ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thousands demonstrate in defense of immigrants as White House vows more deportations

வெள்ளை மாளிகை அதிக நாடு கடத்தப்படுவோர்களுக்கு சூளுரைக்கையில், ஆயிரக் கணக்கானோர் புலம்பெயர்வோர்களை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

By Tom Eley
13 February 2017

புலம்பெயர்வோர்க்கு எதிரான பொலிஸ் நடவடிக்கை வரம்புகளை பாரியளவில் விரிவாக்கும் ஜனவரி 25 உத்தரவாணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதற்குப் பிந்தைய நாடு கடத்தல்களில் முதல் "அதிகரிப்பாக", புலம்பெயர்ந்தவர்கள் மீதான கடந்த வார பாரிய சுற்றிவளைப்புக்கு எதிராக வாரயிறுதியில் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.

சனிக்கிழமையன்று வடக்கு கரோலினாவின் Raleigh இல் நடத்தப்பட்ட குடியுரிமைகளுக்கான வருடாந்தர அணிவகுப்பு, சாதனையளவிற்கு 20,000 க்கும் அதிகமான கூட்டத்தை ஈர்த்தது. இந்த எண்ணிக்கை ஹிஸ்பானிக் மற்றும் முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் இருவருக்கும் எதிரான ட்ரம்பின் கடுமையான கொள்கைகள் மீதான எதிர்ப்பால் எரியூட்டப்பட்டிருந்தது.

சனியன்று மினெயாபொலிஸ் (Minneapolis) இல் 2,000 பேர் இருக்கக்கூடிய ஒரு கூட்டம், மைய வணிக பகுதி மற்றும் மினெயாபொலிஸ் பல்கலைக்கழக வீதிகளை மறித்து, நகரின் மையப்பகுதியை நோக்கி அணிவகுத்தது.

நியூ யோர்க் நகரில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டங்கள் நடந்தன. ஹீப்ரூ புலம்பெயர்வு உதவி சமூகம் ஏற்பாடு செய்திருந்த நேற்றைய போராட்டம், பேட்டரி பூங்காவிற்கு பல ஆயிரக் கணக்கானவர்களைக் கொணர்ந்தது.

சனியன்று சிகாகோவில், நூற்றுக் கணக்கானவர்கள் ரோஜர்ஸ் பூங்காவிலும் மற்றும் ட்ரம்ப் கோபுரத்திற்கு வெளியிலும் பேரணி நடத்தினர். சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் நூற்றுக் கணக்கானவர்கள், “ஆவணமும் இல்லை, அச்சமும் இல்லை!” என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு வேர்ஜினியாவில், நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஈடுபட்ட வெளிநடப்பு வெள்ளியன்று பல உயர்நிலை பள்ளிகளைப் பாதித்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெக்சாஸில் ஆஸ்டின் உட்பட கடந்த வார வேட்டையாடல்களுக்கு இலக்காகி இருந்த நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

வியாழனன்று இரவு, பல நூறு போராட்டக்காரர்கள், நெடுஞ்சாலை 101 ஐ தற்காலிகமாக முடக்கி, ஒடுக்குமுறைக்கு விடையிறுப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில் இறங்கினர். “ICE [புலம்பெயர்வு மற்றும் சுங்க இலாகா] ஐ மூடுங்கள்!” என்ற கோஷங்களும் அதில் இருந்தன.

மெக்சிகோ நகரில், ஆயிரக் கணக்கானவர்கள் அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லையை ஒட்டி சுவர் கட்டுவதற்கான ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பாக, தலைநகர மையத்தில் Paseo de la Reforma இன் பெருவீதியை நோக்கி அணிவகுத்தனர்.

