ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France’s election at gunpoint

துப்பாக்கி முனையில் பிரான்சின் தேர்தல்

Alex Lantier
22 April 2017

ISIS இன் சார்பாக செயல்பட்டதாக சொல்லப்படுகின்ற ஒரு துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட Champs Elysées வன்முறை சம்பவத்தை, அரசும் ஊடகங்களும், அரசியல் வெறிமிக்கதொரு சூழலை உருவாக்குவதற்காய் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றதொரு பின்புலத்தில் பிரான்சில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று நடைபெறவிருக்கிறது.

நாளை தேர்தல் நிலையங்களில் 50,000க்கும் அதிகமான படைவீரர்களும் போலிஸ்காரர்களும் நிறுத்தப்படவிருக்கும் நிலையில், இத்தேர்தலானது துப்பாக்கிமுனையில் நடைபெற இருக்கிறது.

கூறப்படும் அந்த துப்பாக்கிதாரியின் பின்புலம் குறித்த உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிற நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கூறுகள் -இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணிக்கே வாக்களிக்க திட்டமிடுகின்றனர்- சம்பந்தப்பட்ட ஒரு ஆத்திரமூட்டலே இந்த துப்பாக்கிசூடு என்பதான முடிவுக்கு வராமலிருப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாததாகும்.

ஒரு பிரெஞ்சு குடிமகனும் தொழில்முறை குற்றவாளியுமான கரீம் செயுர்ஃபி என்ற, 2003 இல் இரண்டு போலிஸ்காரர்களை கிட்டத்தட்ட சாகடிக்கும் நிலைக்கு இட்டுச்சென்ற துப்பாக்கிசூட்டிற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஒருவர், சமீபத்தில் பிப்ரவரி மாதத்தில், ஆயுதங்களைக் கேட்டதற்காகவும் போலிஸ்காரர்களை கொல்ல விரும்பியதாக கூறியதற்காகவும் கடைசியாக கைது செய்யப்பட்டிருந்தார். அவர் முன்நிறுத்திய “அபாயமட்டம்” முன்னுரிமையான மட்டத்திற்கு இல்லை என்பதாய் சொல்லி அவர் விடுவிக்கப்பட்டார். அவர் இஸ்லாமிக் ஸ்டேட்டின் (IS) ஒரு அனுதாபியாக இருந்ததில் குறைந்தபட்சம் மார்ச் மாதத்தில் இருந்தேனும் பிரான்சின் உள்நாட்டு உளவுத்துறையால் அவர் பின்தொடரப்பட்டு வந்திருந்தார் என்றநிலையிலும், அவரது வழக்கு ஒரு பொதுவான சட்டப் பிரச்சினை வழக்காக பார்க்கப்பட்டதே தவிர, ஒரு பயங்கரவாத வழக்காய் பார்க்கப்படவில்லை.

பிரான்சின் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களையும் தாண்டி, செயுர்ஃபி, ஒரு தானியங்கி துப்பாக்கி, ஒரு வேட்டை துப்பாக்கி மற்றும் பல கத்திகளை சேகரித்து விட முடிந்திருந்தது, இவற்றை தாக்குதலின் போது அவர் தன்னுடன் கொண்டிருந்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முந்தைய நாளில், வலது சாரி ஊடகமான Le Figaro இஸ்லாமிய பயங்கரவாதமே “தேர்தல் பிரச்சார நிறைவின் மையத்தானமாக இருக்க வேண்டும்” என்று கோரியது. “இது ஒரு இன்றியமையாத பிரச்சினை, ஆனால் மிகக் குறைவாகவே பேசப்பட்டிருக்கிறது.” இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ஒருங்கிணைந்த அரசியல் தாக்குதலுக்கான சமிக்கையாக இருந்தது. பாரிஸின் மையப்பகுதியின் பெரும்பகுதியை பாதுகாப்புப் படைகள் முடக்கி விட்ட நிலையில், வியாழக்கிழை இரவில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களது விவாதத்தில் பேசிய வலது-சாரி வேட்பாளர்கள் சட்டம் ஒழுங்குக் கொள்கைகளை தீவிரப்படுத்துவதற்கும், தேர்தல் பிரச்சாரத்தையே முடித்துவிடுவதற்கும் கூட கோரிக்கை வைத்தனர்.

