ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பட்டதாரிகள் வேலை கோரி போராட்டம் நடத்துகின்றனர்

By Subash Somachandran and S. Jayanth,
9 March 2017

இலங்கையில் போரால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக தங்களுக்கு அரசாங்க வேலை கோரி சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிலும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

நாட்டின் தென்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கு ஏற்ப கட்டவிழ்த்துவிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து, இலவச கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையை பாதுகாக்கவும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்தும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு சமாந்தரமாக இந்த பட்டதாரிகளின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் அரசாங்க அலுவலகங்களுக்கு முன்னாலும் பொது இடங்களிலும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதோடு, மனிதச் சங்கிலி போராட்டம், ஊர்வலம் போன்றவற்றையும் நடத்துகின்றனர். பெண் பட்டதாரிகள் தமது குழந்தைகளுடன் மழையிலும் நனைந்துகொண்டு இரவு பகலாக அங்கேயே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.

பிப்பரவரி 22 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்துக்கு முன்னால் சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் காரைதீவில் கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மத்திய மற்றும் மாகாண அரச துறைகளில் போட்டிப் பரீட்சை இன்றி தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கான வயது 36ல் இருந்து 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும், என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாகும்.

ஏற்கனவே இது போன்ற போராட்டங்களை முன்னெடுத்த பட்டதாரிகள் மாகாண அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலேயே மீண்டும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கிழக்கில் உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினரும் பட்டதாரிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 1,500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பிப்பிரவரி 27 தொடக்கம் அரசாங்க உத்தியோக நியமனம் வேண்டுமெனக் கோரி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் சத்தியாகிரகப் போராட்ட்டத்தைத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் பட்டம் பெற்ற பின்னர் 4 வருடங்களுக்கும் மேலாக அரசாங்க நியமனங்களுக்காக காத்திருக்கின்றனர். 4,500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வட மாகாணத்தில் வேலயற்று இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் பட்டதாரிகள் மட்டுமன்றி, 2009ல் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடித்தருமாறு அவர்களது உறவினர்கள் தொடர் சத்தியாகிரக போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போரின் பின்னர் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு இன்னொரு பகுதியினர் தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க் கட்சியில் இருந்து அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா, இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, மார்ச் 4 யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்தித்து தீர்வு காண ஏற்பாடு செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

பட்டதாரிகள் மட்டுமன்றி, யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடித்தருமாறு போராடிவரும் உறவினர்களும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டிருந்தனர். இவர்களை அலட்சியம் செய்து ஜனாதிபதி பின்வாசல் வழியே வெளியேறியிருந்த அதே வேளை, பொலிசார் போரட்டக்காரர்களை சுற்றிவளைத்திருந்தனர். அத்துடன் போராட்டங்களுக்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவையும் பெற்றிருந்தனர்.

அதே வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அரசாங்கத்தின் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட ஒரு குழு அமைத்திருப்பதாகவும் விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹக்கீம் வாக்குறுதியளித்தார். எனினும் எழுத்து மூலமான வாக்குறுதி வழங்கப்படும் வரை தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறி, பட்டதாரிகள் சத்தியாகிரகத்தை தொடர்கின்றனர்.

இத்தகைய முயற்சிகள் தோல்விகண்ட நிலையில், போராட்டத்தை நிறுத்தும் முயற்சியாக அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்டத்தை ஏவி விடும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரி. கிஷாந்த் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட நான்கு பேருக்கு எதிராக, பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.

“பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறலாம்”, மற்றும் “அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டனர்” என அவர்கள் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டிருந்தன. அவர்கள் நால்வரும் இருபதினாயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு ஏப்பிரல் 5 அன்று அவர்களுக்கு எதிரான வழக்கும் விசாரிக்கப்படவுள்ளது.

தமிழ் முதாலாளித்துவத்தை பிரதிநித்துவம் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக காட்டிக்கொண்டாலும், அமெரிக்கச் சார்பு கொழும்பு அரசாங்கத்துடனான அதன் கொடுக்கல் வாங்கல்களுக்கு இவை பாதகமாக அமைவதாகவே அது கருதுகின்றது. அது வாஷிங்டனின் ஆதரவுடன் கொழும்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளுக்கு முயற்சித்து வருகின்றது.

பட்டதாரிகளுடன் சேனாதிராஜா உரையாற்றும் போது, “பிரச்சினைகளுக்கு போராடித்தான் தீர்வுகாண வேண்டும், என்பதை நாங்கள் விரும்பவில்லை” என்றார். 2015ல் இதே போன்று பட்டதாரிகள் கோரிக்கையை முன்வைத்த போது, வட மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் கூட்டமைப்பின் இன்னொரு தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், பலர் உண்ண உணவில்லையாயினும் அரசாங்க உத்தியோகமே கேட்கின்றனர், என்றும், தனியார் துறை தொழில்களை உதாசீனம் செய்வதாகவும் பட்டதாரிகளைக் கடிந்தார்.

