ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former diplomat admits India’s role in Sri Lankan communal war

இலங்கை இனவாத யுத்தத்தில் இந்தியாவின் பங்கு பற்றி முன்னாள் தூதர் ஒப்புக்கொள்கின்றார்

By Vijith Samarasinghe
10 February 2017

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தின்போது கொழும்பு அரசாங்கத்திற்கு புது தில்லி ஆதரவளித்தது குறித்து ஓய்வு பெற்ற இந்திய தூதர் சிவசங்கர் மேனன் சமீபத்தில் எழுதிய புத்தகம் ஒன்று வெளிப்படுத்துகிறது.

இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஆட்சியின் போது, அந்த கால கட்டத்தில் இந்திய இலங்கை உறவுகளை பராமரிப்பதில் ஈடுபட்டிருந்த உயர்மட்ட அதிகாரிகளுள் முக்கியமான ஒருவராக முன்னாள் வெளியுறவு செயலரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமாக மேனன் இருந்தார். சீனாவின் பொருளாதார, இராணுவ ரீதியிலான சுற்றிவளைப்பு மற்றும் இந்த பிராந்தியத்தில் வாஷிங்டனின் மூலோபாய நலன்களுடன் புது தில்லியின் அணிசேரலுக்கு ஆதரவளிக்கும் இந்திய ஆளும் வர்க்க பிரிவினருக்காக அவர் பேசுகிறார்.

தேர்வுகள்:இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வகுப்பதற்கு உட்புறம் (Inside the making of India's foreign policy), என்ற தலையங்கத்தின் கீழ், மேனனின் புத்தகம், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவினையும், 1990-91 பொருளாதார நெருக்கடியையும் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கிய இந்தியாவின் கூர்மையான திருப்பத்தின் போது இந்த கொள்கைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற கருவியாக மேனன் இருந்தார். இந்த நிகழ்வுகள், "உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாடுகளுடன் ஒரு முறிவை ஏற்படுத்துவதற்கு இந்தியாவிற்கு உதவின" என்று அவர் எழுதுகிறார்.

இந்த புத்தகத்தின், இலங்கையில் உள்நாட்டு போர் என்ற 4வது அத்தியாயத்தின்படி மேனனின் கணிப்புக்கள் அமெரிக்காவை நோக்கிய இந்திய உயரடுக்கின் திருப்பம் தொடர்பானவையாக உள்ளன. "ஆசியாவை நோக்கிய முன்னிலை" எனும் வாஷிங்டனின் கொள்கையுடன் இணைத்துக்கொண்டு, இந்த பிராந்தியத்தில் பெய்ஜிங் இன் செல்வாக்கை கீழறுப்பதற்கு செய்வதற்கு புது தில்லி பல்வேறு தெற்கு ஆசிய நாடுகளில் தலையீடு செய்தது.

"சக்திகள் இயங்குகின்றன: தமிழ் புலிகளை இலங்கை இல்லாதொழிக்கின்றது, 2009," என்று தலைப்பிடப்பட்ட 4வது அத்தியாயம் 30 ஆண்டுகால உள்நாட்டு போரில் இந்தியாவின் பங்களிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. LTTE இனை இல்லாதொழிப்பதற்கும், கொழும்பை இந்திய அதிகாரத்தின் கீழ் வைப்பதற்கும் அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரையிலும் பெரும் அளவிலான பொது மக்கள் இறப்புக்கள் நியாயமானவையே என்று புது தில்லி இரக்கமின்றி கணக்கிட்டது.

2009 ஆரம்பத்தில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தீவுகளில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தை முறிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு இந்தியா ஊக்கமளித்து வந்ததுடன் இராணுவ ரீதியில் ஆதரவும் அளித்துவந்தது என்று உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியது. இந்த புத்தகம் அதை உறுதிப்படுத்துகிறது, மேலும் "இந்திய கடற்படையினரின் "புலனாய்வும் மற்றும் தடைகளும்" LTTE க்கான கடல் மார்க்க விநியோகத்தை வற்றச்செய்தது" என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷே மற்றும் அவரது இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உடனான சிறு விளக்கங்களுக்கும், கலந்துரையாடல்களுக்குமாக கொழும்புவிற்கு யாருடைய அழைப்புமின்றி, அடுத்த வெளியுறவு அமைச்சர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி உடனான வழக்கமான நடுஇரவு விமான பயணங்கள் குறித்து மேனன் விருப்பத்துடன் நினைவுகூறுகிறார். 2009 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், அதாவது, மே 18ல் புலிகள் இராணுவ ரீதியில் நிர்மூலமாக்கப்பட்டது வரையிலும் அந்த விஜயங்கள் நிகழ்ந்தன.