கன்சர்வேடிவ் வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் “இஸ்லாமிய சர்வாதிபத்திய”த்தை ஒழிப்பதற்கு கோரிக்கை வைத்தார், பிரச்சாரத்தை “நிறுத்தி வைக்க” அழைப்பு விடுத்தார்; லு பென் “நீதிமன்றங்களின் நம்பமுடியாத அளவுக்கான மெத்தன”த்தை கண்டனம் செய்ததோடு உளவுத்துறை கோப்புகளைக் கொண்ட அத்தனை வெளிநாட்டினரையும் வெளியேற்ற வேண்டும் என்று கோரினார். ஃபிய்யோன், லு பென் மற்றும் இமானுவல் மக்ரோன் -பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பேரணி திரள்வோம் (On the March) இயக்கத்தின் வேட்பாளர்- அனைவருமே நேற்றைய பிரச்சார நிகழ்ச்சிகளை இரத்து செய்து விட்டனர்.

விவாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் பிரான்சில் எழுந்து வருகின்ற அரசியல் சூழலை சுட்டிக்காட்டுவதாக இருந்தது, அது என்னவென்றால் போலிஸ் ஆயுதபாணியற்று இருக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்த புதிய முதலாளித்துவ கட்சி வேட்பாளரான பிலிப் புட்டுவுக்கு போலிஸ் ஆவேசமாக எதிர்வினையாற்றியது. அவரை “அசிங்கம் பிடித்தவர்” (enculé) என்று அழைத்த அவர்கள் ஆயுதங்களை தொடர்ந்தும் வைத்திருப்போம் என்று தெரிவித்தனர்.

பிரச்சாரத்தை இழுத்து மூடுவதற்கும், முஸ்லீம்-விரோதப் பிரச்சாரத்தைக் கொண்டு காற்றலைகளை நிரப்புவதற்குமான இந்த முயற்சியானது ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியால் செலுத்தப்படுவதாகும். PS, அதன் சிக்கன நடவடிக்கைகளாலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்திருக்கும் அவசரகாலநிலையாலும் மதிப்பிழந்து, ஒரு வரலாற்று நிலைகுலைவுக்கு முகம்கொடுத்திருக்கிறது. ஏப்ரல் 7 அன்று சிரியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல் இல்லாமல் நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்கள் போர் எதிர்ப்பு மனோநிலையை அதிகரித்திருப்பதில் அது மிரட்சி கண்டிருக்கிறது, போர் எதிர்ப்பு மனோநிலையின் அதிகரிப்பானது அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் ஜோன் லுக் மெலோன்சோனுக்கே ஆதாயமளித்திருக்கிறது. மக்ரோன், லு பென், மெலோன்சோன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரு இணையான நிலையிலேயே இருக்கின்றனர், வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் நிலவுகின்ற வெடிப்பான வர்க்கப் பதட்டங்கள் குறித்து ஆளும் உயரடுக்கு நன்கு அறிந்துவைத்திருக்கிறது. வர்க்கப் போராட்டம் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தமாய் ஆகியிருப்பதாக பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், தங்களது பிரதான கவலை பயங்கரவாதம் அல்ல, மாறாக வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் ஆகிய சமூகப் பிரச்சினைகளே என்று வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளும் வர்க்கம் இந்தக் கோரிக்கைகளுக்கு முழு எதிர்ப்பாக இருக்கிறது என்பதையே பிரதான வேட்பாளர்களது வேலைத்திட்டங்கள் —பாரிய வேலைவெட்டுக்கள், பத்து பில்லியன் கணக்கான யூரோக்களில் சிக்கன நடவடிக்கைகள், இராணுவச் செலவின அதிகரிப்புகள், மற்றும் கட்டாய இராணுவச் சேவைக்குத் திரும்புதல் ஆகியவற்றுக்கான அழைப்புகளும் இதில் அடங்கும்— தெளிவாக்குகின்றன. எதிர்பாராத ஒரு தேர்தல் முடிவுக்கு நிதியச் சந்தைகள் டிரில்லியன் டாலர் கணக்கான காகிதச் சொத்துக்கள் துடைத்தழிக்கப்படுவதைக் கொண்டு எதிர்வினையாற்றக் கூடும் என்பதான அச்சங்களும் நிலவுகின்றன.

தேர்தல் முடிவு இன்னும் தொங்குநிலையிலேயே இருக்கின்ற சமயத்தில், பிரச்சாரத்தின் இறுதி மணித்தியாலங்களில் சூழலை சட்டம் ஒழுங்கு மற்றும் முஸ்லீம்-விரோத பரப்புரையைக் கொண்டு நிரப்புவதற்காய் பிரான்சின் நிதியப் பிரபுத்துவம் நோக்கம் கொண்டிருக்கிறது.

