ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Background to a labor frame-up:
What the Maruti Suzuki workers were fighting for

தொழிலாளர்கள் மீதான ஒரு ஜோடிப்பின் பின்புலம்:

மாருதி சுசூகி தொழிலாளர்கள் எதற்காகப் போராடினார்கள்

By Jerry White
12 April 2017

சென்ற மாதத்தில் இந்திய நீதிபதி ஒருவர், வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் 13 பேருக்கு ஆயுள் தண்டனைகள் வழங்கியமையானது, இந்தியாவின் தொழிற்சாலைகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் நிலவுகின்ற கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராய் ஹரியானா மாநிலத்தின் மானேசரில் உள்ள மாருதி சுசூகி கார் அசெம்பிளி ஆலையின் தொழிலாளர்கள் தலைமைப் பாத்திரங்களை வகித்ததற்கு வழங்கப்பட்ட ஒரு வர்க்கப் பதிலடி நடவடிக்கையாக அமைந்திருந்தது.


ஜூன் 2011 தர்ணா போராட்டம் (புகைப்பட மூலம்: GurgaonWorkersNews)

2011 ஜூன் முதலாக 2012 ஜூலை வரையிலும், தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களிலும் ஆலை உள்ளிருப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்ததோடு, கதவடைப்பு, பழிவாங்கல்கள் மற்றும் போலிஸ் மற்றும் நிறுவனக் குண்டர்களின் வன்முறை ஆகியவற்றை எதிர்த்து நின்றிருந்தனர். நாட்டை, நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கு மலிவான மற்றும் கீழ்ப்படிவான உழைப்பை வழங்குவதற்கான ஒரு மூலாதாரமாக சந்தைப்படுத்துவதற்கு முனைந்திருந்த இந்திய ஆளும் வர்க்கத்திடம் இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1991 இல் நாட்டின் பொருளாதார ”தாராளமயமாக்கம்” தொடங்கியது முதலாக, சுசூகி  மோட்டார்ஸ், ஹூண்டாய், ஃபோர்ட், கேட்டர்பில்லர் மற்றும் பிற நாடுகடந்த பெருநிறுவனங்கள், பெரும்பாலும் வறுமைப்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து வருகின்ற பரிதாபகரமான ஏழ்மை நிலையிலுள்ள தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாக பெரும் இலாபங்களைக் குவித்து வந்திருக்கின்றன. இந்திய நகரங்களது வசதியான அண்மைப்பகுதிகளை அலங்கரிக்கின்ற உயர் மாடி குடியிருப்புகள், நவீன கடை வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வங்கிகள் எல்லாம் இந்த தொழிலாளர்களுக்கு எட்டாதவையாகும். நெரிசலான சேரிகளிலும் வேய்ந்த வசிப்பிடங்களிலும் வசிக்கும் இவர்கள் தமது வருமானத்தின் பெரும்பகுதியை கிராமங்களில் இருக்கும் தமது குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள்.

இந்தியாவின் தேசிய தலைநகர் புதுடெல்லிக்கு சற்று வெளியே அமைந்திருக்கும் குர்கான்-மானேசர் தொழிற்பேட்டையில் 200,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் வாகன உற்பத்தி மற்றும் பிற உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர், இப்பகுதியில் மாருதி சுசூகி க்கு இரண்டு அசெம்பிளி ஆலைகள் உள்ளன.

2006இல் தொடங்கப்பட்ட சமயத்தில், மாருதி சுசூகி யின் மானேசர் ஆலை, ஒரு ஷிஃப்டுக்கு 250-300 கார்களை உற்பத்தி செய்தது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இது ஒரு ஷிஃப்டுக்கு 550-600 ஆக உயர்த்தப்பட்டது, ஒவ்வொரு 42 விநாடிகளுக்கு ஒரு கார் அசெம்பிளி லைனில் இருந்து வெளிவருவது இலக்காக வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் எட்டரை மணி நேர ஷிஃப்டுகளில் கடினமாய் உழைத்தனர், அரை மணி நேரம் உணவு இடைவேளை, இரண்டு ஏழு நிமிட தேநீர் இடைவேளை இருக்கும், இதைத் தவிர்த்து அவர்களுக்கு தண்ணீர் குடிக்கவோ அல்லது கொஞ்சம் ஓய்வாக உட்காரவோ கூட முடியாது. இடைவேளைக்குப் பின் ஒரு நிமிடம் தாமதமாய் வந்தாலும் கூட, உடனடியாக கணிசமாய் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும் எனும்போது ஷிஃப்டுக்கு தாமதமாய் வருவதை குறித்தெல்லாம் கேட்கவும் தேவையில்லை.

