ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A reply to a reader’s comment on a WSWS article on Jean-Luc Mélenchon

ஜோன் லூக் மெலோன்சோன் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைக்கு வாசகர் ஒருவர் இட்ட ஒரு பின்னூட்டத்திற்கான பதில்

By Alex Lantier
5 April 2017

பிரான்சின் ஜனாதிபதி வேட்பாளரான மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர அழைப்புவிடுக்கிறார்” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரையில் பின்வரும் பின்னூட்டம் பதிவானது. அதனைத் தொடர்ந்து அதற்கான அலெக்ஸ் லான்ரியர் இன் பதில் இடப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுரை பிழையான அறிக்கைகளாலும் பொய்யான தகவல்களாலும் நிரம்பியுள்ளது. முதலில் என் நேர்த்தியில்லாத ஆங்கிலத்திற்கு என்னை மன்னிக்கவும்.

“வெளிநாடுகளிலான முக்கிய போர்களுக்கு பிரெஞ்சு இராணுவத்தை தயாரிப்பு செய்வதற்காக” அவர் [மெலோன்சோன்] “கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார்”.

>>>முற்றிலும் தவறு. தாம் சேவை செய்யப்போவது இராணுவமா, போலிசா, தீயணைப்பு படையா அல்லது குடிமைப் பாதுகாப்பு படையா என்பதை மக்கள் தெரிவு செய்து கொள்ள முடியும். ஒரு தலைமுறையை போர்களில் போரிடுவதற்காய் தயாரிப்பு செய்வதல்ல விடயம். அது பிரெஞ்சு இராணுவத்தின் பணியாகும்.

--- “ ‘தேசிய காவற்படை’ என்ற முதலில் நவ-பாசிச தேசிய முன்னணியால் முன்மொழியப்பட்ட ஒரு அலகுக்குள் அவர்களுக்கு கட்டாய இராணுவ சேவையை அளிப்பதற்கு அவர் ஆலோசனையளிக்கிறார்.”

>>> எப்படி நீங்கள் இத்தனை தவறாக இருக்க முடியும்: Garde Nationale

--- “உண்மையில், மெலோன்சோன் ஒரு இராணுவவாத, தேசியவாத மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைக்கு தயாரிப்பு செய்கிறார்.”

>>> அச்சுறுத்தலுக்குள்ளாகி வரும் கிழக்கத்திய எல்லைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுடன் ஐரோப்பாவில் போர்களை தடுப்பதற்கான இராஜதந்திரரீதியான உச்சிமாநாடுகளையே மெலோன்சோன் விரும்புகிறார். நேட்டோவில் இருந்து விலகுவதற்கும், 75 சதவீத ரஷ்ய இராணுவக் கட்டமைப்புகளுக்கு ஒரு பொறுப்பற்ற அச்சுறுத்தலாக இருந்து, ஐரோப்பாவில் நாம் விரும்பாத அல்லது நமக்கு அவசியமில்லாத பதட்டங்களை தூண்டுவதாய் இருக்கின்ற ஐரோப்பாவிலான அமெரிக்க படைகளின் “பாலிஸ்டிக் நிலைநிறுத்த”த்தை தடைசெய்வதற்குமே அவர் விரும்புகிறார்.

---- “மெலோன்சோன் தனது போர்-ஆதரவுக் கொள்கைகளை மறைப்பதற்கு அவற்றுக்கு ஒரு “தீவிரவாத” மறைப்பை வழங்கப் பார்க்கிறார்”.

>>> எந்த போர்-ஆதரவுக்கொள்கைகளைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இது விடயத்தில் நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள் என்று காண நானுமே ஆவலாய் தான் இருக்கிறேன். அவை அவரது கொள்கைகளுக்கு நேரெதிரானவையாகும். மெலோன்சோன் “ஐரோப்பிய இராணுவம்” ஒன்றிற்கு எதிராய் இருப்பதற்குக் காரணமே அவர் போருக்கு எதிரானவர் என்பதால் தான். ஒரு பெரிய-அளவிலான மோதலைத் தவிர்ப்பதற்காக கிழக்கு ஐரோப்பிய எல்லைகள் தொடர்பான மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அமெரிக்கா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தன்னுடைய படைநிறுத்தங்களைக் கொண்டு செய்யக் கூடிய கிறுக்குத்தனமான சூழ்ச்சிகளால் தூண்டிவிடப்படக்கூடிய மோதல்களில் ஐரோப்பா பங்குபெறுவதை அவர் விரும்பவில்லை.

