ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Nazis in the Trump White House

ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையில் நாஜிக்கள்

By Patrick Martin
13 February 2017

ஞாயிறு காலை நடக்கின்ற தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களுக்கு நேற்று, ட்ரம்பின் ஒரு உயர்நிலை உதவியாளரான, வெள்ளை மாளிகையில் “தலைமை கொள்கை ஆலோசகர்” என்று சொல்லப்படுகின்ற, ஸ்டீபன் மில்லரைக் குறித்த ஒரு முதல் நெடிய பார்வை கிட்டியது. அமெரிக்க மக்கள் கண்டது அவர்களுக்கு வெறுப்பூட்டுவதாக அமைந்திருந்தது. ஹாலிவுட் நடிகர் ஏற்பாட்டாளர்கள் அடுத்த இரண்டாம் உலகப் போர் படத்தில் SS அதிகாரியின் ஒரு பாத்திரத்திற்கு ஒரு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார்களேயானால், அவர்களுக்கு மில்லரில் சரியான நபர் கிடைத்து விட்டார்.

Fox News, ABC, NBC மற்றும் CBS ஆகிய தொலைக்காட்சிகளில் மில்லர் தோன்றினார். நிலைகுத்தி முறைத்த பார்வையுடன், அவரது பதில்கள் குடியேற்றம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளில் ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்கள் குறித்து முன்-கூட்டி உள்ளீடு செய்து வைக்கப்பட்டிருந்த பொய்களைக் கொண்டதாக இருந்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் தடை செய்கின்ற ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவை அமலாக்குவதை தடுத்து வைத்திருக்கும் கூட்டரசாங்க நீதிபதிகளை அவர் கண்டனம் செய்தார்.

ABCயின் ஜோர்ஜ் ஸ்டீபனாபவுலஸ் மில்லர் பொய் சொல்லிக் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கும், ட்ரம்ப்புக்கு மக்கள் வாக்களிப்பில் பெரும்பான்மை கிடைத்து விடாத வகையில் பாரிய வாக்கு மோசடி நடைபெற்றிருந்ததாக அவர் கூறியதற்கு ஒரு பொட்டு ஆதாரத்தையுமேனும் வழங்குவதற்கு அவரை சவால் செய்வதற்கும் தள்ளப்பட்டார். Fox News இல் நேர்காணல் செய்த கிறிஸ் வாலஸ் கூட அவரது பேச்சைக் கண்டு திகைத்தவராய் காணப்பட்டார்.

ட்ரம்ப் நீதிபதிகள் மீதும், ஊடகங்கள் மீதும் இன்னும் சக குடியரசுக் கட்சியினர் மீதும் கூட தனிமனிதத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தது ஏன் என்று நேரடியாகக் கேட்கப்பட்ட போது, ட்ரம்பின் சதிக்கும்பல் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு வைத்திருக்கும் அதன் மையமான வாய்ச்சவடால் கருத்துகளை மில்லர் பயன்படுத்தினார். “நாடெங்கிலும் இருக்கக் கூடிய மில்லியன் கணக்கான அனைத்தும் மறக்கப்பட்ட கடும்-உழைப்பு ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டாளிகள் நாம் என்பதே எங்களது நிலைப்பாடாகும்” என்று அறிவித்தார் அவர், “ஜனாதிபதி ட்ரம்ப்தான் அவர்களது நாயகன். அதுதான் எங்கள் கூட்டணி. ஒரு நல்ல ஊதிய அதிகரிப்பு வேண்டும் அதுபோதும், ஒரு நல்ல பள்ளி வேண்டும் அதுபோதும், ஒரு பாதுகாப்பான சமுதாயம் வேண்டும் அதுபோதும் என்று கருதுகின்ற மில்லியன், மில்லியன், மில்லியன் கணக்கான கண்ணியமான தேசப்பற்றுமிக்க குடிமக்களே எங்களது கூட்டணியாகும்.”

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களிலான உண்மையான அதிகரிப்பு கூட இருக்கட்டும் குறைந்தபட்ச ஊதியங்களிலான ஒரு அதிகரிப்புக்கும் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றவராகவும், மெடிக்கேய்ட், மெடிக்கேர், சமூகப் பாதுகாப்பு, பொதுக் கல்வி, வேலையிட பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சமூகப் பாதுகாப்பின் மற்ற வடிவங்கள் இவை அத்தனையையும் அழிப்பதற்கு உறுதிபூண்டிருப்பவர்களை தனது அமைச்சரவைக்காய் தேர்வுசெய்திருக்கிறவராகவும் இருக்கின்ற ஒரு பில்லியனர் ஜனாதிபதி குறித்து, வம்பிழுக்கின்ற தொனியுடன், இவை கூறப்பட்டன.