நிறுவனத்தின் தொழிலாளர் விவர ஆவணங்களின்படி, மாருதி சுசூகி இன் மானேசர் ஆலையில் 2012 இல் 4,295 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதில் 1,054 பேர், அதாவது கால்வாசிக்கும் குறைவானவர்கள் “நிரந்தர” தொழிலாளர்கள் அல்லது முழுநேரத் தொழிலாளர்கள் ஆவர். இந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் 19,250 ரூபாயாக (298 அமெரிக்க டாலர்) இருந்தது, ஆயினும் அவர்களது சம்பளத்தின் கிட்டத்தட்ட பாதி “உற்பத்தித் திறன் கொடுப்பனவு”டன் கட்டப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் விடுமுறை எடுப்பின், ஒருநாளைக்கு 1,500 ரூபாய் (23.22 அமெரிக்க டாலர்), இரண்டு நாளென்றால் 2,200 ரூபாய் (34.06 அமெரிக்க டாலர்) நான்கு நாட்களென்றால் 7,000 ரூபாய் (108.38 அமெரிக்க டாலர்) அல்லது அவர்களது சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான தொகை என்ற வீதத்தில் அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்பட்டு விடும்.


தொழிலாளர்களால் 44 விநாடிகளுக்கு ஒன்றாய் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் பின்புலத்தில் வானளாவிய அலுவலகக் கட்டிடங்கள் தெரிகின்றன

இன்னுமொரு 2,600 தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலமாக, குறுகிய கால ஒப்பந்தங்களுக்காய் வேலையில் அமர்த்தப்பட்டனர். அவர்களும் நிரந்தரத் தொழிலாளர்களது அதே வேலைகளையே செய்வார்கள், ஆயினும் அவர்களது சீருடை மாறுபடும், அவர்களுக்கு பாதிக்கும் குறைவான சம்பளமே (9,000 ரூபாய் அல்லது 136.69 அமெரிக்க டாலர்) கொடுக்கப்பட்டது என்பதோடு விருப்பம் போல அவர்கள் வேலைநீக்கம் செய்யப்படலாம். இன்னுமொரு 641 தொழிலாளர்கள் “பணிபயில்பவர்கள்” அல்லது ”பயிற்சியாளர்”களாய் அமர்த்தப்பட்டிருந்தனர், மலிவான சம்பளம் கொடுக்கப் பெற்ற இவர்கள் “தொந்தரவு இல்லாதவர்கள்” என ஒரு மேற்பார்வையாளர் கருதினால் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியாக அல்லது நிரந்தரத் தொழிலாளியாக உயர்த்தப்பட முடியும்.

விடயத்தை இன்னும் மோசமாக்கும் விதமாக, ஷிஃப்டு மாறும்போது அவசியப்படும் மேலதிக நேர பணி —அடுத்த தொழிலாளி வந்து விடுவிக்கும் வரை இந்த தொழிலாளி வேலையில் கட்டாயம் இருந்தாக வேண்டும்— மற்றும் பழுதுநீக்குவதற்கு அவசியப்படுகின்ற காலம் இதையெல்லாம் கணக்கிலெடுத்தால், ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரம் சம்பளமற்ற மேலதிக நேர பணியை தாங்கள் செய்ய நேர்ந்ததாக தொழிலாளர்கள் மதிப்பிட்டனர்.


பழிவாங்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளியின் வாழ்க்கை நிலைமைகள் (பட உபயம்: ராகுல் ராயின் தி ஃபேக்ட்ரி படம்)

இந்த நிலைமைகள் தான் மாருதி சுசூகி தொழிலாளர்களது தீரமான எதிர்ப்புக்கு வழிவகுத்த நிலைமைகளாகும். மாருதி சுசூகி ஊழியர்கள் சங்கம் (MSEU) என்ற ஒரு புதிய சுயாதீனமான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரியும் வெறுப்புக்குரிய ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்கக் கோரியும் 2011 ஜூன் 4 அன்று, தொழிலாளர்கள் ஒரு 13 நாள் வேலைநிறுத்தத்தையும் மானேசர் ஆலையில் உள்ளிருப்பையும் தொடக்கினர். நிரந்தர தொழிலாளர்களிடம் தான் MSEU விண்ணப்பம் செய்தது என்றாலும் கூட, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பணிபயில்பவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட அத்தனை தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

