ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Immigration under capitalism: Life and death along the US-Mexico border

முதலாளித்துவத்தின் கீழ் புலம்பெயர் நிலை: அமெரிக்க-மெக்சிகோ எல்லை நெடுகே வாழ்வும் சாவும்

By Eric London 
28 February 2017

அமெரிக்க அரசாங்கமானது அமெரிக்காவிலிருந்து 11 மில்லியன் ஆவணங்களில்லாத புலம்பெயர்ந்தோரை அனுப்புவதற்கான திட்டத்தை விரைவாய் முன்னோக்கி நகர்த்திக்கொண்டு வருகிறது. இது நிறைவேறுமானால், நாஜிக்கள் மில்லியன் கணக்கான யூதர்களையும் இதர வேண்டத்தகாதவர்களையும் தனி ஒதுக்கிடங்களுக்கும் கடூழிய சிறைகளுக்கும் அனுப்பிய பின்னரான இரண்டாவது பெரிய நிர்ப்பந்தப்படுத்தும் புலம்பெயர்தலாக இது இருக்கும். அதன் தெளிவான அர்த்தத்தில் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டமானது, இந்திய ஆதிவாசிகளை அவர்களின் நிலங்களிலிருந்து அகற்றல் (Cherokee Trail of Tears), அடிமைச்சட்டம், தடுப்புக்காவல் முகாமில் வைத்தல், தீவிர இடதுகள் என சந்தேகப்படுபவர்களை கைது செய்து வெளியேற்றல் (The enforcement of the Fugitive Slave Act, Japanese internment and the Palmer raids) உட்பட அமெரிக்க வரலாற்றில் மிக வெட்கக்கேடான சம்பவங்களை இது முன்கூட்டிக் காட்டுகிறது.


மெக்சிக்கன் குழந்தைகள் Ciudad Juarez, Chihuahua Ciudad Juarez, Chihuahua நகரங்களிலிருந்து எல் பாசோ, டெக்சாஸைப் பிரிக்கும் எல்லைப்புற வேலிகள் நெடுகே விளையாடுகின்றனர்

ட்ரம்ப்பின் புலம்பெயர்தல் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பல மில்லியன் கணக்கானோர், முதலாளித்துவத்தின் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இரு கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட கொள்கைகளது பலியாடுகள் ஆவர். புலம்பெயர்ந்தோர், தசாப்தகால நிதிய ஒட்டுண்ணித்தனம், சர்வதேச நிதிநிறுவன சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்தின் மூலம் தனது செல்வத்தை பெருக்கிக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் சமூக கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் போர்வெறிக் கூச்சல், தேசியவாதம், மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஒரு நிர்வாகத்தை எதிர்கொள்கின்றனர். அமெரிக்க நிதிய மேலாதிக்க தட்டானது சமூகங்களுக்கு குப்பையை சேர்க்கின்றனர், அதிலிருந்து தப்பிக்கும் தொழிலாள வர்க்கப் புலம்பெயர்ந்தோரை “கற்பழிப்பாளர்கள்” மற்றும் “குற்றவாளிகள்” என அவதூறுசெய்கின்றனர்.

எல் சல்வடோரிலிருந்து தனது நான்கு குழந்தைகளுள் 14 வயது நிரம்பிய மகள் காப்ரியேலா மற்றும் ஒரு வயதான மகன் எட்வின் ஜூனியர் ஆகிய இருவருடன் பயணம் செய்த பின்னர் டெக்சாஸ் தடுப்புக்காவல் முகாமில் இருந்து இரு நாட்களுக்கு முன்னர் வெளியில் விடப்பட்ட 30 வயது நிரம்பிய தாய் விக்டோரியாவுடன் உலக சோசலிச வலைத் தளம் பேசியது.


