ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Conservative Fillon campaign faces collapse in French presidential elections

பழைமைவாத வேட்பாளர் ஃபிய்யோன் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் வீழ்ச்சிக்கு முகம்கொடுக்கிறார்

By Alex Lantier
14 February 2017

வலது-சாரி குடியரசுக் கட்சியின் வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் வீழ்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார், ஏனென்றால் தேசிய சட்டமன்றத்தில் கற்பனையான வேலையின் பேரில் அவரது மனைவி பெனிலோப் க்கு அரசாங்க ஊதியம் கொடுக்கப்பட்டிருந்த விவகாரத்தில் தேசிய நிதி வழக்கறிஞர்கள் (PNF) ஆரம்பகட்ட பரிந்துரைகளை தயாரித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட எந்த வேலையுமே செய்யாமல் 900,000 யூரோக்களை அவர் மனைவி பெற்றிருந்ததாக விரிவாய் ஆவணப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரந்துபட்ட கோபம் பெருகுகின்ற நிலையில், அரசாங்கத்திற்கான பிரான்சின் இரண்டு பாரம்பரியமான கட்சிகளில் ஒன்றின் பிரச்சாரம் நிலைகுலையும் சாத்தியம் மிக நிதர்சனமாகியிருக்கிறது. ஃபிய்யோனின் பதிலிறுப்பு —கொடுக்கப்பட்ட வேலை குறித்து, தான் மட்டுமே முடிவு கூற முடியும் என்று கூறி, ஒரு ஊடக சந்திப்பில் தனது மனைவிக்கு ஆறு இலக்கத் தொகை கொடுக்கப்பட்டதை பாதுகாத்து பேசினார்— வாக்காளர்களை மேலும் கோபமூட்டவே சேவை செய்திருந்தது.

மக்களில் 70 சதவீதம் பேர், ஃபிய்யோன் போட்டியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றும், 79 சதவீதம் பேர், அவரது ஊடக சந்திப்பால் சமாதானமடையவில்லை என்றும், Odoxa கருத்துக்கணிப்பு ஒன்று வெள்ளிக்கிழமையன்று கண்டறிந்தது. அவரது சொந்த தொகுதியினர் மற்றும் LR வாக்காளர்கள் இடையிலும் கூட ஃபிய்யோனின் ஆதரவு நிலைகுலைந்திருக்கிறது, இந்த எண்ணிக்கைகள் முறையே 53 சதவீதமாகவும் 61 சதவீதமாகவும் இருந்தன. மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், LR வாக்காளர்களில் 53 சதவீதத்தினரும் அவரை ஏற்கமுடியாதவராகக் கண்டனர்.

உள்ளூர் LR அரசியல்வாதிகள் ஃபிய்யோனை பிரச்சாரப் பேரணிகளில் சந்திப்பதற்கு மறுப்பதாகவும் பிரான்ஸ் எங்கிலும் அவரது கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு மறுப்பதாகவும் கூறப்படுவதோடு, அவரது பிரச்சார ஊழியர்களும் ஆழமான நெருக்கடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. Le Monde எழுதியது: “வேட்பாளரின் [ஃபிய்யோன்] அரசியல் சுற்றுப்பயணம் முடங்கிப் போயுள்ளது, நடப்பு நிகழ்வுகளைக் குறித்து அவரது நிலைப்பாடுகளைக் கூறுவதற்கு இனியும் அவர் ஊடகங்களை எதிர்நோக்குவதில்லை. ஃபிய்யோனும் அவரது ஆதரவாளர்களும் இந்த நெருக்கடிக்கு முகம்கொடுத்து “இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பதாக” ஊடகவியலாளர் ஒலிவியே மஸரோல் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையானது LR ஐ, உண்மையில் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தையுமே, ஒரு அமிழும்சதுப்புக்குள் நிறுத்தி விட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி மீது அவரது 2012 பிரச்சார நிதிக் கையாளல்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, முன்னாள் பிரதமரான அலெய்ன் ஜூப்பே -இவர் 2004 இல் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டவர்- சென்ற ஆண்டில் LR இன் முதனிலைத் தேர்தலில் அதிர்ச்சிகரமாக தோல்வி கண்டதன் பின்னர் போட்டியில் இறங்க மறுத்து வருகிறார். தான் நீதிமன்றப் படியேறினால் போட்டியில் இருந்து இறங்கி விடுவதாக வாக்குறுதியளித்து தனது LR போட்டியாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டிருந்த ஃபிய்யோன் இப்போது சட்ட நடவடிக்கையின் உண்மையான சாத்தியத்திற்கு முகம்கொடுத்திருக்கிறார். ஆயினும், ஃபிய்யோன் விலகி விட்டால் LR வேட்பாளராக யார் போட்டியிடுவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் வெறும் 4 சதவீத ஏற்புநிலையுடன் தள்ளாடி வருகிறார், PS நிர்வாகிகளின் ஆதரவு PS இன் வேட்பாளரான பெனுவா அமோனுக்கும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் PS இன் பொருளாதார அமைச்சரக இருந்தவருமான இமானுவல் மக்ரோனுக்கும் இடையில் பிளவுபட்டு நிற்கிறது என்ற நிலையில், ஃபிய்யோனின் வேட்பின் பொறிவானது முதலாளித்துவ ஆட்சியின் சர்வதேச நெருக்கடியின் பகுதியாகும்.