--- “இது பிற்போக்குத்தனமான பிரெஞ்சு தேசியவாதத்தை கிளறி விட மட்டுமே செய்கிறது.”

>>>”தேசியவாதத்தையும் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான விருப்பத்தையும் குழப்பாதீர்கள். தேசப்பற்றையும் தேசியவாதத்தையும் போட்டுக் குழப்பாதீர்கள்.”

----”இப்போது அவர் கருத்துக்கணிப்புகளில் மேலெழுகின்ற நிலையில், மெலோன்சோன், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் அச்சுறுத்தல்களை ஆதரித்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்கு அடித்தளம் அமைக்கின்ற [இமானுவேல்] மக்ரோன் போன்றவர்களின் பின்னால் தன்னை அணிநிறுத்திக் கொள்கிறார்.”

>>> அவர் நேட்டோவை விட்டு விலக விரும்புவதோடு ரஷ்யாவுக்கு எதிரான மிரட்டல்கள் உலகத்திற்கு பயங்கர ஆபத்தானவை என்றும் அது போரில் சென்று முடியும் என்றும் கூறுகிறார்.

ஊர்ஜிதமற்ற கூற்றுகள் நிரம்பிய கட்டுரைகளை, இந்த ஒன்று முழு அபத்தமானது, எழுதுவதை நீங்கள் நிறுத்துவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

***       ***        ***

 

கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர பிரெஞ்சு அரசியல்வாதி ஜோன்-லூக் மெலோன்சோன் அழைப்பதை மேற்கோளிட்டு, போரின் அபாயம் குறித்தும் ஒரு போர்-ஆதரவு வேட்பாளராக மெலோன்சோனின் பாத்திரம் குறித்தும் எச்சரிக்கின்ற உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) கட்டுரை மீது இந்த வாசகர் இரண்டு அடிப்படை விமர்சனங்களை முன் வைக்கிறார்.

முதலாவதாய், மெலோன்சோன் போருக்கு எதிரானவர் என இந்த விமர்சகர் திட்டவட்டம் செய்கிறார். இரண்டாவதாய், பிற்போக்குவாதியாக மெலோன்சோன் மீது WSWS வைக்கும் விமர்சனங்களுக்கு, அவரது தேர்தல் வேலைத்திட்டத்தின் உள்பக்கங்களில் பட்டியலிடப்பட்டிருக்கும் வெளிப்படையான “தீவிரமயப்பட்ட” கோரிக்கைகளை இவர் எதிராக நிறுத்துகிறார்.

இந்த விமர்சனங்கள், தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளை எழுப்புகின்றன, ஆயினும் அவை அடிப்படையாக பிழையானவை, மெலோன்சோன் குறித்த WSWS இன் மதிப்பீடுகள் சரியானவை ஆகும்.

முதல் விடயம், மெலோன்சோன் ஒரு போர்-ஆதரவு அரசியல்வாதியாக சாதனை படைத்துள்ளார், சில போர்கள் மீது அவர் வைத்த விமர்சனங்கள் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கின்ற அடிப்படையிலேயே அமைந்தவை ஆகும். 2011 இல் லிபியா மீதான நேட்டோவின் போரை அவர் ஊக்குவித்தார், இதை அச்சமயத்தில் WSWS ஆவணப்படுத்தியிருக்கிறது, நேட்டோ நடத்தும் போர் ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு உதவிசெய்கின்ற ஒரு மனிதாபிமானப் போராகும் என்ற உத்தியோகபூர்வ பொய்களை பிரதிபலித்து அவர் அதை நியாயப்படுத்தினார். ஐயத்திற்கு இடமின்றி “லிபியாவில் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாய்” தான் இருப்பதை அறிவித்த அவர் கூறினார்: “புரட்சி அழிக்கப்படுவதை தடுக்க நாம் கொடுங்கோலனின் பிடியை உடைத்தாக வேண்டும்.”

