ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hungary builds internment camps for refugees

ஹங்கேரி அகதிகளுக்கான தடுப்புவேலி முகாம்களைக் கட்டியெழுப்புகிறது

By Ulrich Rippert
11 March 2017

நாட்டிலிருக்கும் அத்தனை அகதிகளையும் தனது எல்லைகளை ஒட்டிய முகாம்களில் அடைப்பதற்கு ஹங்கேரி திட்டமிட்டு வருகிறது. இந்த முகாம்கள் 200 முதல் 300 அகதிகள் வரை அடைப்பதற்கான பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களைக் கொண்டதாய் இருக்கும் என்பதோடு நாஜிக்கள் அவர்களது சொந்த அடைப்பு முகாம்களில் அமைத்திருந்த தங்குகட்டிடங்களை நினைவுக்குக் கொண்டுவருவதாய் இருக்கின்றன. உயரமான கம்பிவேலிகள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்களைக் கொண்டு இந்த முகாம்கள் பாதுகாக்கப்படும். வலது-சாரி குண்டர்கள் பின்வர சுற்றும் நாய்கள் சகிதமாக ஆயுதமேந்திய எல்லை போலிஸ் முகாமின் சுற்றுவட்டத்தை ரோந்து சுற்றும்.

இப்போது தொடங்கி, அகதிகளும் தஞ்சம் கோருவோரும் அவர்களது சட்ட நடைமுறைகள் பரிசீலனையில் இருக்கும் காலம்வரையில் ஹங்கேரிக்குள் சுதந்திரமாக சென்று வருவதோ அல்லது நாட்டை விட்டு செல்வதோ சாத்தியமில்லாததாகி விட்டது. ஆளும் வலது-சாரி பழமைவாத கட்சியான Fidesz மற்றும் எதிர்க்கட்சியான அதி-வலது ஜோபிக் கட்சி ஆகியவற்றின் வாக்குகளுடன் செவ்வாய்கிழமையன்று புடாபெஸ்டில் நாடாளுமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. 2013 இல் ஐரோப்பிய ஒன்றியம், ஐநா மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஆகியவை கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஹங்கேரி நிறுத்தி வைத்திருந்த ஒரு நடைமுறையை இந்த நாடாளுமன்ற வாக்களிப்பு மீண்டும் கொண்டுவந்திருக்கிறது.

இதன்மூலம் ஹங்கேரியில் பிரதமர் விக்டர் ஓர்பனின் கீழான அதி-வலது அரசாங்கம் அகதிகளுக்கு எதிராய் நாட்டைச் சுற்றி சுவரெழுப்பும் தனது கொள்கையை மேலும் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே ஜனவரியில் தஞ்சம் கோருவோர் அனைவரையும் காவலில் வைத்திருக்கும் நடவடிக்கைகளை அது அறிமுகப்படுத்தியது என்பதோடு பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை அவசியப்படுவதாக வாதிட்டது.

ஹங்கேரியின் எல்லைகள் ஏற்கனவே இறுக்க மூடித்தான் இருக்கும் நிலையில், “அகதிகளின் ஒரு அலை” நாட்டை மூழ்கடிக்க அச்சுறுத்திக் கொண்டிருப்பது குறித்து ஓர்பான் எச்சரித்தார். நூறாயிரக்கணக்கானோர் ஐரோப்பாவுக்குள் புலம்பெயர அச்சுறுத்துகின்ற நிலையில் ஹங்கேரி “முற்றுகையின் கீழ்” இருந்ததாய் அவர் அறிவித்தார். ஒருவர் இந்த அபாயத்தை உதாசீனம் செய்யமுடியாது என்று தொடர்ந்த ஓர்பன் மாறாக எல்லைகளை மிகக் கடுமையான வகையிலும் மிகத் திறம்பட்ட வகையிலும் பாதுகாக்க கடமை கொண்டிருப்பதாக அறிவித்தார்.

