ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Nationalist groups in Tamil diaspora seek deal with Trump at UN

புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்புடன் உடன்பாட்டுக்கு முயலுகின்றன

By Athiyan Silva
16 March 2017

சமீபத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் (UNHCR) அமர்வுகளின் போது, இலங்கை அரசாங்க போர் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென வாஷிங்டன் மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு முறையிடுவதற்காக, புலம்பெயர் தமிழ் குழுக்கள் ஜெனிவாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பின.

உலக தமிழர் பேரவை (GTF), கனடிய தமிழர் தேசிய அவை (NCCT), கனடா தமிழ் இளைஞர் அமைப்பு (TYOC), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஆகியவை ஆதரவு நாடுவதற்காக பங்கெடுத்திருந்தன. அதேநேரத்தில், வாஷிங்டனில் தீவிர வலது ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்திருப்பதற்கு இடையே, சீனாவை மிரட்டுவதையும் மற்றும் அதற்கு எதிரான போர் தயாரிப்புகளையும் இலக்கில் கொண்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புடன்" அணிசேர்வதை இக்குழுக்கள் ஆழப்படுத்தி வருகின்றன.

ஆனால் இலங்கை போர் குற்றங்களை விசாரிப்பது மீதான எந்தவொரு அழுத்தத்தையும் வாஷிங்டன் கைவிட்டுள்ளது என்பதையும், ட்ரம்ப் தேர்வானது அவற்றிற்கு உதவியாக இருக்குமென்ற அவற்றின் பயபக்தியான அபிலாஷைகளை இயலாமையோடு எதிரொலித்தன என்பதையும் அவற்றால் மறைக்க முடியவில்லை. கடந்த ஞாயிறன்று ஜெனிவாவில் கனடிய தமிழர் தேசிய அவை பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கூறுகையில், “அவர்களுடனான எங்களது சந்திப்பில், அமெரிக்கா இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படக்கூடுமென குறிப்பிட்டது. அமெரிக்காவில் நடந்துள்ள அரசியல் மாற்றங்கள் எங்களுக்குச் சாதகமாக மாறக்கூடும். இப்போதைக்கு எங்களால் எதையும் தெளிவாக கூற முடியாது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது,” என்றார்.

மார்ச் 6 அன்று ஜெனிவா ஆர்ப்பாட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டார்கள் என்பது, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தமிழ் பேசும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இத்தகைய குழுக்களின் அதிகாரம் பொறிந்து போயிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு மாதகால நீண்ட பிரச்சாரத்திற்கு இடையிலும், அப்போராட்டத்தில் வெறுமனே விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கலந்து கொண்டனர், அதுவே முந்தைய ஆண்டுகளில் ஐரோப்பா எங்கிலும் இருந்து டஜன் கணக்கான பேருந்துகளிலும் இரயில்களிலும் பயணித்து கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை தமிழர்களின் தலைவிதி ட்ரம்ப் நிர்வாகத்தை அசைத்துவிடும் என்ற அவர்களின் வாதம், அவமானகரமான மோசடியாகும். அக்டோபர் 2015 இன் முந்தைய ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மான பரிந்துரைகளை இலங்கை பூர்த்தி செய்வதற்கான காலக்கெடுவை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் விதத்தில், இலங்கையுடன் கலந்தாலோசித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் இணைந்து எழுதப்படும் ஒரு தீர்மானத்தை விரைவில் நிறைவேற்றும் என்பதை சமீபத்திய ஐ.நா. அமர்வு நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மிக பரந்தரீதியில் கூறுவதானால், வாஷிங்டன் நடைமுறையளவில் அந்த விடயத்தையே கைவிட்ட பின்னரும் கூட, தமிழ் தேசியவாத குழுக்கள் நீண்டகாலமாக தொடர்ந்து ஊக்குவித்து வரும் இந்த ஒட்டுமொத்த சர்வதேச போர் குற்ற விசாரணையும், இந்திய பெருங்கடலில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்கான ஒரு இகழ்ச்சியான தந்திரமாகும். அமெரிக்கா, பிரித்தானியா ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுடன் இந்தியாவும் இணைந்து 2006 இல் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு போரை மீளத்தொடக்குவதற்கும் 2009 இன் இறுதி தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலையில் முடிப்பதற்கும் இலங்கை அரசிற்கு இராணுவ, இராஜதந்திர ஆதரவை வழங்கின.

அனைத்திற்கும் மேலாக, மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்காவில் மில்லியன் கணக்கானவர்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றுள்ள ஆக்ரோஷ போர்களை தொடங்கி, தொடர்ந்து நடத்துவதில் வாஷிங்டனே திட்டமிட்டு சர்வதேச விதிகளை மீறியுள்ளது.

