ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump dresses down Australian prime minister

ட்ரம்ப் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியை தூற்றுகிறார்

By Mike Head
3 February 2017

வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அடுக்குகளே திட்டமிட்டு கசிய விடப்பட்டிருப்பதாக தோன்றும் விதத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கம் டர்ன்புல் உடனான வாரயிறுதி தொலைபேசி உரையாடலில் அவரை "விளாசியதாகவும்", பின்னர் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

நேற்று வாஷிங்டன் போஸ்டில் முதன்முதலில் வெளியான விபரங்களின்படி, ஒபாமா நிர்வாகத்தின் ஆஸ்திரேலியாவுடனான அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கையை மதிக்குமாறு கூறுகையில் ட்ரம்ப் டர்ன்புல் மீது சீறி இருந்தார். அகதிகளை பூதாகரமாக காட்டும் அதே விதத்தில், ட்ரம்ப், அதை "ஒருபோதும் இல்லாத மிக மோசமான உடன்பாடு" என்று முத்திரை குத்தியதோடு, “அடுத்த பாஸ்டன் குண்டுதாரிகளை" அமெரிக்காவிற்கு அனுப்ப முயற்சிப்பதாக டர்ன்புல் மீது குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறிருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உட்பட அன்றைய தினம் ஐந்து உலக தலைவர்களுடான அவரது தொலைபேசி அழைப்புகளிலேயே அவர்களது உரையாடல் தான் "மிகவும் மோசமாக" இருந்ததாக டர்ன்புல்லிடம் கூறி, ட்ரம்ப் இன்னும் மேற்கொண்டு சென்றார். திட்டமிட்டிருந்த ஒரு மணி நேர அழைப்பை, ட்ரம்ப் 25 நிமிடங்களிலேயே திடீரென துண்டித்தார். இது “ஜப்பானின் ஷின்ஜோ அபே, ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெல், பிரான்சின் பிரான்சுவா ஹோலாண்ட் அல்லது புட்டின் உடனான அவர் கலந்துரையாடலை விட வெகுவாக" இது "நேரம் குறைந்திருந்தது" என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.

கசியவிடப்பட்ட அந்த உரையாடலின் விபரங்கள், அது "சுமூகமாக முடிந்ததாக" வலியுறுத்திய டர்ன்புல்லின் வலியுறுத்தலையும் மற்றும் அந்த அழைப்பு "மிகவும் அக்கறையோடும்" மற்றும் "மிகவும் ஆக்கபூர்வமாகவும்" இருந்ததாக கூறிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷாப்பின் முந்தைய வாதங்களின் மோசடியையும் அம்பலப்படுத்தியது. அந்த அழைப்பின் விபரங்கள் கசியவிடப்பட்டமை அவருக்கு "மிகவும் ஏமாற்றமளிப்பதாக" நேற்று டர்ன்புல் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் மிகத் தெளிவாக இது வெறுமனே டர்ன்புல் மீதான ஒரு தனிப்பட்ட அவமதிப்பு அல்ல. இது, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அமெரிக்காவுடனான அதன் கூட்டணியின் எதிர்காலம் மீது டர்ன்புல் அரசாங்கத்திற்கும் மற்றும் ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்திற்குமான ஒரு திட்டமிட்ட எச்சரிக்கை அடியாகும். ட்ரம்பின் தலைமை மூலோபாயவாதியான பாசிசவாத ஸ்டீபன் கே. பானன், ட்ரம்பின் இராணுவவாத தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளின் மற்றும் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் சீன் ஸ்பைசர் ஆகியோர் ட்ரம்பின் அழைப்பை ஓவல் மாளிகையில் இருந்து கண்காணித்திருந்தனர்.

அமெரிக்க கூட்டாளிகளுக்கும் மற்றும் போட்டியாளர்களுக்கும் ஒருமாதிரியாக பரந்தளவில் ஆத்திரமூட்டும் "அமெரிக்கா முதலிடத்தில்" சேதியை நேற்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். அவர் ஓர் உரையில், உலகம் அலங்கோலமாக கிடப்பதாகவும், ஆனால் அவர் "அதை சரி செய்ய இருப்பதாகவும்" வாஷிங்டன் பார்வையாளர்களுக்கு தெரிவித்தார். அவர் அறிவித்தார்: “எனது கடுமையான தொலைபேசி அழைப்புகளைக் குறித்து நீங்கள் கேள்விப்படும் போது, அதை குறித்து கவலைப்பட வேண்டாம்… நாம் கடுமையாகத்தான் இருக்க வேண்டும். நாம் சற்று கடுமையாக இருக்க வேண்டிய நேரம் இது, நண்பர்களே. நடைமுறையில் உலகின் ஒவ்வொரு நாடும் நம்மை பயன்படுத்திக் கொண்டுள்ளன. இனிமேல் அது ஒருபோதும் நடக்காது,” என்றார்.