“குடியேற்றம் என்பது பயங்கரவாதத்தின் பொய்க்கால்குதிரை” என செவ்வாய்கிழமையன்று காலையில் புடாபெஸ்ட்  கண்காட்சி அரங்கில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட பல நூறு எல்லைக் காவலர்கள் முன் ஆற்றிய தனது வெளிநாட்டவர்வெறுப்பு உரையில் அவர் முழங்கினார். குடியேற்றவாசிகள் தங்கள் சொந்தக் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் ஆனால் “ஐரோப்பிய மட்டத்தில்” மற்றும் ஐரோப்பாவின் செலவில்” வாழ வேண்டும் என்பதற்காக ஐரோப்பாவுக்கு வருகின்றனர் என்றார் ஓர்பன்.

தஞ்சம் கோருவோரை முகாம்களில் அடைக்கும் ஹங்கேரி நாடாளுமன்றத்தின் முடிவுக்கு மனித உரிமைகள் அமைப்பான Pro Asyl கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. அதன் ஐரோப்பிய செய்தித்தொடர்பாளரான கார்ல் கோப் (Karl Kopp) Neue Osnabrück செய்தித்தாளிடம் பின்வருமாறு கூறினார்: “ஹங்கேரியில் தஞ்சம் கோருவோரை சிறைப்படுத்துவது என்பது ஐரோப்பிய சட்டத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறியதாகும்”.

உடன்படிக்கை மீறலுக்காக ஹங்கேரிக்கு எதிராய் நடவடிக்கை எடுப்பதற்கு, கோப் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார். “அகதிகளை அடைத்து வைப்பதென்பது ஐரோப்பாவின் அடிப்படை விழுமியங்களை அப்பட்டமாக மீறுவது என்பதால், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் ஹங்கேரி கொண்டுள்ள வாக்களிக்கும் உரிமை நிறுத்தி வைக்கப்பட வேண்டுமா” என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய அடிப்படை விழுமியங்களுக்கு விடுக்கப்படும் இந்த விண்ணப்பம் பயனற்றது என்பதோடு, அது நிதர்சனத்தின் எதிர்திசையிலானதாக இருக்கிறது. ஓர்பன் அரசாங்கத்தின் இனவெறிக் கொள்கை என்பதே ஐரோப்பிய ஒன்றியத்து அகதிகள் கொள்கையின் ஒரு நேரடி விளைவே ஆகும்.

ஐரோப்பாவின் வெளி எல்லைகளை இறுக்க மூடுவதற்கும் ஏறிக்கடக்க முடியாததாக “ஐரோப்பியக் கோட்டை”யின் சுவர்கள் எழுப்பப்படுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளாய் வேலை செய்து வருகிறது. தஞ்சம் கோருவோரை ஐரோப்பாவுக்குள் நுழைய விடாமல் தடுப்பதுதான் முதலாவதாய் ஐரோப்பிய அகதிக் கொள்கையின் அறிவிக்கப்பட்ட இலக்காக இருக்கிறது. அப்படி அவர்கள் உள்ளே நுழைந்துவிட்டால், அவர்களை எல்லை முகாம்களுக்குள் தடுத்து வைத்து முடிந்த அளவுக்கு ஐரோப்பாவிற்குள் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதை மட்டுப்படுத்துவது தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்காய் இருக்கிறது.

இந்தக் கொள்கையை அடியொற்றி ஐரோப்பாவிற்கு வெளியிலிருக்கும் நாடுகளில் அகதிகளை மொத்தம்மொத்தமாய் அடைத்து வைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கிறது. சிரியாவின் அண்மையிலிருக்கும் ஜோர்டான், லெபனான் மற்றும் பிற நாடுகளில் இருக்கிற மனிதன் வாழத் தகுதியில்லாத மற்றும் மந்தை போல அடைக்கப்படுகின்ற முகாம்களை விட்டு அகதிகள் வெளியே வராமல் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, சென்ற ஆண்டில் உலக உணவுத் திட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் 1 பில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியது. அகதிகளைத் தடுத்துவைப்பதற்கு ஆபிரிக்க நாடுகளுக்கும் நிதி உதவியை வழங்கியிருக்கின்றன.

