ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India becomes “frontline” state in US war plans against China

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்களில் இந்தியா “முன்நிலை” அரசாக ஆகிறது

By Deepal Jayasekera and Keith Jones
7 March 2017

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர்த் தயாரிப்புகளின் மையமாக இருக்கும் அமெரிக்க ஏழாவது கப்பற்படை பிரிவு போர்க்கப்பலுக்கு ஒரு முக்கியமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையமாக இந்தியா ஆகவிருக்கிறது.

ஏழாவது கப்பற்படை பிரிவை சேர்ந்த போர்க்கப்பல்கள், ரோந்து மற்றும் சேவை வாகனங்களை பராமரிப்பதற்கு, குஜராத்தை சேர்ந்த ஒரு கட்டுமானத் தள நிறுவனத்திற்கு, அடுத்த ஐந்து ஆண்டுகாலத்திற்கான 1.5 பில்லியன் டாலர் மதிப்புடையதாகக் கூறப்படும் ஒப்பந்தம் ஒன்றை பென்டகன் சென்ற மாதத்தில் வழங்கியது.

அமெரிக்க இராணுவம் தனது போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பல் மற்றும் பழுதுபார்ப்பு போன்ற வழக்கமான உபயோகங்களுக்கு இந்தியாவின் இராணுவத் தளங்களையும் துறைமுகங்களையும் திறந்து விடுவதற்கு சென்ற ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு உயிர்கொடுக்கும் நோக்கத்துடனான ஒரு மூலோபாய நடவடிக்கையாக இது அமைந்திருந்தது.

ஏழாவது கப்பற்படை பிரிவுக்கான மையமாக இந்தியா மாறியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீனாவுக்கு எதிரான இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் இந்தியா ஒருங்கிணைக்கப்படுவதில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது.

ஏழாவது கப்பற்படை பிரிவானது சீனா மீது போர் நடத்தும் அமெரிக்க திட்டங்களுக்கு மையமானதாய் இருக்கிறது. மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் நீண்ட கிழக்கு பகுதிகள் முதல் இந்திய-பாக்கிஸ்தான் எல்லை வரையிலும் இது பொறுப்புக் கொண்டிருக்கிறது. ”வான்-கடல் யுத்த” திட்டம் என்று பென்டகன் அழைக்கும் ஒன்றின் படி, ஏழாவது கப்பற்படை பிரிவானது மலாக்கா நீரிணை மற்றும் மற்ற இந்திய பெருங்கடல்/தென் சீனக் கடல் சந்திப்புமுனைகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதன் மூலமாக சீனாவின் மீது பொருளாதார முற்றுகையை திணிப்பதற்கும் சீனாவின் இராணுவ நிலைகள், நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பை பாரிய அளவில் தகர்த்தெறிவதற்கும் அமெரிக்க மூலோபாயம் கோருகிறது.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகவே, தனது வேட்டையாடும் திட்டநிரலுக்கு தக்கவாறு புது டெல்லியை ஈர்ப்பதற்கும் சீனாவுக்கான ஒரு “எதிர் பலமாக” இந்தியாவை கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா இடைவிடாது வேலைசெய்து வந்திருக்கிறது. இந்தியாவின் அளவு, அதன் மிகப்பெரும் அணு-ஆயுத இராணுவ மற்றும் மூலோபாய அமைவிடம் ஆகியவற்றின் காரணத்தால் அதனை ஒரு “புவியரசியல் பரிசு” என்றே பென்டகனும் அமெரிக்க இராணுவ-உளவு சிந்தனைக் குழாம்களும் வெகுகாலமாக பார்த்து வந்திருக்கின்றன. இந்தியா, சீனாவின் “மென்மையான தெற்கு அடிவயிற்றுப்பகுதி”யாக செயலாற்ற முடியும், அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் அவ்வாறு கணக்கிடுகின்றனர். சீனாவின் மற்றும் உலகத்தின் மிக முக்கியமான வர்த்தக நீர்வழிப்பாதையான இந்திய பெருங்கடலில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான மிகச்சிறந்த அனுகூலப் புள்ளியையும் இது வழங்குகிறது.

நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாஜக அரசாங்கத்தின் கீழ், இந்தியா, அமெரிக்காவுடன் தனக்கு ஏற்கனவே இருக்கக் கூடிய விரிவான இராணுவ-மூலோபாய ஒத்துழைப்பை மிகப்பெருமளவில் விரிவுபடுத்தியிருக்கிறது. அடிப்படை உடன்பாடு தவிர, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அமெரிக்காவின் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளையும் இந்தியா விரிவுபடுத்தியிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல் நடமாட்டங்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை பென்டகனும் இந்திய இராணுவமும் பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்வதாக, ஜனவரியில், அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான அட்மிரல் ஹாரி ஹாரிஸ் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்திய-அமெரிக்கக் கூட்டணி ஆசிய மற்றும் உலக மக்களுக்கு எத்தகைய மரண அச்சுறுத்தலாகத் திகழ்கிறது என்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் செயலால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அது ஒபாமா நிர்வாகத்தின் சீன-விரோத “ஆசியாவை நோக்கிய முன்நிலை” பலவீனமாகவும் பயனற்றதாகவும் இருப்பதாகக் கூறி நிராகரித்தது, சீனாவை “நாணயமதிப்பைக் கைப்புரட்டு” செய்வதாகக் கூறி கண்டனம் செய்திருப்பதோடு, தென் சீனக் கடலில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய தீவுத்திட்டுகளுக்கு சீனாவுக்கு அனுமதி மறுப்பதற்கும் —இது போர் அறிவிப்புக்கு நிகரான ஒரு செயல்பாடாய் இருக்கும்— அச்சுறுத்தியது.

ட்ரம்ப், ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை பல முனைகளிலும் விமர்சனம் செய்திருக்கிறார். ஆயினும் இந்தியா விவகாரம் என்று வருகையில், இந்திய-அமெரிக்க “பாதுகாப்பு ஒத்துழைப்பில்” சமீபகாலத்தில் நடந்திருந்த “மிகப்பெரு முன்னேற்ற”த்தின் மீது “தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கு” ட்ரம்ப் நிர்வாகம் உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் “Mad Dog” மாட்டிஸ் சூளுரைத்திருக்கிறார்.

சீனாவின் “எழுச்சி”யை முறியடிப்பதற்கும் யூரேசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்குமான அமெரிக்காவின் முனைப்பில் ஒரு “முன்முனை” அரசாக எந்த அளவுக்கு இந்தியா உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது இந்தியாவின் தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் இந்திய அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் அத்தனையும் உடந்தையாக செயல்படுகின்றன. இந்த முனைப்பானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலால் தடுத்து நிறுத்தப்படாத பட்சத்தில், உலகின் அணுவல்லமை பெற்ற பெரும் சக்திகளுக்கு இடையில் தவிர்க்கவியலாது போருக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.

அமெரிக்க ஏழாவது கப்பற்படை பிரிவுக்கான மையமாக இந்தியா உருவாகியிருப்பது எத்தனை தலைகீழ் மாற்றமாகி இருக்கிறது என்றால், பனிப்போரின் சமயத்தில் அமெரிக்கா இந்தியாவை வம்பிழுப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் அதைப் பயன்படுத்தியது என்பதை இந்திய ஊடகச் செய்திகளும் கூட குறிப்பிடத் தவற முடியவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியது: “பங்களாதேஷ் விடுதலைப் போரின் சமயத்தில் இந்தியாவுக்கு நெருக்குதலளிப்பதற்காக... 1971 டிசம்பரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனால் வங்காள விரிகுடாவுக்கு அனுப்பப்பட்டதான அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பிரிவு போர்க்கப்பல்கள், நகைமுரணான வகையில், இப்போது ஒரு இந்திய நிறுவனத்தாலேயே பராமரிக்கப்பட இருக்கின்றன.”

ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருந்த மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளின் காரணத்தால், பனிப்போர் காலத்தின் பெரும்பகுதியில் அமெரிக்கா இந்தியாவை ஒரு எதிரியாகவே நடத்திக் கொண்டிருந்தது.