அன்று காலை, குண்டர்கள் பாணியில், ட்ரம்ப் கூறுகையில் அவர் "ஒரு தேசமாக ஆஸ்திரேலியாவை நேசிப்பதாகவும்" ஆனால் அகதிகள் உடன்பாட்டில் "ஒரு பிரச்சினை" இருப்பதாகவும் தெரிவித்தார். ட்ரம்ப் அந்த "மோசமான உடன்பாட்டைக்" குறித்து "நம்ப முடியாதளவில் ஏமாற்றமடைந்திருப்பதாகவும்" மற்றும் அகதிகள் "தீவிரமாக நுண்மையான ஆய்வுகளுக்கு" உட்படுத்தப்பட்டால் மட்டுமே அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் ஸ்பைசர் மீண்டும் வலியுறுத்தினார்.

யதார்த்தத்தில், இந்த பயங்கரமான பாதுகாப்புவிசாரணை ஏற்கனவே கடந்த ஆண்டு ஒபாமா நிர்வாகத்துடன் செய்யப்பட்ட உடன்படிக்கையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அது பசிப்பிக்கின் இருதரப்பிலும் பிற்போக்குத்தனமான அகதிகள்-விரோத கொள்கைகளை "பலப்படுத்த" வடிவமைக்கப்பட்டிருந்தது. நௌரூ மற்றும் பாப்புவா நியூ கினியில் ஆஸ்திரேலியா காலவரையின்றி அடைத்து வைத்திருக்கும் 2,000 க்கும் அதிகமான அகதிகளில் ஒருவருக்கு கூட அமெரிக்காவினுள் நுழைய உத்தரவாதம் வழங்கப்படவில்லை.

டர்ன்புல்லை ட்ரம்ப் பயமுறுத்தும்ரீதியில் கையாண்டமை, ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஊடகம் மற்றும் அரசியல் உயரடுக்கை கொந்தளிப்பிற்குள் தள்ளியுள்ளது ஏனென்றால் புதிய நிர்வாகத்தின் விரோத மனோபாவம் அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டுள்ளதை அது தெள்ளத்தெளிவாக தெளிவாக்குகிறது. இதுவே இறுதியானதல்ல ஏனென்றால் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் இன்னும் நிறைய இராணுவ பங்களிப்புகளை கான்பெர்ராவிடம் இருந்து பெறுவதற்கு வாஷிங்டன் அழுத்தமளித்து வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க இராணுவம் மற்றும் மூலோபாய பாதுகாப்பிற்கு கைமாறாக, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் கடந்த ஆறு தசாப்தங்களாக கொரியா மற்றும் வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா வரையில் அமெரிக்கா தூண்டிய ஒவ்வொரு பிரதான போரிலும் கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும் துருப்புகளை அனுப்பி உள்ளன. ஆனால் ட்ரம்பின் வெள்ளை மாளிகை சீனா மற்றும் ஜேர்மனி உட்பட அதன் போட்டியாளர்களுக்கு எதிராக "அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக ஆக்க" முனைகின்ற நிலையில் இப்போது இன்னும் அதிகமானவை தேவைப்படுகின்றன.

அகதிகள்-பரிமாற்ற ஏற்பாட்டிற்கு பதிலாக டர்ன்புல் அரசாங்கத்திடம் இருந்து அல்லது அனேகமாக உடனடியாக வெள்ளை மாளிகை என்ன கோரியது என்பதை பெரும்பாலும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் மறைத்துவிட்டன. சுயாதீன  செய்தியாளரான பௌல் கெல்லி இன்றைய Australian இதழில் குறிப்பிடுகையில், “இந்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால், அதை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியாக, ட்ரம்ப் ஏதேனும் புள்ளியில் ஏதேனும் பிரச்சினையில் ஒரு பிரதி உபகாரத்தை கோருவார். மேலும் டர்ன்புல், தன்னிடமுள்ள அரசியல் மூலதனத்தை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டதால் அதற்கு உடன்படுவார்” என்றார்.