ஆயினும் அகதிகள் வருகையைத் தடுப்பதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி, ஃபிரண்டெக்ஸ் எல்லைப் பாதுகாப்பு முகமைக்கே செல்கிறது, இது தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வெளிப்புற எல்லைகள் பாதுகாப்பை ஒருங்கிணைப்பது தான் ஐரோப்பிய முகமையின் பணியாக இருந்தது, ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இராணுவ உள்கட்டமைப்பையும் அதன் சொந்த கண்காணிப்பு எந்திரத்தையும் கொண்ட ஒரு சுயாதீனமான எல்லை போலிசாக அபிவிருத்தி கண்டுவிட்டிருக்கிறது.

இதனிடையே ஃபிரண்டெக்ஸ் எல்லைக் கட்டுப்பாடு ஒருங்கிணைப்புக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் வெளி எல்லைகளில் ஆபத்து மற்றும் தொல்லை குறித்த பகுப்பாய்வு, எல்லைக் காவலர்களுக்குப் பயிற்சியளிப்பது, ஆட்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பது, அகதிகளைத் திருப்பியனுப்புவது மற்றும் ஐரோப்பிய போலிஸ் அமைப்பான யூரோபோல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சாரா நாடுகளது பாதுகாப்பு அமைப்புகள் இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கும் பொறுப்பு கொண்டிருக்கிறது. இராணுவக் கண்காணிப்பு மற்றும் மத்திய தரைக்கடலில் அகதிகள் வரவிடாமல் தடுப்பது ஆகியவற்றிலும் இந்த முகமை ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.

அகதிகளை துன்புறுத்துவது என்பது பிரத்யேகமாய் ஹங்கேரியின் நிலைமையாக இல்லை, மாறாக இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிருகத்தனமான அகதிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதோடு அவ்வப்போது சில விமர்சனங்கள் வருவதைத் தவிர்த்து முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளால் ஆதரிக்கப்படுகிறது. விக்டர் ஓர்பன் ஜேர்மன் கிறிஸ்தவ சமூக ஒன்றிய (CSU) தலைவரான ஹோர்ஸ்ட் ஸீஹோஃபரின் நெருங்கிய நண்பராவார். ஓர்பனின் தேசிய பழமைவாதக் கட்சி Fidesz ஆனது, CSU மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) ஆகிய கட்சிகளையும் கொண்ட ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) ஒரு அங்கத்தவராய் உள்ளது.

ஓர்பனது இனவாதக் கொள்கைகளுக்கு ஊடகங்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கிறது. இந்த வார Die Welt இல், Jacques Schuster எழுதினார்: “அகதிகள் பிரச்சினையில் நம்மைக் காட்டிலும் ஹங்கேரி மிக நேர்மையானதாக நடந்து கொள்கிறது”. பேர்லினின் முன்னாள் மேயரான Eberhard Diepgen (CDU) க்கு முன்னாளில் உரை எழுதித் தந்து வந்திருந்த இவர் எழுதினார்: “எல்லைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசுக்கும் உள்ள பணியாகும். அகதிகளை தங்களுடன் ஒன்றிணைத்துக் கொள்ள விரும்பும் எவரும் புலம்பெயர்ந்தவர்கள் கூட்டம்கூட்டமாய் வருவதைத் தடுத்தாக வேண்டும்.” ஐரோப்பிய ஒன்றியத்தின் “மலிவான செயல்” என்று யாரேனும் அழைத்து விடத்தக்க ஒன்றையே ஹங்கேரி எடுத்துச் செய்து கொண்டிருக்கிறது.

Schuster தொடர்ந்து எழுதுகிறார், அங்கேலா மேர்கெல் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றாலும் கூட, அவரது கொள்கையும் அவரது அறிக்கைகள் சிலவும் நல்ல நோக்கம் கொண்டவையாக இருந்தபோதிலும் கூட முழுக்க சிந்திக்கப்பட்டவையாக இல்லாதிருப்பதோடு அழிவுகரமானவையாகவும் இருப்பதை அவர் எப்போதோ கண்டுகொண்டு விட்டிருக்கிறார்: “அப்படியில்லாமல் இருந்திருந்தால், இன்றைய அகதிக் கொள்கையில் ‘திருப்பியனுப்பல், தடுத்து நிறுத்தல், நிராகரிப்பு’ எல்லாம் இருந்திருக்காது. ஆனால் சான்சலரும் அவரது கட்சியும் இது குறித்துப் பேசுவதற்கு விரும்புவதில்லை.”

