ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: போரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்

By Subash Somachandran
11 February 2017

இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது சொந்தங்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, ஜனவரி 23 முதல் வவுனியாவில் நான்கு நாட்களாக தொடர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த உண்ணாவிரதத்தை, தமிழர் தாயகத்தில், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி கண்டறியும் குடும்பங்களின் சங்கமும், ஏற்பாடு செய்திருந்து.

உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்

“எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா?”, “உயிருடன் இருந்தால் எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?”, “உயிருடன் இல்லையாயின் அவர்களுக்கு என்ன நடந்தது?”, “எமது குடும்ப உறவுகள், உயிருடன் இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ வழிவிடுவதற்கு சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்,” ஆகிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் இந்த அமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனவரி 20 அன்று அனுப்பி வைத்திருந்தனர்.

ஆட்டோ உரிமையாளர் சங்கம், சிறுகடை உரிமையாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுமாக பல தரப்பினர் தமது ஆதரவினை தெரிவித்து போராட்ட இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த உறவினர்கள் கடந்த பல ஆண்டுகளாக அடிக்கடி சத்தியாகிரக போராட்டம், மறியல் போராட்டம் என்பவற்றில் பங்குபற்றி வந்தனர். இவற்றில் எந்தப் பலனும் காணாத பட்சத்திலேயே இம்முறை மிகவும் தீவிரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததோடு இந்தப் போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன போராட்டமாக வளரும் என்பதையிட்டு விழிப்படைந்த, அராசங்கத்துக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை வவுனியாவில் இறக்கி, போராட்டத்துக்கு முடிவு கட்டியது.

அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெப்பிரவரி 9 அன்று அலரி மாளிகையில் ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்வதாக ருவன் விஜேவர்தன ஒரு அற்ப வாக்குறுதியை கொடுத்து இந்தப் போராட்டத்தை முடிவு செய்தார். இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்த போலி இடது கட்சியான புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி உட்பட அமைப்புகளும், தம்மால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்கச் சார்பு அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் உடன்பட்டிருந்தன.

2009 மே மாதம் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால போரில், 20,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ், அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இறுதி தாக்குதல்களில், பத்தாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்டனர். அநேகமானவர்கள் யுத்தத்தின் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் போது, இராணுவத்தாலும் அதன் ஒட்டுக் குழுக்களாக செயற்பட்ட கருணா குழு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) போன்வற்றினதும் ஒத்துழைப்புடன் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், கைதுகள் மற்றும் சித்திரவதைகளும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழும் தொடர்கின்றன. தமிழ் அரசியல் கைதிகள் பல முறை நீண்ட உண்ணா விரதப் போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் சுமார் 60 வரையான அரசியல் கைதிகளை, அநேகமானவர்களை பிணையில் விடுதலை செய்ததோடு, ஏனைய கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் முறையான வழக்கு விசாரணைகள் இன்றி, சிலர் குற்றச்சாட்டுக்களே கூட இல்லாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களின் உண்ணாவிரதம் பற்றிய தனது அலட்சியத்தையும் வெறுப்பையும் காட்டிய விக்ரமசிங்க, “காணாமல் போனோர், வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம்” என்றார். இலங்கையில் அரசியல் கைதிகள் கிடையாது, பயங்கரவாத சந்தேக நபர்களே இருப்பதாக அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு, தமிழ் கூட்டமைப்பு உட்பட எல்லா தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கின. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அவலங்களைச் சுரண்டிக்கொண்ட இக் கட்சிகளும் அமைப்புகளும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் சிரேஷ்ட அமைச்சராக இருந்த சிறிசேனவை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக சித்தரித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியவாதக் கட்சிகள், தமிழ் முதலாளித்துவத்தின் சலுகைகளை தக்கவைத்துக்கொள்வதன் பேரில் ஒரு அதிகராப் பரவலாக்கலுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடன், ஏகாதிபத்தியத்துக்கு குறிப்பாக வாஷிங்டனுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே மக்களின் இத்தகைய கோபத்தை சுரண்டிக்கொண்டன. தமிழ் மக்கள் பேரவை தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக தமிழ் இனவாத வழியில் இந்தப் பிரச்சினைகளை சுரண்டிக்கொள்கின்றது.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் உரையாடிய உண்ணாவிரம் இருந்த உறவினர்கள், அரசாங்கத்தின் மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர்.

நல்லதம்பி

வவுனியாவை சேர்ந்த நல்லதம்பி, தனது 26 வயது மகன் 2008 டிசம்பரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவுடன் புலனாய்வுத் துறையினர் அவரை மீண்டும் கடத்திச் சென்றதாகவும் கூறினார். “சுமார் 6 அல்லது 7 பேர் கொண்ட புனலாய்வுப் பிரிவினர் எங்களை ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தார்கள். விசாரித்துவிட்டு விடுவதாக கூறினார்கள். அவரை வெள்ளை வான் ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றதை நான் கண்டேன். வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) அலுவலகத்தில் எனது மகன் தடுத்து வைக்கப்பதட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது எனது முறைப்பாட்டினைப் பதிவு செய்தார்கள். ஆனால் இருக்கும் இடத்தைக் கூறவில்லை. தற்போது 9 வருடமாகிவிட்டது எனது மகன் எங்கிருக்கின்றார் என்று தெரியவில்லை.