புதனன்று, பெயர் வெளியிட விரும்பாத “மூத்த அமெரிக்க ஆதார நபரை" மேற்கோளிட்டு Australian பத்திரிகை அறிவிக்கையில், கடுமையான புலம்பெயர்வோர்-விரோத ஆணையில் திருத்தம் செய்வதற்கு கான்பெர்ரா பேச்சுவார்த்தை நடத்தியதும், ட்ரம்ப் நிர்வாகம் அதற்கு உடன்பட்டிருந்ததாக அப்பத்திரிகை குறிப்பிட்டது. இந்தவகையில் "முன்பே இருக்கும்" அகதிகள்-பரிமாற்ற உடன்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

ஆனால் வெள்ளை மாளிகைக்கு "மகிழ்ச்சி இல்லை" என்பதோடு, “ஆஸ்திரேலியா விட்டுக்கொடுக்க வேண்டுமென இறுதியில் எதிர்பார்க்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் விட்டுவைக்கவில்லை.” ஓர் ஆதார நபர் கூறினார்: “ஆதரவை நேரடியாக கேட்டிருக்கக் கூடாது … ஆனால் தவிர்க்கவியலாமல் ஏதாவது வகையிலான பரஸ்பர விட்டுக்கொடுப்பு ஏற்படும். அது அனேகமாக [தென் சீனக் கடலில்] சுதந்திர-கப்பல் போக்குவரத்து ஒத்திகை வடிவத்திலோ அல்லது ஈராக்கில் சிறப்பு படைகளை நிலைநிறுத்தும் வகையிலோ இருக்கலாம்.”

டர்ன்புல் ஆல் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவருக்கு முன்னர் இருந்த டோனி அப்போட்டின் கீழ் தாராளவாத-தேசிய அரசாங்கம், இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிராக சண்டையிடுவதற்காக என்ற சாக்கில் அமெரிக்காவினது புதுப்பிக்கப்பட்ட ஈராக் போரில் இணைய போர் விமானங்களையும் மற்றும் ஏனைய இராணுவ படைகளையும் அனுப்பியது. அமெரிக்க தரை படைகளுடன் இணைவதற்கு சிறப்பு படைகளை அனுப்புவது என்பது ஆதாரவளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு மீதான மேலாதிக்கத்திற்காக நடந்து வரும் அமெரிக்க முனைவில் ஒரு குறிப்பிடத்தக்க தீவிரப்பாட்டை சமிக்ஞை செய்வதாக இருக்கும்.

இதுவரையில், டர்ன்புல் அரசாங்கம், மிக கவனமாக வாஷிங்டனின் போக்கை அடியொற்றி வந்துள்ளது என்றாலும், “கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப்" பாதுகாப்பதற்காக என்ற போலிச்சாக்கின் கீழ், தென் சீனக் கடலில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திட்டுக்களைச் சுற்றியுள்ள கடல்எல்லை பிரதேசங்களுக்குள் போர்க் கப்பல்களையோ அல்லது போர்விமானங்களையோ அனுப்புவதில் அது அமெரிக்காவை பின்தொடரவில்லை. ஒபாமா நிர்வாகம் அதுபோன்ற மூன்று ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது, அவை பெய்ஜிங் உடனான பதட்டங்களை அதிகரித்ததுடன், அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான அவை ஒரு போர் அபாயத்தை தீவிரப்படுத்தின.

ட்ரம்பும் மற்றும் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள அவரது வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனும் அத்தீவுதிட்டுக்களை சீனா அணுகுவதை முடக்க அச்சுறுத்தி உள்ளனர், இது ஓர் போர் நடவடிக்கையாக மாறக்கூடியதாகும். அதுபோன்றவொரு மோதல், சீனாவை அதன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக பலமாக சார்ந்துள்ள ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டு வரும்.

சீனாவிற்கு எதிரான போரை எதிர்கொள்ள மற்றும் தயாரிப்பு செய்ய, அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட காம்பெர்ரா மீதான அழுத்தத்தை ட்ரம்ப் இப்போது புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். 2010 இன் மத்தியில், அப்போதைய தொழிற் கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்துவரும் செல்வாக்கிற்கு சில வகையில் அமெரிக்கா வழிவகை செய்ய வேண்டுமென முன்மொழிந்த போது, தற்போதைய தொழிற் கட்சி தலைவர் பில் ஷொர்டன் உட்பட அமெரிக்க தூதரகத்திற்கு நெருக்கமான கூறுபாடுகளால் தூண்டிவிடப்பட்ட ஒரு பின்புல தொழிற் கட்சி பதவிக்கவிழ்ப்பு சதியில் அவர் [ரூட்] பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