இது அதிமுக்கியமாய் பிரான்சில் “இடது” என்று சொல்லி கடந்து செல்லும் பிரிவின் கோழைத்தனத்தை நம்பியிருக்கிறது, இப்பிரிவு, Champs-Elysées தாக்குதல் போலிஸின் வரிசையான தவறுகளின் —அந்த ஒவ்வொரு தவறும் நம்பமுடியாத அளவுக்கு விகாரமாக இருக்கின்ற நிலையிலும் கூட— ஒரு விளைபொருள் மட்டுமே என்பதான உத்தியோகபூர்வ கூற்றுகளை ஏற்றுக் கொள்கிறது. மெலன்சோனே கூட ட்விட்டரில் லு பென், ஃபிய்யோன் மற்றும் மக்ரோன் ஆகியோருடன் தனது “தனிப்பட்ட ஐக்கிய”த்தை அறிவித்து எதிர்வினையாற்றியிருந்தார்.

பிரான்சில் இன்று காணுகின்ற சூழலுக்கு முன்நிழலாக இருந்த ஒன்றைக் கூறுவதானால் 1970கள் மற்றும் 1980களிலான இத்தாலியின் “தலைமையின் வருடங்கள்” (Years of Lead) ஐ குறிப்பிடலாம், அச்சமயத்தில் பரந்த மக்களின் தீவிரப்படலுக்கும் பாரிய வர்க்கப் போராட்டங்களுக்கும் அரசு எவ்வாறு பதிலளித்தது என்றால் இத்தாலியின் உளவுத்துறையுடன் தொடர்புடைய அதி-வலது பயங்கரவாதிகளை தாக்குதல்களை நடத்தச் செய்து அதன் பழியை இடது-சாரிக் குழுக்கள் மீது போட்டது. 1972 இல் Peteano கார் குண்டுவெடிப்பில் Carabinieri போலிசார் மூன்று பேர் கொல்லப்பட்டமை, மற்றும் 1980 இல் போலோக்னாவில் மத்திய நிலையத்தின் மீது குண்டுவீச்சு ஆகியவை இந்தத் தாக்குதல்களில் இடம்பெற்றவையாகும்.

இந்த “பதட்ட மூலோபாய”த்தில் சம்பந்தப்பட்ட அதி-வலது தீவிரவாதிகள் பலரும் பிடிபட்டனர். அவர்கள் “நாட்டில் பதட்டத்தை உருவாக்குவதன் மூலமாக பழமைவாத, பிற்போக்குவாத சமூக மற்றும் அரசியல் போக்குகளை ஊக்குவிக்கின்ற நோக்கத்தை” கொண்டிருந்தனர் என நீதிபதி ஃபெலிஸ் காசன் (Felice Casson) பிபிசியிடம் விளக்கினார். குற்றவாளியாக உறுதிசெய்யப்பட்ட வின்சென்ஸோ வின்சிகுவெரா (Vincenzo Vinciguerra) என்ற ஒரு பயங்கரவாதி அப்சர்வர் பத்திரிகையிடம் கூறினார்: “குடிமக்களை அப்பாவிகளை, பெண்களை, குழந்தைகளை, நிரபராதிகளை, எந்த அரசியல் விளையாட்டில் இருந்தும் வெகுதூரம் அகற்றப்பட்டவர்களாய் இருக்கக் கூடிய முகம் தெரியாதவர்களை நாங்கள் கொல்ல வேண்டியிருந்தது. காரணம் மிக எளிது. அவை இந்த மக்களை, இத்தாலியின் பொதுஜனங்களை, கூடுதல் பாதுகாப்பு கோரி அரசை நோக்கித் திரும்புவதற்குத் தள்ளும் என்பதாய் கருதப்பட்டது.”

நிதியப் பிரபுத்துவம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டி, தன்னை போருக்காய் ஆயுதபாணியாக்கிக் கொள்ள முனைகின்ற நிலையில், அதற்கு ஆழமான மக்கள் எதிர்ப்பு எழுவதை அது நன்கு அறிந்து வைத்திருக்கிறது. தனது ஆட்சியை கட்டிக்காப்பாற்றும் முயற்சியில் அது எதன்பொருட்டும் தயங்கி நிற்கப் போவதில்லை.