இருப்பினும் இலங்கையின் உள்நாட்டு போரின்போது நடந்த போர் குற்றங்களை விசாரிக்க வாஷிங்டன் ஒரு சர்வதேச விசாரணை கோரி 2012 இல் ஐ.நா. தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் தேசியவாத குழுக்கள், வாஷிங்டனின் ஐ.நா. விசாரணையை மனித உரிமைகளுக்கான ஒரு பாதுகாப்பு என்றும் தமிழ் மக்களுக்கு "நீதியைப்" பெற்று தருவதற்கான ஒரு வழிவகை என்றும் ஆரவாரம் செய்தன.

அந்நேரத்தில் இதை இழிவானதொரு தந்திரம் என்று உலக சோசலிச வலைத் தளம் மட்டுமே எச்சரித்தது: அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை அதற்கு முன்னர் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புடன்" வரிசையில் நிறுத்தவும் மற்றும் சீனாவுடனான இலங்கையின் பொருளாதார உறவுகளைக் கட்டுப்படுத்தவும் அவருக்கு அழுத்தமளிப்பதற்காக, வாஷிங்டன், கொழும்பு ஆட்சி நடத்திய குற்றங்களில் சிலவற்றின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்ச அச்சுறுத்தி வந்தது.

இராஜபக்ஷ அதற்பேற்ப நடக்கத் தவறியபோது, வாஷிங்டன் அவரை பதவியிலிருந்து கவிழ்க்க முடிவெடுத்தது. இராஜபக்ஷவினை வெளியேற்றி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பொறுப்புக்கு உயர்த்தி, இலங்கையை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் சுற்றுவட்டத்தில் கொண்டு வந்த, அமெரிக்க தலைமையிலான ஜனவரி 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியவாதிகள் ஆதரவளித்திருந்தனர்.

2009 தாக்குதலுக்கு தலைமை கொடுத்த, மற்றும் தமிழ் மக்கள் பாரியளவில் படுகொலை செய்யப்படுவதை ஒருசமயம் மேற்பார்வை செய்த அரசியல், இராணுவ அதிகாரிகள் இராஜபக்ஷவின் கீழ் இப்போது இல்லையென்றாலும், ஜனாதிபதி சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க சார்பு அரசாங்கத்தின் கீழ் அவர்கள் வேலை செய்து வருவதால், வாஷிங்டன் இத்தகைய குற்றங்களை விசாரிப்பதில் முற்றிலும் ஆர்வமிழந்துள்ளது. செப்டம்பர் 2015 இல், அது இலங்கை அரசாங்கத்தின் மற்றும் இராணுவத்தின் அட்டூழியங்கள், விசாரணையற்ற மரண தண்டனை, சட்டவிரோத கைது நடவடிக்கைகளை பூசிமொழுகி, சர்வதேச விசாரணையை கைவிடுவதற்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

ஒரு சர்வதேச விசாரணையிலிருந்து வாஷிங்டன் பின்வாங்குவது மற்றும் போர் குற்ற விசாரணைக்கு உள்நாட்டு இயங்குமுறைகளை பரிந்துரைக்கும் ஒரு தீர்மானத்திற்கு அது ஆதரவு காட்டுவது ஆகியவை தமிழ் தேசியவாதிகளின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கடைசி ஐநா தீர்மானங்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்க இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் அழைப்பு விடுக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ பரிந்துரைகளில் எதுவொன்றையும் கூட பூர்த்தி செய்ய தவறியுள்ளது.

புலம்பெயர் தமிழ் குழுக்களது ஜெனிவாவிற்கான வருடாந்திர யாத்திரை, நீதியைப் பெற்று தரும் என்ற அவர்களது வாதங்கள் வெற்று வார்த்தை ஜாலங்களாகும். 2009 இல் தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட இத்தகைய குழுக்கள், தமிழ் பேசும் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான கல்வியாளர்கள் மற்றும் வணிகர்களின் அடுக்கை அடித்தளமாக கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளின் அரசியல் பாரம்பரியத்தில், இவை இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை விடாப்பிடியாக எதிர்ப்பதுடன், புலம்பெயர் தமிழ் தொழிலாளர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதையும் எதிர்க்கின்றன.

இலங்கை தமிழ் மக்கள் மீதான புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் அனுதாபத்தை அவை அவற்றின் சொந்த அரசியல் தேவைகளுக்காக திரித்துக் கொண்டு, அத்தீவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களிடம் சுரண்டப்படும் இலாபங்களில் தமிழ் உயரடுக்கிற்கு ஒரு பெரும் பங்கை வழங்குகின்ற மற்றும் அவர்கள் வாழும் நாடுகளில் அரசியல் செல்வாக்கு கிடைக்கச் செய்கின்ற ஒரு "அரசியல் தீர்வினை" அடைவதற்கு முயல்கின்றன.