சுதந்திரமடைந்த புதிதில் இந்தியா அமெரிக்காவுடன் நல்லுறவுகளை ஸ்தாபிக்கவே பெரும் ஆர்வம் கொண்டிருந்தது. ஆனால் அதன் வெளியுறவுக் கொள்கையை சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அமெரிக்காவின் மூலோபாயத் தாக்குதலுக்கு கீழ்ப்படியச் செய்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த முயற்சிகளில் புதுடெல்லி ஸ்தம்பித்து நின்று விட்டது.

துணைக்கண்டத்தின் வகுப்புவாதப் பிரிவினை மூலமாக உருவாக்கப்பட்டு அதேசமயத்தில் சுதந்திரம் பெற்றிருந்த போட்டி அரசான பாகிஸ்தானை, தனது பனிப்போர் கூட்டணி அமைப்புக்கான அச்சாணியாக சேவை செய்ய அமர்த்திக் கொண்டதன் மூலம் அமெரிக்கா பதிலிறுப்பு செய்தது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதமளித்த நிலையில், ஆயுதக் கொள்முதல்களுக்கும் மூலோபாய ஆதரவுக்கும் இந்தியா சோவியத் ஒன்றியத்தை நோக்கித் திரும்பியது. அணி-சேரா இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒன்றாகவும் பிரதான தலைவர்களில் ஒன்றாகவும் அது ஆனது.

இறக்குமதி பிரதியிடல் மற்றும் அரசு உடைமைத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சர்வதேச மூலதனத்திற்கு நிகராக இந்திய முதலாளித்துவத்தின் நிலையை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமாக இந்தியா மீது அமெரிக்கா செலுத்திய பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்வதிலும் சோவியத் ஒன்றியம் புதுடெல்லிக்கு உதவியது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்கு, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியை (CPI) பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதனை முதலாளித்துவ அரசியலுக்குள் ஒருங்கிணைப்பதில் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சியின் ஆதரவு உதவ முடியும் என்பதையும் ஜவஹர்லால் நேருவும் அவரது காங்கிரஸ் கட்சி அரசாங்கமும் நன்கறிந்து வைத்திருந்தனர்.

இந்தியாவின் அணி-சேரா கொள்கைக்கும் ஏகாதிபத்தியத்திற்கான உண்மையான எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்திய முதலாளித்துவம் தனது வர்க்க ஆட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்காக கையிலெடுத்த ஒரு மூலோபாயமாக அது இருந்தது. அதன் அரசு-தலைமையிலான முதலாளித்துவ அபிவிருத்தி மூலோபாயமானது, உலகமயமாக்கத்தாலும் 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டதாலும் அதன் கால் வாரப்பட்டபோது, தனது ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சை துரிதகதியில் ஓரங்கட்டி விட்டு அமெரிக்காவை நோக்கிய ஒரு மிக நேரடியான மற்றும் அடிமைத்தனமான உறவை ஏற்படுத்தத் தொடங்கியது.

இந்த மாற்றம், நேருவின் காங்கிரஸ் கட்சி வாரிசுகளால் முன்னிலை கொடுக்கப்பட்டது. மோடியின் கீழ் அமெரிக்காவின் சீன-விரோதத் தாக்குதலில் ஒரு மிக உண்மையான “முன்னணி அரசாக” இந்தியா உருமாற்றப்படுவதற்கான முன்னேற்பாடாக சேவை செய்த “உலகளாவிய இந்திய-அமெரிக்க மூலோபாயக் கூட்டினை” உருவாக்கித் தந்ததே காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமாகும்.

ஆயினும், அதன் ஸ்ராலினிச உடன்பிறப்புக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் அவற்றின் இடது முன்னணி ஆகியவை தொடர்ந்தும் “அணி-சேராமை”யை “ஏகாதிபத்திய-எதிர்ப்பு” என விளம்பரம் செய்து வருவதோடு உலக அரசியலில் இந்திய முதலாளித்துவம் ஒரு “முற்போக்கான” பாத்திரத்தை ஆற்ற முடியும் என்பதாய் தொடர்ந்தும் கூறி வருகின்றன.