புலம்பெயர் குழந்தையால் பாலைவனத்தில் கைவிடப்பட்ட உணவுப் பொருள் திணிக்கப்பட்ட ஒரு விலங்கு பொம்மை

மூன்று வாரங்களுக்கு முன்னர், இரவுப் பொழுது விடியுமுன்னர் சிறிய சால்வடார் கிராமத்தில் விக்டோரியா, காப்ரியேலாவை எழுப்பி ஆடை அணிந்து தயாராக இருக்குமாறு கூறினார். ஒவ்வொருவரும் முக்கியமானவற்றை மற்றும் குழந்தைக்கானவற்றையும் சிறிய பை ஒன்றில் எடுத்துக் கொண்டனர். புழுதி சூழ்ந்த சாலையிலிருந்து நகரப் பேருந்து நிறுத்தம்வரை சென்றதில் அவர்களோடு சேர்ந்து கொண்ட ஒரே சப்தம் எட்வின் ஜூனியரின் குழந்தை முனகலாக இருந்தது.

விக்டோரியாவின் கணவர் எட்வின் சீனியர் ஒரு பண்ணை விவசாய தொழிலாளி ஆவார் அவர் எல் சால்வடோரில் ஒவ்வொரு மாதமும் 200 அமெரிக்க டாலர் வரையிலேயே சம்பாதிக்கிறார். முன்னர் அமெரிக்காவில் வயலில் வேலை செய்த அவர், மனிதர்களைக் கடத்துபவர்களிடம் (“coyote” கொய்யோட் எனக் கூறப்படுபவர்களிடம்) தனது மனைவியையும் இரு குழந்தைகளையும் அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக 5000 அமெரிக்க டாலர்கள் சேமிக்க வேண்டி இருந்தது. இந்த வடபகுதி பயணம் வாழ்வில் நிதிய சூதாட்டமாக இருக்கும் — விக்டோரியா மற்றும் அவரது குழந்தைகள் பிடிபட்டபொழுது, பலமாத உழைப்பின் மதிப்பை அவர்கள் இழந்துவிட்டனர்.


கலிஃபோர்னியா, நேபாவில் திராட்சைகளைப் பறிக்கும் விக்டோரியாவின் கணவரைப் போன்ற பண்ணைத் தொழிலாளர்கள்

 “நாங்கள் வசிக்கும் நகரில், ஒரு தேவாலையம் உள்ளது, அருகில் மருத்துவமனையும் உள்ளது, அது அபூர்வமாக வேலைசெய்யும்.” என அவர் தெரிவித்தார். “எனது குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு ஒரு மணி நேரம் போய்வர வேண்டும், மற்றும் அவர்கள் வழியில் தொடர்ச்சியாக கும்பல்களால் அச்சுறுத்தப்படுவார்கள்.”

எல் சால்வடோரில் சிறு கடை நடத்திவரும் விக்டோரியாவின் உறவினர் அந்தக் கும்பல்களுக்கு கட்டாய பணம் (extortion) செலுத்தும்படி மிரட்டி நிர்பந்திக்கப்படுகின்றார். அக்கும்பல் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருட்கள் தயாரித்து வழங்குகின்றது மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் மெக்சிக்கோ எல்லை அருகிலுள்ள பரந்த புல்வெளிப் பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்தக் குடும்பம் பல ஆண்டுகளாக அக்கும்பலுக்கு கட்டணம் கட்டி வருகின்றனர், இனியும் அவர்களால் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். குண்டர்களால் படுகொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க இப்பெற்றோர்கள் பசியோடு செல்கின்றனர். அண்மையில் அக்கும்பலின் உறுப்பினர்கள் எட்வின் சீரியரின் தந்தையை உலோகக் குழாயால் தாக்கியே அடித்துக் கொன்றனர். விக்டோரியாவும் குழந்தைகளும் பிடிபட்டதால் அதே விதியை எதிர்கொள்ளும்படியான ஆபத்தில் எட்வின் சீனியர் இருக்கிறார்.