அத்துடன் யார் இந்த “தலைமை கொள்கை ஆலோசகர்?”

மில்லர் குறித்த விவரிப்புகள் ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இரண்டிலும் இடம்பெற்றிருந்தன. இந்த 31-வயது உதவியாளர் தனது இளமைக்காலம் தொட்டே ஒரு அதி-வலது செயல்பாட்டாளராய் இருந்துள்ளார். ஒரு உயர்-நடுத்தர வர்க்க தாராளவாத யூத குடும்பத்தில் பிறந்த மில்லரின் தனிமனித அபிவிருத்தியில் ஏதோவொன்று அதீதமான வகையில் தவறாய் சென்றிருந்தது.

அதி-வலதுகள் மீது ஈர்ப்பு கொண்டார். Breitbart News ஆல் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த யூத-விரோத வெள்ளை மேலாதிக்கவாத நவ-நாஜியான ரிச்சார்ட் ஸ்பென்சரின் நட்பு டியூக் பல்கலைக்கழகத்தில் இவருக்குக் கிடைத்தது. கல்லூரிப் படிப்புக்கு பின்னர், காங்கிரஸில், பிரதிநிதி மிசேல் பஹ்மான் மற்றும் செனட்டர் ஜெஃப் செசன்ஸ் உள்ளிட்ட அதி-வலது மனிதர்களுக்கு வரிசையாய் செய்தித்தொடர்பாளராய் ஆனார். 2016 ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் பிரச்சாரத்தில் இணைந்த அவர் இறுதியில் வேட்பாளர்கள் பேசுவதற்கான உரைஎழுதித் தருபவராகவும் ட்ரம்ப்பின் பிரச்சாரப் பேரணிகளில் அடிக்கடி தொடங்கும் சமயத்தையொட்டிய முஸ்தீபுகளை மேற்கோள்பவராகவும் ஆனார்.  

மில்லர் வெள்ளை மாளிகையில் இருக்கக் கூடிய உயர்-நிலை பாசிஸ்டுகளில் ஒருவராவார். வெள்ளை மாளிகை “தலைமை மூலோபாயவாதி”யான ஸ்டீபன் கே. பானனின் அதி-வலது கண்ணோட்டங்கள், அமெரிக்க ஊடகங்களில், வார இதழ்களிலான கவர் ஸ்டோரிகள் தொடங்கி முக்கிய தினசரிகளிலான விவரிப்புகள் வரையிலும், பரவலாய் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பானன் சென்ற ஆகஸ்டு வரையிலும் அதி-வலது Breitbart News ஐ நடத்தி வந்தார் என்பதுடன் அதனை மாற்று-வலதுகள் என்று அழைக்கப்படுபவர்களின் ஒரு குவியப் புள்ளியாகவும் ஆக்கினார்.