ஓர்பனின் இனவாத அகதிக் கொள்கை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் தடுப்பின் நேரடி விளைவு ஆகும், ஐரோப்பிய ஸ்தாபனங்களுக்கு விண்ணப்பங்கள் செய்வதன் மூலமாக இது எதிர்த்துப் போராட முடியாதது. மாறாக, அடைப்பு முகாம்களைக் கட்டுவது, நாஜிக்களின் அடைப்பு முகாம்களை மீண்டும் கொண்டுவருவது ஆகியவை ஐரோப்பா மற்றும் உலகின் எஞ்சிய பகுதியில் நடந்து வருகின்ற அடிப்படையான மாற்றங்களின் உள்ளடக்கத்தில் வைத்துப் பார்க்கப்பட்டாக வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான தஞ்சம் கோருவோர் பல தசாப்தங்களாக மத்திய கிழக்கிலும் பால்கன்களிலும் மற்ற பிராந்ந்தியங்களிலும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளால் நடத்தப்பட்டு வந்திருக்கும் ஏகாதிபத்தியப் போர்களின் பேரழிவுகரமான பின்விளைவுகளுக்குத் தப்பி ஓடிவருபவர்கள் ஆவர். முதலாவது வளைகுடாப் போர் மற்றும் யூகோஸ்லாவிய போர்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்பு, லிபியா மீதான குண்டுவீச்சு, மற்றும் சிரியா மற்றும் ஏமன் நாசப்படுத்தப்பட்டமை இவை நூறாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்திருக்கின்றன. நகரங்களும் ஒட்டுமொத்த நாடுகளும் குப்பைக்கூளங்களாக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் தப்பியோடத் தள்ளப்பட்டனர்.

இப்போது அடைக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்ற பல கையறுநிலையிலான தஞ்சம் கோருவோரும் மற்றும் அவரது குடும்பத்தாரும் ஏகாதிபத்திய போர்க் கொள்கையால் அச்சுறுத்தப்படுகின்ற உலகத் தொழிலாள வர்க்கத்தின் பகுதியாகும்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தை பிடித்திருப்பதானது புதிய போரின் அபாயத்தை கூர்மையாக அதிகப்படுத்தியிருக்கிறது. படைத்தளபதிகள் மற்றும் பில்லியனர்களை கொண்ட ட்ரம்ப்பின் அரசாங்கமானது தனது “முதலில் அமெரிக்கா” சுலோகத்தைக் கொண்டு ஒட்டுமொத்த உலகத்தையும் பொருளாதார மற்றும் இராணுவ மோதலைக் கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஜேர்மன் அரசாங்கமானது இராணுவ மறுஆயுதமாகலின் ஒரு கிறுக்குத்தனமான வேலைத்திட்டத்தைக் கொண்டு இந்த அபிவிருத்திக்கு பதிலிறுப்பு செய்திருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பாக நாட்டின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மும்மடங்காக்குவதற்கு மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. சமூக நல உதவித் திட்டங்களது அத்தனை பிரிவுகளிலும் பாரிய வெட்டுகளைச் செய்கின்ற ஒரு அதிரடியான சேமிப்புத் திட்டத்தினை திணிப்பதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகக் கூடியதாகும்.

இரண்டாம் உலகப் போரையொட்டிய சமயத்தில் கண்டவாறாக, இந்த போர்க் கொள்கையானது ஒரு போலிஸ் அரசு மற்றும் சர்வாதிகார வழிமுறைகள் ஸ்தாபிக்கப்படுவதன் மூலமாக மட்டுமே அமலாக்கப்பட முடியும்.

இன்று போருக்குத் தப்பி வரும் அகதிகள் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாளை போரை எதிர்ப்பவர்களும் அரசியல் எதிரிகளும் தங்களை அந்நிலையில் காண்பார்கள். ஐரோப்பாவில் தடுப்பு முகாம்கள் திரும்புவது என்பது ஒரு எச்சரிக்கையாகும். அகதிகளைப் பாதுகாப்பதை, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக ஆக்குவது எத்தனை அவசரமான பணி என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.