“எனது கணவருடைய தந்தையை கும்பலின் உறுப்பினர்கள் கொன்ற பின்னர், எங்களை கொல்லப்போவதாக அவர்கள் கூறினர். அவர்கள் எனது குழந்தைகளை கொல்லப்போவதாக எங்கள் கதவருகே ஒரு குறிப்பை விட்டுச்சென்றனர். அது திகிலூட்டும் செய்தியாகும்” விக்டோரியா அழத் தொடங்கினார். அவர் அதைப்பற்றி நினைக்கும் ஒவ்வொரு நேரமும் பதட்டமடைய தொடங்குகிறார், அவர் திரும்பி போனால், தான் நிச்சயம் கொல்லப்படுவார் என்று உறுதியாக நம்புகிறார். “போலீஸ் ஒன்றும் செய்யாது, அவர்கள் ஊழல்வாதிகள், அவர்கள்தான் அடிக்கடி அந்தக் கும்பல்களுக்கு உதவுகின்றனர்” என்றார் அவர்.

மிரட்டிப் பணம் பறிப்பது ஒரு அகதியாக அந்தஸ்து பெறுவதற்கு சட்டரீதியாக போதுமான காரணமாகாது என்று கூறி, புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தீர்ப்பளிக்கும்  நீதிபதிகள் விக்டோரியாவின் நிலையிலுள்ள சிலருக்கு பெரும்பாலும் அடைக்கலம் கொடுக்க எப்போதும் மறுப்பர்.

சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானி எலிசபெத் கென்னடியின் 2015 அறிக்கையின்படி, ஒபாமா நிர்வாகம் 2014 மற்றும் 2015 முதல் பாதியிலும் 83 பேரை பலவந்தமாக மரணத்திற்கு திருப்பி அனுப்பியது. கார்டியன் பத்திரிகை அத்தகைய ஒரு கதையை வெளியிட்டது: “அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளாக கண்காணிப்பில் வைக்கப்பட்டு, மார்ச்சில் ஜூவான் பிரான்சிஸ்கோ டயஸ் என்பவரை அவரது சொந்த நகரமான ஹோண்டுராஸில் உள்ள சொலோமாவிற்கு திருப்பி அனுப்பியது. அவர் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், ஒரு நாள் பெற்றோர்களின் இடத்தருகே இறந்து கிடந்தார்.” நிறைய பெண்கள் திருப்பி அனுப்பட்டப்பட்ட இடங்களில் அவர்கள் கற்பழிக்கப்படுகின்றனர் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.

விக்டோரியாவுக்கு வேறு வாய்ப்பில்லை, தனது குழந்தைகளைக் காப்பாற்றியாக நகருக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அவரது திட்டமானது, சுத்தம் செய்யும் பெண்ணாக பணியாற்றி, அவரது கணவரையும் மீதி இரு குழந்தைகளையும் அமெரிக்காவிற்குள் வரச்செய்வதற்கு போதுமான தொகையை சேமிக்க வேண்டும் என்பதாகும். வடபகுதிக்கான அவரது வழியில் 16 நாட்களில் அவர் 1000 மைல்களைக் கடந்து வந்தார்.


அமெரிக்காவையும் மெக்சிக்கோவையும் பிரிக்கும் சுவரும் தரிசாகிக் கிடக்கும் பாலைவனமும்

“கொய்யோட்கள், எங்களை மெக்சிக்கோ வழியாக அழைத்துச்செல்வர், சில நேரங்களில் நாங்கள் 10 அல்லது 15 பேர்கள் கொண்ட குழுவாக காலால் நடந்தே செல்ல வேண்டும், நாங்கள் சாப்பிடாமல் கிடந்த நாட்களும் உண்டு. எனது குழந்தைக்கு கூட உணவு கிடைக்காமற் போனது” என்றார் விக்டோரியா. அந்தநாளில், அந்தக் குழுபயணம் செய்தபொழுது, புல்வெளிகளில் ஓடும்பொழுது கையில் எட்வின் ஜூனியரை வைத்திருந்தார் மற்றும் மெக்சிகன் போலீசில் இருந்தும் வடக்கிற்கு புலம்பெயரும் மத்திய அமெரிக்கர்களை திருப்பி அனுப்புவதற்கு அமெரிக்காவுடன் சேர்ந்து வேலை செய்யும் எல்லைப்புற முகவர்களிடம் இருந்தும் தப்புவதற்காக சில வேளைகளில் சுரங்கப் பாதைகளில் மறைந்துகொள்ள வேண்டி இருந்தது.

