ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Dutch elections and the danger of fascism

டச்சுத் தேர்தலும் பாசிச அபாயமும்

Peter Schwarz
15 March 2017

இன்று நடைபெறுகின்ற டச்சு தேசிய தேர்தலானது, பேர்லினின் Sportpalast இல் “யூத சதி”க்கு எதிராக அடோல்ஃப் ஹிட்லர் முழங்கிய மற்றும் ரோமின் Piazza Venezia பால்கனியில் நின்றபடி பெனிட்டோ முசோலினி கூட்டத்திற்கு வெறியைக் கிளறி விட்ட நாட்களுக்குப் பின்னர் கண்டிராத ஒரு அளவுக்கு வெளிநாட்டவர்அச்சம், தேசியவாதம் மற்றும் இனவாதம் ஆகியவற்றின் மேலாதிக்கத்தை கொண்டுள்ளது.

கீர்ட் வில்டர்ஸ் உம் அவரது பாசிசவாத விடுதலைக்கான கட்சியும் (Party for Freedom) முஸ்லீம் நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடைவிதிப்பதற்கும் மசூதிகளை மூடுவதற்கும் குரானைத் தடை செய்வதற்கும் அழைப்பு விடுக்கின்றனர். ஆயினும் வில்டர்ஸ் டச்சு அரசியலின் விதிவிலக்காக இருப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், பிரதமர் மார்க் ருட் இன் பழமைவாத அரசாங்கம் தொடங்கி முன்னாள் மாவோயிச சோசலிஸ்ட் கட்சி வரையிலும் அதன் ஒட்டுமொத்த தொகுப்பின் தொனியை அமைத்திருப்பவராக இருக்கிறார்.

“இங்கிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் கிளம்பலாம்” என்று இந்த மாத ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த மக்களிடம் ருட் தெரிவித்தார். “பலமொழி செவ்வியல் இசை விரும்பியும், உலகமயத்துக்கும் சமூகரீதியான தாராளவாதக் கொள்கைகளுக்கும் ஆதரவாளராக நீண்டகாலமாய் அறியப்பட்டு வந்திருப்பவருமான ஒருவரிடம்” இருந்து வரக்கூடிய இந்த வாய்வீச்சானது வில்டர்ஸ் ஆல் உருவடிவம் கொடுக்கப்படுகின்ற வலது-சாரி ஜனரஞ்சகவாதத்தை முன்னெப்போதினும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கும் “ஒரு ஐரோப்பிய ஸ்தாபகத்தின் உச்சிமுனையாய்” அமைந்திருக்கிறது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்திட்டது.

ஜேர்னல் மேலும் குறிப்பிட்டது, “பிரான்சில், பழைமைவாதக் கட்சியான குடியரசுக் கட்சியின் (Les Républicains) ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதன் மீது கவனத்தை பெருமளவாய் ஒருமுகப்படுத்தியிருக்கிறார்” என்றால் “ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், செப்டம்பரில் நான்காம் முறையாக பதவியில் அமர எதிர்நோக்குகின்ற நிலையில், அவரது திறந்த-கதவு குடியேற்றக் கொள்கையில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்.” அந்த செய்தித்தாள் மேலும் கூறியது, “ஐக்கிய இராச்சியத்தில், பழமைவாத கட்சி பிரதமரான தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடனான வருங்கால உறவுகளில் வலிமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை ஒரு முன்னுரிமையாக்கியிருக்கிறார்”.

வில்டர்ஸ் இன் வலது-சாரி ஜனரஞ்சகவாதம் அட்லாண்டிக்கின் இருபக்கத்திலும் இருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு காந்தம்போன்று ஈர்க்கின்றதாக இருக்கிறது என்பது அயோவா மாநிலத்தில் இருந்தான அமெரிக்க நாடாளுமன்றவாதியான ஸ்டீவ் கிங்கின் உணர்ச்சிவெளிப்பாட்டில் வெளிப்பாடு கண்டது, அவர் இந்த வாரத்தில் பிரகடனம் செய்திருந்தார், “கலாச்சாரமும் பூகோளரீதியான இயல்புத்தன்மையும் நமது தலைவிதியாக அமைபவை என்பதை Wilders புரிந்துகொள்கிறார். மற்றவர்களது பிள்ளைகளை கொண்டு நமது நாகரிகத்தை நம்மால் மீட்டெடுக்க முடியாது.” 

