ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

தொழிலாளர்களே, இளைஞர்களே, புத்திஜீவிகளே!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுவிக்க யாழ்ப்பாணத்தில் நடக்கும் போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்!

26 April 2017

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், ஜோடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மாருதி சுசுகி வாகன தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணத்தில் ஏப்பிரல் 28 அன்று ஆர்ப்பாட்டமும் பகிரங்க கூட்டமும் நடத்தவுள்ளன. இது இந்த தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலை தோற்கடிப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பாகமாகும்.

இந்தியாவின் ஹரியான மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றினால் போலிக் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில், மாருதி சுசுகி தொழிலாளர்கள் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 18 பேருக்கு 3-5 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தாம் வேலை செய்யும் ஹரியானாவின் மனேசரில் உள்ள மாருதி சுசுகி வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் நிலவும் கொடூரமான வேலை நிலைமகள் மற்றும் கொத்தடிமை சுரண்டலையும் எதிர்த்து 2011-12ம் ஆண்டுகளில் தங்களது உரிமைகளுக்காப் போராடியதே இந்த தொழிலாளர்கள் செய்த குற்றமாகும். இதற்கு எதிராக கம்பனி நிர்வாகத்தினால் 2012 ஜூலை 18 அன்று தொழிற்சாலைக்குள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலவரம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட தீயில் கம்பனியின் மனிதவள முகாமையாளர் மரணித்தமைக்கு இந்த தொழிலாளர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை மற்றும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பற்றலுடன், தண்டிக்கப்பட்ட தொழிலாளர்கள் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதும், கம்பனி நிர்வாகத்தினர் பொலிசோடு சேர்ந்து சதி செய்து, தொழிலாளர்களுக்கு எதிராக சாட்சிகளை சோடித்தனர் என்பதும், வழக்கு விசாரணைக்குள்ளேயே அம்பலமாகியுள்ளது. இந்த விடயத்தை அலட்சியம் செய்தே அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், இந்திய அரசாங்கமானது தனது சிக்கன கொள்கையை சவால் செய்ய முனையும் ஏனைய தொழிலாளர் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, முதலீட்டாளர்களின் பேரில் தனது அர்ப்பணிப்பையும் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பற்கு அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் இன்றியமையாததாகும். பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியில், ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலகப் போரை நாடுவதோடு, உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக இத்தகைய ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இலங்கையின் தென் பகுதியில், ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தை அரசாங்கம் கடற்படையினரைக் கொண்டு கொடூரமாக நசுக்கியது. இலவசக் கல்வியைப் பாதுகாக்க போராட்டம் நடத்தும் மாணவர்கள் பொலிஸ் தாக்குதலின் மூலம் விரட்டியடிக்கப்படுகின்றனர். இலங்கை மின்சார சபை, தொலைத் தொடர்பு போன்ற துறைகளில் தொழிலாளர்களின் போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸ் நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தது. கொழும்பில் ஏற்பட்டுள்ள குப்பை மலை நெருக்கடிக்கு எதிராக போராடும் மக்களை அரசாங்கம் பொலிசாரைக் கொண்டு அடக்கி வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் வேலை கோரியும் 50 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டக்காரர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதோடு பட்டதாரிகளின் போராட்டங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் நீதிமன்ற உத்தரவினைப் பயன்படுத்துகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்ற தமிழ் முதலாளித்துவ கட்சிகள், தங்களுக்கான ஒரு ஆட்சி அலகைப் பெறுவதற்காக புது டில்லி மற்றும் சென்னை அரசாங்கங்களினதும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ஒத்துழைப்பை கோருவதோடு அவற்றின் ஒடுக்குமுறை கொள்கைகளை முழுமையாக ஆதரிக்கின்றன.

இத்தகைய அரசியலானது தமிழ் மக்களுக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டினருக்கும் பேரழிவுகரமானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அமைப்புகளில் இருந்து தொழிலாளர்கள் சுயாதீனமடைவதோடு இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள தமது வர்க்க சகோதரர்களுடன் ஒன்றிணைவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரே வழியாகும்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான இத்தகைய கொடூரமான தாக்குதல், உலகில் முன்னெப்போதும் நடந்திருக்கவில்லை. அதே வேளை இனிமேல் உதாரணமாகக் எடுத்துக்கொள்ளப்படக் கூடும். அவர்களை விடுதலை செய்வதற்கு சர்வதேச தொழிலாளர் வர்க்கம் போராடுவதற்கு முன்வர வேண்டும்.

இந்தப் போராட்டத்தினை நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் அதன் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே முன்னெடுக்கின்றன. இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

மறியல் போராட்டம்: ஏப்ரல் 28, வியாழன், பி.ப. 3.30 மணி.

கூட்டம்: மாலை 5 மணி, வீரசிங்கம் மண்டபம்.