2011 இல் ஆஸ்திரேலிய பாராளுமன்ற தளத்திலிருந்து ஒபாமா "முன்னெடுப்பை" அறிவித்தபோது, அதற்கு ஆரம்பத்தில் சற்றே விமர்சனபூர்வமாக இருந்த டர்ன்புல்லுக்கு, பராக் ஒபாமாவே கூட அப்பட்டமான எச்சரிக்கைகளை விடுத்தார். கடந்த செப்டம்பரில், Australian Financial Review (AFR) அறிவிக்கையில் சீனாவில் உள்ள அவரது கடந்தகால வணிக நலன்களுக்காக டர்ன்புல்லை ஆஸ்திரேலிய உளவுத்துறை முகமைகள் "நம்புவதில்லை" என்று குறிப்பிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், மணிலாவில் நேரடியாக நடந்த சந்திப்பின் போது, டார்வின் வர்த்தக துறைமுகத்தை செயல்படுத்த ஒரு சீனப் பெருநிறுவனத்திற்கு 99 ஆண்டுகால ஒப்பந்தம் வழங்குவதற்கு முன்னதாக டர்ன்புல் வாஷிங்டனுடன் கலந்தாலோசிக்க தவறியதற்காக அவரை ஒபாமா கண்டித்ததாக ஊடக கசிவுகள் அம்பலப்படுத்தின.

இன்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் முழு எச்சரிக்கையில் உள்ளன என்பதோடு, அது அமெரிக்க கூட்டணி மீது ஏற்கனவே குறைந்து வரும் மக்கள் ஆதரவு மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் உட்பட டர்ன்புல் மீது ட்ரம்ப் சீறியதன் தாக்கங்களைக் குறித்து முன்னெச்சரிக்கையோடு உள்ளன.

AFR இன் தலைமை அரசியல் செய்தியாளர் பிலிப் கூரெ எழுதினார்: “ஆஸ்திரேலியாவை ட்ரம்ப் தொடர்ந்து அருவருப்பாக கையாண்டால், தென் சீனக் கடலில் அவர்களது எந்தவொரு விளையாட்டையும் பின்தொடர்வது ஒருபுறம் இருக்கட்டும், டார்வினில் அவர்களது துருப்புகளை வைப்பது உட்பட அமெரிக்கர்களுக்கு எந்தவொரு ஆதரவு வழங்குவதற்குமான பொதுமக்களின் ஆதரவு விரைவிலேயே இல்லாது போகும்.”

2003 ஈராக் படையெடுப்புக்குப் பின்னர் அமெரிக்கா மீதான பொதுமக்கள் கோபத்தைக் கடந்து வருவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையமான, சிட்னி பல்கலைக்கழக அமெரிக்க ஆய்வுகளுக்கான மையத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் குர்ரன் வரவிருப்பதைக் குறித்த கவலைகளுக்கு குரல் கொடுத்தார். “நிர்வாக வாழ்வின் ஆரம்பத்திலேயே, ஒப்பீட்டளவில் ஒரு சிறிய சச்சரவுக்காக இவ்விதமான பதட்டங்களை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால், மிகப்பெரிய நெருக்கடி சம்பவத்தில் என்ன நடக்கும்?” என்றார்.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள ஏனையவர்கள், அமெரிக்க கூட்டணியிலிருந்து உடைத்துக் கொள்ள அழைப்புவிடுக்கவில்லை என்றாலும், அதன் நீடித்தத்தன்மை மீது சந்தேகம் எழுப்பி உள்ளனர். Fairfax ஊடகத்தின் அரசியல் பதிப்பாசிரியர் பீட்டர் ஹார்ட்சர் இன்று அறிவிக்கையில், இது "ஆஸ்திரேலியா விழித்துக் கொள்வதற்குரிய!” நேரமிது என்றார். “கூட்டணி அதிர்ச்சி தருணம்" “ஆஸ்திரேலியாவை தனக்குதானே அதிகமாக ஒழுங்குபடுத்திக் கொள்வதில் திக்குமுக்காட" செய்யலாம் மற்றும் "அந்நாடு அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் முதிர்ச்சியுறாத ஒரு அரசு என்பதிலிருந்து அதிகளவில் ஒரு முதிர்ந்த அரசாக முதிர்ச்சி அடையலாம்,” என்றார்.

இதுபோன்ற அறிக்கைகள், ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் நலன்களை வலியுறுத்துதவற்கு இன்னும் அதிக "சுதந்திரமான" வெளியுறவு கொள்கையை அறிவுறுத்துவதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான பொதுமக்களின் கோபத்தை ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத திசையில் திருப்புவதற்கான ஆளும் உயரடுக்கின் முயற்சிகளது பாகமாக உள்ளன.