எவ்வாறெனினும், 2013ல் வடமாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னரும், 2015ல் அமெரிக்க சார்பு ஆட்சி மாற்றத்திற்கு கூட்டமைப்பு ஆதரவளித்த பின்னரும், தமது வாழ்க்கை நிலைமையில் சீரழிவைத் தவிர வேறு எதையும் காணாத தமிழ் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ் கூட்டமைப்பு மீது மேலும் மேலும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

வடக்கில் பட்டதாரிகள் மட்டுமன்றி கடந்த பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் மற்றும் சுத்தீகரிப்பு தொழிலாளர்கள் போன்றவர்களும் நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் வாக்குறுதிகளை கொடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டங்களில் ஈடுபடுவோரில் அநேகமான பட்டதாரிகள் ஆசிரியர் சேவையையே எதிர்பார்த்திருப்பவர்களாவர். வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பெருமளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் வேலையின்மை என்ற பிரச்சினை வடக்கு மற்றும் கிழக்குக்கு மட்டும் உரியதல்ல. 2014ல் ஆசிரியர் நியமனத்துக்கான பரீட்சையை எழுதிய மேல் மாகாண பட்டதாரிகள், தங்களுக்கு நியமனங்களை வழங்கக் கோரி கடந்த வாரம் கொழும்பு புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் இருந்து மேல் மாகாண கல்வி அமைச்சு வரை பேரணி நடத்தினர். அரச சேவைகளில் வெற்றிடங்கள் இருந்தும் அரசாங்கம் அதற்கு ஊழியர்களை நியமிப்பதை தவிர்த்து வருகின்றது.

உலகப் பொருளாதார பின்னடைவின் பாகமாக பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதயத்திடம் இருந்து பெரும் கடனுக்காக, நிதியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதல் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையை வெட்டித் தள்ளுவது மட்டுமன்றி இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்ற மேலும் பல அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்தி, சேவைக் கட்டனங்களை அதிகரிக்கவும் உழைப்புப் படையை வெட்டிக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

உலக முதாலாளித்துவ நெருக்கடியின் விளைவாக, இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும் வேலையின்மை உக்கிரமடைந்து வருவதோடு தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். மறுபக்கம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தன்னுடைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மூன்றாவது உலகப் போருக்கத் தயாராகி வருகின்றது. உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் தாம் ஒரே பாதையில் ஒரே எதிரிக்கு முகங்கொடுப்பதை உணர்கின்றனர்.

வேலையின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பேரழிவு யுத்தத்தினதும் தோற்றுவாயான உலக முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசி சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பது மட்டுமே இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே வழிமுறையாகும்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய வட மாகாண பட்டதாரிகள், “எமக்கு ஒரு சமூக அந்தஸ்த்தும் பொருளாதார ரீதியிலான வாழ்வும் வேண்டும் என்ற நோக்கதுடனேயே படித்தோம் ஆனல் தற்போது றோட்டில் நிற்கின்றோம்” எனக் கூறினர். “நுண்கலைத் துறைப் பட்டதாரிகளுக்கான பொருத்தமான வேலை வாய்ப்புகள் இலங்கையில் இல்லை. அவர்கள் கற்றுக்கொண்ட விடயங்களை சமூகத்துக்கு வழங்குவதற்கான வழிவகைகளையும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மேலும், நான்கு வருடங்களாக பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரிகளாக வெளியேறி எங்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்குவதற்காக போட்டிப் பரீட்சைகள் மற்றும் நுண்ணறிவுப் பரீட்சைகள் வைப்பது நியாயமற்றது. அப்படியானால் பல்கலைக்கழத்தில் கற்பிப்பது தரமற்ற கல்வியா?” என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒரு பட்டதாரியான சுதீபன்: “நான் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு இன்று நண்பர்களுடன் இந்த இடத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கின்றேன். நாங்கள் இரவுபகலாக இங்கு அனாதைகளாக நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம். எமக்கு ஒழுங்கான உணவும் இல்லை, நித்திரையும் இல்லை. நான் கல்வியாளர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். பல்கலைக்கழகத்துக்குள் இருந்து வெளியேறி வேலைவாய்ப்புக்காக அலையும் நிலை இருக்க கூடாது. நீங்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்து போராடுங்கள். பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும். பொது மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்,” என்றார்.

BA பட்டதாரியான மிகுந்தன்: “பட்டம் பெற்று 5 வருடங்களாகிவிட்டது. நான் 2008ல் எனது படிப்பினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால். யுத்தம் காரணமாக எனது படிப்பினை இடை நிறுத்த வேண்டியிருந்த்து. அதன் பின்னர் மீண்டும் இணைந்து 2012ம் ஆண்டே படிப்பினைப் பூர்த்திசெய்தேன். அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று டிப்ளோமா பட்டங்களும் பெற்றுள்ளேன். எம்மை சுயதொழில் செய்யுமாறு அரசாங்கம் கேட்கின்றது. அதை எப்படிச் செய்யவது. அதற்காகவா நாங்கள் படித்தோம்? என்ன சுயதொழில் செய்வது?” பட்டதாரிகளுக்கு மீண்டும் போட்டிப் பரீட்சை வைப்பது மோசடியாடனதாகும்.”