ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s nationalist threats and the response of the European ruling class

ட்ரம்ப்பின் தேசியவாத மிரட்டல்களும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பும்

By Alex Lantier
2 February 2017

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று இரண்டு வாரங்களும் கூட நிறைவு பெற்றிராத நிலையில், ஐரோப்பாவில் அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் அதிகார நிலை உலுக்கப்பட்டிருக்கிறது. ட்ரம்ப் கொண்டுவந்திருக்கும் பயணத் தடைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச அளவில் பரவுகின்ற நிலையிலும் வர்த்தக மற்றும் இராணுவக் கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் மோதல்கள் வெடிக்கின்ற நிலையிலும், அமெரிக்க தேர்தலின் முடிவானது ஐரோப்பாவை முன்கண்டிராத நெருக்கடிக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.

புதிய ஜனாதிபதி ஐரோப்பாவில் ஆழமான அவப்பெயர் பெற்றிருக்கிறார். ட்ரம்புக்கு ஒப்புதலின்மை விகிதம் ஜேர்மனியில் 83 சதவீதம் இருப்பதாகவும், பிரான்சில் 81 சதவீதம் இருப்பதாகவும், ஸ்பெயினில் 80 சதவீதம் இருப்பதாகவும், பிரிட்டனில் 75 சதவீதம் இருப்பதாகவும் இத்தாலியில் 59 சதவீதம் இருப்பதாகவும் FranceInfo கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்தது. ட்ரம்ப்பின் முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்-விரோத நடவடிக்கைகள் பரவலான வெறுப்பை சம்பாதித்திருக்கும் நிலையில் அவருக்கு எதிரரக அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெறக் கூடிய போராட்டங்களை ஐரோப்பிய மக்கள் அனுதாபத்துடன் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள், தேசியவாதத்திற்கும் இனவாதத்திற்கும் விண்ணப்பங்கள் செய்வதன் அடிப்படையில் நிர்க்கதியான மக்களை துன்புறுத்துவதற்கான ஒரு முயற்சியாக, அதாவது உள்ளபடி சரியாக, பார்க்கப்படுகின்றன.

ட்ரம்ப்புக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பானது, பேரினவாதம் மற்றும் போருக்கு எதிரான குரோதத்தை வெளிப்படுத்துகின்ற அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியமானது அமெரிக்காவுடனான மோதலுக்கான தனது தயாரிப்பில் இராணுவ மற்றும் போலிஸ் படைகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

முரண்பாடுகள் பெரும் வேகத்தில் எழுந்து வருகின்றன. நவம்பரில், ட்ரம்ப் தேர்வானதற்கு பிந்தைய சமயத்தில், ஜனாதிபதி பராக் ஒபாமா மறுஉறுதியளிப்பதற்காக ஐரோப்விற்கு பயணம் மேற்கொண்டபோது, ட்ரம்ப் “நேட்டோவுக்கும் அட்லாண்டிக்-கடந்த உடன்படிக்கைக்கும் ஆழமான உறுதிப்பாட்டை” கொண்டிருப்பதாக வலியுறுத்தியிருந்தார். அதற்கு இரண்டு மாதங்கள் கூட ஆகியிராத நிலையில், ட்ரம்பின் தேர்வினால் கட்டவிழ்த்து விடப்பட்ட மோதல்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் நிலவி வந்திருந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு இடையிலான உறவுகளை கீழறுத்துள்ளன.

ட்ரம்ப்பின் தேர்வினால் இந்த நிலைமுறிவு நிகழ்ந்திருக்கவில்லை. பதிலாய், அது ஒரு ஊக்கியாக மட்டுமே சேவையாற்றியது. நேட்டோ கூட்டணியை காலாவதியான ஒன்றாக அவர் நிராகரிப்பதானது, நேட்டோ கூட்டாளிகளுக்குள்ளாக, அமெரிக்க ஏகாதிபத்தியம், குறிப்பாக ஜேர்மனியை மனதில் கொண்டு, தனது பலதசாப்த கால பொருளாதார வீழ்ச்சியை இராணுவரீதியாக சரிக்கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியிருந்ததை மையமாகக் கொண்ட பதட்டங்களில் இருந்தே எழுகிறது. ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டது முதலாகவே, ஜேர்மனி அதிக அமெரிக்க கார்களை வாங்க வேண்டும் என்று கோரினார், ஜேர்மனியின் கார் ஏற்றுமதிகள் மீது 35 சதவீத சுங்கவரி விதிக்க மிரட்டினார், பிரெக்ஸிட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்னும் விரிந்த ஒரு உடைவுக்கான ஒரு முன்மாதிரியாகப் பாராட்டினார், யூரோவுக்கு குரோதமான அதிகாரிகளை தேர்வுசெய்தார்.

