ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump administration escalates campaign of fear and terror against immigrants

ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராய் அச்சம் மற்றும் திகிலூட்டல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறது

By Patrick Martin
6 March 2017

ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகப் பிரச்சாரத்தின் இன்னொரு வாரமானது இன்னுமொரு சுற்று அட்டூழியமான நிகழ்வுகளை கொண்டுவந்திருக்கிறது, இவற்றில் நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் அவர்களின் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர் அல்லது திருப்பியனுப்பப்பட்டனர்.

திகிலூட்டல் நிகழ்வுகளின் இந்த நீண்ட வரிசையானது தேசிய ஊடகங்களாலும் ஜனநாயகக் கட்சியாலும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாய் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது, வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அரசுக்குள் நடக்கின்ற ஒரு ஆவேசமான யுத்தத்தில் அவை கவனத்தைக் குவித்திருக்கின்றன. அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளான விமர்சனப் பொருளாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நிர்வாகம் நடத்தும் அரக்கத்தனமான ஒடுக்குமுறை இருக்கவில்லை, மாறாக ரஷ்யாவுடனான ட்ரம்ப்பின் உறவுகள் தான் இருக்கின்றன.

செவ்வாய்கிழமையன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் Romulo Avelica-Gonzalez தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும் சமயத்தில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறையால் பிடிக்கப்பட்டார். இரண்டு கார் முழுக்க வந்திருந்த ICE முகவர்கள் 48 வயதான Avelica ஓட்டி வந்த காரை மறித்து நிறுத்தி அவரது மனைவி மற்றும் 13 வயது மகள் முன்பாக அவரைக் கைது செய்தனர். அமெரிக்கக் குடியுரிமை கொண்ட நான்கு குழந்தைகளுக்கு தந்தையான Avelica தனது 21 வயது முதல் தெற்கு கரோலினாவில் வாழ்ந்து வந்திருந்தார், அந்த சமயத்தில் உள்ளூர் உணவகங்களில் வாரத்திற்கு 60 முதல் 70 மணி நேரங்கள் தொடர்ந்து வேலைசெய்து வந்திருந்தார்.

அப்பட்டமானதொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஒன்றில், மிசிசிபி ஜாக்சன் நகரில், 22 வயதான Daniela Vargas, பிப்ரவரி 15 அன்று தனது தந்தையும் சகோதரனும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தித் திரும்பியபோது ICE முகவர்களால் கைதுசெய்யப்பட்டார். வர்காஸ் குடும்பம் 2001 இல் ஆர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தபோது, டானியலாவுக்கு வெறும் ஏழு வயது தான். குழந்தையாக வந்தவர் என்பதால், டானியலாவுக்கு DACA திட்டத்தின் படி திருப்பியனுப்பப்படுவதில் இருந்தான தற்காலிக விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது, ஆனாலும் அந்த விலக்கை நீட்டிக்க அவர் 495 டாலர் பணத்தைப் புரட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த விலக்கு முடிந்து போய் விட்டிருந்தது. அவர் லூசியானாவில் ICE  தடுத்துவைப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார் எனவும் அவர் விசா விலக்கு பெற்றிருந்த காலம்கடந்து தங்கியவராக பரிசீலிக்கப்பட்டு விசாரணையின்றியே ஆர்ஜென்டினாவுக்கு திருப்பியனுப்பப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

வியாழக்கிழமையன்று, அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில் Juan Carlos Fomperosa Garcia தஞ்சம் கோரும் தனது விண்ணப்பம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப் பெற்று ICE அலுவலகம் சென்றிருந்தார். அவர் 20 வருடங்களாய் அமெரிக்காவில் வாழ்ந்து வந்திருப்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற மூன்று குழந்தைகளின் தந்தை. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், ICE முகவர்கள் அவரது உடைமைகள் கொண்ட ஒரு பையை அவரது வீட்டிற்குக் கொண்டுவந்து, அவரது 23 வயது பெண் யெனிபர் சான்செஸிடம் ஒப்படைத்தனர். வெள்ளிக்கிழமை காலை, தனது பிள்ளைகளை அழைத்த Fomperosa Garcia, தான் மெக்சிகோவுக்கு திருப்பியனுப்பப்பட்டு விட்டிருந்ததாகவும், சான்செஸ் தனது 17 வயது சகோதரன் மற்றும் 14 வயது சகோதரிக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுபோல இன்னும் பல நிகழ்வுகள், இவற்றில் பலவும் உள்ளூர் செய்திகளில் இடம்பெறவும் கூட இல்லை.