இந்தியா அமெரிக்காவுடனான அதன் மூலோபாய உறவுகளைக் குறைத்துக் கொண்டு ”பல்-துருவத்தன்மை”யை —அதாவது உலக விவகாரங்களை நெறிப்படுத்துவதில் மற்ற ஏகாதிபத்திய உயரடுக்குகளுக்கும், இந்திய முதலாளித்துவத்திற்கும், மற்றும் இப்போது ரஷ்யா மற்றும் சீனாவில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் வெகுசிலவர் அணிக்கும் அதிகமான பாத்திரத்தை அளிப்பது— அறிவுறுத்துவதன் மூலமாக அமெரிக்காவின் “ஒருபட்சத்தன்மை”யை எதிர்க்குமானால் ஏகாதிபத்திய உலக ஒழுங்கு தணிக்கப்பட்டு விட முடியும் என்றும் இந்திய முதலாளித்துவத்தின் நலன்கள் மிகச்சிறந்த வகையில் முன்னெடுக்கப்பட முடியும் என்றும் ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்தும் கூறிவருகின்றனர்.

இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாசைகளை ஸ்ராலினிஸ்டுகள் பகிரங்கமாக ஆதரிக்கிறார்கள் என்பதை இந்தியாவின் இராணுவ மற்றும் அணுஆயுத வல்லமையை விரிவுபடுத்துவதற்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மோடி அமெரிக்காவை தழுவிக் கொள்வதை எதிர்ப்பதாக அவர்கள் கூறும் அனைத்தையும் பொறுத்தவரை, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் கூட்டணியானது தெற்காசியாவின் பிராந்திய மேலாதிக்க சக்தியாக அது தன்னை முன்தள்ளுவதற்கு புதுடெல்லிக்கு எவ்வாறு துணிச்சலளித்துக் கொண்டிருக்கிறது என்பது குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பதற்கு அவர்கள் தவறியுள்ளனர்.

இந்தியா சென்ற செப்டம்பரில் பாகிஸ்தானுக்குள்ளாக சட்டவிரோதமான, எல்லை தாண்டிய இராணுவத் தாக்குதல்கள் —இவை தெற்காசியாவின் அணுஆயுத வல்லமை கொண்ட போட்டி நாடுகளை 2003க்குப் பிந்தைய அவற்றின் தீவிர போர் நெருக்கடிக்குள் தள்ளின— நடத்தியதை ஸ்ராலினிஸ்டுகள் பாராட்டினர்.

ஒரு மிகப்பெரும் இந்திய தாக்குதலின் சமயத்தில் தந்திரோபாயரீதியான அணுஆயுதங்களை பயன்படுத்தப் போவதாய் அச்சுறுத்துவதன் மூலமும் சீனாவுடனான அதன் தொலைநோக்கு மூலோபாயக் கூட்டை ஆழப்படுத்துவதன் மூலமும் பாகிஸ்தானின் பிற்போக்கான உயரடுக்கு இந்தியாவின் பெருகிச் செல்லும் அச்சுறுத்தலான நிலைப்பாட்டிற்கு பதிலிறுப்பு செய்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பற்ற வகையில் சீனாவுக்கு எதிரான தனது தாக்குதலுக்கு இந்தியாவை பட்டைதீட்டுவதானது தெற்காசியாவை ஒரு புவியரசியல் வெடிக்கிடங்காக உருமாற்றியிருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் மோதல்களும் சீன-இந்திய மோதல்களும் அமெரிக்க-சீன மோதலுடன் பின்னிப் பிணைந்ததாக ஆகி, பிராந்தியத்தின் மற்றும் உலகத்தின் மக்களுக்கு மிகப்பேரழிவுகரமான தாக்கங்களைக் கொண்ட ஒரு பாரிய புதிய வெடிப்புமிக்க வெடிதிறனை ஒவ்வொரு முனையிலும் கூட்டிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறாக ஏகாதிபத்திய போருக்கும் அதன் மூலமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான தொழிலாள-வர்க்கத்தின் தலைமையிலான ஒரு உலகளாவிய இயக்கத்தின் அபிவிருத்தியில் தெற்காசியா ஒரு அச்சாணி போன்ற முனையாக இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் துணைக்கண்டமெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களை சீன, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்தக் கூடிய அத்தகையதொரு இயக்கமானது, ஸ்ராலினிச CPM மற்றும் CPI ஆல் ஆற்றப்படும் குற்றவியல் பாத்திரத்தை தாட்சண்யமற்று அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே எழுந்து வரும்.