நிர்வாகத்தின் கட்டளைகளை தொழிலாளர்கள் மீது திணித்த, மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கம் (Maruti Udyog Kamgar Union - MUKU) என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் அரசினால் அங்கீகரிக்கப்பட்டும் இருந்த தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தனர். “கைப்பாவை” அல்லது “எடுபிடி” தொழிற்சங்கமாக தொழிலாளர்களால் அழைக்கப்பட்ட இது, இந்து மஸ்தூர் சபா (Hind Mazdoor Sabha - HMS) அல்லது வேர்க்கர்ஸ் அசெம்பிளி ஆஃப் இண்டியாவுடன் —அமெரிக்கன் பெடரேஷன் ஆஃப் லேபர் மற்றும் பிரிட்டிஷ் தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) ஆகியவற்றுடன் சேர்ந்து இதுவும் 1949 இல் ஸ்தாபகமான கம்யூனிச விரோத சர்வதேச சுயாதீன தொழிற்சங்கங்களது சர்வதேசக் கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினராய் இருந்தது— இணைப்புடையதாய் இருந்தது.

வேலைப் புறக்கணிப்பு போராட்டத்துக்கு முந்தைய நாளில், MSEU ஐ பதிவு செய்யக் கோரி தொழிலாளர்கள் ஹரியானா தொழிலாளர் ஆணையரிடம் விண்ணப்பித்தனர். ஆணையர் நிர்வாகத்துக்கு துப்புக் கொடுத்து விட்டார், அடுத்த நாளே நிறுவனம் தாங்கள் MUKU வில் திருப்தியுடன் உள்ளதாகக் கூறும் ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு தொழிலாளர்களை கட்டாயப்படுத்த முயற்சி செய்தது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கிய பின்னர், நிர்வாகம், தொழிலாளர் ஆணையருக்கு வழங்கப்பட்டிருந்த படிவத்தில் யார் யார் பெயர் இடம்பெற்றிருந்ததோ அந்த 11 தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நீக்கியது. அந்தத் தொழிலாளர்கள் உடனே நிறுவன எல்லைக்கு வெளியே செல்ல வேண்டும் என்று கோரிய நிர்வாகம் அவ்வாறில்லையெனின் போலிசை கொண்டுவந்து வேலைநிறுத்தத்தை “முறிக்கவிருப்பதாக”வும் மிரட்டியது.

மானேசர் குர்கான் தொழிற்பேட்டை முழுவதுமாய் சுமார் 10,000 தொழிலாளர்கள் இரண்டு மணி நேர ஆதரவு வேலைநிறுத்தம் ஒன்றுக்கு அச்சுறுத்திய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPI) இணைந்த சங்கமான அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) தலையிட்டு MSEU வின் குரலை அமுக்கி ஜூன் 16 அன்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இருபதுக்கும் அதிகமான போர்க்குணமிக்க தொழிலாளர்கள் அப்போது வேலைநீக்கம் செய்யப்பட்டனர் இல்லையேல் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


வெளியே இருக்கும் குடிசைப்பகுதிகள் (பட உபயம்: தி ஃபேக்டரி, ராகுல்ராய் உருவாக்கிய படம்)

ஒரு தொடருகின்ற போக்காக இது வெகுவிரைவில் ஆகவிருந்தது. CPIயும் இன்னொரு முக்கிய ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPM), மற்றும் AITUC மற்றும் CITU ஆகிய அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் சோசலிஸ்டுகள் கிடையாது. இவை இந்திய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரியமான கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் ஒத்துழைத்து வேலைசெய்து வந்திருப்பதோடு மலிவு உழைப்பைக் காட்டி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் அதன் கொள்கையில் உடந்தையாகவும் இருந்து வந்திருக்கின்றன. இதில் CPIயும் CPMமும் அவை அரசாங்கம் அமைத்து ஆட்சி செய்து வந்திருந்த “மேற்கு வங்காளம்” போன்ற மாநிலங்களிலேயே கூட “முதலீட்டாளர்-ஆதரவு” கொள்கைகள் என்று அவை அழைத்த கொள்கைகளை பின்பற்றியதும் இதில் அடங்கும்.

வேலைநிறுத்த முடிவை சுரண்டிக்கொண்டு, நிறுவனமும் காங்கிரஸ் தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் தாக்குதலில் இறங்கின. முதலாவதாய், தொழிலாளர்கள் MUKUவை விட்டு மொத்தமொத்தமாய் விலகியிருந்தனர் என்ற நிலையிலும் கூட அங்கீகாரம் கோரி MSEU அளித்திருந்த விண்ணப்பத்தை தொழிலாளர் ஆணையர் நிராகரித்தார். அதன்பின், இரண்டு வாரங்களுக்குப் பின்னர், 2011 ஆகஸ்டு 29 அன்று நிறுவனம் தொழிலாளர்களை வெளியே தள்ளி கதவடைத்தது; அவர்களை ஆலையில் இருந்து வெளியேற்றுவதற்கு மாநில அரசாங்கம் 500 போலிஸ்காரர்களை அனுப்பியது.

