ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Constitutional Court removes South Korean President Park from office

தென் கொரிய ஜனாதிபதி பார்க் இனை அரசியலமைப்பு நீதிமன்றம் பதவி நீக்குகிறது

By Ben McGrath
11 March 2017

தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை காலையில் தாமதமாக ஒரு ஏகமனதான 8-0 முடிவின் அடிப்படையில் ஜனாதிபதி பார்க் குன்-ஹை இனை அதிகாரத்திலிருந்து நீக்கியது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கடமையிலிருந்து தவறியது உட்பட பதின்மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில், டிசம்பர் 9 அன்று தேசிய பாராளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை இயற்றி அவரை பதவி நீக்கம் செய்துவிட்டது. புதிய ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் மே முற்பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளது, அதுவரை பிரதம மந்திரி மற்றும் இடைக்கால ஜனாதிபதியாகவுள்ள ஹ்வாங் ஜியோ-அன் நாட்டின் தலைவராக தொடர்ந்து பணியாற்றவார்.

இடைக்கால தலைமை நீதிபதி லீ ஜியோங்-மை இன் தலைமையில் நீதிமன்றம், பார்க்கின் நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய நபரும், மேலும் chaebol போன்ற தென் கொரியாவின் சக்திவாய்ந்த பெருநிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெறுவதற்கு ஏற்ற வகையில் இலாப நோக்கமற்ற நிறுவனங்களை அமைப்பதற்கு பெரும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சோய் சூன்-சில் உடன் பார்க்கை தொடர்புபடுத்தியது. அரசாங்க இரகசியங்களை கசியவிட்டது மற்றும் முறையான அரசு பணி எதிலும் சோய் இல்லாதபோதிலும் அவரை அரசாங்க விவகாரங்களில் பங்கேற்க அனுமதித்தது என்ற வகையில் பார்க் சட்டத்தை மீறியுள்ளார் என்று நீதிமன்றம் மேலும் குற்றஞ்சாட்டியது. இருப்பினும், 2014ல் Sewol படகு மூழ்கியது தொடர்பாக கடமை தவறியது மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.

"தொடர்வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டு மதிப்பிட்டதில் (பார்க் மேற்கொண்டது), அவரது ஆட்சியில் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு விருப்பம் எதுவும் இருக்கவில்லை," என்று லீ கூறினார். மேலும் "அரசியலமைப்பு சட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மீறல்கள், மக்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுப்பதற்கான தரங்குறைந்த அளவு என்பவை அரசியலமைப்பை பாதுகாத்தல் என்ற முன்னோக்கிலிருந்து சகித்துக்கொள்ள முடியாதவை`ஆகும்." என்று அவர் குறிப்பிட்டார்.

பார்க் ஆளும் கொரிய சுதந்திர கட்சி (Liberty Korea Party- formerly Saenuri) உட்பட தென் கொரியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொண்டன. "பார்க் குன் ஹை இன் அரசாங்கத்திற்கு கொரிய சுதந்திர கட்சி தான் தொடக்கத்தை கொடுத்தது. அது ஒரு ஆளும் கட்சியாகவும், மேலும் தேசிய விவகாரங்களின் பங்கேற்பாளராகவும் இருந்தது," என்று கட்சித் தலைவர் இன் மியோங்-ஜின் கூறினார். "ஆனால் நாம் ஒரு ஆளும் கட்சியாக இருந்தும் நமது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டதுடன், மக்களால் கட்டியெழுப்பப்பட்டிருந்த தென் கொரிய கண்ணியத்தையும், பெருமையையும் கூட பாதுகாக்க தவறிவிட்டோம்" என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

"தென் கொரிய மக்கள் அவர்களது அடுத்த ஜனாதிபதியாக யாரை தேர்வு செய்தாலும் அவர்களுடனான ஒரு செயலாக்கமுள்ள உறவினை எதிர்நோக்குகிறோம்." என்று வாஷிங்டனில் ட்ரம்பின் அரசாங்கம் தெரிவித்தது. செப்டம்பரில் ஊழல் வெளிப்பட்ட பின்னர், ஒபாமாவோ, ட்ரம்போ இருவருமே பார்க்கிற்கு பகிரங்கமான எந்தவொரு ஆதரவினையும் வழங்கவில்லை.

எனினும், பார்க் தானாகவே பதவியிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவரது உதவியாளர்களுள் ஒருவர் யோன்ஹாப் செய்தி நிறுவனத்திடம், அவரது அலுவலகம் "எதிர்கால நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டுவருகிறது என்று கூறினார். பார்க்கின் ஒரு வழக்கறிஞரான, சியோ சியோக்-கு, ஆட்சி தொடர்பான சட்டபூர்வ தன்மையை பற்றி கேள்வி எழுப்பியதுடன், "பாராளுமன்றத்துடனான நீதிமன்றத்தின் இரகசிய செய்தி பரிமாற்றங்கள் சரியாக மாறிவிட்டது பற்றியே எங்களது சந்தேகங்கள் உள்ளன. வழக்கு விசாரணை முற்றிலும் சட்டம் மற்றும் மனசாட்சியின் அடிப்படையில்தான் இருந்ததா என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை." என்றும் கூறுகிறார்.