ட்ரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ யூரோவைக் கண்டனம் செய்தார், இது ஜேர்மனி “மிகவும் மதிப்புக் குறைக்கப்பட்ட ஒரு ‘உள்முகமான Deutsche Mark’ ஐக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மற்ற நாடுகளையும் அதேபோல அமெரிக்காவையும் சுரண்டுவதற்கு” அனுமதித்ததாக அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதரான டெட் மலோச் கூறுகையில், யூரோ “உண்மையில் வரவிருக்கும் ஒரு வருடம், ஒன்றரை வருட காலத்தில் பொறிவு காணக் கூடும்” என்றார். இந்த ஆண்டில் நெதர்லாந்திலும், பிரான்சிலும், அநேகமாய் ஜேர்மனியிலும் தேர்தலில் நவ-பாசிஸ்டுகள் தேர்வானால் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை அழிக்கக் கூடும் என்று மலோச் ஊகம் செய்தார்.

இது, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஸ்தாபக அடித்தளங்களுக்கான குரோதத்தை அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்த முன்கண்டிராத ஒன்றாக இருக்கிறது. இதற்கு பதிலிறுப்பாக ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையிலும் பெரிய அளவிலான ஒரு மறுநோக்குநிலை கோரும் மனோநிலை ஆளும் உயரடுக்குகளுக்காக துரிதமாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. டைம் சஞ்சிகைக்கு நிகரான ஜேர்மன் சஞ்சிகையான Der Spiegel, அமெரிக்காவுடனான கூட்டணியில் ஒரு “தீவிரமான முறிவு”க்கும் “சீனாவுடனான மேம்பட்ட உறவுகளுக்கும்” ஆலோசனை முன்வைக்கிறது. “ஒரு புதிய ஜேர்மன்-சீன அச்சு குறைந்தபட்சம் பகுதியாகவேனும் பழைய அட்லாண்டிக்-கடந்த ஒழுங்கை பிரதியிடு செய்வதாக அமையும்” என்று அது மேலும் சேர்த்துக் கொள்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டுஸ்க் மால்டாவில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை ஒட்டி செவ்வாயன்று ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில் ரஷ்யா, சீனா மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதம் ஆகியவற்றுடன் சேர்த்து அமெரிக்காவையும் கூட ஒரு வெளிப்புற அச்சுறுத்தலாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 1957 இல் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை ஸ்தாபித்த “ரோம் உடன்படிக்கை கையெழுத்தானதற்கு பிந்தைய காலத்தில் முன்னெப்போதினும் மிக அபாயகரமானதாக” சூழ்நிலை இருப்பதாக அக்கடிதம் எச்சரித்தது.

“ஆர்வமுடைய கூட்டாளிகளுடனான நமது பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாக, அமெரிக்காவின் வர்த்தக மூலோபாயத்தில் ஏற்படக் கூடிய மாற்றத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுகூலமாக” பயன்படுத்திக் கொள்வதற்குரிய “திட்டவட்டமான மற்றும் பிரமிக்கத்தக்க நடவடிக்கைகளுக்கு” டுஸ்க் அழைப்பு விடுத்தார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை திட்டவட்டமான விதத்தில் வலுப்படுத்துதல்; எல்லைகளற்ற பகுதிகளில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுதல், ஒழுங்கு மற்றும் அமைதியை பாதுகாப்பதற்கும் பொறுப்பான சேவைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தல்; பாதுகாப்புச் செலவினத்தில் அதிகரிப்பு; மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துதல்...” ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவரின் ஆலோசனை மொழிவுகளில் இடம்பெற்றிருந்தன.