1930களில் பாசிசத்தின் வளர்ச்சியானது, லியோன் ட்ரொட்ஸ்கி போன்ற மார்க்சிஸ்டுகளின் பகுப்பாய்வுக்கு மாறான விதத்தில், ஒருவகையான பயங்கர விபத்தாக நடந்தேறியது என்றும், ஜனநாயகத்தை பாதுகாக்க முதலாளித்துவ அரசியல்வாதிகள் மேற்கொண்ட மிகச்சிறந்த முயற்சிகளையும் மீறி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற “கிறுக்கர்”களது நடவடிக்கைகளால் விளைந்தது என்றும் பல தசாப்தங்களாய் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் திட்டவட்டம் செய்து வந்திருக்கின்றனர்.

இதற்கு நேரெதிராய், ட்ரொட்ஸ்கி, பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படையான போக்குகளது வெளிப்பாடு என்பதையும், அது ஓரளவுக்கு வளமாக இருக்கும் காலங்களின் போது ஜனநாயகத்தின் கைநீட்டல்களுக்கு செலவிட முடிவதாக இருக்கும், ஆனால் நெருக்கடியின் காலங்களில் அது இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரம் ஆகிய தன் உட்பொதிந்த போக்கிற்கு திரும்பும், முதலாளித்துவ அரசியல்வாதிகள் வெளிநாட்டினரச்சம் மற்றும் தேசியவாத வாய்வீச்சு ஆகியவற்றின் மூலமாக ஒரு “ஜனரஞ்சக” மறைப்பை அதற்கு வழங்க முனைகிறார்கள் என்றும் விளக்கினார்.

20 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பாசிசம் எழுந்ததும் 1933 இன் பெருமந்தநிலைக்கு மத்தியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்ததும் திரும்ப வரவிருக்காத தனிப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுப் பேரழிவு அல்ல, மாறாக அது முதலாளித்துவம் மற்றும் அதன் ஆழமான சிதைவில் இருந்து விளைந்ததாகும். 21 ஆம் நூற்றாண்டில், 1930களுக்குப் பிந்தைய ஆழமான முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், பாசிச சக்திகள் ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை அதிகரித்துச் செல்கிறது.

தேர்தலுக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்பாக, ருட், துருக்கியுடன் ஒரு பெரும் தூதரக சம்பவத்தைத் தூண்டி தனது வலது-சாரி சான்றுகளை நிரூபிக்க முனைந்தார். அவரது அரசாங்கம் துருக்கியின் வெளியுறவு அமைச்சரை நெதர்லாந்துக்குள் நுழைவதில் இருந்து தடைசெய்தது, ரோட்டர்டாமில் உள்ள துருக்கிய தூதரகத்தை சுற்றிவளைத்தது, குடும்ப விவகாரங்களுக்கான துருக்கிய அமைச்சரை போலிஸ் புடைசூழ நாட்டின் எல்லைக்கு வெளியேற்றியது.

சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (PvdA) மற்றும் போலி-இடது சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகள் இதனை பாராட்டின. ஐரோப்பா முழுமையிலுமான கட்சிகளும் இதனையே செய்தன. ஜேர்மனியில், இடது கட்சியானது ருட்டின் வலது-சாரி ஆத்திரமூட்டலை உற்சாகத்துடன் வரவேற்றதோடு டச்சு அரசாங்கத்தின் “சீரான அணுகுமுறை” உதாரணத்தைப் பின்பற்றுவதற்கு ஜேர்மன் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

வலதின் பக்கமான இந்த அதிக நகர்வு என்பது நெதர்லாந்திலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் முதலாளித்துவ சமூகம் எதிர்கொண்டுள்ள ஒரு ஆழமான நெருக்கடிக்கு முதலாளித்துவ கட்சிகள் அளிக்கின்ற பதிலிறுப்பாகும். பல தசாப்தங்களாய் நடந்து வந்திருக்கின்ற நலஉதவி வெட்டுக்கள், பெரும்பான்மையானோர் நலனைப் பலிகொடுத்து ஒரு சிறுஎண்ணிக்கையிலானோர் வளமடைந்தமை, மற்றும் போரின் பரவல் ஆகியவை ஜனநாயக வழிமுறைகளால் தீர்க்கப்பட முடியாத பொருளாதார மற்றும் சமூகப் பதட்டங்களை உருவாக்கி விட்டிருக்கிறது.

"மிகவும் மின்னேற்றமேறிய வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளது தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகள் எரிந்து போகின்றன அல்லது வெடிக்கின்றன” என்று லியோன் ட்ரொட்ஸ்கி 1929 இல், அதாவது அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மனியின் சான்சலராக நியமிக்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கும் முன்பாய் எழுதினார். “அது தான் சர்வாதிகாரத்தின் ஷார்ட் சர்க்யூட் குறித்து நிற்பதாகும்”.