1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் பிரான்சை ஆட்சி செய்து வந்த, PS-LR இருகட்சி ஆட்சி முறை மதிப்பிழந்திருப்பதானது, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியிருப்பதற்கு மத்தியிலும் கிரேக்க கடன் நெருக்கடி மற்றும் பிரெக்ஸிட்டால் ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிழந்திருப்பதன் மத்தியிலும் வந்திருக்கிறது. ட்ரம்ப்பின் தேர்வு எடுத்துக்காட்டியதைப் போல, தேர்தல் முடிவுகள் போட்டியிடுபவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகளை வழங்கி வருகிற நிலையில், முதலாளித்துவ அரசியலில் நீண்டகாலமாய்-நிறுவப்பட்டு வந்திருக்கும் நிச்சயநிலைகள் எல்லாம் காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன.

சென்ற ஆண்டின் சமயத்தில், ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் திட்டநிரலுக்கு இருந்த பெருவாரியான குரோதம் அத்துடன் மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணிக்கு அப்போதும் இருந்து கொண்டிருந்த பாரிய மக்கள்வெறுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, LR 2017 இல் எளிதாக வெல்லும் என்பதுதான் பரவலான அபிப்ராயமாக இருந்தது. நையாண்டி வார இதழான Canard Enchaîné பெனிலோப் ஃபிய்யோன் ஊழலை முதன்முதலில் போட்டுடைத்து இரண்டு வார காலமே ஆகியிருக்கும் நிலையில், இப்போதோ, மேயில் நடைபெறும் தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு ஃபிய்யோன் தேற மாட்டார் என்பதாகக் காட்சியளிக்கிறது.

ஆயினும், எல்லாவற்றுக்கும் மேல் பிராஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் திவால்நிலையே ஃபிய்யோனது பிரச்சாரத்தின் நெருக்கடியில் இருந்து எழுந்து நிற்பதாக இருக்கிறது. 500,000 அரசுத் துறை வேலைகளை வெட்டுவதன் மூலமும், பொதுச் சுகாதார செலவினத்தை வெட்டுவதன் மூலமும், ஆழமான வலது-சாரி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு அழைப்பு விடுத்த பிரதான வலது-சாரி வேட்பாளர் மதிப்பிழந்து விட்டிருக்கும் போதும் கூட, தொழிலாள வர்க்கத்திற்கு அனுகூலமான வேட்பாளர்களின் களம் அங்கு எழுவதாகத் தெரியவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ட்ரம்புக்கு எதிரான போராட்டங்கள் பரவி வருவதன் மத்தியில், இப்போது எழுந்து கொண்டிருப்பது, புரட்சிகரமான தாக்கங்களைக் கொண்ட முதலாளித்துவ ஆட்சியின் ஒரு ஆழமான, சர்வதேச நெருக்கடியாகும்.