ஜூலியஸ் எவோலாவின் -இத்தாலியின் ஒரு இனவெறியரும் யூத-விரோதியுமான இவரது எழுத்துக்கள் முசோலினியின் பாசிச சர்வாதிகாரத்திற்கு ஒரு மூலவளமாக இருந்தன என்பதுடன் இவர் கிரேக்கத்தின் நவ-நாஜி கட்சியான கோல்டன் டோன் கட்சிக்கு தூண்டுதலளிப்பவராகவும் மேற்கோளிடப்பட்டு வருபவராவார்- படைப்புகளுடன் பனானுக்கு இருக்கும் பரிச்சயம் குறித்து ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியாகியிருந்த அவரது ஒரு வாழ்க்கைக் குறிப்பு குறிப்பிட்டிருந்தது. 2014 இல் அதி-வலது கத்தோலிக்குகளின் வாத்திக்கான் மாநாடு ஒன்றில் வழங்கிய உரையில் எவாலோவின் எழுத்துக்களை பானன் மேற்கோளிட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூலோபாய தகவல்பரிவர்த்தனைகள் இயக்குநராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெள்ளை மாளிகையில் சீன் ஸ்பைசருக்கு அடுத்தபடியான இரண்டாவது உயர்நிலை ஊடக செய்தித்தொடர்பாளராக ஆகியிருக்கும் மைக்கேல் ஆன்டன் அதிகம் அறியப்படாதவராய் இருந்தாலும் இதேயளவுக்கு வெறுப்பைக் கக்கும் மனிதரேயாவார். நியூயோர்க் மேயரான ரூடி கிலானிக்கு முன்னாளில் உரைஎழுதித் தருபவராக இருந்து வந்திருந்த ஆன்டன் புஷ்ஷின் வெள்ளை மாளிகை உதவியாளராக இருந்து, அப்பதவிக்கு உட்பட்டவாறாய் ஈராக் மீது படையெடுக்கும் முடிவிற்கு அவர் உற்சாகத்துடன் ஆதரவளித்திருந்தார். அதன் வலது-சாரி செய்திநிறுவன அதிபரான (ஃபாக்ஸ் நியூஸ் முதலாளி) ரூபர்ட் முர்டோச் மற்றும் சிட்டிபேங்க் ஆகியவற்றின் தகவல்தொடர்புப் பணிகளில் பணியாற்றினார், அதன்பின் பிளாக்ராக் எனும் மிகப்பெரும் துணிகர நிதிநிறுவனத்தில் ஒரு நிர்வாக இயக்குநராக பணியாற்றியிருந்தார். 

சென்ற செப்டம்பரில் The Flight 93 Election என்ற தலைப்பில் வலது-சாரி வட்டாரங்களில் பரவலாய் சுற்றிவந்த ஒரு நீளமான பிரசங்கத்தை ஆன்டன் தான் ஒரு புனைப்பெயரில் எழுதியிருந்தார் என்பதை வீக்லி ஸ்டாண்டர்ட் என்ற ஒரு நவ-பழமைவாத இதழின் வெளியீட்டாளரான வில்லியம் கிறிஸ்டல் சென்ற வாரத்தில் வெளிக்கொண்டுவந்திருந்தார். அந்தக் கட்டுரை ட்ரம்ப் வெற்றிபெறுவது மட்டுமே அமெரிக்கா உயிர்பிழைப்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருந்ததாக சித்தரித்தது (அத்துடன் ஹிலாரி கிளிண்டனை மறைமுகமாக 2001 செப்டம்பர் 11 அன்று கடத்தப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய அல்கெய்தா கடத்தல்காரர்களுடன் ஒப்பிட்டது).

ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஒரு வெளிப்படையான இனவாத விண்ணப்பத்தை ஆன்டன் அதில் செய்திருந்தார், அவர் கூறியிருந்தார், “சுதந்திரத்தின் எந்த பாரம்பரியமோ, சுவையோ, அல்லது அனுபவமோ இல்லாத மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த அந்நியர்களை இடைவிடாது இறக்குமதி செய்வதன் அர்த்தமாகியிருப்பது என்னவென்றால் ஒவ்வொரு சுழற்சி முடியும்போதும் வாக்காளர்கள் அதிக இடதுசாரிகளாக, அதிக ஜனநாயகவாதிகளாக, குறைந்த குடியரசுவாதிகளாய், குறைந்த குடியரசுவாதிகளாய், அத்துடன் பாரம்பரியரீதியாக குறைந்த அமெரிக்கர்களாய் பெருகிச் செல்கின்றனர்.” இதன் விளைவாக, 2016 தேர்தல் தான், “எனது மக்களுக்கு”, அதாவது வெள்ளை அமெரிக்கர்களுக்கு கிட்டியிருக்கும் கடைசி வாய்ப்பாகும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

கிறிஸ்டல் -இவரும் நீண்டகாலமாய் வலது-சாரி குடியரசுவாதியாகவும் போர்வெறியராகவும் இருந்து வந்திருக்கக் கூடியவர்- ஆன்டனை படுபயங்கரமான நாஜி வக்காலத்துவாதியான கார்ல் ஸ்ஷிமித் உடன் ஒப்பிட்டுக் காட்டக் கூடிய மட்டத்திற்கு இந்த வாதமானது பகிரங்கமான இனவெறி கொண்டதாகவும் எதேச்சாதிகாரமானதாகவும் இருந்தது.

கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வெள்ளை மாளிகை, எத்தனையோ மக்களுக்குப் பிடிக்காத மனிதர்களுக்கும் குற்றவியல்தனமானவர்களும் வேலை கொடுத்திருந்தது. என்றாலும் ட்ரம்ப் நிர்வாகமானது பாதாள ஆழங்களுக்குள்ளான ஒரு முற்றிலும் முன்கண்டிராத சரிவைக் குறித்து நிற்கிறது. பானன் மற்றும் மில்லர் போன்ற அரசியல் கழிசடைகள் வெள்ளை மாளிகையில் பெரும் அதிகாரத்துடனும் செல்வாக்குடனும் அமர்ந்திருப்பதானது அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு இறுதிக்கட்ட நெருக்கடியையே குறித்து நிற்கிறது.

அடுத்தவொரு பயங்கரவாத சம்பவத்தை பற்றிக்கொண்டு ஜனநாயக உரிமைகளைக் கைகழுவுவதற்கான நியாயப்படுத்தலாக அதைப் பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிடுகிறது என்பதை நியூயோர்க் டைம்ஸ் பத்தியாளர்களான போல் க்ருக்மன் மற்றும் ரோஜர் கோஹன் தொடங்கி மற்றவர்களும் கூறியிருக்கும் சூசகக்குறிப்புகள் ஏற்கனவே வந்திருக்கின்றன. ஹிட்லர் ஜேர்மனியில் அவசரகாலநிலையை திணிப்பதற்காக பாராளுமன்ற தீ (Reichstag Fire) என்ற ஒரு சாக்கைத் தயாரித்த முன்னுதாரணத்தையும் கூட கோஹன் மேற்கோளிட்டு விட்டார்.

இந்த பத்தியாளர்கள் எல்லாம், ஒரு போலிஸ் அரசை நோக்கி விரைந்து செல்லும் வீழ்ச்சியை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கான எந்த ஆலோசனையும் கூட வேண்டாம், இந்த சூழ்நிலை எவ்வாறு எழுந்திருந்தது என்பதற்கான விளக்கத்தையும் கூட வழங்கவில்லை. ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரவாதிகள், அவர்களுக்கே உரித்தான விதத்தில், ஜனநாயகத்தின் முறிவுக்கும் சமகால முதலாளித்துவத்தின் சமூகப் பொருளாதார யதார்த்தங்களுக்கும் இடையிலான நன்கறிந்த தொடர்பு குறித்து எதையும் கூறுவதே கிடையாது. 

சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலானது அமெரிக்க சமூகத்தின் வெகுசிலவரது அதிகாரத் தன்மையில் இருந்து நேரடியாக எழுகிறது. ட்ரம்ப், பனான், மில்லர் மற்றும் ஆன்டன் ஆகியோர் முனிச்சின் மதுச்சாவடிகளில் இருந்து எழுந்தவர்களல்ல, மாறாக வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன உயரடுக்கில் இருந்து எழுந்தவர்களாகும். ட்ரம்ப் ரியல் எஸ்டேட் மற்றும் கேஸினோ பில்லியனர், ஊடக அதிபர்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டவர். பானன் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவர், அவரது ஊடக தொழில்முயற்சியான Breitbart துணிகர நிதிய பில்லியனர் ரோபர்ட் மேர்சரால் நிதியாதரவு அளிக்கப்பட்டதாகும். ஆன்டன் ரோபர்ட் முர்டோச்சிடம் வேலைசெய்திருந்தார், பின் சிட்டிபேங்க்கில் வேலைசெய்தார், அதன்பின் உலகின் மிகப்பெரும் துணிகர நிதியமான பிளாக்ராக்கில் வேலைசெய்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஜனநாயக உரிமைகளின் மற்றும் சமூகத்தின் “அடிமட்ட” 90 சதவீதத்தின் சமூக நலன்களின்  மீதான அதன் தாக்குதல்களுக்கும் எதிராய் ஒரு இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு ஒரு தெளிவான அரசியல் மூலோபாயமும் வேலைத்திட்டமும் அவசியமாயுள்ளது. அது தொழிலாள வர்க்கத்தில் நங்கூரமிடப்பட்டதாய் இருப்பதோடு சமரசமற்ற முதலாளித்துவ-விரோத மற்றும் சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்டதாகவும் இருந்தாக வேண்டும். இந்த முன்னோக்கிற்காகப் போராட உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.