ஒவ்வொரு இரவும், புலம்பெயர்வோரின் குழு கடந்துபோகும் வழியில் புல்வெளியில் அல்லது பெரும்பாலும் கும்பல்களாலும் உள்ளூர் குற்றவாளிகளாலும் பாரமரிக்கப்படும் “பாதுகாப்பு இல்லங்களில்” உறங்குவதற்கு அவர்கள் நிறுத்தப்பட்டனர். விக்டோரியா அவரது குழந்தைகளை அணைத்துக்கொண்டு, அவர்கள் பாலியல் ரீதியாக துன்பறுத்தப்படலாம் எனும் அச்சத்துடன் அங்கே தூங்கினார். விக்கடோரியாவின் குழுவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருநாள் இரவு இழுத்துச்செல்லப்பட்டு இரண்டுபேரால் கற்பழிக்கப்பட்டார். மறுநாள் காலையில் அந்தப் பெண்ணையே காணவில்லை.

அக் குழு எல்லையை அடைந்ததும், அவர்களது கொய்யோட் உட்பக்கம் திறக்க முடியாத சிறிய பெட்டி போன்றதில் படுக்குமாறு அனைவரிடமும் கூறினர். காற்றுப் போக சிறிது இடம்விட்டு அவர்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடைக்கப்பட்டனர். எட்வின் ஜூனியர் அழத்தொடங்கியதும், தாங்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டு விடுவோமோ என எல்லாப் பயணிகளிடமும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பலமணி நேரங்களுக்குப் பின்னர், கொய்யோட் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு, புலம்பெயர்ந்தோரை திறந்துவிட்டு, அவர்களை பாலைவனத்தின் குறுக்காக நடக்கவிட்டே கூட்டிச் சென்றனர்.

மேலே குறிப்பிடப்பட்ட அந்த பாலைவனத்தை கடப்பதுதான் அவர்களது பயணத்திலயே மிகவும் கஷ்டமான பகுதி என விக்டோரியா கூறினார். அது பிப்ரவரி மாதம் என்பதால் வெப்பம் குறைவு என்பதற்காக அவர் நன்றியுடன் நினைத்துக் கொண்டார், இல்லையெனில் பாலைவனத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும். குடிப்பதற்கு குறைந்த அளவே தண்ணீர் கிடைத்தது. அவர்களது கொய்யோட்டை தவறவிட்டால் அல்லது அவர்களை அவர் விட்டுவிட்டால் அவர்கள் அங்கேயே கிடந்து சாகவேண்டியதுதான் என்று அவர்கள் அனைவரும் அறிவர். அவர்கள் பாறைகள் நிறைந்த வெளிப்பகுதியில் நள்ளிரவுவரை நடந்தனர், பின்னர் அவர்கள் விளக்கு வெளிச்சங்களை பார்த்தனர்.

“நாங்கள் அமெரிக்க எல்லையைக் கடக்கும்பொழுது, கொய்யோட்கள் எங்களை மறைத்துக் கொள்வார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். மறைவாக தங்கியிருந்த புலம்பெயர்ந்தோர், எல்லப்புறக் காவல் கண்காணிப்பு செய்பவர்கள் அவர்களை பார்க்கமாட்டார்கள் என்று நம்பினர். நிறைய விளக்குகள் வெளிப்பட்டதும், விக்டோரியாவின் இதயம் பட படவென அடித்துக் கொண்டது. குழந்தைக்கு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டதோடு, காவலர்களிடமிருந்து பாலவனத்தூடாக தப்பிக்க மிகவும் தெம்பில்லாதவராய் களைத்துப் போயிருந்தார்.

சுங்கத்துறையினரும் எல்லைக் கண்காணிப்பு காவலர்களும், தனது குழந்தைகளுடன் புதரருகே மறைந்து கொண்டிருந்த விக்டோரியாவை கண்டுபிடித்துவிட்டனர். அழுக்கு படிந்த நிலையில், அந்தக் குடும்பம் புலம்பெயர்ந்தோர் நடவடிக்கை மையத்தில் பிடித்து வைக்கப்பட்டனர்.