இந்த அமைப்புகளின் தலைவர்கள், அவர்கள் வாழும் இடங்களில் ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் உயரடுக்குகளுக்குள் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளதுடன், அதன் மூலமாக அவர்கள் அவர்களது வியாபார மற்றும் தொழில்ரீதியிலான நலன்களை பின்தொடர்கின்றனர். இவர்கள், “ட்ரம்பிற்கான தமிழர்கள்,” “ஒபாமாவிற்கான தமிழர்கள்,” “கிளின்டனுக்கான தமிழர்கள்" மற்றும் "கோர்பினுக்கான தமிழர்கள்" என்பது போன்ற பிற்போக்குத்தனமான ஏகாதிபத்திய அரசியல்வாதிகளை ஊக்குவிக்கும் எண்ணற்ற குழுக்களின் ஒழுங்கமைப்பாளர்களாக உள்ளனர்.

இவர்கள் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் நடத்திய போர் குற்றங்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் சிறிசேன அரசாங்கத்திற்கும் சேவையாற்ற பெரும் பிரயத்தனம் எடுக்கின்றனர். சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் மட்டுமல்ல மாறாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறையினை தீவிரப்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தசாப்தகால உள்நாட்டு போரில் கொழும்பு ஆட்சியினதும், விடுதலைப் புலிகளினதும் போர் குற்றங்களை மூடிமறைப்பதிலும் உடந்தையாக இருக்கின்றனர்.

புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்கள் உள்நாட்டு போர் முடிவின் போது இலங்கையில் அமெரிக்க தலையீட்டைக் கோரி மன்றாடியதோடு, போராட்டங்களையும் நடத்தின, மேலும் ஒபாமாவின் சீன-விரோத "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" பொறுப்பின்றி ஊக்குவித்தன. இதுவரையில் ட்ரம்ப் நிர்வாகம் அவர்களின் வியாபாரம் மற்றும் அரசியல் நலன்களை முன்னெடுக்க அடித்தளத்தை வழங்கி உள்ள நிலையில், இப்போது அவை சீனாவிற்கு எதிரான போர் அச்சுறுத்தலை தீவிரப்படுத்தும் மற்றும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் பாரியளவிலான நாடுகடத்தல்கள் மற்றும் ஏனைய கடுமையான தாக்குதல்களுடன் கைகோர்த்து செல்லும், ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" மூலோபாயத்தை ஆதரிக்கவும் தயாராக உள்ளன.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மீது அவை சார்ந்திருப்பதை அவர்கள் மறைக்க முயலவில்லை. உலக தமிழர் பேரவை தலைவர் S. J. இமானுவேல் ஜெனிவாவில் பெருமையுடன் பேசுகையில், “நான் பலதடவைகள் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு சென்றுள்ளேன். கடந்த ஆண்டும் அங்கே நான் சென்று வெளியுறவுத்துறை செயலர் நிஷா பிஸ்வாலுடன் பேசியிருந்தேன். இலங்கை அவர்களின் திட்டநிரலில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இப்போது அரசாங்கம் மாறியுள்ளது. ஆனால் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய சர்வதேச நாடுகளின் உதவியின்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

அதேபோல, பிலடெல்பியாவை மையமாக கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தலைவர் வி. உருத்திரகுமாரன் பெருமைபீற்றுகையில், “21 ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாக இந்திய பெருங்கடல் விளங்கும்“ என்றார். ஆதலால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு அதனை விற்பனை செய்ய சாதகமான இடத்தில் இருக்கும் சேவகன் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

“இந்திய பெருங்கடலின் இந்த மூலோபாயரீதியில் முக்கிய பாகத்தில், ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் வாழ்கின்றனர்,” என்றார். “இந்த மூலோபாயரீதியில் மற்றும் புவியமைப்புசார்ந்த முக்கிய இடத்தை அரசியல் பலத்திற்குரியதாக எவ்வாறு மாற்றப் போகிறோம் என்பதே நம் முன்னிருக்கும் சவால். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இப்போது இந்த பணியில் தான் ஈடுபட்டுள்ளது. இதற்காக, நாம் ஓர் ஆராய்ச்சி மையத்தை அமைத்து, பேராசிரியர்களால் குறிப்பிட்ட வகுப்புகளை நடத்த செய்ய வேண்டும்,” என்றார்.

கனடாவை மையமாக கொண்டுள்ள கனடிய தமிழர் தேசிய அவை, பழமைவாத, தாராளவாத மற்றும் புதிய ஜனநாயக கட்சிகளுடன் ஒருபோல செயற்பட்டு வருகிறது. ஐ.நா. சபைக்கான அதன் பிரதிநிதி மோகன் ராமகிருஷ்ணன் லங்கா சிறி வானொலி பேட்டி ஒன்றில் கூறுகையில், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் “அங்கே உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நல்ல காலம் பிறக்கும்,” என்றார். “அமெரிக்கா மிகவும் நனவுபூர்வமாக உள்ளது, அது இலங்கையில் சீனா காலடி பதிக்க அனுமதிக்காது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.