உக்ரேனில் 2014 இல் நடந்த நேட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பின்னர் அவர் சிரியப் போரை விமர்சனம் செய்தார், காரணம் அந்த இரண்டு நாடுகளிலும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-ஜேர்மன் கூட்டு மோதலானது, ஜேர்மனி மீண்டும் இராணுவமயமாவதற்கும் ஐரோப்பாவெங்கிலுமான —பிரான்ஸுக்கு எதிரான என்பதும் இதில் உள்ளடங்கும்— தனது மேலாதிக்கத்தை திட்டவட்டம் செய்வதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கியது. அதன்பின் அவர் பிஸ்மார்க்கின் ஹேர்ரிங் (Le Hareng de Bismarck) என்ற ஒரு வசைமிக்க, தேசியவாத புத்தகத்தை 2015 இல் வெளியிட்டார். அந்த புத்தகம் கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கம் குறித்து எச்சரித்ததோடு ஒரு தேசிய இனமாக ஜேர்மனியர்கள் இப்போது பிரெஞ்சு மக்களை விடவும் அதிக குண்டானவர்களாக, குறைவாய் உழைப்பவர்களாக ஆகி விட்டிருந்தார்கள் என்று காட்டுகின்ற நோக்குடனான புள்ளிவிவரத்தையும் மேற்கோளிட்டார். இப்போது, அவர் மீண்டும் ஒரு ஜேர்மன்-ஆதரவு ரஷ்ய-எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காய் திரும்புவதாய் தெரிகிறது.

அவரது போர்-ஆதரவு நிலைப்பாடுகள் தற்செயலானவை அல்ல; அவை சோசலிஸ்ட் கட்சியிலான அவரது பல-தசாப்த கால அங்கத்துவம் மற்றும் ஆதரவில் இருந்து பிறப்பவை ஆகும். PS இன் ஸ்தாபகர் பிரான்சுவா மித்திரோனின் கீழ், அவர் ஈராக்கிலான வளைகுடாப் போரை சற்று விமர்சித்தார். பிரான்சில் போர்-எதிர்ப்பு மனோநிலையை மித்திரோன் கைப்புரட்டு செய்கின்ற வரம்புகளுக்குள்ளாகவே இந்த விமர்சனம் மிகவும்கட்டுப்பட்டு இருந்தது, ஆனால், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் கொண்டுள்ள உறவுகளில் குறுக்கிட அதற்கு நோக்கம் இருக்கவில்லை. போர் மீதான அவரது விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஒருசமயத்தில் மித்திரோன் அவரிடம் திரைமறைவில் கூறிவிட்ட பின்னர், மெலோன்சோன் அதற்கு கீழ்ப்படிந்தார்.

இன்று, முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான இமானுவேல் மக்ரோன் முன்எதிர்பார்க்கின்ற “பெரும் போர்களின்” காலகட்டத்திற்கு தயாரிப்பு செய்வதற்காகவோ அல்லது ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் முன்கணிக்கிற ரஷ்யாவுடனான “முழு அளவிலான போர்” அபாயத்திற்கு தயாரிப்பு செய்வதற்காகவோ இளைஞர்களை கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்தும் அதிகாரத்தை மெலோன்சோன் இராணுவத்திற்கு வழங்கினார் என்றால், அடுத்ததாய் அவர் என்ன செய்வார்? “மூலோபாயம் தான் உத்தரவிடுகிறதே தவிர, நிதிநிலை அல்ல” என்று மெலோன்சோன் அறிவிக்கிறார். இராணுவ மூலோபாயம் உத்தரவிடுகிறதென்றால், கட்டாய இராணுவச் சேவை பெற்ற இளைஞர்களை போருக்கு அனுப்புவதில் கணிப்பிடமுடியாத பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவிடப்படும் என்று சொல்வதாகத் தானே பொருள்.

