்தமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை முந்தைய நான்கு மாதங்களில் 33 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தியது.

ஏனைய ஒவ்வொரு விடயத்திலும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்ரோஷத்தின் அளவு குறித்து நடைமுறையளவில் நன்கு அறியப்பட்டுள்ள நிலை, இந்த அபிவிருத்திகளோ, “எதிரிக்கு துப்பு கிடைத்துவிடும்" என்ற எந்தவொரு கவலையினால் இரகசியமாகவோ அல்லது நடைமுறையளவில் மூடிமறைக்கப்பட்டோ வைக்கப்படவில்லை. மாறாக, இது அமெரிக்க மக்களிடமிருந்து தகவலை மறைத்து வைக்க நோக்கம் கொள்கிறது, அமெரிக்க மக்கள், ஈரான், வட கொரியாவுக்கு எதிராக மற்றும் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராகவும் கூட, புதிய மற்றும் சாத்தியமான உலக பேரழிவுகரமான போர்களைத் தொடங்குவதை அல்ல, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நடந்து இராணுவ தலையீடுகளைத் தொடர்வதையும் கூட விரும்பவில்லை.

வெளிநாடுகளில் அரைவாசி மூடிமறைக்கப்பட்ட இரகசியப் போர்களை தொடுப்பது, அத்துடன் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களைத் தொடுப்பதில், ட்ரம்ப் முன்னைய நிர்வாகங்களிலிருந்து வேறுபட்ட வகையில் செயல்படவில்லை, மாறாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும் கட்டவிழ்ந்துள்ள நீடித்த நிகழ்வுபோக்கின் விளைவைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். இவை அமெரிக்க வெளியுறவு கொள்கை மீதான பெரும் அதிகாரங்களை அமெரிக்க இராணுவ தளபதிகளுக்கு முன்பினும் அதிகமாக விட்டுக்கொடுத்துள்ளன. பதவியில் இருக்கும் ஒரு தளபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றுகின்ற நிலையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற இரண்டு கடற்படை தளபதிகள் பாதுகாப்பு செயலர் பதவி மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை இராணுவ தளபதி பதவிகளை வகித்து வருகின்ற நிலையில், இந்த போக்கு வெறுமனே ட்ரம்பின் கீழ் ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

வட கொரியா, சீனா மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் அமெரிக்க படைகள் மயிரிழையில் நிற்கையில், போர்-நடத்துவதற்கான அதிகாரங்களை முன்பினும் அதிகமாக இராணுவ உயரதிகாரிகளிடம் தொடர்ந்து ஒப்படைப்பது, ஒரு பிழையான கணக்கீடோ, தவறான புரிதலோ, அல்லது தற்செயலான விபத்தோ, முழு அளவிலான அணுஆயுத போருக்கு விரைவாக இட்டுச் சென்றுவிடும் அபாயத்தைப் பாரியளவில் அதிகரிக்கிறது.

போர் அதிகார சட்டங்கள் மீதான ட்ரம்பின் கூடுதலான தாக்குதல், காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து எந்த எதிர்ப்பையும் கொண்டு வரவில்லை. இராணுவத்தால் அல்லது போர் முனைவால் அரசு மேலாளுமை கொள்வதை அவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களின் கருத்துவேறுபாடு வெறுமனே ஒரு தந்திரோபாய குணாம்சம் கொண்டுள்ளது, இது ஒரு புதிய மற்றும் இன்னும் அதிக மூர்க்கமான மோதலுக்கு தயாரிப்பு செய்வதில் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் பிரிவுகளுடன் ஒத்துழைத்து தொடுக்கப்பட்ட ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சார நடவடிக்கையில் வெளிப்பட்டது.

தங்களின் செல்வ வளம் மற்றும் மேலாதிக்கத்தை பாதுகாக்க முன்பினும் அதிகமாக இராணுவவாதம் மற்றும் போரை பலமாக சார்ந்துள்ள ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதிய செல்வந்த தட்டுக்களையே இவ்விரு கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து, இக்கட்சிகளுக்கு, தளபதிகளை அடக்கி வைப்பதிலோ அல்லது அரசின் அரசியலமைப்பு மற்றும் அதில் பொதிந்துள்ள ஜனநாயக உரிமைகளைத் தாங்கிப் பிடிப்பதிலோ எந்த ஆர்வமும் கிடையாது. அதற்கு பதிலாக, இவை வோல் ஸ்ட்ரீட் உடன் சேர்ந்து கொண்டு, கட்டுப்பாடில்லாத இராணுவ மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட ஓர் அமைப்புமுறையை உருவாக்க ஒன்றுகூடி செயல்பட்டு வருகின்றன, இத்தகைய ஒன்றில் தேர்தல்கள், காங்கிரஸ் மற்றும் ஏனைய நிர்வாக துறைகளும் கண்துடைப்புகள் என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்றாகி வருகின்றன.