“நாங்கள் இரவு பகலாக ஒருநாள் அங்கு அடைத்து வைக்கப்பட்டோம், அங்கு மிகக் குளிராக இருந்தது” என விக்டோரியா கூறினார். “எனது குழந்தை எந்த உணவையும் சாப்பிடவில்லை, ஏனெனில் எங்களுக்கு அளித்த அந்த உணவு அவ்வளவு மோசமானதாக இருந்தது. அவன் அழுது கொண்டே இருந்தான், அவன் எங்கும் அமைதி அடையவில்லை ஏனெனில் எங்களுக்கு படுக்கைகள் எவையும் வழங்கப்படவில்லை. நான் அவனைத் தரையில் போடவும் விருப்பிமில்லை ஏனென்றால் அந்த அளவு அழுக்காக இருந்த அந்த இடத்திலிருந்து ஏதாவது நோய் அவனை தொற்றிக் கொள்ளும் என நான் கவலைப்பட்டேன்.”


எல்லை தாண்டிய “குற்றத்திற்காக” மேற்கு டெக்சாஸில் தடுப்புக் காவல் மையத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள இரு புலம்பெயர்ந்தோர்

“அவர்களில் சில காவலர்கள் நல்லவர்களாக இருந்தனர், சிலர் எம்மை அவமானப்படுத்தினர். அவர்கள் எனது பொருட்களை வாங்கி குப்பையில் எறிந்தனர். நான் சேமித்து வைத்திருந்த கொஞ்சப் பணம் என்னிடமிருந்தது. கையில் அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த சிலரது தொலைபேசி எண்கள் கொண்ட பட்டியலும் இருந்தது. நான் விடுவிக்கப்பட்ட பொழுது, எனது குழந்தைக்கு உணவு வாங்க என்னிடம் பணம் இல்லை. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அன்பு காட்டிய தெரியாத மனிதர் ஒருவர் எனது குழந்தைக்கு உணவு வாங்கி வந்தார், எனது 14 வயது மகளுக்கும் எனக்கும் உணவுக்காக சில டாலர்களை எனக்குத் தந்தார்.”

எல்லைப் பகுதியில் புலம்பெயர்வோர் பிடிபடும் பொழுது, நீண்டநாள் சிறைவாசத்திற்கு அனுப்பப்படும் முன்னர், நடவடிக்கை மையத்தில் வைத்து புலம்பெயர்தல் துறை அதிகாரிகளால் விரைவான ஒரு சுற்றுக் கேள்விகளை அடிக்கடி எதிர்கொள்வர். புலம்பெயர்ந்தோருக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞர், புலம்பெயர்வோரின் புகலிடக் கோரிக்கை தோல்வியடைவதை உறுதிப்படுத்தும் வகையில் முகவர்கள் பெரும்பாலும் பொய்களைக் கூறுவர் என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். அவர்கள், புலம்பெயர்வோர் “வேலை தேடுதல்” அல்லது “பொருளாதாரக் காரணங்களுக்கு” வருகின்றனர் என்று கூறும்வகையில் சான்றுகளைக் கண்டுபிடித்து தருகின்றனர்.” அமெரிக்க குடிவரவு-அகல்வு சட்டத்தின் கீழ் புகலிடம் அளிப்பதற்கு இவை சட்டரீதியாக போதுமான சரியான காரணங்களல்ல, பெரும்பாலும் மதிப்பான புகலிடம் கோரல் இன்றி, அவை மறுப்பதில் போய் முடிந்துவிடும்.