அக்டோபர் மாதம் முதல், பார்க் பதவியிலிருந்து விலகவேண்டுமென்ற கோரிக்கையுடன் நாடு முழுவதிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற மில்லியன் கணக்கிலான மக்களின் கொண்டாட்டத்திற்கான ஒரு காரணமாக நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இருந்தது. ஜனாதிபதியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் Chaebol உடனான உறவுகளுக்கு எதிரான ஆத்திரத்தினால் மட்டுமல்லாமல், மிகவும் பரந்த அளவிலான ஒரு மதிப்பிழந்த பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானதாகவும் பாரியளவிலான தென் கொரிய மக்களின் பெரும் அதிருப்தியை இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலித்தன.

வட கொரியா மற்றும் சீனாவிற்கு எதிராக வாஷிங்டனும், சியோலும் முன்னெடுத்த ஒரு யுத்தத்தின் உடனடி ஆபத்துக்களை கொரிய தீபகற்பம் எதிர்கொள்கின்ற நிலையில், தென் கொரிய தொழிலாளர்களின் நிலைமைகள் தொடர்ந்து சீர்குலைந்து வருகின்றன. அவர்கள் கப்பல் மற்றும் கப்பல் கட்டும் தொழில்துறைகளில் தொடர்ச்சியான பெரும் வேலை வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர், அத்துடன் மாணவர்கள் மற்றும் சமீபத்திய பல்கலைகழக பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள உயர் வேலைவாய்ப்பின்மை, அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் மூலமாக ஊதியங்களும், வேலை பாதுகாப்புக்களும் வெட்டப்படுவதற்கு இருக்கும் ஒட்டுமொத்த உந்துதல் போன்ற மோசமான நிலைமைகளே அங்கு உள்ளன.

பார்க்கின் பதவி நீக்கம் பொது மக்களுக்கு சுமைத்தணிவாக இருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியது தான், இருந்தாலும் பார்க்கின் பதவி விலகல் தொடர்பான பேச்சுக்கள், இறுதியாக அவரது வெளியேற்றத்திற்கு உந்துதலளித்த மக்களின் அபிலாஷைகள் எதையும் குறிப்பிடுவதாக இருக்காது. பிற அரசியல் சக்திகளிடம், அதாவது அதே பிற்போக்குதன ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக உள்ள, குறிப்பாக கொரிய ஜனநாயக கட்சி (Democratic Party of Korea - DPK) மற்றும் அதன் உத்தேசமான ஜனாதிபதி வேட்பாளரான மூன் ஜே-இன் இடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும்.

மூன் சில சமயங்களில், குறிப்பாக சீனா, வடகொரியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை இலக்குவைத்து அமெரிக்க முனையத்தின் அதி உயர பகுதி பாதுகாப்பு (US Terminal High Altitude Area Defense-THAAD) ஏவுகணை தளங்கள் நிறுவப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம் யுத்த எதிர்ப்புக்கு முயற்சித்தும், மேலும் மக்களிடையே நிலவுகின்ற chaebol-எதிர்ப்பு குறித்த உணர்வுகளுக்கு ஏற்றதான முறைகளை பின்பற்றவும் முயற்சித்து வருகிறார். எனினும், THAAD திட்டத்தின் மூலமாக ட்ரம்ப் நிர்வாகம் ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு இட்டுசெல்லும் திசையில் இந்த பிராந்தியத்தில் இராணுவ அழுத்தங்களை விரைவாக முன்னெடுத்து வருகின்றபோதும், அவர் இந்த திட்டம் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை.

மூனும், DPK யும் அமெரிக்க கூட்டணிக்கு இன்னமும் அடிப்படையில் ஆதரவளிக்கின்றனர். உதாரணமாக, தென் கொரியாவிற்கு ஒரு THAAD பிரிவை ஈடுபடுத்துவதற்கு, சமீபத்தில் வெளிவந்த ஒரு புத்தகத்தில் மூன் தனது ஆதரவினை வெளிப்படுத்தியதுடன், "கூட்டாளிகள் இடையே ஏற்கனவே ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், மீண்டும் இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பது மிகவும் சிக்கலானதாகவுள்ளது." என்றும் கூறுகிறார்.