முற்றிலும் இந்திய பிராந்திய நலன்களின் அடிப்படையில், இனவாத போரின் மீதான கொழும்பின் மிருகத்தனமான போரின் தீவிரமயப்படுத்தலுக்கான புது தில்லியின் ஆதரவினை மேனன் நியாயப்படுத்துகிறார். சீனா, பாகிஸ்தானிலிருந்து மற்றும் "ஒரு குறிப்பிட்டளவிற்கு" அமெரிக்காவிலிருந்தும் போருக்கான அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான ஆதரவினை இராஜபக்ஷ திரட்டியுள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "நாம் விலகி நிற்போமானால்," "ஒரு இந்திய பிரதம மந்திரியை (ராஜீவ் காந்தி) கொன்ற கொலையாளிகளை பாதுகாப்பது" என்பது "ஒரு பூகோள அரசியல் மூலோபாயரீதியான அண்டை நாட்டை ஏனைய சக்திகளுக்கு கையளித்துவிடும் நிலைக்கு" கொண்டுசென்று விடக்கூடும் என்று எழுதுகிறார்.

1984 முதல் 1989 வரையிலும் இந்திய பிரதம மந்திரியாகவும், பின்னர் எதிர்க் கட்சியிலும் இருந்த காந்தி, 1991ல் தமிழ்நாட்டில் LTTE இன் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். LTTE இன் கைகளில் ஒரு தொடர் இராணுவ தோல்விகளாலும், தெற்கில் கிராமப்புற அமைதியின்மையினாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை ஜனாதிபதி J.R. ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கு சார்பாக காந்தி இலங்கை போரில் தலையிட்டார்.

1987ல், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் செல்வந்த தட்டுக்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கியதும், மேலும் பின்னர் LTTE ஐ நிராயுதபாணிகளாக்க இந்திய இராணுவத்தை அனுப்பவும் இடமளித்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் காந்தி கையெழுத்திட்டார். காந்தியின் படுகொலை LTTE தலைமையின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருந்தது.

"இந்திய கடற்பகுதியில் பதினான்கு மைல்கள் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு விமானந்தாங்கி கப்பல்" போன்றதே இலங்கை என்று, ஒரு இரக்கமற்ற மூலோபாயவாதியின் அனைத்து கணக்கீடுகளுடன் மேனன் குறிப்பிடுகிறார். "விரோத போக்குகொண்ட வெளி ஆதிக்கங்கள்" இல்லாமல் இலங்கையை பாதுகாக்க வேண்டியதும், மற்றும் தமிழ்நாட்டை பாதிக்கக்கூடிய தமிழ் பிரிவினைவாதத்தை வளரவிடாமல் தடுப்பதும் இந்தியாவிற்கு தவிர்க்கமுடியாததாக இருந்தது என்று அவர் எழுதுகிறார். மற்றொரு வகையில் கூறுவதானால், இதன் விளைவாக அரசியல் ரீதியில் இந்தியா பயனடையும் வரையிலும், இலங்கை போரின்போது நிகழ்ந்த பாரியளவிலான பொதுமக்கள் உயிரிழப்புக்கள் ஏற்றுக்கொள்ள கூடியவையாக இருந்தன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் ஒரு விரைவான மறுசீரமைப்பு குறித்து ஒரு முற்றிலும் தவறான வரைபடத்தை இந்த புத்தகம் தீட்டுகிறது. இராஜபக்ஷவின் ஆட்சிக்கு மதிப்பளிக்கும் நோக்கத்தில் "குறுகிய உள்நாட்டு யுத்தத்தை சகித்துக்கொண்ட மற்ற நாடுகளைவிட, அதிக வேகமாக இயல்புநிலைக்கு திரும்பிய மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட நாடு என்பதாக இலங்கை உரிமைகோரலாம்" என்று மேனன் அறிவிக்கிறார்.

இது மிகப்பெரிய பொய்யாகும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் உண்மையில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இன்னும் நிலைத்திருக்கின்றன. பேரதிர்ச்சி மிக்க போரிலிருந்து மீட்கக்கூடிய எந்தவொரு உளவியல்-சமூக ஆதரவுமின்றி, கடுமையான பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அழிக்கப்பட்ட உள்கட்டமைப்புக்களின் கீழ் மக்கள் வசிக்கின்றனர். போருக்கு பின்னர் எட்டு ஆண்டுகளாக, வன்னி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் இன்னும் தற்காலிக வீடுகளில் வசிக்கின்றனர்.

இராஜபக்ஷ ஆட்சியின்போது நடந்த போருக்கு இந்தியாவின் ஆதரவை நியாயப்படுத்தவும், பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை பலிகொண்ட இரத்தக்களரியான சம்பவங்கள் சாதகமான விளைவுகளை உருவாக்கியுள்ளன என்று கருதுவதற்குமே மேனனின் சித்தரிப்பு உதவுகிறது. "தோல்வியுற்றவர்களை நோக்கிய அரசியல் பெருந்தன்மையை" காட்ட இயலாத இராஜபக்ஷவின் தனிப்பட்ட காரணத்தினால் மட்டுமே இலங்கை நீடித்த அமைதியை கண்டறிய தவறியது என்று மேனன் வாதிடுவதுடன், அதுவே போருக்கு பின்னர் தெளிவானது என்றும் அறிவுறுத்துகிறார்.