உண்மைதான், வாசகர் சுட்டிக் காட்டுவதைப் போல, இந்த கட்டாய இராணுவ சேவையானது இராணுவமா, போலிசா, குடிமைப் பாதுகாப்பா என்று தெரிவு செய்து கொள்ள இளைஞர்களை அனுமதிக்கிறது என்று தான் மெலோன்சோனின் பிரச்சாரம் கூறுகிறது. அவரது வேலைத்திட்டத்தில் நேட்டோவை விட்டு விலகுவது, ஊதியங்களை அதிகரிப்பது, ஓய்வுபெறும் வயதைக் குறைப்பது, இத்யாதிகள் உள்ளிட்ட வாக்குறுதிகளின் ஒரு நெடிய பட்டியலும் கூடத் தான் இருக்கிறது. அப்பட்டமாய் சொல்வதென்றால், இத்தகைய வாக்குறுதிகள், வெற்று வாய்வீச்சின் ஒரு நெடிய மற்றும் பிற்போக்குத்தனமான வழக்கத்தில் இருந்து வருபவையாகும்.

மெலோன்சோனின் வேலைத்திட்டம் மக்களுக்கு இவ்வளவு வாக்குறுதிகள் அளிக்கும்போது, உடலுழைப்புத் தொழிலாளர்களில் 44 சதவீதம் பேர் ஏன் நவ-பாசிச FNக்கு வாக்களிக்க திட்டமிடுகிறார்கள்? PS சிதறுவது ஏன்? ஏனென்றால் 1972 முதலாகவே, PSம் அதன் கூட்டாளிகளும் பதவிகளுக்கு போட்டியிடுகின்ற ஒவ்வொரு தடவையுமே, தாராளமாக இதுபோன்ற வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அவர்களிடம் இருந்து கேட்டு தொழிலாளர்களுக்கு காதுபுளித்து விட்டது. ஒவ்வொரு முறையும் அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போதும், இந்த வாக்குறுதிகள் அனைத்துமே பொய்களாய் நிரூபணமாகியிருக்கின்றன. PS வணிக-ஆதரவு, போர்-ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றியது. இப்போதைய PS ஜனாதிபதி ஹாலண்டின் கீழான சிக்கன நடவடிக்கை மற்றும் அவசரகாலநிலைக்கு பின்னர், தொழிலாளர்கள் இந்த வாய்வீச்சைக் கண்டு வெறுப்படைந்து போயுள்ளனர்.

1972 இல் அப்போது ஒரு வருடம் பூர்த்தியான சோசலிஸ்ட் கட்சிக்கும் (PS) ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) இடையில் கையெழுத்திடப்பட்ட பொது வேலைத்திட்டமே (Programme Commun) இதன் மூல வடிவம் ஆகும். அரசு அதிகாரத்திலும் கல்வியறிஞர்களிலும் இருந்த ஏகாதிபத்திய ஆதரவு பிரிவுகளுக்காக —இதில் பலரது மூலங்கள் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி வரை செல்கிறது— பேசுகின்ற ஒரு கட்சியாக இருந்த PSக்கு ஒரு போலியான, சோசலிச மேற்பூச்சைக் கொடுப்பதே இந்தக் கூட்டணியின் நோக்கமாய் இருந்தது. அப்போதிருந்த சோவியத் ஆட்சியின் முன்னணி பிரெஞ்சு கூட்டாளியான PCF உடன் PS கூட்டணி வைத்துவிட்டால், அதன் அர்த்தம் PS ஒரு சோசலிச அமைப்பாகத் தான் இருந்தாக வேண்டுமா?