மாருதி வேலைநிறுத்தம் தொடர்பான 2011 தொலைக்காட்சி செய்தி

அந்தத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கான ஒரு நிபந்தனையாக, எந்த வேலைநி்றுத்தங்களையும், தர்ணாக்களையும், அல்லது உற்பத்தியை பாதிக்கக் கூடிய வகையிலான எந்த வகையிலான ஆர்ப்பாட்டங்களையும் இனி நடத்த மாட்டோம் என்று வாக்குறுதியளிக்கின்ற ஒரு “நன்னடத்தைப் பத்திர”த்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும் என்று மாருதி சுசூகி கோரியது. இந்த மிரட்டலை தொழிலாளர்கள் எதிர்த்து நிராகரித்தனர்.

முற்றுகைப் போராட்டத்தின் சமயத்தில் ஒரு தொழிலாளி தங்களது போராட்டம் குறித்து உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்களிடம் பின்வருமாறு உணர்ச்சி பொங்கக் கூறினார்: “தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 42 நாட்கள் விடுமுறை இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் ஒரேயொரு நாள் விடுப்பு எடுப்பதற்கும் கூட நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். எனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று முன்கூட்டியே நான் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தால் கூட, எனது சம்பளத்தில் 1,500 ரூபாய் வெட்டப்பட்டு விடும். தவிர்க்கமுடியாத காரணத்தால், நிர்வாகத்துக்கு சொல்லாமல் விடுப்பு எடுக்க நேர்ந்தால், அதற்குத் தண்டனையாய் இரட்டிப்பான தொகை சம்பளத்தில் வெட்டப்பட்டு விடும்.”

“என் பெற்றோர் உடல் நலமின்றி இருக்கும்போது எவ்வாறு சென்று பார்க்க முடியும்?” என்று அந்தத் தொழிலாளி வினவினார். “இந்த சமயத்தில் மருத்துவச் செலவுக்காய் எங்களுக்கு கூடுதலாய் பணம் தேவையாக இருக்கின்ற நேரத்தில், எங்களது சம்பளமோ வெட்டப்படுகிறது!” என்றார் அவர். “ஏழு நிமிடமே தேநீர் இடைவேளை என்பதால் ஒரு கோப்பை தேநீரைப் பெறுவதற்கு நாங்கள் அடித்துப் பிடித்து ஓட வேண்டியிருக்கும், அதன்பின் கையில் தேநீர் கோப்பையை ஏந்தியபடியே கழிவறையை நோக்கி ஓடுவோம். அங்கே கழிவறைகளும் குறைவாக இருக்கும் என்பதால் பிரச்சினை இன்னும் மோசமாகி விடும்.”

“நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை எதிர்த்து எங்களால் துணிந்து பேசமுடியாது, பேசினால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக எங்களது சொந்தமான தொழிற்சங்கத்தை உருவாக்க நாங்கள் விரும்பினோம். எங்கள் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றால் நாங்கள் நிர்வாகத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடியாது. நாங்கள் ஒடுக்கப்படுவது எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்க அரசாங்கம் எங்களுக்காக ஏன் எதுவுமே செய்வதில்லை?”

இங்கும் ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் போராடிய தொழிலாளர்களை தனிமைப்படுத்தினர். அதன் காரணத்தால் மாருதி சுசூகி தப்பித்துக் கொள்ள முடிந்தது. அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகளது மத்தியஸ்தத்தில் நன்னடத்தைப் பத்திரத்தையும் அத்துடன் போர்க்குணமிக்க 44 தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதில் MUKU கையெழுத்திட்ட பின்னர் அந்த கதவடைப்பு முடிவுக்கு வந்தது.

ஆயினும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1,000 பேரை மீண்டும் வேலைக்கு எடுக்க நிர்வாகம் மறுத்தபோது இந்த ஒப்பந்தம் முறிந்தது. 2011 அக்டோபர் 7 ஆம் தேதியன்று, ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அத்துடன் பழிவாங்கப்பட்ட 44 தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் கதவடைப்பின் ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு நாள் சம்பளத்தை வெட்டும் நிர்வாகத்தின் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் கோரி நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒரு தர்ணா போராட்டத்தைத் தொடக்கினர்.


