ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

IMF head to visit Sri Lanka to demand more austerity measures

சர்வதேச நாணய நிதியத் தலைவர் மேலும் சிக்கன நடவடிக்கைகளை கோருவதற்கு இலங்கைக்கு வருகிறார்

By K. Ratnayake 
2 March 2017

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட், நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளில் எஞ்சியுள்ளதை செயல்படுத்துவதை வலியுறுத்துவதற்காக ஞாயிறன்று இலங்கை வருவார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் இந்த முதலாவது விஜயத்தின் போது, நிபந்தனைகளை விதிப்பதற்காக கொழும்பு அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி பிரச்சினைகளை அவர் பயன்படுத்திக்கொள்வார்.

"அந்நிய செலாவணி நெருக்கடி ஒன்றைத் தடுப்பதற்காக," சர்வதேச நாணய நிதியமானது ஆறு தவணைகளில் செலுத்துவதற்காக கடந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் கொடுத்தது. இதற்கு குறித்த இலக்குகளை அரசாங்கம் அடைய வேண்டும் என்பது நிபந்தனையாகும். அரசாங்கம் 2020ல் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை, 2015ல் இருந்து பாதியாக, அதாவது 3.5 வீதமாக குறைப்பதற்கு உடன்பட்டது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது உட்பட மறுசீரமைப்பது, மானியங்களை வெட்டுவது மற்றும் வரியை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கு எட்டப்பட வேண்டும்.

2016 முழுவதும், நாணய நிதியம் 325,2 மில்லியன் டாலர் கடனை இரண்டு தவணைகளில் வழங்கியது. அரசாங்கம் பெறுமதி சேர் வரியை (value added tax - VAT) 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை அதிகரித்தது, அத்தியாவசியப் பொருட்களின் விலையை வானளாவ உயர்த்தியதோடு கல்விக்கான ஒதுக்கீட்டை சுமார் 46 சதவீதத்தாலும் சுகாதாரத்துக்கான செலவை 8 சதவீத அளவிலும் குறைத்தது.

எகோனமி நெக்ஸ்ட் செய்தியின் படி, அரசாங்கம் டிசம்பரில் நிறைவேற்ற வேண்டிய "பிரதான இலக்குகளை தவறவிட்டுவிட்டது" என்று சர்வதேச நாணய நிதியம் கூறிய பின்னரே லகார்ட் வருகின்றார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, விமான நிலைய மற்றும் விமான சேவைகள், மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுமாக அரசுக்கு சொந்தமான ஆறு பிரதான நிறுவனங்களை மறுகட்டமைப்பு செய்வதும் இந்த “இலக்குகளில்” அடங்கும். செலவின மீட்புக்கு மேலாக சில்லறை விலையை உயர்த்தி அவற்றின் கடன்களுக்கு நிதியூட்டுவதற்காக, பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையும் தானியங்கி எரிபொருள் மற்றும் மின்சார விலை பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

லகார்ட்டின் தலையீட்டை தயார் செய்வற்காக, சிரேஷ்ட அலுவலர் டாட் ஸ்னைடர் தலைமையிலான ஒரு சர்வதேச நாணய நிதிய குழு தற்சமயம் கொழும்பில் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. "அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் இயக்கத்தை எப்படி மேம்படுத்துவது" என அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் திறைசேரி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியதாக டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு நிதி அமைச்சின் செயலாளர் R.H.S. சமரதுங்க கூறினார். சமரதுங்க கூறியதாவது: "உற்பத்தி நடவடிக்கைகளின் மட்டத்தை குறைந்த பட்சம் இலாப நட்டமற்ற நிலைக்கு கொண்டுவருவது அவசியமாகும்.”

கொழும்பு ஹில்டன் ஹோட்டல், லங்கா ஹொஸ்பிடல்ஸ், ஹயாத் ஹோட்டல் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் போன்ற "மூலோபாயமற்ற" சொத்துக்களை விற்பதும் கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களில் அடங்கியிருந்தன. அவற்றை விற்பதன் மூலம் 1.5 பில்லியன் டாலர்களை அரசாங்கம் சம்பாதிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

தானியங்கி விலையிடல் சூத்திரங்கள் மற்றும் “உற்பத்தியில் இலாப நட்டமற்ற நிலையும்" மின்சாரம், எரிபொருள் மற்றும் தண்ணீர் கட்டணங்களில் பெரும் உயர்வையும் தொழில் வெட்டுக்களையும் அர்த்தப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அரசாங்கம் தண்ணீர் கட்டணத்தை 300 சதவீதம் உயர்த்தும் திட்டத்தை தயார் செய்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க-சார்பு அரசாங்கம், இத்தகைய நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுவதை எதிர்க்கவில்லை. வெகுஜன எதிர்ப்பில் இருந்து மீளும் முயற்சியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அரசாங்க அமைச்சர்களுக்கு ஒரு கருத்தரங்கை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் மத்திய வங்கி அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மற்றும் கடன் தொடர்புடைய சேவைகள் பற்றிய பிரச்சினைகளையிட்டு விரிவான விளக்கங்களை வழங்கியதாக தெரியவந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் உடனடியாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை தூண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான கவலையாகும். அரசாங்கம் ஏற்கனவே வாழ்க்கை நிலைமை சீரழிவுக்கு எதிராக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் போராட்டங்களையும் கல்வி தனியார்மயத்துக்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்ப்பு அணி, மக்களின் கோபத்தை சுரண்டிக்கொள்ளும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. இராஜபக்ஷ, தனியார்மயமாக்குதலை எதிர்ப்பதாக கூறும், தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு மையம் என்ற மோசடியான பெயரில் ஒரு அமைப்பை கடந்த வாரம் உருவாக்கியுள்ளார்.