இது ஒரு வரலாற்று மோசடியாகும். 1968 பொது வேலைநிறுத்தம் போன்ற பிரான்சிலான புரட்சிகரப் போராட்டங்களை, தொடர்ந்து காட்டிக்கொடுத்து வந்திருக்கின்ற PCF, 1917 ரஷ்ய புரட்சியின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக ஸ்ராலினிசத்தையும் தேசியவாதத்தையுமே பிரதிநிதித்துவம் செய்தது. இந்த போலியான அடையாளப்படுத்தலானது மாஸ்கோ விசாரணைகளது இழிபுகழ் பெற்ற பொய்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. லியோன் ட்ரொட்ஸ்கியும் அப்போது ஜோசப் ஸ்ராலினால் கொல்லப்பட்ட 1917 புரட்சியின் அத்தனை சர்வதேச தலைவர்களுமே எதிர்ப்புரட்சிகரவாதிகள் அல்லது பாசிச ஏஜெண்டுகள், ஸ்ராலினும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய PCF இன் தலைமையில் இருந்த அவரது கூட்டாளிகளும் மட்டுமே புரட்சியாளர்கள் என்பதாய் பரந்த தொழிலாளர்களிடம் சொல்லப்பட்டது.

தேசியமயமாக்கங்கள், வேலைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவது —இவையெல்லாம் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி இல்லாமல்— ஆகியவையும் மோசடி வாக்குறுதிகளாகவே நிரூபணமாயின. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, முதலாளித்துவத்தை மீட்சி செய்வதை PCF ஆதரித்தது மட்டுமல்ல, அதிகாரத்துக்கு வந்த சிறிதுகாலத்திலேயே PS தனது வாக்குறுதிகளை ஆரவாரமில்லாமல் கைவிட்டு விட்டது. 1982 இல் மித்திரோன் தனது “சிக்கன நடவடிக்கை திருப்ப”த்தை தொடங்கியது முதலாக, அதாவது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண்டின் பின் தொடங்கி, பல தசாப்தங்களாய் PS சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவான ஒரு கட்சியாகவே தன்னை நிரூபணம் செய்திருக்கிறது.

மெலோன்சோனுமே கூட லம்பேர் வாத OCI இல் (சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு- PS-PCF கூட்டணி, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்கும் என்பதான போலியான, தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் இது ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டது) சிறிதுகாலம் உறுப்பினராக இருந்ததற்குப் பின்னர் 1976 இல் PS இல் இணைந்தார். ஒரு PS செனட்டராக தன் அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டு வலது திசையில் வெகுதூரம் நகர்ந்தார். ஆயினும், 1970களது பிரெஞ்சு குட்டி-முதலாளித்துவ ”இடது”களது வாய்வீச்சுக் கொடையை அவர் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

இந்தக் காரணத்தால் தான், அவர் 2009 இல் PS ஐ விட்டு விலகிய பின்னரும் கூட, அந்த பொது வேலைத்திட்டத்தின் பாணியிலான வாக்குறுதிகள் நிரம்பிய வேலைத்திட்டங்களை அவர் இப்போதும் விநியோகிக்க முடிந்தது, அந்த வாக்குறுதிகளை மெலோன்சோன் உட்பட அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள எவருமே அத்தனை முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆயினும், வெறுமையான, மேலோட்டமான வாக்குறுதிகளைக் கொண்டு PS இன் மீது அவர் பிரமைகளை தூண்டினாலும் கூட, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அவசியங்களின் பின்னால் தான் அவர் தன்னை பிழையின்றி நிறுத்திக் கொள்கிறார்.

இதற்கான ஒரு உதாரணம் தான் வாசகர் குழப்பத்துடன் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தேசியக் காவற்படைக்கான மெலோன்சோனின் ஆதரவு. இது 1789 பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நகரக் குடிமக்கள் காவற்படையின் ஒரு வகை என்பதுபோன்று சுட்டிக்காட்டுகின்ற ஒரு விக்கிபீடியா இணைப்பை வாசகர் இணைத்திருக்கிறார். ஆனால் அந்த தேசியக் காவற்படை என்பது 1871 மற்றும் பாரிஸ் கம்யூன் படுகொலைக்குப் பின்னர் கலைக்கப்பட்டு விட்டது, அதன் தேசியக் காவற்படை அலகு பிரெஞ்சு இராணுவத்தினால் நசுக்கி அழிக்கப்பட்டது. ஆனால் இப்போதைய தேசிய காவற்படையின் குணாம்சம் அதுவன்று. WSWS குறிப்பிட்டதைப் போன்று, இது சென்ற ஆண்டில் ஹாலண்டால் உருவாக்கப்பட்ட ஒரு துணை-இராணுவ பாதுகாப்பு அலகாகும், இது உருவாக்கப்பட வேண்டுமென FN கோரி வந்திருந்தது.