“சகல அரசியல் கட்சிகளிடமும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களிடமும் முறையிட்டுள்ளேன். எவ்விதமான பதிலும் இல்லை. எமது பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யபடுவராகள் என்று கூறியே “நல்லாட்சி” அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் கூட்டமைப்பினர் கூறினர். ஆனால், இந்த ஆட்சி ராஜபக்ஷவைப் பாதுகாக்கின்றது,” என நல்லதம்பி கூறினார்.

திருகோணமலையை சேர்ந்த நந்தலாலா சிவசோதி, 46, படையினரால் கடத்தப்பட்ட தனது மகளை தேடுகின்றார். “வெள்ளை வானில் படையினரின் சீருடையில் இருந்தவர்கள்தான் என் மகளை கடத்தியிருந்தனர். பொலிசில் முறைப்பாட்டை ஏற்கவில்லை மாறாக உன்னையும் சுடுவோம் என்றனர். பின்னர் புலனாய்வுத்துறையினர் என்னை கடத்திக் கொண்டுபோய் அடித்தனர். என் மகளை புலிகளே கொண்டுசென்றதாக வலியுறுத்தினர். என்னைக் கடத்தியதை வெளியில் சொன்னல் சுடுவோம் என அச்சுறுத்தி விடுவித்தனர். பிறகு பாடசாலை போய்கொண்டிருந்த என் மகனை புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கொண்டுபோய் அடித்தனர். எல்லா இடங்களிலும் என் மகளைத் தேடிவிட்டேன்.”

திருகோணமலையில் இருந்து வந்திருந்த ராமகிருஷ்னன் மல்லிகா, 24 மற்றும் 19 வயதான இரண்டு மகன்மார் 2008ல் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். “இப்போது 9 வருடம் ஆகிவிட்டது. தமிழ் கூட்டமைப்பு உட்பட எல்லோரையும் சந்தித்தோம். எல்லோரும் வாக்குறுதி கொடுப்பதோடு சரி. எனது கணவனும் 1986ல் கடத்தப்பட்டார். சிலர் எங்களுக்கு இடைவிடாமல் தொலைபேசியில் தலா ஐந்து இலட்சம் கேட்டு மிரட்டினர். இல்லையென்றால் பிள்ளைகளை பிணமாக கொண்டுவந்து போடுவோம் என்றனர். கடன் வாங்கியும் நகைகைளை விற்றும் 10 இலட்சம் தேடி வங்கிக் கணக்கில் போட்டோம். வங்கியில் இருந்து வெளியில் வந்தவுடன் துப்பாக்கியால் மிரட்டி ரசீதை பறித்துக்கொண்டு போய்விட்டனர்,” என அவர் கோபத்துடன் கூறினார்.

பாலேஸ்வரி

வவுனியாவை சேர்ந்த பிரபாகரன் பாலேஸ்வரி, தனது கணவரை 2006ல் இராணுவத்தினர் முகமாலையில் கைது செய்துள்ளதாக கூறினார். “எனது கணவர் உயிரோடு இருப்பதாக விடுதலையான சிலர் எனக்கு கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவர்கள் சாட்சி சொல்ல மறுக்கின்றார்கள். வழக்குப் போடபோனால் சாட்சியைக் கேட்கின்றனர். எனக்கு எனது கணவரின் பிரச்சினை காரணமாக சி.ஐ.டி.யினர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. கணவர் இல்லாமல் நாங்கள் பொருளாதார ரீதியில் கடும் துன்பப்படுகின்றோம். கூலி வேலை செய்துதான் எனது பிள்ளையை வளர்க்கின்றேன்,”

வவுனியா கல்மடுவைச் சேர்ந்த திருமதி பேரின்பராசா, தனது கணவரைத் தேடி வருகின்றார். “2007ம் ஆண்டு ஈச்சங்குளம் பகுதியில் சிருடையில் இருந்த இராணுவத்தினர் கணவரை கைது செய்தனர். இதை நான் நேரில் பார்த்தேன். முகாமில் சென்று விசாரித்தபோது தாங்கள் பிடிக்கவில்லை என்று கூறினார்கள். ஜயவர்த்தன என்ற இராணுவ அதிகாரியே கைது செய்தார். அப்போது எமது ஊர் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தது. பொலிசில் முறைப்பாடு செய்து வவுனியா நீதிமன்றில் வழக்கும் போட்டோம். அப்போது நீதவானாக இருந்த இளஞ்செழியன், ’நீங்கள் வீட்டுக்குப் போங்கள், சில நாட்களுக்குப் பின்னர், கண்கள் கட்டியபடி கொண்டு வந்துவிடுவார்கள்,’ என்று கூறினார். அத்துடன் எமது வழக்கும் கைவிடப்பட்டது. ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற பல்வேறு இடத்துக்கும் அறிவித்தோம். ஒரு பயனும் இல்லை.”