ட்ரம்புக்கு எதிரான குரோதத்தை, மூர்க்கமான இராணுவ மற்றும் போலிஸ் அரச கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக சுரண்டிக் கொள்கின்ற ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் திட்டமானது நிராகரிக்கப்பட வேண்டும். லிபியாவிலும் சிரியாவிலும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்திருந்த ஒரு பிற்போக்குத்தனமான ஏகாதிபத்தியக் கூட்டணியை மேலும் இராணுவமயமாக்குவதற்கு டுஸ்க் முனைகிறார். அகதிகளின் நிலைக்கு வாயில் அனுதாபத்தை உதிர்த்துக் கொண்டு, மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கானோரை நீரில் மூழ்கடித்த கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அமல்படுத்தியிருக்கிறது.

சமூக-பொருளாதார நல உதவிகளை “மீட்பதற்கு” டுஸ்க் சிடுமூஞ்சித்தனத்துடன் உதட்டளவிலேனும் பேசுகிறார் என்றால், 2008 நிதிப் பொறிவுக்கு பின்னர் ஐரோப்பா எங்கிலும் வாழ்க்கைத் தரங்களை கீழ்தள்ளிய மற்றும் சமூகப் போராட்டங்களது அலைகளுக்கு தூண்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்காக அது ஏற்கனவே தொழிலாளர்களால் வெறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினாலேயே. ஆயினும், கூடுதலான நிதிகள் இராணுவத்தின் பக்கம் திருப்பப்படுமானால், சிக்கன நடவடிக்கைகள் மேலும் தீவிரப்பட மட்டுமே செய்யும்.

அமெரிக்காவை எதிகொள்வதற்கு, ஜேர்மன் மேலாதிக்கத்துடனான ஐரோப்பிய ஒன்றியம் என்ற டுஸ்க் முன்வைப்பதைப் போன்ற ஆலோசனைகள், மோதல்கள் தீவிரப்படுவதற்கும், ஐரோப்பிய தொழிலாளர்களை அமெரிக்காவில் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராய் நிறுத்துவதற்கும் அத்துடன் ஐரோப்பாவையும் கூட சிதறடிப்பதற்குமே பாதை திறக்கக் கூடியதாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாதச் சவடால்கள் இருந்தபோதிலும், அது சிதறலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. இலண்டனுக்கும் பேர்லினுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்துச் செல்வதன் மத்தியில் பிரிட்டன் விலகும் நிலை இருக்கும் நேரத்தில், ஐரோப்பிய ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை அல்லது யூரோ மண்டலத்தை ஒரு ஐக்கியப்பட்ட வெளியுறவுக் கொள்கையை சூத்திரப்படுத்தவல்ல ஒரு “மைய” ஐரோப்பாவாக சுருக்குவதற்கான ஆலோசனைகளைக் கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இத்தாலி மற்றும் கிரீஸ் உள்ளிட தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளால் நாசம் செய்யப்பட்ட யூரோ மண்டல நாடுகளை வெளியேற்றுவதற்கும், நிதிச் சந்தைகளின் மூலமாக அதிர்ச்சிகரமான நாணயமதிப்பு இறக்கங்களைக் கொண்டு அவற்றை தண்டிப்பதற்குமான திட்டங்களும் இந்த ஆலோசனைகளில் அடக்கம்.

முதலாம் உலகப் போருக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், போருக்கான ஒரு புதிய வினாடிகள் எண்ணுதல் (countdown) தொடங்கியிருக்கிறது. இது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளில், அதாவது உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும், குரோதமான தேசிய-அரசுகளாக உலகம் பிளவுண்டு கிடப்பதற்கும், அத்துடன் உற்பத்தியின் சமூகமயமான தன்மைக்கும் இலாபம் முதலாளித்துவ வர்க்கத்தினால் தனிமனிதர்களிடம் குவிக்கப்படுவதற்கும் இடையிலான முரண்பாடுகளில் வேரூன்றியிருக்கிறது.

1914 இல் போர் வெடிப்பதற்குக் கீழமைந்திருந்த பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள் தான் 1917 இல் ரஷ்யாவில் சமூக புரட்சியின் வெடிப்புக்கு இட்டுச் சென்றது. இப்போது கட்டவிழும் நெருக்கடிக்கான தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பை 20 ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்ட அனுபவங்கள் வழிநடத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள் மனிதகுலத்தை இன்னுமொரு இராணுவப் பேரழிவுக்குள் மூழ்கடிக்கும் முன்னதாக, தொழிலாள வர்க்கமானது சோசலிசத்துக்கான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்திற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும்.