குறிப்பாக, தொழிலாளர்கள் பொதுஜனவாக்கெடுப்பில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக பெருவாரியாக அளித்த முடிவை கழுத்துநெரித்து விட்டு அவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த, அவரது கிரேக்க கூட்டாளியான சிரிசாவின் அரசாங்கத்தை மெலோன்சோன் உச்சிமோந்து பாராட்டியதற்குப் பின்னர், அவர் பாதுகாக்கின்ற வர்க்க நலன்கள் என்னவென்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அவர் வரலாற்றுப் பொய்மைப்படுத்தலை கொண்டு விளையாடுகின்ற, தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஏமாற்றி கழுத்துநெரிப்பதற்காக தேசியவாதத்திற்கு விண்ணப்பம் செய்கின்ற ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியாவார்.

ஆக, நமது விமர்சகர் மெலோன்சோனின் தேசியவாதத்தைப் பாதுகாத்து “தேசப்பற்றையும் தேசியவாதத்தையும் போட்டுக் குழப்பாதீர்கள்” என்று WSWS ஐ எச்சரிக்கை செய்கிறார். மெலோன்சோனை அம்பலப்படுத்துவதை WSWS விட்டுவிட வேண்டும் என்பதாக இது தொனிக்கிறது.

மெலோன்சோனுக்குக் காட்டும் எதிர்ப்பைக் கைவிடும் எந்த எண்ணமும் WSWSக்கு இல்லை. ட்ரொட்ஸ்கிசத்துக்கும் மெலோன்சோன் போன்ற சக்திகளுக்கும் இடையில் பிரித்து நிற்கின்ற பிளவைத் தெளிவாக்கிக் காட்டுவதன் மூலமாக பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste), சர்வதேசரீதியாக அதன் சகோதரக் கட்சிகள் போன்று தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு மாற்றீட்டை கட்டியெழுப்புவதற்காக அது போராடுகிறது. பிற்போக்குத்தனம் குறைந்ததாய் காட்டுவதற்காக வாசகர் அதனை தேசப்பற்று என்று அழைத்தாலும் அல்லது அழைக்காமல் போனாலும், அவர் கூறிய அவரது சொந்த தேசியவாத நிலைப்பாட்டை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று WSWS ஊக்குவிக்கிறது.

சோசலிசத்தையும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அரசியல் சுயாதீனமான பாத்திரத்தையும் மெலோன்சோன் பகிரங்கமாக நிராகரிப்பதையோ, அல்லது பிரான்சின் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய தேசியவாத அதிவலதுகளின் பாரம்பரியத்தை பாதுகாக்கின்ற பத்திரிகையாளர் எரிக் செமோர் அல்லது அரசியல் மூலோபாயவாதியான பாட்ரிக் பூய்ஸ்சோன் போன்ற வலது-சாரி ஆளுமைகளுடன் அவர் பரவலாய் நட்புறவு பாராட்டுவதையோ இந்த வாசகர் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார். தெளிவாக இருப்பது என்னவென்றால், வரும்நாட்களில் PS இன் நிலைகுலைவுக்குப் பின்னர் மெலோன்சோன் இடது-சாரி அரசியலுக்காகப் போராடப்போவதில்லை, மாறாக தேசியவாதம் என்ற நஞ்சினை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை வெறுப்பேற்றவும் பிளவுபடுத்தவுமே அவர் முனைகிறார் என்பதற்கான ஒரு தெளிவான அடையாளக்குறியாய் இந்த உறவுகள் அமைந்திருக்கிறது.