ஃபிய்யோன் வேட்பாளர் களத்தில் இருந்து வாபஸ் வாங்கி விடும்பட்சத்தில், அவரது வாக்காளர்களது வாக்குகள் FN க்கும் PS ஆதரவு வேட்பாளர்களுக்கும் இடையில் பிளவுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இரண்டுமே PS மற்றும் LR இரண்டினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கும் வெறுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை, போர்கள் மற்றும் போலிஸ்-அரசு கொள்கைகள் மேலும் ஆழப்படுவதை உருவாக்கும். ஆயினும், இந்தக் கட்சிகள் எதுவாயிருந்தாலும், அது PS, LR, அல்லது FN எந்தக் கட்சியாயிருந்தாலும், இந்த பிற்போக்குத்தனமான திட்டநிரலைத் தொடர்வதற்கான அரசியல் அங்கீகாரத்தை கொண்டிருக்கப் போவதில்லை. இவை அத்தனையுமே வெடிப்பான சமூக எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும்.

ஃபிய்யோனது பிரச்சாரம் பொறிவு காண்பதன் தாக்கம் குறித்து ஊடக ஊகங்கள் பெருகிவருகின்ற நிலையிலும் கூட, அவர் உண்மையில் போட்டிக்களத்தில் இருந்து வாபஸ் வாங்கி விட்டால் அதிருப்தியுற்ற ஃபிய்யோன் வாக்காளர்கள் எந்தப் பக்கம் செல்வார்கள் என்பது இன்னும் மிகப்பெருமளவில் தெளிவற்றதாகவே இருக்கிறது.

PS தொடர்பானவர்களில் இதில் மிக வெளிப்படையாக அனுகூலமடையத்தக்கவரான மக்ரோன், ஒரு பலவீனமான வேட்பாளராக பார்க்கப்படுபவர் ஆவார். அவர் வயது வெறும் 39 தான், இதற்கு முன்பாய் அரசியல் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர், அவர் இனிமேல் தான் வெளியிடவிருக்கும் அவரது வணிக-ஆதரவு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு, நேட்டோ ஆதரவு வேலைத்திட்டத்திற்காக அவருக்குக் கிட்டியிருக்கும் சாதகமான ஊடக கவனிப்பால் அவர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகளில் முன்னிலை பெற்று வருகிறார். இவர் முன்னாளில் முதலீட்டு வங்கியாளராய் இருந்தவர், மக்கள்வெறுப்பை சம்பாதித்த ஹாலண்ட் அரசாங்கத்திற்கு ஆலோசகராய் இருந்தவர், 2015 இல் PS ஆல் திணிக்கப்பட்ட பொறுப்புடைமை ஒப்பந்தம் என்ற மக்கள்-ஆதரவற்ற நெறிமுறைகளை அகற்ற மசோதாவை உருவாக்கியவர்.

வலதுசாரியாளர் பிரான்சுவா பேய்ரூ —2002 இல் ஜாக் சிராக்கின் பின்னால் ஒன்றாய் அணிதிரள்வதற்காக உருவாக்கப்பட்ட LR இன் முன்னோடியான மக்கள் பெரும்பான்மைக்கான ஒன்றியத்தில் (UMP) சேராத வெகுசிலரில் இவரும் ஒருவர்— திடீரென்று போட்டியில் களம்காணக்கூடும் என்று Le Monde ஊகம் தெரிவிப்பதானது மக்ரோனது நிலை நிச்சயமற்று இருப்பதன் ஒரு அறிகுறியாய் இருக்கிறது. அது எழுதியது: “பிரான்சுவா பேய்ரூ ஜனாதிபதி தேர்தலில் தன் அதிர்ஷ்டத்தை முயற்சிசெய்து பார்க்க அவரை ஏதோவொன்று இன்னும் உந்திக் கொண்டு தான் இருக்கிறது. ஃபிய்யோன் நீதிமன்றத்திற்கு இழுக்கப்படலாம், மக்ரோன் “குமிழி” உடைந்து போகலாம். இடது இன்னும் உருக்குலைந்த நிலையில் தான் இருக்கிறது. இப்போது நடக்காதென்றால், எப்போதும் நடக்காது என்று அவர் கருதுகிறார்.”

கருத்துக்கணிப்புகளில், மக்ரோன், கிட்டத்தட்ட 21 சதவீதத்தைச் சுற்றி, தேங்கியிருக்கிறார் அல்லது வீழ்ச்சியடைந்து கொண்டும் கூட இருக்கிறார் என்ற நிலையில், தேர்தலில் முன்னிலையில் இருக்கும் மரின் லு பென் தான் ஃபிய்யோனது பொறிவில் பிரதானமாக ஆதாயமடைபவராய் இருக்கிறார். ஜனாதிபதி தேர்தலின் முதலாம் சுற்றுக்குப் பின்னர் அவர் 10 சதவீதம் வாக்குகள் வரை கூடுதலாய் பெற முடியும் —அப்போதும் கூட அவர் 36 சதவீத வாக்குகள் தான் பெற்று இறுதிச் சுற்றில் தோல்வியே காண முடியும் என்றாலும்கூட— என்பதாக இப்போது செய்திகள் வெளியாகின்றன.