அச்சம் மற்றும் திகிலின் ஒரு சூழல், நாடெங்கிலுமான புலம்பெயர்ந்த மக்களது சமூகத்தை பற்றியிருக்கிறது. இந்த நடவடிக்கைகளது கொடூரத்தனம் என்பது தற்செயலோ அல்லது எல்லைமீறலோ அல்ல, மாறாக ஜனவரி 25 அன்று ஜனாதிபதி ட்ரம்ப்பால் கட்டவிழ்த்து விடப்பட்ட புலம்பெயர்ந்தோர்-விரோத வேலைத்திட்டத்தின் ஒரு திட்டமிட்ட மற்றும் நோக்கத்துடனான அம்சமே ஆகும். குடியேற்றப் பிரிவின் முகவர்களை “தளைகளில் இருந்து விடுவிப்பது” -வேறுவார்த்தைகளில் சொல்வதானால், சுற்றிவளைக்கப்படவிருக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை நடத்தும் விதம் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் எந்த இடைஞ்சல்களையும் அகற்றுவது- தான் அந்த உத்தரவுகளின் நோக்கம் என வெள்ளை மாளிகையின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.

ICE மற்றும் எல்லைப் பாதுகாப்பு சேவை இரண்டையும் கொண்டதாய் இருக்கின்ற தாயகப் பாதுகாப்புத் துறை, சட்டவிரோதமாக எல்லை கடந்து வந்து கைதாகக் கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளை முறைப்படி பிரித்து அடைக்கின்ற ஒரு ஆலோசனையை பரிசீலித்துக் கொண்டிருப்பதாக Reuters வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியில் இந்த யதார்த்தம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. DHS அதிகாரிகள் தஞ்சத் தொடர்பு அதிகாரிகளிடம், “அமெரிக்காவிற்குள் வரும் பெண்கள், குழந்தைகளுடன் சேர்ந்து வாழவிடாமல் பார்த்துக் கொள்வதே” அவர்கள் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அம்மாக்கள் காலவரையின்றி சிறையிலடைக்கப்பட்டு, அவர்களது பிள்ளைகள் சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அது அவர்களை அரசு ஏற்பாடு செய்யும் ஒரு பாதுகாவலர் உள்ளிட “குறைந்த கட்டுப்பாடுகளுடனான அமைவு”க்குள் வைப்பதற்கு இந்த புதிய கொள்கையானது கூட்டரசாங்கத்தின் முகவர்களை அனுமதிக்கும். திருப்பியனுப்பப்படுவதன் போது அல்லது அதற்குப் பின்னர் அம்மாக்கள் மறுபடியும் பிள்ளைகளுடன் சேர முடியுமா எப்படி சேரமுடியும் என்பதெல்லாம் தெளிவில்லாமல் இருக்கிறது.

இந்த உத்தரவுக்கு இரண்டு பிரதான நோக்கங்கள் தான் இருக்க முடியும்: பிள்ளைகளை நீண்டகாலம் தடுத்து வைப்பதை தடைசெய்யும் விதத்தில் சென்ற ஜூலையில் வெளியாகியிருந்த ஒரு நீதிமன்ற உத்தரவின் -பிள்ளைகளுடனான அநேக அம்மாக்களை தடுத்துவைப்பு மையங்களில் இருந்து விடுவிக்க ICE ஐ இது நிர்ப்பந்தம் செய்திருக்கிறது- பாதிப்பைக் குறைப்பது; மத்திய அமெரிக்காவில் இருந்து இனிவரக் கூடிய அகதிகளுக்கு -இங்கிருந்து தான் அநேகக் குடும்பங்கள் வருகின்றன- மிரட்சியூட்டுவது. அமெரிக்காவுக்குள் வரும் பெண்கள் அவர்கள் பாதுகாக்க முயலும் குழந்தைகளை தொலைத்து விடுவார்கள் என்ற செய்தி அந்த நாடுகளுக்குப் பரவும்.

ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதலை பெருமளவில் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களால், குறிப்பாக ஒபாமா நிர்வாகத்தால், உருவாக்கப்பட்ட ஒடுக்குமுறையின் அசுரத்தனமான எந்திரத்தை அவர் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்.

புலம்பெயர்ந்தவர்கள் தவறாக நடத்தப்படுவது தொடர்வதானது கொலராடோ மாநிலத்தின் டென்வர் புறநகர்ப் பகுதியில் உள்ள Aurora என்ற இடத்தில், ICE இன் ஒரு முக்கிய சிறை ஒப்பந்ததாரரான GEO குழுமத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒரு வழக்குமனுவில் எடுத்துக்காட்டப்படுவதாய் இருக்கிறது. கூட்டரசாங்கத்தின் அடிமைஒழிப்புச் சட்டங்களை மீறுகின்ற வகையில் பத்தாயிரக்கணக்கானோர் நாளொன்றுக்கு 1 டாலர் என்கிற வீதத்திலோ அல்லது எந்த ஊதியமும் அளிக்கப்படாமலோ வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக இந்த வழக்கு குற்றம்சாட்டுகிறது. வளாகத்தில் உணவு சேவை, துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட நிர்ப்பந்த வேலைகளின் காரணத்தால், ஒரேயொரு துப்புரவுப் பணியாளரைக் கொண்டு இந்த சிறையை GEO நடத்தி பெரும் லாபங்களைக் குவிக்க இயலுகிறது. பல சந்தர்ப்பங்களில், மறுத்தால் தனிமைச் சிறையில் தள்ளப்படும் அச்சுறுத்தலைக் கொண்டு மிரட்டப்பட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு “தன்னார்வலராக” நிர்ப்பந்திக்கப்படுவதாக அந்த வழக்கு குற்றம்சாட்டுகிறது.

கூட்டரசாங்கம் பாரிய தடுப்பு முகாம்களுக்கு நிகரானவற்றை அமைத்திருக்கிறது. கூட்டரசாங்கத்தின் மற்ற பிற சட்ட அமலாக்க முகமைகள் அனைத்திற்கும் சேர்த்து செலவிடுவதை விடவும் அதிகமாக, வருடத்திற்கு 19 பில்லியன் டாலருக்கும் அதிகமாய், ICE மற்றும் எல்லை ரோந்தில் செலவிடுகிறது. குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் வருடத்திற்கு 400,000க்கும் அதிகமானோர் என்ற எண்ணிக்கையானது, கூட்டரசாங்கத்தின் சிறைத் துறை ஒட்டுமொத்த கூட்டரசாங்கக் குற்றங்களுக்காய் கைது செய்து அடைத்து வைத்திருக்கும் மொத்த கைதிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமானதாகும். ஏற்கனவே ஒரு சிறிய இராணுவப்படை போல இருப்பதில் மேலும் 10,000 ICE அதிகாரிகளையும் 5,000 எல்லை ரோந்து முகவர்களையும் சேர்ப்பதற்கு ட்ரம்ப் அறிவுறுத்துகிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ஏவப்படும் போலிஸ்-அரசு வழிமுறைகளானவை, ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கென ட்ரம்ப் நிர்வாகமும், அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டும் தயாரித்து வைத்திருப்பதன் ஒரு முழுவீச்சிலான ஒத்திகையே ஆகும். புலம்பெயர்ந்தவர்கள் மீதான அட்டூழியமான நடத்தையானது, தொழிலாளர்கள் -சொந்த நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள்- தங்களது வேலைகளையும், வாழ்க்கைத் தரங்களையும் மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்து வரும்காலத்தில் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறையின் பரந்த எந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு தயாரிப்பே ஆகும்.

அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கம், ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத அட்டூழியங்களை —ஜனநாயகக் கட்சி இதில் உதவி செய்கிறது உடந்தையாக இருக்கிறது— எதிர்த்து நின்று, உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய நாட்டில் முழுக் குடியுரிமைகளுடனும் கைது, திருப்பியனுப்பப்படுவது அல்லது ஒடுக்குமுறையின் அச்சமின்றி வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் கொண்டுள்ள உரிமையை உறுதியாக தாங்கிப் பிடிக்க வேண்டும்.