அப்போது போலவே இப்போதும், முதலாளித்துவ வர்க்கமானது முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு இராணுவவாதம், போர் மற்றும் சர்வாதிகாரத்தைக் கொண்டு பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கிறது. போருக்குப் பிந்திய காலகட்டத்தில் முதலாளித்துவ ஆட்சி தனக்கான அடித்தளமாகக் கொண்டிருந்த சமூக சமரசத்தின் வழிமுறைகள் செயல்படுவதில் இருந்து நின்றுபோய் வெகுகாலமாகி விட்டிருக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மதிப்பிழந்து விட்டிருப்பதோடு தொழிலாள வர்க்கத்தில் எந்த ஆதரவையும் தொலைத்து விட்டிருக்கின்றன.

நெதர்லாந்தில், ஒருகாலத்தில் ஐரோப்பாவின் செல்வாக்கான சமூக ஜனநாயகக் கட்சிகளில் ஒன்றாக இருந்த PvdA பொறிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. கருத்துக்கணிப்புகளில் இது ஏழாவது இடத்தில் இருக்கிறது. 1980களில் டச்சு சமூகப் பாதுகாப்பு முறையின் மீது தாக்குதலை தொடுத்த PvdA, அதன்பின் தொடர்ந்து அதனை அழிப்பதில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது. 2012 முதலாக, அங்கு ருட்டின் வலது-சாரி அரசாங்கத்தில் ஆறு PvdA அமைச்சர்கள் இருந்து வந்திருக்கின்றனர். அதன் நன்கறிந்த பிரதிநிதியான யூரோ குழுமத்தின் தலைவரான Jeroen Dijsselbloem கிரீசுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைக்கு எதிராய் கிளர்ச்சி செய்தே புகழுக்கு வந்தார்.

இப்போது டச்சு ஆளும் வர்க்கமானது, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக சமூகத்தின் கழிசடைகளை ஒன்றுதிரட்டும் பாசிச வழிமுறைகளை வகுப்பதன் மூலமாக ஒரு சமூக வெடிப்பின் அச்சுறுத்தலை தடுத்து விடலாம் என முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

வில்டர்ஸ் -இவரும் முன்னாளில் ருட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சியின் (VVD) நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்தவரேயாவார்- உழைக்கும் ஏழை மக்களின் பாரிய கூட்டத்திற்குள் தூக்கிவீசப்படும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும், சமூகத் துயரத்திற்கு புலம்பெயர்ந்தவர்களின் மீது பழிபோடுவதன் மூலமாக ஏழ்மைப்பட்ட தொழிலாளர்களது வெறுப்புணர்ச்சிக்கும் விண்ணப்பம் செய்கிறார். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பாசிசம் யூதர்களை பலிகடாக்களாய் பயன்படுத்தியது; இன்று ஒரு திவாலான அரசியலமைப்பு முறை புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை பலிகடாக்களாக்குகிறது.

வில்டர்ஸ் இன் வலது-சாரிக் கொள்கைகளை ஸ்தாபகக் கட்சிகள் ஏற்றுக் கொள்வது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவவாதத்திற்கான எந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு ஜனநாயக வழிமுறைகளில் இருந்து முறித்துக் கொள்வதற்கு ஆளும் உயரடுக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இது நெதர்லாந்தில் மட்டும் நிகழ்ந்து வருவதல்ல. ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்ஸிட் வாக்களிப்பு மற்றும் அமெரிக்காவில் ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்வானது ஆகியவற்றின் பின்னர், ஏப்ரலில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் -இதில் வலது-சாரி வேட்பாளரான மரின் லு பென் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை பெறுகிறார்- மற்றும் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஜேர்மன் தேர்தல் -இங்கு வலது-சாரி ஜேர்மனிக்கான மாற்று (AfD) வில்டர்ஸ் இன் PVV போன்று கருத்துக்கணிப்பு மதிப்பெண்களை ஈட்டிக் கொண்டிருக்கிறது- ஆகியவற்றுக்கான தொனியை டச்சுத் தேர்தல் அமைத்துக் கொண்டிருக்கிறது.

உலக முதலாளித்துவத்தின் 1930களுக்குப் பிந்தைய ஆழமான நெருக்கடியில் இருந்து அதி-வலது சக்திகள் தான் இலாபமடைகின்றன என்ற உண்மையானது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபிப்பின் மீதான பதிலளிக்க முடியாத குற்றப்பத்திரிகையாக இருக்கிறது.

பாசிசம், போர் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வரவானது முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதற்கும் போராடுகின்ற சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் மூலமாக மட்டுமே எதிர்க்கப்பட முடியும். ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவது என்பதே இதன் பொருளாகும்.