2011 இல் மானேசரில் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக சுசூகி  பவர்ட்ரெயின் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்

மானேசர்-குர்கான் தொழிற்பேட்டை பகுதியெங்கும் கிட்டத்தட்ட 12,000 தொழிலாளர்கள் பங்குபெற்ற ஆதரவு வேலைநிறுத்தங்களின் ஒரு அலைக்கு இது இட்டுச் சென்றது. எட்டு நாள் உள்ளிருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மாநில அரசாங்கம் 1,500 போலிஸை அப்பகுதியில் நிறுத்தி பதிலிறுப்பு செய்தது, ஆயினும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது.

தொழிலாளர்கள் மீண்டும் பெரும் தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், MSEU இன் தலைமையானது ஒரு கூட்டமோ அல்லது வாக்கெடுப்போ இல்லாமல் 2011 அக்டோபர் 21 அன்று திடீரென்று இந்த புறக்கணிப்புப் போராட்டத்தை முடித்துக் கொண்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களை பரிசீலித்து மீண்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும், முறையே MSEU இன் தலைவர் மற்றும் செயலாளரான ஸோனு குஜ்ஜார் மற்றும் ஷிவ் குமார் உள்ளிட்ட 30 தொழிலாளர்களுக்கு எதிரான இடைநீக்கங்கள் மீது ஒரு “விசாரணை”யை முன்னெடுப்பதாகவும் நிர்வாகம் அளித்த பிரயோசனமற்ற வாக்குறுதிகளை இத்தலைவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டிருந்தனர்.

குஜ்ஜாரும், குமாரும் அவர்களது வேலையை இராஜினாமா செய்து விட்டுச் செல்வதற்கு அவர்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டிருந்தது என்ற விபரம் வெகுவிரைவில் வெளியானது. இந்தத் தொகை —கிட்டத்தட்ட 1.6 மில்லியன் ரூபாய்கள் அல்லது 32,500 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது— நிர்வாகத்திற்கு சொற்பமான தொகையாக இருந்தபோதும் கூட, அந்த இளம் தொழிற்துறை தொழிலாளர்களை பொறுத்தவரை இவ்வளவு “பெரிய” பணிமுறிப்புத் தொகைகளை பெறுவது என்பது அவர்கள் கேட்டறியாததாகும்.

ஆயினும் தொழிலாளர்கள் வெகுவிரைவில் மறுஇணைவு கண்டு மாருதி சுசூகி  தொழிலாளர்கள் சங்கம் (MSWU) என்ற ஒரு புதிய அமைப்பைத் தொடங்கி தங்களது போராட்டத்தை தொடங்கினர். ஆயினும் அதற்கும் ஆறு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் தான், 2012 மார்ச் 1 அன்று, அரசு மற்றும் நிறுவனத்திடம் இருந்து அவற்றுக்கு அங்கீகாரம் கிட்டியது.


கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் போலிஸ் வாகனத்தில்

மறுநாளில் மார்ச் 2, 2012 அன்று மத்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 மில்லியன் தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒருநாள் பொதுவேலைநிறுத்தத்தில் இறங்கிய இந்தியத் தொழிலாள வர்க்கத்தின், போர்க்குணம் பெருகுவதற்கு முந்தைய ஒரு தற்காலிக மற்றும் தந்திரோபாய பின்வாங்கலாகவே இது தெளிவுபட அமைந்திருந்தது.

2012 ஏப்ரல் இல், MSWU தனது கோரிக்கைகளது பட்டியலை வெளியிட்டது, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பது, அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் இடம்பெற்றிருந்தன. அடுத்த பல மாத காலத்தின் சமயத்தில், நிர்வாகமானது MSWUக்கு இடையூறுகளை அளித்ததோடு, புதிய தொழிற்சங்கத்தை உருக்குலைப்பதற்கும் வேலையிடத்தில் தனது ஒருதரப்பான சர்வாதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் ஒரு பதில்-தாக்குதலை தயாரித்தது.

இதுவே நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை சுற்றிவளைத்து, கைது செய்து, சித்திரவதை செய்வதற்கும், மானேசர் ஆலையில் இருந்து 546 நிரந்தரத் தொழிலாளர்களையும் 1,800 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒட்டுமொத்தமாய் வேலையிலிருந்து நீக்குவதற்கும், MSWUவின் ஒட்டுமொத்தத் தலைமையையும் மோசடியான கொலைக் குற்றச்சாட்டுகளில் சோடிப்பதற்கும் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்ட 2012 ஜூலை 18 அன்று நடந்த நிறுவனத்தின் ஆத்திரமூட்டலின் பின்புலத்தில் அமைந்திருப்பதாகும்.

மேலதிக வாசிப்புக்கு:

இந்திய மாருதி சுசூகி கார் உற்பத்தி தொழிலாளர்களின் போராட்ட படிப்பினைகள்