DPK தொழிலாளர்களை பிரிப்பதற்கு வழக்கமாக ஜப்பானிய எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டுவதுடன், இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் மத்தியிலான போருக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் வளர்ந்துவிடாமலும் தடுக்கிறது, மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை போர்களை ஆதரித்துவருவது குறித்து ஒரு நீண்ட வரலாற்றையும் இது கொண்டுள்ளது. கிம் டே-ஜங் மற்றும் நோ மூ-ஹ்யூன் ஆகிய இருவரின் ஜனநாயக அரசாங்கங்களும் ஆப்கானிஸ்தானுக்கும், ஈராக்கிற்கும் எதிரான வாஷிங்டனின் போர்களுக்கு ஆதரவளித்தது. நோ அரசாங்கத்தில் ஒரு தலைமை பணியாளராக மூன் பணியாற்றினார்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி மூன், அடுத்த நெருங்கிய போட்டியாளரும் DPK ஐ சார்ந்தவருமான அன் ஹுய்-ஜியாங் ஒப்பீட்டளவில் 15 சதவிகித ஆதரவினை கொண்டிருக்கின்ற நிலையில், 34 சதவிகித ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் பிற ஜனாதிபதி வேட்பாளர்களுள் முன்னிலையில் உள்ளார். கொரிய சுதந்திர கட்சியினை (Liberty Korea Party) சார்ந்த இடைக்கால ஜனாதிபதி ஹ்வாங் ஜியோ-அன் 8 சதவிகித வாக்குரிமையையும், மக்கள் கட்சியினை (People's Party) சார்ந்த ஆன் சீயோல்-சூ 9 சதவிகித வாக்குரிமையையும், மற்றும் Bareun கட்சியினை சார்ந்த யூ சியூங்-மின் 1 சதவிகித வாக்குரிமையையும் கொண்டிருக்கின்றனர்.

பார்க்கின் வீழ்ச்சியானது மூர்க்கமான சர்வதேச அரசியலும், புவி-மூலோபாய அழுத்தங்களும் முதலாளித்துவ அரசியலின் ஸ்திரத்தன்மையை எப்படி உருக்குலைக்கின்றன என்பதை விளக்குகிறது. பார்க் 2013ல் ஆட்சிக்கு வந்தவுடன், ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கொள்கையை முற்றிலும் முறித்துவிடும்படி பெய்ஜிங்கிற்கு அவர் சமிக்ஞைகள் செய்தார். அனைத்து தென் கொரிய அரசியல் கட்சிகளும் அமெரிக்க கூட்டணியை ஆதரிக்கின்றபோதும், அமெரிக்காவுடனான அவர்களது அரசியல் மற்றும் இராணுவ உறவுகளுக்கும், சீனாவுடனான அவர்களது பொருளாதார உறவுகளுக்கும் மத்தியில் எப்படி சமநிலையை பேணுவது என்பது பற்றி வாதிட்டனர்.

அதிகாரத்தில் இருந்தபோதும், 2014ல் ஜனநாயக கட்சியுடன் இணைந்திருந்த ஒரு சிறிய கட்சியான ஒருங்கிணைந்த முற்போக்கு கட்சியினை (United Progressive Party) கலைத்தது உள்ளடங்கலாக எதிரணியினரின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தினார். அவரது ஒட்டுமொத்த திட்ட நிரல்களினால் பொது மக்களிடையே பெருகிவரும் அதிருப்தியை திசைதிருப்பும் ஒரு முயற்சியாக அவரது நகர்வு இருந்தது, இது வடகொரியாவுடன் அழுத்தங்களை தூண்டிவிடுவதாகவும், தொழிலாளர் சீர்திருத்தம் என்பதன் மூலமாக பெரு வணிகர்களின் கோரிக்கைகளுக்கு விடையிறுப்பாக மேலும் வேலைகளை தற்காலியமாக்கும் முயற்சியை வலியுறுத்துவதாகவுமே இருந்தது.

அவர் இந்த இலக்கை அடையமுடியவில்லை என்பது நிரூபணமான நிலையில், அவரது சொந்த கட்சிக்குள் ஒரு பிளவு வளர்ச்சியடைந்தது, ஒரு முன்னணி கன்னை பார்க்கின் பதவி நீக்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக ஜனவரியில் வலதுசாரி Bareun (நேர்மை) கட்சியை உருவாக்கியது. யு சேயுங்-மின் உட்பட புதிய உருவாக்கத்தின் தலைவர்கள் கடந்த காலத்தில் வாஷிங்டனுடன் சியோலின் வலுவான நோக்குநிலையை உருவாக்காமல் இருந்ததற்காக பார்க்கின் நிர்வாகத்தை தண்டித்தனர்.

இந்த பிற்போக்குதன சக்திகள் எதுவும் உழைக்கும் மக்களுக்கு எதையும் வழங்கமுடியாது. வாழ்க்கை சூழல்களின் வீழ்ச்சிக்கும், இந்த பிராந்தியத்தில் நிலவுகின்ற போர் அச்சுறுத்தலுக்கும் அவரது எதிரிகளாலும், விமர்சகர்களாலும் எவ்வித தீர்வையும் முன்வைக்கமுடியாத நிலைமையில் உண்மையை மூடிமறைப்பதற்காக, அவர்களால் பார்க் அரசாங்கத்தின் குணாம்சங்கள் வெறும் திறமையற்றதாகவும், ஊழல் நிறைந்ததாகவும் இருந்தது என்பது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்த அரசாங்கம், கட்சியை பொறுத்ததாக அல்லாமல், நெருக்கடி நிறைந்ததாகவும், அடிப்படையில் கடந்த காலத்தை போன்றே தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகள் உடனான ஒரு மோதலை கொண்டதாகவே இருக்கும்.