புலம்பெயர்வு மற்றும் சுங்க இலாகா (ICE) செய்தி தொடர்பாளர், இந்த தேடல் வேட்டைகள் "வழமையானவை" என்றும், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்டவை என்றும் கடந்த வாரம் வலியுறுத்தினார். ஆனால் ஞாயிறன்று இந்த சுற்றிவளைப்புகளைப் பாராட்டிய ட்ரம்ப் நிர்வாகமோ, ஆவணமற்ற பல மில்லியன் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதற்கான புதிய ஜனாதிபதியின் பிரச்சார வாக்குறுதியுடன் அவற்றை தொடர்புபடுத்தியது. ட்ரம்ப் அவரே கூட "சட்டவிரோத குற்றவாளிகளை ஒடுக்குவதற்காகவே" அந்த தேடல் வேட்டைகளுக்கு அவர் உத்தரவிட்டதாக ட்வீட்டரில் பெருமை பீற்றினார்.

அவரது மூத்த அரசியல் ஆலோசகர், ஸ்டீபன் மில்லர், ஞாயிற்றுக்கிழமையின் அனைத்து பிரதான செய்தி நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் தோன்றி, நடுவண் நீதிமன்றத்தால் தற்போது தடைவிதிக்கப்பட்டிருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான பயணத் தடை மற்றும் ஹிஸ்பானிக் புலம்பெயர்ந்தோர்கள் மீதான ஒடுக்குமுறை இரண்டையும் ஆணித்தரமாக பாதுகாத்தார். ஜெஃப் செஸ்சன்ஸ் அதிவலது புலம்பெயர்வோர்-விரோத, குடியரசுக் கட்சி அமெரிக்க செனட்டில் ஓர் அங்கத்தவராக இருந்தபோது, மில்லர், ஊழியர்களின் முன்னாள் தலைமை செயலராக இருந்தார். கடந்த வாரம் செனட்டால் செஸ்சன்ஸ் அமெரிக்க அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்யப்பட்டு, வியாழனன்று பதவியேற்றார்.

ஜனாதிபதியின் முடிவை மறுமதிப்பீடு செய்ய முடியாது என்று வலியுறுத்தி, அதாவது தேசிய பாதுகாப்பின் பெயரில் ஜனாதிபதி எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் கட்டளையிட அவருக்கு சர்வ அதிகாரம் இருக்கிறது என்று வலியுறுத்தி, ட்ரம்பின் முஸ்லீம்களுக்கு எதிரான பயணத் தடைக்குத் தற்காலிகமாக தடுத்துள்ள நீதிமன்றங்களை மில்லர் கண்டித்தார். புலம்பெயர்ந்தோர் மீதான கடந்த வார சுற்றிவளைப்பு ட்ரம்பின் புதிய கொள்கையின் பாகமாக இருந்ததாக அவர் வலியுறுத்தினார், இது முந்தைய எல்லா ஜனாதிபதிகளும் வெளியேற்றி இருந்த மொத்த நபர்களை விட அதிகமானவர்களை வெளியேற்றிய ஜனாதிபதி ஒபாமாவின் பிற்போக்குத்தனமான, ஜனநாயக-விரோத புலம்பெயர்வு கொள்கைகள் மீது அமைக்கப்பட்டு, அதை கடுமையாக விரிவாக்குகிறது. மில்லர், பேரினவாதம் மற்றும் சொந்தவூர் உரிமைக்கு (nativism) பகிரங்கமாக முறையிடுவதன் அடிப்படையில் ஆவணமற்ற எல்லா புலம்பெயர்ந்தோரையும் இலக்கில் வைப்பதை நியாயப்படுத்தினார்.

NBC News இன் "பத்திரிகை சந்திப்பு" நிகழ்ச்சியில், அவர் சட்டபூர்வ புலம்பெயர்வை ஆதரிக்கிறாரா என்று கேட்கப்பட்ட போது, பதிலளிக்க மறுத்த மில்லர், அதற்கு பதிலாக “அமெரிக்க தொழிலாளர்களுக்கு முதலில் வேலைகளை வழங்கும் ஒரு வேலைத்திட்டத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

வியாழக்கிழமை ஒடுக்குமுறையானது, புதனன்று இரவு Phoenix இல் இருந்து Guadalupe García de Rayos ஐ வெளியேற்றியதற்கு எதிரான போராட்டங்களை அடியொன்றி வந்தது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள், அந்த தொழிலாளரையும் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு அன்னையுமான அவரை வெளியேற்றுவதை ஸ்தூலமாக தடுக்க முனைந்தனர். மெக்சிகோவிற்கு ஏற்றிச் செல்ல காத்திருந்த ஒரு கவச வாகனத்தில் அவர் இடம்பெற்றிருக்கும் படங்கள், மிக வேகமாக சமூக ஊடகங்களில் பரவின. அப்பெண்மணி வெளியேற்றப்படுவதற்கு முன்னதாக அவர் இருபதாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்தார்.

