ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German ICFI section adopts new name

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு புதிய பெயரை ஏற்கிறது

By Socialist Equality Party (Germany)
28 February 2017

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு 2017 பிப்ரவரி 18-19 தேதிகளில் நடைபெற்ற காங்கிரஸில் கட்சியின் பெயரை சமூக சமத்துவத்திற்கான கட்சி (Partei für Soziale Gleichheit) என்பதில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சி (Socialist Equality Party) என்பதாக மாற்றிக் கொள்வதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. காங்கிரசினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்வரும் இத்தீர்மானம், இந்த மாற்றத்திற்கான காரணங்களை எடுத்துரைக்கிறது.

1. PSG இன் இந்த காங்கிரஸ், சமூக சமத்துவத்திற்கான கட்சி (Partei für Soziale Gleichheit - PSG) என்ற தனது பெயரை சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) என்று மாற்றிக் கொள்வதற்கு தீர்மானிக்கிறது. இந்த பெயர் மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாய், ஜேர்மன் பிரிவானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரிவுகளை போன்று (Socialist Equality Party, Parti de l’égalité socialiste) ஒரேமாதிரியான பெயரை ஏற்கிறது, அதன்மூலம் உலகெங்கிலும் அதே சர்வதேசிய முன்னோக்கிற்காக போராடுகின்ற சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஐக்கியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவதாய், கட்சியின் பெயரில் இருக்கின்ற ”சோசலிச” (”Socialist") என்ற பதம் முதலாளித்துவத்தை தூக்கிவீசி ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது என்ற SGP இன் அடிப்படை இலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.

2. அக்டோபர் புரட்சிக்கு ஒரு நூறு ஆண்டுகளின் பின்னர், மறுபடியும் மனிதகுலம் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. உலக நிலைமையானது 1917 இல் வரலாற்றின் முதல் வெற்றிகரமான சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிலைமைகளை ஒத்திருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியானது, மறுபடியும் போருக்கும் உக்கிரமான வர்க்கப் போராட்டங்களுக்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்பதிலான எந்த சந்தேகத்தையும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பதவியை பெற்றமை அகற்றிவிட்டிருக்கிறது. பில்லியனர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் வலது-சாரி சித்தாந்தவாதிகளை கொண்ட ட்ரம்ப்பின் அரசாங்கம்தான் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரியானதாகும். அது அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அமெரிக்காவின் பொருளாதாரப் போட்டி நாடுகளின் மீதும் போரை அறிவித்திருக்கிறது. அதன் ”முதலில் அமெரிக்கா” கொள்கையானது, இரண்டாம் உலக போருக்கு பிந்தைய காலகட்டம் முழுமையிலும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான இராணுவ மோதல்களை தடுத்து வைத்திருந்த மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதில் உதவியிருந்த அரசியல் ஸ்தாபனங்களை உடைத்து நொருக்கியுள்ளது. பொருளாதார தேசியவாதத்தின் மூலமும் இராணுவ விரிவாக்கத்தின் மூலமும் அமெரிக்காவின் தேசிய மகத்துவத்தை மீட்கப் போவதாக கூறும் ட்ரம்ப்பின் முன்னோக்கு இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற 1930களிலான நாஜிக்களின் கொள்கையை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