எனினும், 2006ல் இருந்து 2014 வரை அதிகாரத்தில் இருந்த இராஜபக்ஷ அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் சுமைகளை திணிக்கும் பொருட்டு ஊதிய முடக்கம், வேலை இன்மை, வாழ்க்கை நிலைமைகள் வெட்டு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களாலும் பரவலாக மதிப்பிழந்து போயிருந்தது. புலிகளின் தோல்வியை அடுத்து, 2008-2009 நிதி நெருக்கடி சர்வதேச பின்னடைவை தூண்டிய நிலையில், இராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதற்கும் இதேபோன்ற சிக்கன நடவடிக்கைகள் அவசியமாகின.

கொழும்பின் அரசியல் நெருக்கடியில் அக்கறைகொள்ளாமல், லகார்ட் கடுமையான வெட்டுக்களைக் கோருவார். சர்வதேச நாணய நிதியமானது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் சேர்ந்து, இதேபோன்ற நடவடிக்கைகளை திணித்து, கிரேக்கத்தில் சமூகப் பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த மாதம், கிரேக்கத்தில் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்திய லகார்ட், சர்வதேச நாணய நிதியமானது "ஈவிரக்கமற்று உண்மையை சொல்லும்" அமைப்பு என்று கூறினார்.

இது நிதி மூலதனத்தின் சர்வாதிகாரமே அன்றி வேறில்லை. கிரேக்கத்தில் போலவே, சர்வதேச நாணய நிதியம் முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் விலை கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகின்றது என்பதே "உண்மை."

கிரேக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதாக வாக்குறுதியளித்தே போலி இடது குழுக்களின் உதவியுடன் சிரிசா அரசாங்கம் 2015ல் பதவிக்கு வந்தது வந்தது. அப்போதிருந்தே அது சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருவதோடு தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கி வருகிறது.

இலங்கை உலக முதலாளித்துவ சரிவின் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது 2014ல் 8.3 பில்லியன் டாலர் மற்றும் 2015ல் 8.4 பில்லியன் டாலர் என்ற பற்றாக்குறையை கடந்து, சென்ற ஆண்டு நிலவிய 9 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒரு புதிய உச்சத்தை அடையக் கூடும். 2015ல் வெளிநாட்டு நேரடி முதலீடு, 600 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. 2016ல் 300 மில்லியன் டாலர்களாக மேலும் மோசமடைந்துள்ளது. உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு முந்தைய 12 மாதங்களில் அரை பில்லியன் டாலர்களால் வீழ்ச்சியடைந்து, ஜனவரி மாதம் 5.5 பில்லியன் டாலர்கள் வரை குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை கூட்டுவதாக சமிக்ஞை செய்ததற்கும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வணிகப் போர் அச்சுறுத்தல்களுக்கும் பிரதிபலிப்பாக, சமீப வாரங்களில் மூலதன வெளியேற்றம் அதிகரித்து வந்துள்ளது. உலகின் மிகப் பெரிய முதலீட்டு முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்க ஃபிராங்க்ளின் டெம்பிள்டன், இலங்கை அரசாங்கத்தின் பங்கு பத்திரங்களில் செய்திருந்த முதலீட்டில் இருந்து நிதிகளை மீட்டுவருகின்றது. அமெரிக்கா இத்தகைய பங்கு பத்திரங்களிலான முதலீட்டில் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் பிரச்சினைகள், கடன் கொடுக்க முடியா நிலைக்கு வழிவகுக்கும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கவலைகளில் ஒன்றாகும். அரசாங்கம் இந்த ஆண்டு கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்காக, கடந்த ஆண்டு தேவைப்பட்ட 1.82 பில்லியனைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு தொகையை, அதாவது 3.6 பில்லியன் டாலர்களை திரட்ட முயற்சிக்கின்றது.

லகார்ட்டின் தலையீடானது கொந்தளிப்பான சமூக மற்றும் வர்க்க போராட்டங்களுக்கு களம் அமைக்கும். கடந்த வாரம், பிரதமர் விக்கிரமசிங்க ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, அரசாங்கம் "வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது பொருளாதார வளர்ச்சிக்கான எந்த தடையும் பொறுத்துக்கொள்ளாது," என கூறினார்.

ஆசிரியர் பரிந்துரை:

இலங்கையில் வர்க்க போராட்ட அலைகள்: தொழிலாளர்கள் தமது உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும் [PDF]

[18 பெப்ரவரி 2017