இன்னும் எத்தனை புலம்பெயர்ந்தோர், Cross Check நடவடிக்கை என்று அழைக்கப்படும் ICE இன் இந்த அறிவிக்கப்படாத ஒருங்கிணைந்த வேட்டையில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. பல்வேறு ஊடக செய்திகளில் கூறப்படும் எண்ணிக்கையோடு சேர்ந்து, வெள்ளியன்று நிறைவடைந்த பல நாள் வேட்டைகளில் வெளியேற்றுவதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

ஆற்றொணாத புலம்பெயர்வு ஆலோசனை குழுக்களும் வழக்கறிஞர்களும் வழமையாக பெறும் அழைப்புகளைக் காட்டிலும் அவர்களுக்கு நிறைய அழைப்புகள் வருவதாக குறிப்பிட்ட போதுதான், வீடுகளுக்குள் கனரக ஆயுதமேந்திய அதிகாரிகள் அதுவும் பட்டப்பகலிலேயே புகுந்து பொலிஸ் அரசு உத்திகளை இந்த வேட்டைகளில் பயன்படுத்தியதும், விசாரணை செய்வது போன்ற ஒரு பாசாங்குத்தனம் கூட இல்லாமல் "அன்னிய குற்றவாளிகள்" என்று குற்றஞ்சாட்டி இழுத்துச் சென்றதும் வியாழனன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஆங்காங்கே புலம்பெயர்வோர் மற்றும் சுங்க இலாகாவின் போக்குவரத்து சோதனைச்சாவடிகள் குறித்தும், புலம்பெயர்வோர் வேலைக்குச் செல்லும் வழியில் தடுக்கப்படுவது குறித்தும், பெரிதும் ஹிஸ்பானிக் அண்டைபகுதிகளுக்குள் முகவர்கள் வீடுவீடாக சென்று, திகைப்படைந்த குடிவாசிகளிடம் ஆவணங்களை காட்டுமாறு கோரியதாகவும் செய்திகள் வந்தன.

ஒரு உள்ளூர் செய்தியின்படி, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியாவில் 200 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு, “தனித்தனியான துண்டுகளை ஒன்று சேர்ப்பதென்பது" அப்பகுதி புலம்பெயர்வு அட்டார்னிகளின் "விருப்பத்திற்கு" விடப்பட்டது. கன்சாஸ், மிசோரி, இலினோய், விஸ்கான்சின் மற்றும் இன்டியானா உள்ளடங்கிய ஒரு பகுதியில் 200 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதை சிகாகோவின் ICE தலைமையகம் ஒப்புக் கொண்டது.

கலிபோர்னியாவில் அது 161 புலம்பெயர்ந்தோரை கைது செய்திருப்பதாகவும், அவர்களில் பெரும்பான்மையினர் வெளிப்படையாகவே லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிடிக்கப்பட்டவர்கள் என்றும் ICE அறிவித்தது. டெக்சாஸின் ஏனைய இடங்களில் பிடிக்கப்பட்ட அறியப்படாத எண்ணிக்கைக்கு கூடுதலாக, மெக்சிகன் தூதரகத்தின் தகவல்படி, ஆஸ்டினில் குறைந்தபட்சம் 50 பேர் கைது செய்யப்பட்டனர். வடக்கு வேர்ஜினியா, நியூ யோர்க்கில் ஹட்சன் வேல்லி மற்றும் புளோரிடாவின் பிளான்ட் நகரில் நடந்த வேட்டைகள் குறித்தும் செய்திகள் வந்தன.