“பிரெஞ்சுத் தேர்தல் இப்போது மரின் லு பென்னுக்கும் பொறிந்து செல்லும் பிரெஞ்சு ஸ்தாபகத்திற்கும் இடையிலான மோதல்” என்ற தலைப்பிலான ஒரு கவலை தொனிக்கும் கட்டுரையில் பிரிட்டனின் வலது-சாரி ஸ்பெக்டேட்டர் எழுதியது: “கற்பனைசெய்ய முடியாததும் கூட சாத்தியமே என்ற உணர்வை பிரெக்ஸிட்டும் ட்ரம்ப்பும் உருவாக்கியிருக்கின்றனர், இது மரின் லு பென்னுக்கு வாக்களிப்பதற்கு எதிரான கலக்க உணர்வை மேலும் பலவீனப்படுத்தக் கூடும்... லு பென் வெற்றிகாணும் வாய்ப்பை சிலர் இப்போது நிராகரிக்கிறார்கள், மக்ரோனின் பிரச்சாரம் கடும் சிக்கலுக்குள் போகுமானால், அத்தனை எதிர்பார்ப்புகளும் மங்கி விடும். ஒவ்வொரு புதிய ஊழலும் அல்லது பயங்கரவாத சம்பவமும் லு பென்னின் கரங்களில் ஆயுதங்களாய் சென்றுசேர்கிறது.”

ஆயினும் ட்ரம்ப்பை வழிமொழிந்திருப்பதில் பிரான்சில் ஆழமான அவப்பெயர் சம்பாதித்திருக்கும் நிலையிலும், 20 ஆம் நூற்றாண்டு பாசிசத்தின் வாரிசாக FNக்கு மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருவதிலும் மரின் லு பென்னின் நிலை இப்போதும் அந்தரத்தில் தான் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் யூரோ நாணயமதிப்பில் இருந்தும் வெளியேற முயற்சிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்து வந்திருக்கும் லு பென் வெற்றிபெறும் பட்சத்தில் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கலாம் என்பதையும் அதே கட்டுரையில் மதிப்பீடு செய்திருந்த ஸ்பெக்டேட்டர் பத்திரிகை, பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நெருக்கடி வெடிக்கக் கூடிய வாய்ப்பைக் கணித்தது.

அவர் “ஜனாதிபதியாக ஆனார் என்றால்” அது எழுதியது, “பிரான்ஸ் ஒரு உண்மையான நெருக்கடிக்கு, அரை நூற்றாண்டு காலத்தின் மிக மோசமான நெருக்கடிக்கு முகம்கொடுக்கும். பாசிசத்திற்கு எதிராக குடியரசைப் பாதுகாக்கும் நிலையில் தங்களைக் காணக்கூடியவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்தங்களும் வன்முறையான ஆர்ப்பாட்டங்களும் வரும். அவர் எப்படி ஒரு உருப்படியான அரசாங்கத்தை உருவாக்க முடியும் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையை வெல்ல முடியும் என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. ஒரு சாதுவின் கையிலிருந்தாலே கூட அபாயகரமானதாய் ஆகக்கூடியதே என்று ஒரு தாராளவாத விமர்சகர் கூறியிருக்கக்கூடியதான ஒரு அரசியல்சட்ட அமைப்புமுறையின் கீழ், ஐந்தாவது குடியரசின் சக்திவாய்ந்த ஜனாதிபதிக்கும் அதன் நாடாளுமன்றத்திற்கும் இடையில் ஒரு மோதல் நடப்பதை நாம் காண வேண்டியிருக்கும். யூரோ, ஐரோப்பிய ஒன்றியம், மேற்கத்திய பாதுகாப்பு மற்றும் பிரிட்டனுக்கு அதன் நெருக்கமான கூட்டாளிநாடு ஒன்றுடனான உறவுகள் ஆகியவற்றிலான இதன் பின்விளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.”