3. இந்த பேரழிவுகரமான பாதைக்கு முதலாளித்துவ ஸ்தாபனங்கள் மற்றும் கட்சிகளிடம் இருந்து எந்த உண்மையான எதிர்ப்பும் எழவில்லை. அமெரிக்காவில், பதவிவிலகிச்சென்ற ஜனாதிபதியான பராக் ஒபாமாவும், ஜனநாயகக் கட்சியும் ட்ரம்ப்பிடம் பதவி ஒப்படைக்கப்படுவதற்கு வழியேற்படுத்தி கொடுத்த ஒவ்வொன்றையும் செய்திருந்தனர். அமெரிக்காவின் பரந்த இராணுவ எந்திரமானது பிரதானமாக ரஷ்யாவுக்கு எதிராக செலுத்தப்பட வேண்டுமா அல்லது சீனாவுக்கு எதிராக செலுத்தப்பட வேண்டுமா என்பதில் மட்டுமே உண்மையான வேறுபாடுகள் இருக்கின்றன. ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வர்க்கமானது, ட்ரம்ப்பின் மூர்க்கத்தனமான கொள்கைகளுக்கு பதில்-அச்சுறுத்தல்கள் மற்றும் மீள்ஆயுதபாணியாக்கம் ஆகியவற்றை கொண்டு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவர் “தாட்சண்யமின்றி” தனது சொந்த நலன்களை வரையறை செய்வதன் மூலமும் பாதுகாப்பதன் மூலமும் ட்ரம்ப்பின் அதிதேசியவாத நிலைப்பாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று புதிய ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான சிக்மார் காப்ரியல் (SPD) கோருகிறார்.

4. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்து, அதன்பின் முதலாளித்துவத்தின் கருத்தியல் பேச்சாளர்கள் “சோசலிசத்தின் தோல்வி”யை பிரகடனம் செய்து கால் நூற்றாண்டு காலத்திற்கு பின்னர், முதலாளித்துவத்தை தூக்கிவீசி ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே போருக்குள்ளும் சர்வாதிகாரத்திற்குள்ளும் மீண்டும் செல்லாமல் தவிர்க்க முடியும் என்பது தெளிவாகி விட்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான பிரிவினர் இதனை உணர்கின்றனர் என்பதுடன் நிலவும் சமூகரீதியான முட்டுச்சந்தில் இருந்து வெளிவருவதற்கு ஒரு சோசலிசப் பாதையை எதிர்நோக்கியிருக்கின்றனர். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் பேர்னி சாண்டர்ஸ் 13 மில்லியன் வாக்குகள் பெற்றதிலும், ஐரோப்பாவில் சிரிசா (Syriza) மற்றும் பொடெமோஸ் (Podemos) போன்ற போலி-இடது அரசியல் அமைப்புகளுக்கு கிட்டிய ஆதரவிலும் இது சுட்டிக்காட்டப்பட்டது. இவர்கள் அனைவருமே தங்களை சோசலிஸ்டுகளாகவும் முதலாளித்துவத்தின் எதிரிகளாகவும் அறிவித்துக் கொண்டதன் மூலமே ஆதரவைப் பெற்றனர். உண்மையில், அவர்கள் அவசியமான அனைத்துவகையிலும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளாயிருந்தார்களே அல்லாமல் வேறொன்றுமில்லை.

5. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உலகில் இன்று ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போராடுகின்ற ஒரேயொரு அரசியல் போக்காய் இருக்கிறது. அது இந்த முன்னோக்கினை பல தசாப்த காலங்களாய் சீர்திருத்தவாத, சந்தர்ப்பவாத, திருத்தல்வாத மற்றும் போலி-இடது போக்குகளுக்கு எதிராய் பாதுகாத்து அபிவிருத்தி செய்து வந்திருக்கிறது. உலக சோசலிச வலைத் தளமானது சோசலிசத்தின் நிஜமான குரலாக உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அன்றாட மார்க்சிச ஆய்வையும் ஒரு சோசலிச முன்னோக்கையும் வழங்குகிறது. இந்த நிலைமைகளின் கீழ், இத்தகைய அரைவேக்காடுகளையும் போலி-இடது ஏமாற்றுக்காரர்களையும் சோசலிசத்தின் பதாகையை சுரண்டிக் கொள்ள அனுமதிப்பதென்பது அடிப்படைத் தவறாகி விடும். கட்சியின் பெயரானது தனது சோசலிச நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்துவதாகவும் அனைத்துலகக் குழுவின் ஐக்கியத்தை ஊர்ஜிதம் செய்வதாகவும் இருந்தாக வேண்டும்.

6. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, 1997 மார்ச் 30 அன்று, Bund Sozialistischer Arbeiter  (சோசலிஸ்ட் தொழிலாளர் கழகம்- SLL) Partei für Soziale Gleichheit ஐ ஸ்தாபகம் செய்தது. அந்த சமயத்தில், அனைத்துலகக் குழுவானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அதனுடன் தொடர்புபட்டு சமூக ஜனநாயக, ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் வலது நோக்கித் திரும்பியமையும் தனது பிரிவுகளை கழகங்களாய் இருப்பதில் இருந்து கட்சிகளாய் மாற்றுவதை அவசியமாக்கியிருந்ததாக முடிவுக்கு வந்திருந்தது. போலி-ட்ரொட்ஸ்கிச மற்றும் பிற குட்டி முதலாளித்துவ அமைப்புகள் முதலாளித்துவ எந்திரங்களின் இந்த வலதுசாரி திருப்பத்திற்கு அவற்றிடம் தஞ்சம்கோர விண்ணப்பம் செய்வதன் மூலம் எதிர்வினையாற்றிய அச்சமயத்தில், அனைத்துலகக் குழு அதற்கு நேரெதிரான பாதையை எடுத்தது. அது தன்னை தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்டதோடு, வருங்கால புரட்சிகரப் போராட்டங்களுக்கு தலைமை பெறுவதற்கு தயாரிப்பு செய்தது.

7. “கழகம்” என்ற அமைப்பு வடிவமானது, சீர்திருத்தவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போர்க்குணமிக்க தொழிலாளர்களின் செயலூக்கமான ஆதரவை அப்போதும் கொண்டிருந்ததான ஒரு காலகட்டத்தில் உருவானதாகும் -இந்த அமைப்புகளின் மட்டங்களுள் இருந்த மிகவும் வர்க்க-நனவான மற்றும் அரசியல்ரீதியாய் செயலூக்கமிக்க பிரிவினரை பிரித்தெடுக்கும் ஒரு பாத்திரத்தை வகிப்பதன் மூலம் ஒரு பரந்துபட்ட புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான உண்மையான சாத்தியங்கள் கிளர்ந்தெழும் என சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தின் மிக சமரசமற்ற எதிரி என்றவகையில் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கணிப்பிட்டிருந்தன. அது இப்போது இனியும் சாத்தியமில்லை என்றாகிவிட்டிருந்தது. மற்றவர்களை “அத்தலைமையை கொடுக்கச் சொல்லி ’கோருவதன்’ மூலமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை நம்மால் தீர்க்கவியலாது. ஒரு புதிய கட்சி வேண்டுமென்றால், நாம் தான் அதனைக் கட்டியெழுப்பியாக வேண்டும்” என்று டேவிட் நோர்த் அச்சமயத்தில் அறிவித்தார். (காணவும்: Partei für Soziale Gleichheit இன் வரலாற்று அடித்தளங்கள்)

8. Partei für Soziale Gleichheit என்ற பெயரை BSA தெரிந்தெடுத்தது. ஸ்தாபக மாநாட்டின் தீர்மானம் பின்வரும் காரணங்களை கூறியது: “’சமூக சமத்துவம்’ என்ற பெயர் புதிய கட்சியின் அடிப்படை இலட்சியத்தை வெளிப்படுத்துகிறது: ஒருபக்கத்தில் பரந்த சமூக அடுக்குகள் மேலும்மேலும் வறுமைப்பட்டு செல்வது மறுபக்கத்தில் ஒரு சிறு எண்ணிக்கையிலானோர் வரம்பற்று செல்வம் குவிப்பது என்பதான குணாம்சம் பெற்றிருக்கின்ற நிலவும் சமூகப் போக்கிற்கு இது சமரசமற்ற வகையில் எதிர்ப்பை கொண்டிருக்கிறது. வர்க்க பேதமில்லாமல் மனிதர்களுக்கு இடையிலான உண்மையான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் என்ற சோசலிச இயக்கத்தின் இலட்சியத்தின் பக்கம் அது நிற்கிறது. அத்துடன் அது, ஸ்ராலினிஸ்டுகளும் சமூக-ஜனநாயக அதிகாரத்துவங்களும், தத்துவார்த்தரீதியாக அவர்கள் பொய்மைப்படுத்தியிருந்த சோசலிசத்தின் பெயரைச் சொல்லி, இழைத்த அரசியல் குற்றங்களில் இருந்தும் தன்னை வேறுபடுத்தி நிறுத்திக் கொள்கிறது.” (அதே ஆவணம்.)