தேசிய உழைப்பாளர் தின வலையமைப்பின் (National Day Labor Organizing Network) ஒரு ஒழுங்கமைப்பாளரான டேவிட் அபுத் இன் வார்த்தைகளில், இந்த வேட்டைகள் மிக கவனமாக வடிவமைக்கப்பட்ட ஆத்திரமூட்டலாக, புலம்பெயர்ந்தோரை "பீதியூட்டும் மற்றும் மிரட்சியூட்டும் விதத்தில் ஒரு நிஜமான ஒருங்கிணைந்த முயற்சியாக" இருந்தன. இலக்கில் வைத்திருந்ததாக காணப்பட்ட “புகலிட நகரங்கள்" என்று அழைக்கப்படும் நகரங்களில், உள்ளூர் அரசு அதிகாரிகள் மக்கள் அழுத்தத்திற்கு விடையிறுத்து ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட சமூக சேவைகளை வழங்கின.

ட்ரம்பின் ஜனவரி 25 நிர்வாக ஆணை ஆவணமற்ற அனைத்து புலம்பெயர்ந்தோரையும், மற்றும் முக்கியமாக வெளியேற்றுவதற்கான நிலுவையிலிருக்கும் உத்தரவாணைகளைக் கொண்டவர்களையும் சாத்தியமான அளவிற்கு உள்ளடக்க, வெளியேற்ற அமலாக்க முன்னுரிமைகளை விரிவாக்குகிறது. அது எல்லை பொலிஸைப் பெருமளவிற்கு விரிவாக்கவும் மற்றும் அமெரிக்க-மெக்சிகன் எல்லைக்கு அருகே புலம்பெயர்வோர் சிறைக்கூடங்களை விரிவாக்கவும் உத்தரவிடுகிறது.

அங்கே அமெரிக்காவில் வெளியேற்றுவதற்கான உத்தரவாணைகளை நிலுவையில் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் உள்ளனர். இதுவரையில், அவர்கள் பொதுவாக அமெரிக்காவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டிருந்தனர், அவர்களது வீட்டு முகவரிகள் மற்றும் வேலையிடங்கள் பெரும்பாலும் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். தற்போதைய நடைமுறையின் கீழ் அவர்களுக்கு நீதித்துறை மறுஆய்வுக்கான உரிமை இல்லை என்பதால் இவர்கள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எளிதாக இலக்காகி விடுகிறார்கள்.

தீவிர குற்றம் மீதான குற்றச்சாட்டுக்கள் இருப்பவர்கள் மீது மட்டுமே ICE நடவடிக்கை எடுப்பது முன்னர் நடைமுறையாக இருந்தது, ஆனால் கடந்த வாரத்தின் சுற்றிவளைப்புகள் பரந்தளவிலானவை என்பதோடு, எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர்களையும் உள்ளடக்கி இருந்தன. அவர்களிடம் ஆவணங்கள் கோரப்பட்ட போது அவர்கள் ஆவணங்களை சமர்பிக்க தவறினார்கள் என்பது மட்டுமே அவர்களது குற்றமாகும்.

மெக்சிகோவின் Tijuana க்கு அனுப்புவதற்காக கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்ட 50 வயதான வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒருவரான Manuel Mosqueda இன் தலைவிதியும் இதற்கு மிக நெருக்கமாக இருந்தது. ICE அதிகாரிகள் அதிகாலை 5 மணிக்கு வேறொருவரை தேடி அவரது லாஸ் ஏஞ்சல்ஸில் பகுதி அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தனர், ஆனால் அவருக்கு பதிலாக குற்ற முன்நடவடிக்கை எதுவும் கொண்டிராத மற்றும் அமெரிக்கா 22 ஆண்டுகள் வாழ்ந்துள்ள Mosqueda ஐ பிடித்துச் சென்றனர்.

“நான் ஒருபோதும் எந்த குற்றமும் செய்ததில்லை,” என்று Mosqueda ஸ்பானிஷ்-மொழி ஊடகத்திற்கு தெரிவித்தார். “நான் என் வாழ்நாள் முழுவதும் இந்நாட்டில் வேலை செய்துள்ளேன். நான் ஒரு நல்ல மனிதன்,” என்றார். அவரை விடுவிக்க Mosequeda இன் வழக்கறிஞர்கள் தலையீடு செய்தனர்.  