எனினும், 2009க்கு பின்னர், சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுகள் குறித்து வாஷிங்டன் போன்று அதிகரித்தளவில் புது தில்லியும் கவலைகொண்டது. இராஜபக்ஷவின் அரசாங்கம் பெய்ஜிங் இடமிருந்து அதனை விலக்கிவைத்துக்கொள்ள வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாக, அமெரிக்க அனுசரணையிலான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் (UN Human Rights Council -UNHRC) ஒரு தொடர் தீர்மானங்கள், போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளுக்கு அழைப்புவிடுக்கிறது.

இராஜபக்ஷ இதற்கு விடையிறுக்க தவறியபோது, மார்ச் 2014ல் வாஷிங்டன் UNHRC இல் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்புவிடுத்தது. ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை வெளியேற்றும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்தது என்ற வகையில், இது ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு அரங்கம் அமைத்தது. அடுத்த எதிர்க்கட்சி தலைவர், தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் உதவியுடன் மைத்திரிபால சிறிசேன பதவியிலிருத்தப்பட்டார்.

மார்ச் 2014 தீர்மானம் உட்பட, வாஷிங்டனின் சில UNHRC தீர்மானங்களுக்கு இந்தியா உத்தேசமாக ஆதரவளித்தது. அதிகளவு அழுத்தம் கொடுப்பது பெய்ஜிங் உடனான அதிக நெருக்கத்திற்கு கொழும்பை இட்டுச்செல்லும் என்ற அடிப்படையில் அதன் எச்சரிக்கை இருந்தது. "சீனாவின் கோரிக்கைகளுக்கு மிகுந்த இணக்கமுடன்" இராஜபக்ஷ இருந்தபோதும், அவரது சகோதரரும், பாதுகாப்பு செயலருமான கோட்டாபாய இராஜபக்ஷ சீனாவுடனான இராணுவ உறவுகளின் இயல்புகள் குறித்து இந்தியாவுக்கு உத்தரவாதம் அளித்தார் என்று மேனன் எழுதுகிறார். பாதுகாப்பு செயலர் "இந்திய கவலைகள் குறித்து அதிக அக்கறையுள்ளவராக" இருந்தார். மே 2014 வரை இந்த உத்தரவாதங்கள் இராஜபக்ஷக்களினால் மதிக்கப்பட்டன என்றும் மேனன் எழுதுகிறார்.

மே 2014ல் இந்தியாவின் நிலைமை ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்து மேனனின் புத்தகம் விளக்கமளிக்கவில்லை. இருப்பினும், அதே மாதத்தில் இராஜபக்ஷ பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்ததுடன், இரண்டாவது முறையாக சீனாவின் கடல்சார் பட்டுப்பாதை (Maritime Silk Road - MSR) முன்முயற்சிக்கு தனது ஆதரவினை அளித்தார். அந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்தார். அமெரிக்காவும், இந்தியாவும் MSR க்கு விரோதமாக இருந்ததுடன், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் இராணுவ முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாகவே அது இருந்தது என்றும் கூறுகின்றன.

மே 2014ல், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது, மற்றும் அஜித் டோவல் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றார். இந்த புதிய அரசாங்கம், இலங்கையில் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான செயல்முறைக்கு ஆதரவளித்தது.

இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் குறித்து புது தில்லி அக்கறை கொண்டிருக்கிறது என்பது போன்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance-TNA) உட்பட இலங்கை தமிழ் உயரடுக்கின் கூற்றுக்களை மேனனின் கணக்கீடு தகர்க்கிறது. ஆளும் உயரடுக்கின் பிராந்திய மற்றும் பூகோள புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தான் இந்திய கொள்கைகள் எப்பொழுதும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமது சொந்த நலன்களை பாதுகாக்கும் பொருட்டு இலங்கையின் தமிழ் தேசியவாத கட்சிகள், இந்திய மற்றும் அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

WSWS முன்னரே எச்சரித்துள்ளபடி, இலங்கையில் அமெரிக்க சார்பு கொண்ட சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கம் நிறுவப்பட்டதனால், மிருகத்தனமான 30 ஆண்டு கால உள்நாட்டு போருக்கு வழிவகுத்த எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை. அதற்கு பதிலாக, தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான ஒரு பொலிஸ் அரசு பாணியிலான நெருக்குதலை சுமத்துவதற்கே கொழும்பு முற்பட்டுவருகிறது.

2015 இல் இலங்கை ஆட்சி மாற்றத்திற்கு பிந்தைய காலத்தை மேனனின் கணிப்பீடுகள் எடுத்துக்காட்டவில்லை. இழிவான முறையில் அவர் தனது கணிப்பீட்டை முடிக்கிறார், இருப்பினும், "LTTE மற்றும் உள்நாட்டு போர் இல்லாமல் தற்போது இலங்கை ஒரு நல்ல நிலையில் உள்ளது. மேலும் இந்த முடிவை சாத்தியமாக்குவதில் இந்தியா முடிந்தவரை பங்களிப்பு செய்தது." என்றும் கூறுகிறார்.