எல்லைப்புற ரோந்து அதிகாரிகள் அரிசோனாவில் சுதந்திர வழியின் பகுதியை மூடினர்

எல்லைப்புற ரோந்தில் அல்லது புலம்பெயர்வோர் தடுப்பு பிரிவில் பணியாற்றும் சமூகத் தட்டானது தனித்துவமான பாசிசத் தன்மை கொண்டதாகும். நவம்பர் 2016ன் படி, புலம்பெயர்வோர் மீது சுடும் எல்லைப்புற ரோந்து செய்யும் முகவர்கள் புலம்பெயர்வோர் கொல்லப்பட்டார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் வெளியேவிடப்படும் சம்பவங்கள் பற்றி விசாரிக்க மறுஆய்வு வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. எல்லைப் புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞனும் அவனது நண்பர்களும் எல் பாசோவில் உள்ள எல்லைப்புற காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அவனது பெற்றோர்களால் மனுச்செய்யப்பட்ட வழக்கு ஒன்றை தற்போது அமெரிக்க உச்சநீதி மன்றம்  விசாரித்து வருகிறது. இதில் மேல்முறையீட்டு நீதிமன்றமானது பெற்றோர்களுக்கு வழக்குத் தொடர உரிமை இல்லை என்று கூறி இருக்கிறது.

தகவலறிந்த வட்டாரம் ஒன்று, உலக சோசலிச வலைத் தளத்திடம், தடுப்புக் காவல் மையங்களின் உள்ளே உள்ள காவலர்கள், புலம்பெயர்ந்தோரை கேலிசெய்து ட்ரம்ப் எல்லைப்புற சுவரைக் கட்டுவதற்கான செலவை அவர்கள் செலுத்துமாறு செய்யப்போகிறார் என்று அவர்களிடம் கூறும் அறிகுறிகளும் கூட தொடங்கிவிட்டன. எல்லைப்புறக் காவலர்கள் மற்றும் புலம்பெயர்தல் துறை அதிகாரிகளுள் பலர் ஹிஸ்பானிக் மரபினர் மற்றும் அவர்களின் ஸ்பானிய மொழித் திறனுக்காக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஹிஸ்பானிக் பெயரை உடைய அதிகாரிகளும் காவலர்களும் புலம்பெயர்வோரை அடிக்கடி கடுமையாக நடத்துகின்றனர் என்ற உண்மையால் அவர்கள் வியப்படைகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, ICE தடுப்புக்காவலில் உள்ளவர்களில் 65 சதவீதத்தினர் தனியார் சிறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2009ல் ஜனநாயக கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஒபாமாவால் கையெழுத்திடப்பட்ட சட்டமசோதாவானது, புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைக்கும் இலாப நோக்காளர்களின் இலாப அளவை உறுதிப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்து ICE இந்த வசதிகளை பயன்படுத்திக் கொளவதை கட்டாயமாக்குகிறது. 2003லிருந்து இவ்வகை புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையங்களில் இதுவரை 167 பேர்கள் இறந்துள்ளனர், பலர் மருத்துவ உதவியின்மையின் காரணத்தினால் இறந்துள்ளனர். இலாபநோக்குள்ள சிறை நிறுவனங்களில் மிகப்பெரிய இரு நிறுவனங்களான GEO Group  மற்றும் CoreCivi இன் பங்குகளின் விலைகள் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இருமடங்காகி உள்ளன.

ட்ரம்ப்பின் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு தடைக்கு ஆளாகியிருக்கும் மத்திய கிழக்கிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர் மீது தனது அனுதாபத்தை விக்டோரியா வெளிப்படுத்தினார். “அரசாங்கமானது மத்திய கிழக்கிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோரை உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இப்பொழுது சொல்கிறது. அவர்களுக்கு உதவியும் கூட தேவைப்படுகிறது. ட்ரம்ப் பெரும் பணம் வைத்திருக்கிறார். அவர் என்னவெல்லாம் செய்யவிரும்புகிறாரோ அதனைச் செய்வார். அவர் புலம்பெயர்ந்தோர் அல்லது ஏழைகள் பற்றி சிந்திக்கமாட்டார். அவருக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது. அவருக்கு வன்முறையின் வலிகளைப் பற்றியோ அல்லது அந்தவகையான எதுவும் தெரியாது. அவர் மக்களை பணத்தால் மட்டுமே பார்க்கிறார்.”

(தொடரும்)