ட்ரம்ப் நிர்வாகம் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக பாரிய ஒடுக்குமுறைக்கான பாதைக்குத் தயாரிப்பு செய்யவும் மற்றும் அமெரிக்கா எங்கிலும் நகரங்களை இராணுவமயப்படுத்துவதற்கு இட்டுச் செல்லவும், புலம்பெயர்ந்தோர்-விரோத பாரிய வேட்டைகளை அன்றாட வாழ்வின் நிரந்தர அம்சமாக மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளது. “பெரிய நகரங்களில் நிறைய சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் இருக்கிறார்கள்,” என்று பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் க்குத் தெரிவித்தார். “அவர்கள் போர்நிலைக்குரிய  சூழலை முகங்கொடுப்பார்கள்,” என்றார்.  

அவரது கடந்த வார பதவி பிரமாண வாசிப்பில், உள்துறை பாதுகாப்பு செயலர் ஜோன் கெல்லி அவருக்கு கீழ் சேவையாற்ற உள்ள ICE பொலிஸ் இதுபோன்ற மனிதாபிமற்ற நடவடிக்கைகளை நடத்த இப்போது தயங்காது என்று விளக்கமளித்தார். அதிகாரிகள் "அன்புக்கு கட்டுப்பட்டிருந்தார்கள் அல்லது, உங்களுக்கே தெரியும், அவர்கள் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டுவது போன்ற விடயங்களைக் கொண்டிருந்தார்கள்,” என்று கெல்லி பிரதிநிதிகள் சபையின் உள்நாட்டு பாதுகாப்பு கமிட்டிக்குத் தெரிவித்தார். “மேலும் இப்போது அவர்கள் விடயங்களைக் குறித்து மிகவும் நம்பிக்கையை உணர்கிறார்கள். தார்மீக பிரச்சினைகளை நீங்கள் கவனித்தால், நீங்கள்... முன்னோக்கி நகர்வது குறித்து ஆச்சரியமடைவீர்கள் என்று என்னால் பந்தயம் கட்ட முடியும்,” என்றார். 

இந்த புலம்பெயர்ந்தோர்-விரோத ஒடுக்குமுறையில் ஜனநாயக கட்சியும் உடந்தையாய் உள்ளது. ஒபாமா 2.7 மில்லியன் பேரை வெளியேற்றி, “வெளியேற்றும் தலைமை தலைவர்" (Deporter-in-Chief) என்ற இழிபெயரை ஈட்டியுள்ளார். அவர் விரிவாக்கிய பொலிஸ் அரசு உள்கட்டமைப்பு தான் இப்போது ட்ரம்பின் கரங்களில் விழுகிறது.

ஸ்டீபன் மில்லரைத் தொடர்ந்து உடனடியாக “பத்திரிகை சந்திப்பு" நிகழ்ச்சியில் தோன்றிய, வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் ஆவணமற்ற தொழிலாளர்கள் சுற்றி வளைக்கப்படுவது குறித்தோ, வெளியேற்றப்படுவது குறித்தோ விமர்சித்து ஒரேயொரு வார்த்தை கூட கூறவில்லை. நிகழ்ச்சி நெறியாளர் சக் டோட் நேரடியாகவே புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கைகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பயணத் தடை குறித்து வினவியதும், அவர், “ஆம், இப்போது நம்மிடம் உள்ள கூர்ந்தாராயும் இயங்குமுறைகள் மிக மிக பலமாக உள்ளன. அவற்றை எவ்வாறு நாம் இன்னும் பலப்படுத்துவது என்பதில் யாருக்கேனும் ஒரு யோசனை இருந்தால், அதைக் கொண்டு முன்னோக்கி செல்லலாம்,” என்று பதிலளித்தார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

புலம்பெயர்வோர் மீதான தாக்குதல்களை நிறுத்து! திறந்த எல்லைகள் மற்றும் அத்தனை தொழிலாளர்களுக்குமான முழு உரிமைகள் ஆகியவற்றுக்கான ஒரு சோசலிசக் கொள்கை வேண்டும்!

[11 February 2017]