9. அனைத்துலகக் குழு சோசலிசத்துடன் சமூக சமத்துவத்தை அடையாளப்படுத்தியமையானது போலி-இடது போக்குகளிடம் இருந்து ஆவேசமான தாக்குதல்களை தூண்டியது. ஷீலா டோரென்ஸின் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சி, சமத்துவம் என்பது ஒரு சந்தர்ப்பவாத மற்றும் முற்றிலும் முதலாளித்துவரீதியான கோரிக்கை என்பதுடன், அது வர்க்கங்களை சமரசம் செய்ய முனைந்து மார்க்சிஸ்டுகளால் எப்போதும் நிராகரிக்கப்பட்டு வந்ததாகும் என்று கூறியது. சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைக்கு இத்தகைய குரோதம் காட்டுவதற்கு எந்த சமூக நோக்குநிலை ஊக்கமளித்திருந்தது என்பது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தெளிவாக இருக்கிறது. உலகெங்கிலும் சமூக சமத்துவமின்மையானது முன்கண்டிராத விகிதங்களை எட்டியிருக்கிறது. நிதியப் பிரபுத்துவத்தின் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் வருவாயும் செல்வமும் பன்மடங்காகியிருக்கும் அதேநேரத்தில், தொழிலாள வர்க்கமும், நடுத்தர வர்க்கத்தின் வறுமைப்பட்ட அடுக்குகளும் வீழ்ச்சியடையும் வருமானங்கள், ஆபத்தான வேலை நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பின்மை ஆகியவற்றுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. மனிதகுலத்தின் பாதி எண்ணிக்கையிலான வறுமைப்பட்டவர்கள் கொண்டிருக்கும் அதே செல்வத்தின் அளவை உலகில் செல்வத்தின் உச்சத்தில் இருக்கும் எட்டு தனிப் பணக்காரர்கள் கொண்டிருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தின்போது, அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பியிருந்த நிலையில், “இடதுகள்”, “தீவிர இடதுகள்” மற்றும் “மறுஸ்தாபக கம்யூனிஸ்டுகள்”, “முதலாளித்துவ-எதிர்ப்பினர்”, “சர்வதேச சோசலிஸ்டுகள்” மற்றும் இன்ன பிற போக்கினர் அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் சலுகைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இன, பால் மற்றும் அடையாள அரசியலின் பிற வடிவங்களை தழுவிக் கொண்டிருக்கின்றனர்.

10. அனைத்துலகக் குழுவிற்கும் போலி-இடது அமைப்புகளுக்கும் இடையில் ஒரு ஆழமான மற்றும் சமரசப்படுத்த முடியாத அரசியல் பிளவு இருக்கின்றது. கிரீசில் சிரிசா அரசாங்கம் மற்றும் பேர்லின் செனட்டில் இடது கட்சி ஆகியவற்றின் அனுபவமானது -தொழிலாள வர்க்கத்தின் மீதான இவற்றின் தாக்குதல்கள் அதி-வலது முதலாளித்துவக் கட்சிகளையும் விஞ்சியதாய் இருந்தன- தொழிலாள வர்க்கத்தின் நனவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. PSG ஸ்தாபிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு பின்னர், தேசியவாதத்தின் எழுச்சிக்கு பதிலிறுப்பாக சர்வதேசரீதியிலான தனது நெருக்கத்தை தீவிரப்படுத்தி சர்வதேசியவாதத்திற்காக போராடுகின்ற ஒரே அரசியல் கட்சியாக அனைத்துலகக் குழு மட்டுமே இருக்கிறது. இந்த ஒரு கட்சி மட்டுமே முதலாளித்துவத்தை தூக்கிவீசி ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்காக போராடுகின்றதாய் இருக்கிறது. இந்த இலக்கானது கட்சியின் பெயரிலும் ஐயத்திற்கிடமின்றி வெளிப்படுத்தப்படவேண்டும்.